எழுதுகோல் – ஒரு பழைய சிந்தனை புதிதாக

2008 ஆகஸ்ட் 6
by vizhiyan

எழுதுகோல் – ஒரு பழைய சிந்தனை புதிதாக

சில வாரங்களாக பேனா பயன்படுத்துவதை தவிர்த்து பென்சில் பயன்படுத்த துவங்கினேன் எழுதுவதற்காக. காரணம்!! வாரத்திற்கு இரண்டு பேனாக்களேனும் காணாமல் போய்விடுகின்றது. ஒன்று நானே மறதியில் எங்கேனும் வைத்துவிடுகின்றேன், அல்லது யாரேனும் எடுத்துக்கொள்கின்றார்கள்(சுடப்பட்டுவிடுகின்றது). வியப்பாக பென்சில் பயன்படுத்த துவங்கிய மூன்று வாரத்தில் இரண்டு பென்சில்களும் மேஜையிலேயே இருக்கின்றது எங்கும் தொலையாமல், யார் கண்ணும் படாமல், யார் கண்ணிலும் படாமல்.

மூன்றாம் வகுப்பு முடித்து எப்போது நான்காம் வகுப்புக்குள் காலெடுத்து வைப்போம் என்று ஆவலாக இருந்த நாட்கள் உண்டு. காரணம் நான்காம் வகுப்பில் தான் பேனாக்கள் மூலம் நோட்டுகளில் எழுதலாம். அதுவரையில் பென்சில் தான். அப்படி பென்சில்களால் எழுதினால் தான் கையெழுத்து நான்றாக வரும் என்றது பள்ளி நிர்வாகம். பள்ளிகளில் பேனா என்பது மிக குறைந்ததாகவே இருந்தது. அதுவும் மை பேனா தான் அதிகம். பால்பாயின்ட் பேனாக்கள் புழக்கம் அன்றைய காலகட்டத்தில் மிக அரிது. ஒரே மை பேனா வருடக்கணக்கில் கூட வரும். ஹீரோ பேனாக்கள் மிக பிரபலம். இன்று உலகமே பால்பாயிண்ட் பேனாவில் சுழல்கின்றது. (இனி பேனாக்கள் என்பது பால் பாயிண்ட் பேனாவினை குறிக்கும்)

இணையத்தில் பேனா பயன்படுத்துவது நல்லதா பென்சில் பயன்படுத்துவது நல்லதா என ஏதேனும் கட்டுரை இருக்கின்றதா என தேடிய போது ஏதும் சரியாக சிக்கவில்லை.ஆனால் சில பல தகவல்கள் சற்றேனும் சிந்திக்க வைத்தது. சராசரியாக ஒரு பேனா நிறுவனம் தினமும் தயாரிக்கும் பேனாக்கள் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? சுமார் ஒரு மில்லியன் பேனாக்கள். 1 மில்லியன் என்றால் பத்து லட்சம் பேனாக்கள். அந்த நாட்களில் ஒன்று அல்லது இரண்டு பேனா நிறுவனம் மட்டும் போட்டியில் இருந்தது. குறிப்பாக ரெனால்ட்ஸ். ஆனால் இன்றோ சந்தையில் ஏகப்பட்ட நிறுவனங்கள். செல்லோ,ரோடோமேக், பார்கர், ரெனால்ட்ஸ், ஆட்ஜெல் என்று நிரம்ப. பேனாவிற்கு நடிகர்களையும் கிரிக்கெட் வீரர்களையும் வைத்து விளம்பரம் செய்கின்றார்கள் என்றால் எத்தனை இலாபம் சம்பாதிக்க வேண்டும்.

சரி, கணக்கிற்கு வருவோம். புகழ்பெற்ற தேசிய அளவிலான நிறுவனங்கள் பத்து (10) இருக்கின்றது என்றால், உள்ளூர் பேனா நிறுவனங்கள் மொத்தம் பத்து என வைத்துக்கொள்வோம்.ஆக மொத்தம் இருபது நிறுவனம். நம் தோராய கணக்கிற்கு.

ஒரு நாளைக்கு – 10 லட்சம் * 20 நிறுவனம் = 200 லட்சம் = 2 கோடி பேனாக்கள் தயாராகின்றது.

2 கோடி * 365 = 730 கோடி பேனாக்கள் ஒரு வருடத்தில் தயாரிக்கபடுகின்றது. தாயாரிக்கபடுகின்றது என்றால் அதே அளவு விற்பனையும் நடக்கின்றது. அதே அளவு கழிவுகளாகவும் வெளிவருகின்றது. எழுதி முடித்த பேனாக்களாகவோ, பாதி எழுதி முடித்த பேனாவாகவோ. இதுவரையில் நாம் பேனாவினை ஒழுங்காக அப்புறப்படுத்தி உள்ளோமா?

இந்த 730 கோடி பேனாக்கள் மீள் உபயோகம்(recycle) செய்யப்படுவது இல்லை. அதற்கான ஏற்பாடுகள் இதுவரை இல்லை. அது அரசின் கவனத்தில் இருக்கின்றதா என தெரியவில்லை. பேனாவின் அனைத்துப்பகுதியும் ப்ஸாஸ்டிக் பொருளில் தான் செய்யப்பட்டு இருக்கின்றது. பேனா மூடி, பேனா பின் மூடி, பேனா நடுபகுதி, பேனா முனை (ஸ்டீல்), பேனா ரீபில் பகுதி என அனைத்தும் ப்ளாஸ்டிக்கால் தான் செய்து இருக்கின்றார்கள். குவிந்து இருக்கும் குப்பைகளில் இதெல்லாம் ஒரு கணக்கா அட விடுப்பா என எண்ணலாம்.

ஏதோ நம்மால முடிந்தது. எல்லா சுற்றுசூழல் பாதிப்பிற்கும் ஒரு மாற்று தீர்வு இருக்கத்தான் செய்கின்றது. ஆனால் நடைமுறை சாத்தியங்கள், ஏற்கனவே பழக்கப்பட்டு சோம்பேறிகளாகிவிட்டதன் காரணமாகவும் மாற்றுத்தீர்வுகளுக்கு மாறுவதே கடினமாகிவிடுகின்றது. பேனாவிற்கு மாற்று தீர்வு என்ன?

அட பேனாவிற்கு முன்னர் வந்த பென்சில் தான் இருக்கே. பென்சில் விலை குறைவு. அதன் மீதப்பகுதி எந்த தீங்கும் விளைவிப்பதில்லை. பேனாவின் அதே அளவு எழுதும். விரல்களுக்கு அழுத்தம் அதிகம் இல்லை. வேண்டுமானால் திருத்திக்கொள்ளலாம். ம்ம் புரிகின்றது பென்சில் பற்றி உங்களுக்கு தெரியாதா என்ன அதையும் விளக்க வேண்டுமா ? பென்சில்கள் தயாரிக்கவும் மரங்கள் பயன்படுத்துகின்றார்களே என ஒரு கூட்டம் நினைப்பது கேட்கின்றது.

வெட்டிய இடத்தில் மரத்தை வளர்க்கலாமுங்க ஆனால் ப்ளாஸ்டிக் கொட்டிய இடத்தில் ஏதும் வளர்க்க இயலுமா?

அத்தனை கழிவுகளையும் என்ன செய்ய? அது வீட்டின் சந்துகளிலும், முடுக்குகளிலும் இருந்து கொண்டே தான் இருக்கின்றது. இன்று கூட ஒவ்வொரு வீட்டின் உள்ளும் தேடிப்பாருங்கள் குறைந்தது 20 பேனாவாவது கிடைக்கும்.

கணினியின் பிரவேசம் எழுதுவதை அதிகமே குறைத்துவிட்டது. இப்போது எழுதுவதே குறைவு தான். அங்கும் பேனாவில் எழுத வேண்டாம் என்றால் எப்படி? பேனாவின் பயன்படே வேண்டாம் என சொல்லவில்லை, அது சாத்தியமும் அல்ல. நிரந்தரமாக இருக்க வேண்டிய எழுத்துக்கள், கையெழுத்துக்கள் போட மட்டும் பேனா பயன்படுத்தலாம். அதிக அளவு பென்சில்களால் எழுதுவோம். பாதி அளவு கழிவினை குறைத்தாலும் அது நமக்கு வெற்றி தான்.

இந்த தகவல் சரியென தோன்றினால் இன்றே செயல்பட துவங்குங்கள். ஆரம்பத்தில் சிரமமாக இருக்கலாம். நம்மால் முடிந்த சிறு காரியம். ஒவ்வொரு அலுவலகத்திலும் அறிவுறுத்தலாம். ஆனால் தனிமனித புரிதல்களின்றி எந்த மாற்றமும் சாத்தியமன்று. முடிப்போம். வாருங்கள் எழுதுவோம் புதிய வரலாறுகளை !!!

