பறக்கிறேன்… (மொழிபெயர்ப்பு)

2007 ஜூன் 13
by vizhiyan

பறக்கிறேன்…

(சிறிதாக ஒரு மொழிபெயர்ப்பு)

அனாதை இல்லம் ஒன்றில் சிறுவன் ஒருவன் வளர்ந்து வந்தான். அவனுக்கு எப்போதும் ஒரே சிந்தனை தான். தன்னால் ஏன் பறக்க முடியவில்லை என்பதே அது.தான் பறக்க முடியாமல் போனது ஏன் என்ற பெரிய குழப்பம் அவனுக்குள் எப்போதும் நிலவி வந்தது. பறவைகள் பறக்கும் போது தன்னால் ஏன் பறக்க முடியவில்லை என்ற கவலை. தன்னிடம் ஏதோ தவறு இருக்குமோ என்று நினைத்து வருத்தப்பட்டான்.

அதே ஊரில் மற்றொரு சிறுவன் இருந்து வந்தான். அவனுக்கு கால் முடங்கி இருந்தது. அவனுக்கு மற்ற சிறுவர் சிறுமியர் போன்று ஓடி ஆடி விளையாட முடியவில்லையே என்று கவலை எப்போதும். “என்னால் ஏன் முடியவில்லை” என்பது அவன் சிந்தனை.

ஒரு நாள் அனாதை இல்லத்தில் இருந்து பறக்க வேண்டும் என்ற ஆசைப்பட்ட சிறுவன் வெளியே பார்க்கும் ஆசையில் அங்கிருந்து நைசாக வெளியில் வந்துவிட்டான். அவன்  அருகில் இருந்த பூங்காவிற்குள் சென்றான்.அங்கே கால் ஊனமுற்ற அந்த சிறுவன் மணலில் விளையாடிக்கொண்டு இருப்பதை பார்த்தான். அவனிடம் சென்று “உனக்கு பறவை போல பறக்க ஆசை இருக்கின்றதா?” என்று வினவினான்.

“இல்லை” என்றான் அமர்ந்திருந்த சிறுவன்.” ஆனால் நான் நடந்தால், ஓடினால் எப்படி இருக்கும் என்று ஆச்சரியப்படுவதுண்டு” என்றான் மணலில் விளையாடியபடி.

“ரொம்ப வேதனையாக இருக்கின்றது..” என்று சொல்லிவிட்டு தன் கையை நீட்டி..”நாம் நண்பர்களாக இருப்போமா?” என்றான் பறக்கத் துடித்தவன்.

“கண்டிப்பாக…” என்றான் மற்ற சிறுவன். இரண்டு சிறுவர்களும் நீண்ட நேரம் விளையாடினார்கள்.மணலில் கோட்டைகள் கட்டினார்கள். வித்தியாசமான குரல்களை எழுப்பி மகிழ்ந்தனர்.மனம்விட்டு சிரித்தனர். நீண்ட நேரத்திற்கு பிறகு அந்த சிறுவனின் தந்தை சக்கர நாற்காலியைத் தள்ளிக்கொண்டு வந்தார் தன் மகனை கூட்டி செல்ல. அதை பார்த்த பறக்க நினைத்தவன், அந்த சிறுவனின் தந்தையிடம் சென்று அவரது காதில் ஏதோ சொன்னான்.

அவரும் அதை கேட்டு “சரி”  என்று தலை ஆட்டினார்.
உடனே அவன் தன் நண்பனிடம் சென்று “நீ தான் என் முதல் நண்பன். ஒரே நண்பன். உன்னை எங்களைப் போல நடக்கவும் ஓட வைக்கவும் என்னால் முடியாது, ஆனால் என்னால் உனக்கு ஒன்று செய்ய முடியும்” என்று கூறி தன் முதுகை காட்டி, தன் புது நண்பனிடம் “ஏறிக்கொள்” என்றான். நண்பனை முதுகில் தூக்கியபடி அந்த பூங்காவில் ஓடினான். வேகமாக..மிக வேகமாக. பூங்காவை சுற்றி சுற்றி வந்தான். தன்னால் முடிந்த வரை வேகமாக ஓடினான். மெல்லிய எதிர் காற்று அவர்கள் முகங்களில் பட்டு தெரித்தது.
சிறுவனின் தந்தை அழத்துவங்கினார், தன் மகன் இரண்டு கைகளையும் பறவைபோல ஆட்டி தன் உச்ச குரலில்..”அப்பா நான் பறக்கிறேன்.. நான் பறக்கிறேன்” என்பதை கேட்டு..

(மடலில் அனுப்பிய சதிஷ் ராஜாமணிக்கு நன்றி)

- விழியன்

5 Responses leave one →
  1. 2007 ஜூன் 13

    உருக்கமாக இருக்கிறது… யார் குற்றம்… தெரியவில்லை..

  2. 2007 ஜூன் 13
    மாணிக்கம் permalink

    :)

  3. 2007 ஜூன் 13

    குழந்தைகளின் உள்ளம் இறைவனின் உள்ளம் போல் இருக்கும்.

    நல்ல கதை தம்பி.

    எனக்கும் பறக்கும் ஆசை இருந்திச்சு, அப்புறம் விமானத்தில் பறந்து தீர்த்துக்கிட்டேன் :)

  4. 2007 ஜூன் 13
    Sathish Rajamani permalink

    Thanks for translating my mail .. I remember reading it about 5 years back

  5. 2007 ஜூன் 15

    நல்ல கதை , மொழிபெயர்ப்பு தலைவா….

Leave a Reply

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS