Skip to content

My Book

March 17, 2006

இவ்வளவு பெரிய(விளக்கமான) விமர்சனம் எழுதிய நண்பர் ரசிகவிற்கு நன்றி. இவர் என் இணைய நண்பர் மட்டுமே.

=========================================================

தோழியே உன்னைத் தேடுகின்றேன்.

நான் எழுதிய புத்தகத்தில் எனக்கு உள்ள ஆர்வத்தை விடவும் விழியன் என்ற உமாநாத் எழுதிய “தோழியே உன்னைத் தேடுகிறேன்” என்ற இந்தப் புத்தகதை படிப்பதற்கு எனக்கு மிகுந்த ஆர்வமாய் இருக்கின்றது.

இவரோடு தொட்டுப் பழக்கமில்லை என்றாலும் இது நெட்டுப் பழக்கம் இது. இப்பொழுதெல்லாம் தொட்டுப் பழகிய நண்பர்களைவிடவும் நெட்டில் பழகிய நண்பர்கள் தான் மிகவும் பாசத்தோடு இருக்கிறார்கள். இவரும் அந்த வகையைச் சார்ந்தவரே..

இந்த நடை கொஞ்சம் வித்தியாசமானது. நடை என்றால் நடந்து போகும் நடையைச் சொல்லவில்லை. இப்படித்தான் ஒருமுறை என்னுடைய ஆட்டோகிராப் புத்தகத்தில் ஒரு கல்லூரித் தோழி எழுதியிருந்தாள்

“உங்கள் நடையைக் கண்டு ரசித்திருக்கின்றோம். பலமுறை கிண்டலடித்திருக்கின்றோம்.”

நானோ கவிதை நடையைத்தான் கூறியிருக்கின்றாள் என நினைத்தேன். ஆனால் பின்னர் ஒருநாள் சந்திக்கும்போதுதான் விளக்கியிருந்தாள். அது கவிதை நடை அல்ல..நான் நடக்கின்ற நடையை கிண்டலடித்திருக்கிறார்கள் என்று..

ஆகவேதான் நடையைப் பற்றி இவ்வளவு விளக்க வேண்டிதாகப் போய்விட்டது.

தபுசங்கர்தான் கவிதைகளை உரைநடை வடிவில் எழுத ஆரம்பித்தார். ஆனால் இந்த உமாநாத் உரைநடைகளையும் கவிதைகளையும் கலந்து எழுதியிருப்பது ஒரு புதிய முயற்சி.

இது சுயசரிதையா?அல்லது ஒரு தனி மனிதனின் தேடலா அல்லது வாழ்க்கையின் அனுபவங்களா? அல்லது சமுதாயத்திற்கு தருகின்ற சின்ன சின்ன ஆலோசனைகளா?

அவரே தனது முன்னுரையில் தெளிவு படுத்தியிருக்கிறார் இது ஒரு வரம்பு மீறிய இளைஞனின் எண்ணமிது

மொத்தமாக ஒரு நாலு வரிகளில் விமர்சனம் கொடுத்து விட்டு போவதற்கு மனம் வரவில்லை. ஆகவே அவர் எழுதிய ஒவ்வொரு தலைப்புகளிலும் கொஞ்சம் உட்கார்ந்து ஓய்வெடுத்துவிட்டுச் செல்லலாம் என்று நினைக்கின்றேன்.

தோழியே என்னைத் தேடுகிறேன்

தோழியைத் தேடுவதாய் சொல்லிவிட்டு ஒரு வாழ்க்கைத் துணையைத் தேடிக்கொண்டிருக்கிறார்.

நமக்கு வருகின்ற வாழ்க்கைத்துணை நமக்கு சிறந்த தோழியாக இருப்பாளா என்று திட்டவட்டமாக கூற முடியாது. ஆனால் நம் தோழி, வாழ்க்கைத்துணையாக வந்தால் வாழ்க்கை முழுவதும் நல்ல தோழியாக இருப்பாள் என்ற எனது எண்ணத்துடன் அவர் ஒத்துப் போயிருப்பதால் தோழியைத் தேடும் சாக்கில் வாழ்க்கைத்துணையை தேடுகின்றார்

“இதுதான் என் மனைவி என்று அறிமுகப்படுத்து! இதுதான் எனது மகன் என்று அறிமுகப்படுத்தாதே” என்று தனது தாயார் கூறியிருப்பதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். இந்த இடத்தில் இவரைப் பாராட்டுவதை விடவும் இவரின் தாயாரைப் பாராட்டுவதுதான் சாலச் சிறந்தது.

எந்த அளவிற்கு தன் மகனின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்?. தான் பார்க்கும் பெண்ணைத்தான் மகன் திருமணம் முடிக்க வேண்டும் என்று பழைமையை விட்டெறிந்து மகனுக்குரிய சுதந்திரத்தைக் கொடுத்திருக்கிறார்.

அதெப்படி அரைமணிநேரத்தில் ஒரு பெண்ணை பார்த்து எனக்கு ஏற்றவள்தானா என்று முடிவு செய்வது என்று ஆதங்கத்தில் கேட்டிருக்கிறார். ஆகவே அவர் புரிந்துகொண்டு பழகி அவரது விருப்பத்தோடு ஒத்து வருகின்ற தோழியைத் தேடுகின்றார்.

அந்த கிடைக்காத தோழியிடம் ( யாருக்குத் தெரியும்..) சம்மதம் கேட்கிறார். தனக்கு குழந்தையைத் தத்தெடுக்கும் ஆசைகள் இருப்பதாகவும் அந்தக் குழந்தைகளுடன் நிறைய உறவாடி அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் அந்த ஆசையை சமூகம் ஏற்றுக் கொள்கிறதோ இல்லையோ நீ ஏற்றுக்கொள்வாயா என்று கேட்கிறார்

இதனைப் படித்தவுடன் அவரைப் பற்றி மரியாதைகள் கூடிவிட்டது எனக்கு. ஒரு இளைஞனுக்கு குழந்தையை தத்தெடுக்கும் ஆசையா..? அட என்ன இளைஞனய்யா இவர்.. ரொம்பவும் வித்தியாசமாக இருக்கிறார்.

இவ்வாறு தனக்கு வரப்போகிற தோழியிடம் தனது ஆசைகளையெல்லாம் கூறி இதற்கு ஒத்து வருகின்ற அவளைத் தேடிக்கொண்டே இருக்கின்றார்.

நம் திருமணம்

நான் சொன்ன மாதிரியே தோழியைத் தேடிவிட்டு அடுத்த தலைப்பை “நம் திருமணம்” என்று வைத்திருக்கிறார்.

ஆகவே அவருடைய தோழிக்கு மன்னித்துக் கொள்ளுங்கள் மனைவி ஆகப் போகிற தோழிக்கு வாழ்த்துக்கள்.

எல்லோரும் திருமணத்தை எப்படி கற்பனை செய்து வைத்திருப்போம்..? எல்லா உறவினர்கள் மற்றும் நண்பர்களும் வரவேண்டும். திருமணத்தில் கலந்து கொண்டு திருமண விருந்தை சுவைத்து வாழ்த்திவிட்டு செல்ல வேண்டும் என்று நமது எண்ணங்களை ஒரு சாதாரண வட்டத்திற்குள் முடித்து விடுவோம்.

ஆனால் விழியனைப் பாருங்களேன்..? ஒரு மலைக்கிராமத்தில் முகாமடித்து நண்பர்கள் உறவினர்கள் சூழ பாட்டு – சொற்பொழிவு – கச்சேரி என்று 2 – 3 நாட்கள் தங்கி கொண்டாடி விட்டு வருவோம். நேரம் கிடைக்கும் போது தாலியோ அல்லது மோதிரமோ அல்லது எதுவும் இல்லாமலையோ திருமணம் முடித்துக் கொள்வோம்.

திருமணத்தின் இந்த செலவுகளை சரவணா – ரமேஷ் – நேத்தாஜி – ரமேஷ் ( கேபி) என்ற நண்பர்கள்தான் ஏற்றுக்கொள்ளுவார்கள் என்று வெளிப்படையாக குறிப்பிட்டு இருக்கிறார். பாவம் அவர்கள் மனதுக்குள் இவரைத் திட்டிக்கொண்டிருப்பார்கள்.

சரி அத்தோடு விட்டிருந்தாலாவது இந்தத் திருமணத்தையும் சாதாரண திருமணம் என்று சொல்லி விடலாம். அதற்கும் ஒரு படி மேலே போய் இரத்ததானம் செய்வதையும் வலியுறுத்திருக்கிறார். “அட கல்யாண நேரத்துல இரத்ததான சிந்தனை இவருக்கு எப்படித்தான் வந்ததோ தெரியலைங்க..”

அவருடைய கற்பனைகளை படிக்க படிக்க எங்கே அவருடைய திருமணத்திற்கு நம்மையும் அழைத்துச் செல்லமாட்டாரா? அந்த அனுபவங்களை நாமும் பகிர்ந்து கொள்ள மாட்டோமா என மனம் ஏங்குகிறது

காதல் என்னும் ஆயுதம்

திருமணத்தின் கற்பனைக்குப் பிறகு காதல் என்னும் ஆயுதம் என்ற தலைப்பில் விளையாடியிருக்கிறார். ஒருவேளை திருமணத்திற்கு வருகின்ற காதல்தான் உண்மையானது என்று சொல்ல வருகிறாரோ..?

இடைவெளிகள் என்ற எனது கவிதையில் வரிகள்தான் எனக்கு ஞாபகத்திற்கு வருகின்றது.

ஒரு
தோழி காதலியாகும்போதும்
காதலி தோழியாகும்போதும்
இதயமும் இடைவெளியும் ..
இணைக்கப்படுகிறது வெகுவாய்!

ஆனால் ஒரு உண்மை
தோழிகளுக்கான இடைவெளியிலிருந்து
காதலிக்கான இடைவெளிகளை
பிரித்தெடுப்பது கடினம்

காதல் தோல்வியில் தற்கொலை செய்பவர்களை மறுபடியும் தூக்கிலிட வேண்டும் என்று கோபத்தில் கூறுகிறார்.

மொழி – சமூகம் – இனம் – தேசம் தாண்டி காதலிப்போம். ஒரு குறிப்பிட்ட உறவுகளுக்குள்ளையே திருமணத்தை முடித்துக் கொண்டால் உடற் ரீதியான குறைபாடுகள் வரக்கூடும் ஆகவே சிந்தனைகள் பெருக வேண்டுமானால் காதலிப்போம் என்று அறிவியல் ரீதியாகவும்,

காதலில் வரதட்சணை கொடுமை ஒழிக்கப் படுகிறது என்று சமூக ரீதியாகவும் காதலுக்கு விளக்கும் கொடுத்திருக்கிறார்.

உலகமே ஒரு சின்ன கிராமம் போலத்தான் என்று காதலில் உலகளாவிய சிந்தனைக்கு எடுத்துச் சென்றிருக்கின்றார்

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு வெறுக்கத்தக்க மனிதன் ஒளிந்திருக்கின்றான்.
ஆனால் யாருமே அதனை வெளிக்காட்டமாட்டார்கள்.

காதலில் பாஸிடிவ் குணங்களை மட்டுமே காதலர்கள் காட்டுவார்கள். ஆனால் நான் அப்படி இருக்க மாட்டேன் எனது நெகடிவ் குணங்களையும் நீ தெரிந்து கொள்ள வேண்டும். பிடிக்கவில்லை என்றால் திருத்திக் கொள்கின்றேன் என்று நிதர்சனமான உண்மையை வெளிப்படையாக சொல்லியிருக்கின்றார்.

இந்த உண்மையை நடுநிலைவாதிகள் கூட சொல்லுவதற்கு தயங்குவார்கள். ஆனால் இந்த இளைஞர் தைரியமாகச் சொல்லியிருக்கின்றார். நிஜமாகவே பாராட்டப்படவேண்டியவர்தான்.

நம் இருவரும் இணைந்து பிடித்த பிடிக்காத குணங்களை அலசி ஆராய்ந்து புரிந்து கொண்டு விட்டுக்கொடுத்து வாழுவோம் என்று காதலியிடம் சொல்லுகிறார்.

இதனை வாசிக்கின்ற கல்யாணமாகாத பெண்கள் இதுபோன்ற கணவன் தனக்கு கிடைக்க வேண்டும் என கண்டிப்பாக ஏங்குவார்கள். ஆண்களோ தானும் இதுபோன்ற நடக்க வேண்டும் என ஏங்குவார்கள். எனக்கும் இப்பொழுது அந்த ஏக்கம்தான்.

பெண்களை தேவதை என்று வர்ணிப்பது தனக்கு பிடிக்காது . தேவதையை வைத்துக்கொண்டு மரத்தையா மட்டும்தான் சுற்றி வரமுடியும். என் மனதை சுற்றும் மனைவியாக மட்டும் வா என்று கூறுகிறார்.

கடைசியாக இவர் முடித்திருக்கின்றார். பெண்களில் அழகில்லாதவர்கள் என்று எவருமில்லை. வேண்டுமானால் இப்படிச் சொல்லலாம். அழகான பெண்கள் அல்லது மிக அழகான பெண்கள் என்ற இரண்டு வகைகள்தான் உண்டு. (இவர் தேர்தலில் நின்றால் பெண்களின் ஓட்டு இவருக்குத்தான் )

சிலிக்கான் அடிமைகள்

இளைஞர்கள் கணிப்பொறிகளில் மூழ்கிப்போய் வாழ்க்கையின் யதார்த்தங்களை இழந்து போகின்றனர் என்று ஆதங்கப்படுகிறார்.

அது மட்டுமல்ல ஒவ்வொரு மனிதனின் தனிப்பட்ட செயல்கள் கூட சமுதாயத்தைப் பாதிக்கும் என்று அனுபவப் பூர்வமாக கூறுகிறார்.

அதாவது இன்றைய கணிப்பொறி உலகில் அதிகமாக பொருள் ஈட்டும் இளைஞர்கள் அதனை தாறுமாறாக செலவழிக்கின்றனர் . விலையை அதற்குரிய சரியான மதிப்புக்கு எடைபோடாமல் கேட்பதை கொடுத்து விட்டு வாங்குவதால் சமுதாயத்தின் மற்ற பயனாளிகள் பாதிக்கப்படுகின்றனர் என்று சமுதாயத்தின் மீது உள்ள அக்கறையோடு சொல்லியிருக்கின்றார்.

தான் மட்டும் பயன்பெற்றால் போதாது தான் பெற்றதை வைத்து சமுதாயத்திற்கு என்னவெல்லாம் செய்யலாம் என்று மதிப்பிடுகின்றார்.

எனக்கு சந்தேகமாக இருக்கிறது. இதனை இவர் எழுதினாரா இல்லை எல்லா இளைஞர்களின் நடைமுறைப்படுத்த முடியாத கனவுகளெல்லாம் மொத்தமாக வந்து இவர் எழுதுவதற்கு ஒத்தாசையாக இருந்ததோ என எண்ணத் தோன்றுகிறது.

விழ வைத்து உயர்த்திய மேடைகள்

தனக்கு பல அனுபவங்கள் கற்றுக் கொடுத்த மேடையினைப் பற்றி விவரித்திருக்கின்றார். முதல் மேடையில் பயந்து போய் ஒண்ணுக்கு அடித்ததைக் கூட வெளிப்படையாக குறிப்பிட்டிருப்பது இவரின் குழந்தை மனசுக்கு ஓர் எடுத்துக் காட்டு.

மேடைகள் ஆரம்பத்தில் தோல்வியைக் கொடுத்தாலும் அதனைக்கண்டு மனம் தளரவில்லை இவர்

தோல்வி வந்தால்
மூலையில் முடங்காதே
ஊர் நடுவே சென்று
தம்பட்டம் அடி
நீ தோற்றுவிட்டாயென!
காரணங்கள் அறி -அறிவி
அடுத்தவனாவது செய்யாமலிருப்பான்

நாம் தோற்றுப் போனால் ஒன்று முடங்கி கிடப்போம். இல்லையென்றால் மீண்டும் சாதிக்கத் துடிப்போம். ஆனால் இவரோ தோற்றதை ஊருக்கு தம்பட்டம் அடிக்கச் சொல்லுகிறார்.

இது எந்த அளவிற்கு சாத்தியம் என்று தெரியவில்லை. ஆனால் தன்னுடைய தோல்விகள் கூட இன்னொருத்தருக்கு பாடமாக அமைய வேண்டுமென்பதே இவரின் நல்ல எண்ணம்.

பேச்சுகளால் சமூகத்தை மாற்ற முடியுமா என்று ஐயப்படுகிறார். எனக்கு இந்த இடத்தில் வைரமுத்து சொன்னதுதான் ஞாபகம் வருகின்றது

கேள்வி : கவிதைகளால் தேசத்தைக் காப்பாற்ற மடியுமா?

வைரமுத்து : மருந்துச் சீட்டுகளால் நோயை குணப்படுத்த முடியாது. அவற்றில் குறிப்பிட்டுள்ள மருந்துகளை வாங்கி உட்கொள்ள வேண்டும் . அப்பொழுதுதான் நோய்கள் குணமாகும்


உடல் கொஞ்சம் ஆழமாய்


ஆண்களின் உடலமைப்பைப் பற்றியும் அதனின் செயல்பாடுகள் பற்றியும் அதுபோல பெண்களின் உடலமைப்புகள் பற்றியும் அதனின் செயல்பாடுகள் பற்றியும் ஒருவொருக்கொருவர் கண்டிப்பாக புரிந்து கொள்ள வெண்டும் என்று தோழிக்கு தூது விடுகின்றார்.

பாலியல் கல்வி கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறார்.

அது மட்டுமல்ல பெண்கள் பூப்பெய்து விட்டால் உடனே விழா எடுத்துக் கொண்டாடுகிறவர்கள் மீது கோவப்படுகின்றார். இது என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. எனக்கும் இந்த ஐயம் நீண்ட நாளாகவே இருந்தது. பெண்கள் பூப்பெய்வது என்ன உலகுக்கு அறிவிக்கப்படவேண்டிய செயலா..? இந்த நாகரீக உலகில் இதுவெல்லாம் அவசியம்தானா..? இது ஆணாதிக்கத்தின் அசிங்கமல்லவா..?

தன் சுற்றுப்புற பெண்கள் பூப்பெய்தல் விழாவினைப் பார்க்கின்ற மற்ற சம வயது இளைஞர்கள் அப்படியென்றால் நாம் எப்போது பெரிய மனுஷனாகப் போகிறேன் என்ற தவறான கண்ணோட்டமும் அவர்களுக்கு தோன்றக்கூடும்.

பூப்பெய்திய பெண்ணைக் கிண்டலடித்த சம்பவங்களை நானே கண்டிருக்கின்றேன். விளையாட்டுத்தனமாக அவர்களின் கிண்டல்கள் அந்தப்பெண்ணின் மனதிலும் அந்த இளைஞர்களின் மனதிலும் வேண்டாத சிந்தனைகளையல்லவா தூண்டிவிடக்கூடும்.

திருநெல்வேலியைச் சுற்றியுள்ள கிராமங்களில் இப்படித்தான் பூப்பெய்திய சம்பவத்தை
ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து நடிகர்களின் புகைப்படத்தோடு பிரசுரித்திருப்பார்கள்.
அட உங்க வீட்டு திருமணத்திற்கு எதுக்குப்பா நடிகனோட புகைப்படம்..? அந்த நடிகனையா உங்க மகளுக்கு கல்யாணம் செய்த கொடுக்கப் போகிறீர்கள்..?

அது கிடக்கட்டும். மறுநாள் பள்ளிக்கோ கல்லூரிக்கோ செல்லும் அந்தப்பெண் தன் சக வயது மாணவர்களோடு அந்தப் புகைப்படத்தை பார்க்க நேர்ந்தால் எந்த அளவிற்கு அவமானத்தில் துடித்துப் போவாள்..?

எனக்குண்டான இந்த ஆதங்கத்தை அப்படியே விழியன் தன்னுடைய பார்வையில் தெளிவாக விளக்கியிருக்கின்றார்

சக வயது பெண்களை கிண்டலடித்துக் கொண்டும் கடலை வறுத்துக் கொண்டும் காலம் போக்கும் இளைஞர்களுக்கு மத்தியில் விழியன் ரொம்பவே வித்தியாசப்படுகின்றார்.

நான் இறந்து போனால்

தலைப்பைப் பார்க்கும் போதே எனக்கே பகீர் என்கிறது..? இதனை எப்படி இவரால் எழுத முடிந்தது..? இதுவரை அவரை நேரில் சந்திக்காத இணையத்தில் மட்டுமே பழக்கம் வைத்திருக்கும் என்னால் கூட தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஒரு சோகம் வந்து அப்பிக் கொள்கிறது.இதனை எப்படி இவரது அம்மா – அப்பா – தங்கை – நண்பர்கள் மற்றும் உறவினர்களால் தாங்கிக் கொள்ள முடிந்தது?

மரணத்தை இவர் மிக அலட்சியமாக கொசு கடித்தது போல சொல்லியிருக்கின்றார். ம் அதுவும் ஒரு வகையில் நல்லதுதான். மரணத்தைக் கண்டு பயந்து கொண்டிருப்பதைக் காட்டிலும் மரணம் வந்துவிடும் என்று தெரிந்து அதனை எதிர்கொள்ளத் தயாராக இருந்தால் வாழ்க்கையில் எல்லா விஷயங்களும் பக்குவப்பட்டு விடும்.

சமீபத்தில் வலைப்பதிவர்களில் ஒருவர் இறந்து போன போது கூட நான் என்னுடைய மரணத்தைப் பற்றி சிந்தித்தேன். நான் இறந்து போனால் என்னவெல்லாம் நடக்கும் என்று ஒரு சிறு கட்டுரைபோல எழுதலாமா என்று. ஆனால் என்னை நேசிப்பவர்கள் மனம் புண்பட்டுப் போகும் என்பதால் அதனை எழுத முடியவில்லை.

ஆனால் விழியன் அவர் இறந்து போனால் என்னவெல்லாம் செய்யவேண்டுமென்பதை
மிக தைரியமாக தனது வாழ்க்கைத்துணையிடம் சொல்லியிருக்கின்றார்.

இறந்துவுடன் பக்கத்து மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும. அவர்களிடம் தனது கண்களை தானமாக கொடுத்து விடவேண்டும். தேவைப்பட்டால் உடலையே கொடுத்து விடலாம்

சதா அழுது புலம்பிக் கொண்டிருக்க கூடாது. ஒருநாள் மட்டும் முழுவதும் அழுது தீர்த்து விடு.

சடங்கு – பூஜைகள் என்று பழமைகளுக்கு துணைபோக வேண்டாம். நான் பேயாக வந்தெல்லாம் உன்னை தொந்தரவு செய்யமாட்டேன்.

நான் இறந்தவுடன் நீ இன்னொரு துணையைத் தேடிக்கொள்ள வேண்டும்.

என் கல்லறையைக் கடந்து செல்பவர்கள் எனக் கல்லறை வாசகங்கள கண்டு என்னைப் பற்றி இப்பெடி ஒரு மனிதன் வாழ்ந்தான் என்று தெரிந்து கொள்ள வேண்டும்

என்று புரட்சிகரமாக சொல்லி நம்மை மிரட்டியிருக்கின்றார்.

கட்டிய மனைவியை தினமும் கண்ணீர் வடிக்க வைக்கும் கணவன்களுக்கு மத்தியில் தான் இறந்த போதும் கூட தன்னுடைய மனைவியின் கண்ணிலிருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வரக்கூடாது என்று விருப்பப்படும் இந்த இளைஞனை பார்க்கும் ஆர்வம் மேன்மேலும் அதிகரிக்கின்றது.

சினிமா புதுப்பார்வை

காதல் ரசம் கொட்ட வரிகளை காதலியிடம் எடுத்து விடுபவர்களுக்கு மத்தியில் இதைப்பற்றி எல்லாம் கூட விவாதிக்க வேண்டுமா என்ற அளவிற்கு சினிமாவைப் பற்றிய தனது வாழ்க்கைதுணையின் கருத்துக்களையும் பகிர்ந்திருக்கின்றார்

சினிமாவை நேரப்போக்கு மட்டும்தான் வைத்துக்கொள்ள வேண்டுமே தவிர சர்வசதா காலமும் மூழ்கிக் கிடக்க கூடாது.

நடிகனின் மீதுள்ள வெறியில் ரசிகர் மன்றம் வைத்து திரியும் இளைஞர் கூட்டங்களுக்கு மத்தியில் 3 மணி நேரம் ஒரு அறைக்குள் அடைப்பட்டு கிடக்க விருப்பமில்லை என்று சொல்லியிருப்பது இந்த காலத்து ஆளா..? ஆச்சர்யமாக இருக்கிறது

அதிலும் பகல் நேரத்தில் சினிமா பார்ப்பதை தவிர்த்துக்கொள்ளுவோம் நாம் இருவரும் இணைந்து இரவில் பார்த்துவிட்ட சினிமா- அதனைப் பற்றி கொஞ்சம் அலசி விட்டு தூங்கி விடுவோம். ஏனென்றால் பகலில் பார்த்து அந்த சினிமாவில் ஏற்பட்ட தாக்கத்தில் மனம் சஞ்சலமடைந்து கொண்டிருக்கும் ஆகவே ஒரு நாள் முழுவதும் வீணாகி விடும் என்று காலத்தின் மதிப்பை உணர்ந்து எழுதியிருக்கின்றார்

ரசிக்கும் பயணங்கள்

தன்னுடைய வாழ்வில் நடந்த பயணங்களைப் பற்றி சுவையாக எடுத்துரைத்துள்ளார்.

சின்ன சின்னப் பயணங்களில் கூட இரயில் கதவருகே நின்று கொண்டு மரங்கள் ஓடுவதை ரசிப்பது – சின்ன சின்ன வேடிக்கைப் பேச்சுக்கள் – அரட்டைகள் – கிண்டல்கள் என எல்லாவற்றையும் ரசித்திருக்கின்றார்.

நண்பர்களோடு சுற்றுலா செல்லும்போதுதான் தான் செய்த சின்ன சின்ன தவறுகள் – குறும்புத்தனங்கள் எல்லாவற்றையும் சில நண்பர்களிடம் தனக்கே தெரியாமல் அந்த குஷியில் சொல்லிவிடுவேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்

இது எந்த அளவிற்கு உண்மை என்று நான் மிகவும் அனுபவப்பூர்வமாகவே உணர்ந்துள்ளேன். சில நேரம் நண்பர்களோடு தனிமை கிடைக்கும் போது சில உண்மைகளை உளறிவிடுவேன்.

பின்னர்தான் உணர்வேன் அடடா அவனிடம் உண்மையைக் கூறிவிட்டோமே என்று. அதுபோன்ற அமைதியான மகிழ்ச்சியான சூழ்நிலைகள் சுற்றுலாவின் போதுதான் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

சின்ன சின்ன பயணங்களில் கிடைக்கின்ற அனுபவங்கள் – அமைதிகள் – புதிய புதிய மனிதர்கள் எல்லாவற்றையும் ரசிக்க வேண்டும் . இந்த ஊரில் உனக்கு கிடைக்காத அமைதி பக்கத்து ஊரில் கிடைக்கலாம் ஆகவே நீயும் என்னைப் போல பயணத்திற்கு தயார்படுத்திக் கொள் என்று தோழியிடம் கூறுகிறார்

கை கொடுத்த ஓவியம்

எதில்தான் இரசனைகள் இல்லாமல் இருந்திருக்கிறது இவருக்கு. ஓவியத்தையும் ரசிக்க ஆரம்பித்திருக்கின்றார்

சின்ன வயதில் ஓவியங்களில் ஆர்வம் இல்லாமல் இருந்தது பின் ஆர்வம் கொண்டு முயற்சி எடுத்து கிறுக்கி கொஞ்சம் கொஞ்சமாக வரைய ஆரம்பித்ததை சொல்லியிருக்கின்றார்

முதல் கோடே சென்றது கோணலாய். தளர்ந்துவிடவில்லை. அழிப்பானின் உதவியால் வரைந்தேன். வரைந்து கொண்டே இருந்தேன் கிழிந்தது தாள். உடைந்தது மனது.

என்று தன்னுடைய முதல் முயற்சியை கவித்துவமாக சொல்லியிருக்கின்றார்.

ஆகவே தனக்கு பிடித்த ஓவியத்தை நீயும் பழகிக்கொள். உனக்கு பல அனுபவங்கள் கற்றுத் தரும் என்று தன்கு பிடித்த எல்லா விசயங்களையும் தோழிக்குத் தெரியப்படுத்துகின்றார்.

புத்தகம் சொன்னது

ஒரு புத்தகம் எழுதும் ஆசியரின் பார்வையில் அவன் அனுபவத்தில் கிடைத்த அறிவினை அந்தப் புத்தகத்தில் பதிக்க முடியும். நான் அந்தப் புத்தகத்தை மட்டுமன்றி அது சம்பந்தமாக எல்லா புத்தகங்களையும் ஆராயும் பழக்கம் இருந்தது.

இப்படி இவர் சொல்லியிருப்பது முற்றிலும் உண்மையே. ஒரு தனிப்பட்ட ஆசிரியரின் கருத்துக்களை வைத்து ஒரு சம்பவத்தை அல்லது குறிப்பிட்ட விசயங்களில் உள்ள அறிவை பெருக்கி கொள்ள கூடாது. எல்லாருடைய பார்வைகளையும் ஆராய வேண்டும்

புத்தகத்தின் மீதுள்ள அவரது தேடல்களின் ஆர்வத்தை படிப்படியாக விளக்கியுள்ளார்.

நாராயணனின் புத்தகங்கள் மூலம் கிடைத்த உற்சாகம்

ஷிவ் கேராவின் புத்தகங்களால் வளர்த்த ஆளமைத்திறமை

எம் எஸ் உதயமூர்த்தியின் எழுத்துக்களால் கிடைத்த எழுச்சி

பிடல் கேஸ்ட்ரோசிவன் வாழ்க்கை வரலாறால் கிடைத்த நம்பிக்கை. இந்தப்புத்தகத்தில் தன்னைக் கவர்ந்ததாக குறிப்பிட்டுள்ள ஒரு சம்பவம் என்னையும் மிகவும் பாதித்தது

“ஒருமுறை பிடல் கேஸ்ட் தன்னுடைய படைவீரர்கள் அனைவரையும் இழந்து 2 அல்லது 3 பேர் மட்டும் மிஞ்சியுள்ள நிலையிலும் கூட கரும்புக் காட்டு நடுவிலே உட்கார்ந்து கொண்டு அடுத்த தாக்குதலுக்கா தயாராகும் அவரின் மனவலிமை கண்டிப்பாக நமக்குள் ஒரு புத்துணர்ச்சியைத் தருகின்றது.

கடைசியாக அவர் காதலியின் மடியில் படுத்துக்கொண்டு தமிழ்க் கவிதைகளை வாசிக்க வேண்டும் . என் ஆசையை நீ நிறைவேற்றுவாயா என்று சம்மதம் கேட்டிருக்கின்றார்.

அட இதுக்கெல்லாம் சம்மதம் கொடுக்காம இருப்பாங்களா என்ன..?

என்னைச் செதுக்கிய இயக்கம்

இதயத்தை செதுக்கியது போதாது என்று ஒரு இயக்கத்தை செதுக்கியதைப் பற்றி சொல்லியிருக்கின்றார்.

என்னடா இப்படி வித்தியாசமாக சிந்தனை கொண்ட இந்த இளைஞர் கடைசியில் ஏதோ ஒரு கட்சி இயக்கத்தில் சென்று சரணடைந்து விட்டாரே என்று தலைப்பை பார்த்தவுடன் உங்களைப்போலத்தான் நானும் நினைத்தேன். பின்னர்தான் தெரிந்தது அது கட்சி இயக்கம் அல்ல தமிழ்நாடு அறிவியல் இயக்கம் என்று.

வேலூரையும் அதனைச் சுற்றியும் உள்ள பள்ளியிலிருந்து வரும் மாணவர்கள் தங்களுக்குண்டான அறிவுத்திறனை வெளிப்படுத்தி தங்களுக்குள் தங்களுக்கு தெரிந்த அறிவினைப் பகிர்ந்து கொள்வதுதான் இந்த விழாவின் நோக்கம்.

இந்த அறிவியல் விழாக்களின் போது மற்ற பகுதி மாணவர்களை அவரவர்கள் வீட்டிற்கு அழைத்து சென்று உணவு பரிமாறுவது – இரவுகளில் அவர்களது வீட்டில் தங்க வைப்பது பின் அதிகாலையில் சிறிய சுற்றுலா போல அமைத்து அறிவியல் பூர்வமாக ஒவ்வொன்றைப் பற்றியும் விவாதிப்பது என்று 2 நாட்கள் வித்தியாசமாக உணர்வுகள் பரிமாறப்படும்.

பின்னர் பிரியப் போகும் கடைசிநாளில் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவிக்கொண்டு விடைபெறுவதை விழியன் விவரிக்கும்போது கட்டித்தழுவுகின்ற மாணவர்களின் சட்டைப்பைக்குள் நம் இதயம் கிடந்து நசுங்குவதைப் போன்ற ஒரு இனம் புரியாத உணர்வு.

அமெரிக்கா போகணுமா..?

தனது தோழியிடம் அமெரிக்கா போகணுமா என்று கேட்டு தான் மற்ற இளைஞர்களைப் போல அமெரிக்கா போக விருப்பம் இல்லை என்று திட்டவட்டமாக கூறியிருக்கின்றார்.

நிறையப் பணம் சொகுசான் வாழ்க்கை வாழும் அமெரிக்கா மாணவர்கள் பலர் அங்கே பெட்ரொல் பாங்கில் – ஹோட்டல் ரெஸ்டாரெண்ட் என்றுதான் வேலைப் பார்க்கிறார்கள்.
இப்படி கஷ்டப்பட்டு உழைப்பதைப்பற்றி எடுத்துரைக்காமல் என் மகன் அமெரிக்காவில் இருக்கிறான் என்று பெருமையடிப்பதில் பணனில்லை என்று கூறியிருக்கின்றார்.

நமது நாட்டிலையே திறமையான பல்கலைக்கழகங்கள் எவ்வளவோ இருக்கின்றது. வெளிநாட்டினர் கூட நமது நாட்டின் பல்கலைக்கழகங்கள் பற்றி பெருமையாக சொல்லும்போது நாம் அங்கு போய் படிக்க வேண்டிய அவசியம்தான் என்ன என்று கோவப்படுகின்றார்.

அவர் கூறியதைப் போல அமெரிக்கா மோகம் இன்றைய இளைஞர்களின் மத்தியில் வெகுவாக ஆட்கொண்டுள்ளது. “மேட் இன் அமெரிக்கா” என்று எழுதப்பட்டிருந்தால் போதும் விஷத்தைக் கூட வாங்கி சாப்பிட்டு விடுவார்கள் போல அந்த அளவிற்கு அமெரிக்கா வெறி.

இந்தியாவில் படித்துவிட்டு வெளிநாட்டில் மூளையை அடகுவைக்க தனக்கு விருப்பமில்லை ஆகவே என்னை அமெரிக்கா போவதற்கு கட்டாயப்படுத்தவேண்டாம் என்று தோழியிடம் வற்புறுத்தியிருக்கிறார்

வார இறுதி இறுக்கம்

ஒர வார இடைவெளிக்கு பிறகு தனது தோழியிடம் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்

ஒரு கிராமத்தின் எல்லையில் காதலர்தின கொண்டாட்ட போர்டு ஒன்றைக் கண்டு மாறுபட்டக் கோணத்தில் எழுதியிருக்கின்றார். நாமெல்லாம் காதலர் தின கொண்டாட்டம் நடைபெறுவதாக உள்ள போர்டைப் பார்த்தால் நிகழ்ச்சி எங்கே நடைபெறுகின்றது – என்ன என்ன நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றது என்பதைக் கவனிப்பதில் ஆர்வம் காட்டுவோம்.

ஆனால் இவரோ அந்தக் காதலர் தின போர்டு அருகேதான், அந்தக் கிராமத்தின் சாக்கடைகள் ஓடுகிறது. காதலர்கள் மொத்தமாக சென்று அந்த சாக்கடையை சுத்தம் செய்வதுதான் உண்மையான காதலர்தினம் என்று யாரும் கற்பனை செய்ய முடியாத சிந்தனை இவருக்கு தோன்றியிருக்கின்றது

எங்கோ ஒரு வாலண்டைன் காதலர்களைச் சேர்த்து வைத்ததற்காக நாம் ஏன் காதலர்தினம் கொண்டாடவேண்டும் என்று பொங்கி எழுந்திருக்கின்றார். இவையெல்லாம் வாழ்த்து அட்டைகள் மற்றும் பரிசுப் பொருட்கள் வியாபாரிகளின் வியாபார நுணுக்கங்கள் என்று குற்றம் சாட்டுகிறார்.

மேலை நாட்டுக் கலாச்சாரத்தின் மோகத்திற்கு தள்ளப்பட்டு நாமும் காதலர் தினம் கொண்டாடுவதில் அர்த்தமில்லை . சுதந்திர தினம் – பெண்கள் தினம் – அறிவியல் தினம் இவற்றிற்கெல்லாம் கொடுக்காத முக்கியத்துவத்தை காதலர்தினத்திற்கு மட்டும் ஏன் கொடுக்க வேண்டும் என்று மனதின் அடி ஆழத்திலிருந்து கேள்விகள் எழுப்பியுள்ளார்

பின்னர் ஒரு கோயிலில் தான் கண்ட காட்சியினைப் பற்றி விவரிக்கின்றார் 6 மாத கர்ப்பிணிப்பெண் கோயிலில் அங்கப் பிரதட்சணம் செய்வதைக் கண்டு திகைத்துப்போய் அவளிடம் புத்திமதி கூற முற்பட்டிருக்கின்றார். கடவுளின் பெயரால் கடவுள் எதிர்பார்க்காததை எல்லாம் அவனுக்கு பிடிக்க வேண்டும் என்று செய்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.

பின்னர் தான் பார்த்த தென்றல் படத்தின் கதையால் ஈர்க்கபட்டதை எழுதி அதனைப்பற்றி வருந்தி எழுதி அதன் அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார்.

இவற்றையெல்லாம் கூறிவிட்டு இந்த அனுபவங்களையெல்லாம் அப்படியே ஏற்றுக்கொள்ளாதே தோழியே.. நீயும் யோசி..அதன் பிறகு சரியாக இருந்தால் ஏற்றுக்கொள் என்று சம உரிமை கொடுத்திருக்கின்றார்.

எல்லா நதியிலும் நம் ஓடம்

வைரமுத்துவின் எல்லா நதியிலும் என் ஓடம் என்ற புத்தகத்தை படித்து விட்டு அதன் தாக்கத்தில் தன்னைக் கவர்ந்த பிற கவிதைகளையும் நயமாக எடுத்துக் கூறியுள்ளாhர்

வைரமுத்துவின் தாக்கம் ஏற்படாதவர் எவரும் உண்டோ..? இந்த நூற்றாண்டில் பல இளைஞர்களை கவிதை எழுத தூண்டி பெரும்பாலான கவிஞர்களை உருவாக்கியப் பெருமை வைரமுத்துவைச் சாரும்.

முன்பெல்லாம் கவிஞர்கள் என்றால் ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைத்து விடுவார்கள். ஆனால் இப்போது அப்படியல்ல கல்லூரியில் படிக்கின்ற எல்லா மாணவர்களுமே கிட்டத்தட்ட கவிஞர்களாகி விடுகிறார்கள். தான் காதலில் விழுந்து அல்லது தன்னுடைய நண்பர்கள் காதலில் விழுந்ததைக் கண்டு கவிதை எழுத ஆரம்பித்து விடுகிறார்கள்.

பெரும்பாலான இளைஞர்கள் பேருந்தில் தொங்கிக் கொண்டு போகும் போது நோட்டுப்புத்தகங்களை ஜன்னல் ஓரத்தில் இருப்பவளிடம் கொடுத்து அவளை கவருவதற்காக நோட்டுப்புத்தகங்களின் பின்பக்கம் எழுத ஆரம்பித்து கவிஞர்களாகி விடுகிறார்கள்.

அப்படிப்பட்ட இளைஞர்களுக்கெல்லாம் வைரமுத்துவின் எளிய நடைக்கவிதைகள் ஒரு பெரும் ஊக்கமாக இருந்திருக்கின்றது. அட இப்படி கூட கவிதைகள் எழுதலாமே என்று கவிதையை எளிமைப்படுத்தியிருக்கிறார் வைரமுத்து.

கவிதையைப் பற்றிய தனது கருத்துகளாக விழியன் கூறும்பொழுது

கவிதையில் அலங்காரங்கள் அர்த்தங்களை கொன்று விடக்கூடாது. மல்லிகைப் பூவிற்கு தங்கச் சங்கிலி அணிவிப்பது தேசியக் குற்றமாகும் என்று வைமுத்துவின் நடையிலேயே அழகாய் விளக்கம் கொடுத்திருக்கின்றார்.

சீப்பு
உன் கூந்தலை வாருகிறது
என் மனதை
ஏனடி கலைக்கிறது?

என்று காதல் ரசம் மேலோங்கி நிற்கும் சில கஸல் கவிதைகளையும் எடுத்துக் காட்டியுள்ளார்.

சிராஜ் என்னும் கவிஞன் தன் காதலியைப் பிரிந்து சோகத்தில் கூறியுள்ளதாக ஒரு கவிதை :

நீ
பிரிந்துவிட்டாய் என் அன்பே
காதலெனும் வாணலியில்
வறுபடுகிறது
என்
இதயமென்னும் இறைச்சித்துண்டு

இப்படி காதல் கவிதைகளை உதாரணம் காட்டியிருப்பதால் ஒருவேளை விழியன் தேடுகின்ற தோழி அவர் விழியில் விழுந்து விட்டாளோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

அப்பாவுடன் சந்திப்பு

அப்பாவை சந்தித்த அந்த சிறிய அனுபவத்திற்கு கூட மிகப்பெரிய முக்கியத்துவம் கொடுத்து தோழியிடம் விவரிக்கிறார்

அப்பாவை சந்தித்து அவரிடம் அரசியல் – சமூகப்பணிகள் – புத்தகங்கள் – பாலிசி மாற்றங்கள் என்று சராமாரியாக எல்லாவற்றையும் விவாதித்து விட்டு திரும்பி வருகின்ற வழியில் தான் சாப்பிட மறந்த உணவுப் பொட்டலத்தை சாலையோரம் கையேந்தி நிற்கின்ற சிறுவனுக்கு கொடுத்த மகிழ்ச்சியில் இரங்கிப் போய் ஒரு கவிதை சொல்லுகிறார்

கட்டுக்கடங்காத
குளிர்
பனிக்காற்று வந்தது
பவனி

ஊரே அடங்கியும்
அடங்கவில்லை

அந்தக் கால்வயிற்றின் பசி

கதகதக்க ஒரே இடம்
அம்மாவின் மடி

வானமே இவன்

வீட்டுக் கூரை
பிளாட்பாரம் மட்டும் இவன்

படுக்கையறை

அவன் உடம்பில்
கந்தலாய் இருந்தது சட்டை
இங்கே கந்தலானது என் மனசு

என்று அந்தச் சாலையோர சிறுவனுக்காக இரக்கப்பட்டிருக்கின்றார்.

நாம் பெற்ற அறிவும் ஆற்றலும் நமக்காகவே வாழ்ந்து மடிந்து விடுமோ என்று அச்சப்பட்டு என் சக வயது மக்களுக்கு நான் என்ன செய்யப்போகிறேன் என்று சமூக அக்கறையில் புலம்புகிறார்.

கனவு இல்லம்

வசந்த மாளிகை படத்தில் சிவாஜி காதலிக்காக ஒரு மாளிகை கட்டிய மாதிரி இவரும் தனது வாழ்க்கைத்துணையோடு வாழப்போகும் அந்த கனவு இல்லத்தை தயார்படுத்தியிருக்கின்றார்

எல்லா நண்பர்களும் ஒரே ப்ளாட்டில் கூடி இருந்து பிறந்த நாள் – மணநாள் – விழாக்கள் – பண்டிகை என்று மொத்தமாக கொண்டாடுவோம். சோகம் – துக்கம் சமமாக பகிர்ந்து கொள்வோம் என்று தனது கனவு இல்லத்தை அவர் விவரிக்கும்போதே நாமும் அதில் குடிபோக மாட்டோமா என்று ஏங்குகிறது.

இதில் மெல்லியதாக இன்னொரு விசயத்தையும் வருடிச் சென்றிருக்கின்றார் அதாவது ஆண் – பெண் நட்பு. திருமணத்திற்குப் பிறகும் ஆண்களின் கல்லூரிக்கால நட்புகள் தொடர்கின்றது. ஆனால் பெண்களின் நட்பு அவளது திருமணத்திலையே முடிந்து போகின்றது.

நான் கூட இதுபற்றியான ஒரு பதிவை எனது வலைப்பூவில் இட்டுள்ளேன்.

http://nilavunanban.blogspot.com/2005/07/blog-post_21.html

திருமணம் முடிந்த பிறகு எப்படி என் உறவுகள் நம் உறவினர்கள் ஆகின்றனரோ அதே போல உன் நண்பர்களும் என் நண்பர்களும்; நம் நண்பர்கள் ஆக வேண்டும்.

என்று அவர் கூறியிருக்கின்றார். இப்போதுள்ள எத்தனையோ படித்த இளைஞர்கள் கூட மனைவியின் நண்பர்களை ஏற்றுக்கொள்ள முன்வராத சமூகச் சூழ்நிலையில்தான் இருக்கின்றார்கள். அந்த விசயத்தில் விழியன் தெளிவான சிந்தனையில் உள்ளார்.

தனது கனவு இல்லத்தில் வீட்டைச்சுற்றி பூக்கள் மரங்கள் மெல்லிய காற்று சுத்தமான சுற்றுப்புறத்தோடு இருக்கவேண்டும் என்று இயற்கை நேயனாக கூறியிருக்கின்றார்.

வீட்டைச்சுற்றி பூக்கள் என்று சொல்லிவிட்டு அடைப்புக்குறிக்குள் உன்னையும் சேர்த்துதான் என்று சொல்லியிருப்பது மெல்லிய கவிதைத்துவம்

பூக்கள் விரியும்போது 40 பீரங்கிகள் ஒன்றாய் வெடிக்கும் அளவிற்கு சத்தம் கிளம்பும்
மனிதனின் காதுகள் 20 டெசிபல் சத்தம் மட்டுமே கேட்கும் திறன் உடையது என்று
சின்னச்சின்ன அறிவியல் சிந்தனைகளையும் தூவியுள்ளார்.

————

எந்த புத்தகத்திற்கும் நான் இப்படி மெனக்கெட்டு இருந்து விமர்சனம் எழுதியதில்லை. ஆனால் இந்த தோழியே உன்னைத் தேடுகின்றேன் என்ற புத்தகம் என்னை அந்த அளவிற்கு எழுதுவதற்கு தூண்டிவிட்டது.

தலைப்பை எனக்குள் ஒரு ஆர்வத்தைத் தூண்டியது. இவர் ஏன் தோழியைத் தேடவேண்டும்.?.காதலிக்க வா.?.இல்லை தனது பழைய நட்பினை புதுப்பித்துக் கொள்ளவா ?என்ற ஆர்வத்தில்தான் இந்தப் புத்தகத்தை துபாய்க்கு வரும் இவரது நண்பரிடம் கொடுத்துவிடச் சொன்னேன்.

இந்தப்புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள பெரும்பான்மையான கருத்துக்கள் எனது எண்ணங்களோடு ஒத்துப்போயிருப்பதாலும் இதனைப்பற்றிய ஆர்வம் மேலும் கூடியது.

கணிப்பொறியில் ஹார்ட்டிஸ்க்கை மாற்றிப் போடுவது போல நான் சிந்தித்து பாதுகாத்து மூளையில் சேமித்து வைத்திருந்த கருத்துக்களை அவர் கழற்றி எடுத்துக்கொண்டு போய் அவரிடம் வைத்துக்கொண்டு எழுதிவிட்டாரோ என எண்ணத்தோன்றுகிறது.

இவரின் வித்தியாசமான சிந்தனைகளை எத்தனைபேர் நடைமுறைப்படுத்த முடியுமோ என்றுத் தெரியவில்லை ஆனால் கண்டிப்பாக இதன் தாக்கத்தினால் நீங்களும் கொஞ்சமாவது உங்களை மாற்றிக்கொள்ள முடியும்.

நான் இப்படி கூறுவதனால் இவருடைய புத்தகத்திற்கு நான்தான் மார்க்கெட்டிங் மேனேஜர் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. இதுவரை நான் விழியனை நேரில் சந்தித்ததே கிடையாது. ஆனால் சந்திக்காமல் இருந்ததற்காக வருத்தப்படுகின்றேன்.

இந்த வரம்பு மீறிய இளைஞனின் எண்ணங்களை சீக்கிரமாய் அறிந்து கொள்ளுங்கள்.

புத்தகம் வெளியீடு :

கேள்விழி பதிப்பகம்
6 / 75 B Sector , VG ராவ் நகர்
வேலூர் – 632 007
அலைபேசி : 09886217301
மின்னஞ்சல் : vizhiyan@gmail.com

– ரசிகவ் ஞானியார்


K.Gnaniyar
Dubai
www.nilavunanban.blogspot.com

Advertisements
5 Comments leave one →
 1. Sathish Rajamani permalink
  March 17, 2006 9:12 am

  Nice to see the Review. Also nice to see the way your friend has appreciated the efforts put by you .. This is evident right in the first line of his review

  Appreciations to both of you

 2. Prakash permalink
  March 17, 2006 9:41 am

  நான் இவருடன் பல நாட்கள் பழகி இருக்கிறன் … ஆணால் என்னால் எழத முடியாத அல்லது கற்பனை செய்ய முடியாத வரிகளை … இங்கு பதிவு செய்தற்கு வாழ்த்துகள் … விழியனுக்கும் சேர்த்து

  சாதரண இந்தியன்
  பிராகஷ்.ம

 3. Jegan permalink
  March 17, 2006 11:56 am

  Mikka arumai….

  Vizhiyanai vazhthiya anbu nencham konda rasika virku nanri nanri nanri…..
  Thangalin Vimarchanam avarin vimochanam…avarin muyarchiku thankalin unrukol….Aanal sirithu kuraiyum kandupidithu soliruka vendamaa..(Kandu pidika mudiyavillai polum)

  Vazhga Thamzhil
  Jegan

 4. March 18, 2006 10:01 pm

  மிகவும் அருமையாக விரிவுரை எழுதியிருக்கிறார் ரசிகவ்.நூலின் அடுத்த பதிப்பு வரும்போது இதை முன்னுரையாகவே வைக்கலாம்.

  அடுத்தவர் படைப்பை மனமாற பாராட்ட ஒரு பரந்த மனப்பான்மை வேண்டும்.ரசிகவுக்கு அது நிறையவே இருக்கிறது.

  வெற்றிக்கொடியை நோக்கி விரைந்து செல்லும் விழியனுக்கு என் வாழ்த்துக்கள்

 5. July 19, 2011 3:31 am

  விழியன் ,
  உங்கள் நண்பரது விமரிசனத்தை படிக்கும் போது ,ஒரு முழு வாழ்வையே வாழ்ந்து முடித்த மாதிரி இருக்கிறது , நேற்றையும் நாளையும் இணைத்து கோடிட்டு காட்டும் ஒரு கனவு வாழ்க்கை .நிச்சயம் வாசிக்க வேண்டிய படைப்பு தான் …உங்கள் கனவும் நிதரிசனமும் ஒரே நேர்கோட்டில் வந்து இனைந்து இனிய வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள் ..தோழியை கண்டு கொண்டு இருப்பீர்கள் 🙂 குழலி வேறு வந்துவிட்டால் இல்லையா 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s