- விழியன்

11 Responses leave one →
  1. 2008 ஆகஸ்ட் 6
    Panneer Selvam permalink

    super thala ..aana ennainnu thaan puriyala

  2. 2008 ஆகஸ்ட் 6

    கணினியின் ஆதிக்கத்தால் இப்பொழுது கை எழுத்தும் கெட்டுவிட்டது. இருந்தாலும் பேருந்துகளில் பயணிக்கும் பொழுது பேனா, பென்சில்கள் தான் உதவும் எழுதுவதற்கு.
    நல்லதொரு கட்டுரை தோழா

  3. 2008 ஆகஸ்ட் 6

    கல்லூரியில் படிக்கும் போது நான் அதிகம் பயன்படுத்தியது பென்சிலைத்தான்… மைபேனா பயன்படுத்த மிகவும் பிடிக்கும்… ஆசையாக வாங்குவேன் ஆனால் அதை பயன்படுத்தாமல் அப்படியே விட்டுவிடுவேன்…. நீங்கள் சொல்வதுபோல் இப்போதுள்ள பேனாக்கள் பிளாஸ்டிக் கழிவுகள்… என்னுடைய All time Favorite choice பென்சில் தான்…..

  4. 2008 ஆகஸ்ட் 6

    yes i do agree and still use pencil equally :)

  5. 2008 ஆகஸ்ட் 6

    எனக்கு ஆறாம் வகுப்பில் இருந்து தான் பேனா, அதிலும் ஒரே பேனாவைப் பள்ளி இறுதிவரைக்கும் வச்சுக்கச் சொல்லிட்டார் எங்க அப்பா!!! கடைசி இரண்டு வருஷம் அந்தப் பேனாவின் உடம்பு கெட்டுப் போய்க் கடைசியில் இறுதிப் பரிட்சையின் போது அப்போது பிரபலம் ஆன பவுண்டன் பேனா கொடுத்தார் அப்பா. அதுவும் பல வருஷம் வந்தது. இப்போ கையெழுத்துப் போடப் பேனாவை உபயோகிக்கறதோடு சரி. ஆனாலும், அவசரத்துக்குப் பேனாவைத் தேடினால் வீட்டில் ஒண்ணும் கிடைக்காது. எல்லாம் எங்கே போய் ஒளிஞ்சுக்கும்னு ஒரே ஆச்சரியமா இருக்கும். இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் குற்றம் சொல்லிப்போம். பேனா என்னவோ கிடைக்காது. அதே சமயம் கிடைக்கும் பேனா எழுதாது. ஆனால் கூரியர்காரர் வச்சிருப்பது, காஸ்காரர் வச்சிருப்பது, போஸ்ட்மேன் பேனா எல்லாம் மட்டும் அப்படியே வழுக்கிக் கொண்டு போகும். அது எப்படி??????? :P :P :P :P

  6. 2008 ஆகஸ்ட் 6
    Manickam permalink

    Wow… i recollected my golden memories… I fought with my brother for pencils… :)

  7. 2008 ஆகஸ்ட் 6

    புதிய கோணம்.. சிந்திக்க வைக்கிறது..

  8. 2008 ஆகஸ்ட் 6

    http://www.recyclethis.co.uk/20061222/how-can-i-reuse-or-recycle-or-rescue-dried-up-pens

    - Hope this article also helps.
    Please do mention that pencil, here u mean is wooden pencil. These days only microtip pencils are considered as pencils!!

  9. 2008 ஆகஸ்ட் 7
    பொதுசனம் permalink

    நல்ல சுவராஸ்யமான கட்டுரை.

  10. 2008 ஆகஸ்ட் 7
    parthiban permalink

    pena va pencil anu vazhakkaadu mandrame vaikalaam polirukku thozha….
    antha alavitku pinirukinga…

  11. 2008 ஆகஸ்ட் 7

    // மூன்றாம் வகுப்பு முடித்து எப்போது நான்காம் வகுப்புக்குள் காலெடுத்து வைப்போம் என்று ஆவலாக இருந்த நாட்கள் உண்டு.//
    same blood
    விழியன் வரவர விஜயகாந்த் மாதிரி ஒரே புள்ளி விவர கணக்கா(மென்நூல்:மின்சார சேமிப்பு ) சொல்ல ஆரம்பிச்சுட்டிங்க.
    நல்ல சிந்தனை தொடருங்கள்
    என்னாலானதை நானும் செய்கிறேன்.

Leave a Reply

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS