Skip to content

Karuvariye Kallaraiyaga..

July 6, 2006

கருவறையே கல்லறையாக..

அய் ஜாலி,இன்னும் ஒரு மாதத்தில் இந்த அழகிய உலகை காண குட்டிகரணம் அடித்து வெளி வரப்போகிறேன். எட்டு மாசமாகி என் அம்மா வயிற்றிலேயே இருக்கிறேன். எத்தனை பாசமானவள் என் தாய், அட எல்லா தாயும் தான். நான் உள்ளே இருக்கும் போதே இத்தனை கனிவாக, பாசமாக பார்த்துக்கொள்கிறாளே இன்னும் நான் வெளியே வந்து தவழ்ந்து, சிரித்து, அழுது, பேசி, ஆடி,பாடி, ஓடி விளையாட ஆரம்பித்துவிட்டால். அம்மாடி எத்தனை பூரிப்பாள் இவள்.

இன்னும் ஒரே மாதம் தான், விடியலின் அழகை ரசிப்பேன்.சாரலின் இனிமையை ரசிப்பேன், மெல்லிசையை கேட்பேன், உலக இசைகளில் மூழ்குவேன்,கவிதைகள் பல படிப்பேன், தமிழை ருசிப்பேன், தமிழ் இன்பத்தை பருகுவேன், மேகத்தை காண்பேன், மழையில் நடுவே வானில் அவதரிக்கும் வானவில்லை காண்பேன், தூரலில் நனைவேன், தூரத்து மலையை படம்பிடிப்பேன். ஓவியம் கற்பேன், எனது அருமை அம்மாவை வரைவேன். இன்னும் ஏராளமான ஆசைகளுடம் நான் வெளிவரப்போகிறேன்..

அம்மா உங்களுக்கு ஒரே ஒரு சின்ன வேண்டுகோள் தான். நான் இருக்க போவது எத்தனை நாட்கள் தெரியவில்லை. எனக்கு முன்னர் நீங்களோ உங்களுக்கு முன்னர் நானோ இந்த அழகிய உலகை விட்டு பிரிந்துவிடுவோம் கூடியவிரைவில். அதற்கு முன்னர் ஆனந்தமாக இருப்போம். உங்கள் கண்ணில் இருந்து கண்ணீரே வரக்கூடாது. என் கண்ணிலும் நீர் வராமல் பார்த்துக்கொள்வீர்கள். என்ன அம்மா செய்ய உங்களுக்கு பக்குவம் இருக்கும் அழாமல் இருப்பீர்கள், எனக்கு ஏது பக்குவம் கருவறையில் இருந்து இன்னும் மனிதர்கள் எவரையும் பார்க்கவில்லையே.

எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை அம்மா, நான் ஏதாவது தவறு செய்துவிட்டேனோ? எனக்கு ஏன் இந்த தண்டனை? உங்களுக்கு ஏன் இந்த தண்டனை? நினைத்தால் அழுகை அழுகையா வருகின்றது தெரியுமா. எங்கே அழுதால் உங்கள் குடத்தில் நீர் நிரம்பி உங்களுக்கு கருவறையில் பிரச்சனை வந்துவிடுமோ என பயமா இருக்கு, அதனால கண்ணீரை நான் வெளியே விடுவதில்லை. உள்ளுக்குள் அடக்கி கொள்கிறேன்.என்னை நல்ல குழந்தை என சொல்லுங்கள் அம்மா, அது எனக்கு ஆனந்தம் தரும். என் செல்ல அம்மா நீங்கள்..

என் சின்னஞ்சிறிய காது புதிதாய் வளர்ந்த சமயம் ,அப்போது தான் அந்த இடி செய்தி என் காதில் விழிந்து. அப்பா ஏன் இப்படி செய்துவிட்டார்.ஏன் தவறான இடங்களுக்கு சென்றார். சென்றவர் பாதுகாப்பாகவாவது இருந்திருக்க வேண்டாமா? இப்படி கொடிய நோயை நமக்கும் கொடுத்துவிட்டாரே. கொஞ்ச காலம் முன்னர் கண்டுபிடித்து இருந்தாலாவது என்னை மட்டும் காப்பாற்றி இருக்கலாம் என மருத்துவர் சொன்னார், இது தான் நான் கேட்ட முதல் செய்தி. யாருக்கும் இந்த தரணியில் மீண்டும் இப்படிப்பட்ட கொடுமை நிகழ கூடாது அம்மா. பாவம் ஏது அறியாத நீங்க கூட இப்படி பட்ட நிலைக்கு வந்துவிட்டீர்கள்.தினமும் நீங்கள் புழுங்கி புழுங்கி அழுவது உலகிற்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம், ஆனால் உங்களுக்குள்ளே வசிக்கும் எனக்கு தெரியாமல் எப்படி இருக்க முடியும்.

திருமணம் நடக்கும் முன்னர் கணவனும் மனைவியும் ஏன் இரத்த பரிசோதனை செய்து கொள்ள கூடாது அம்மா? இது மற்றவர் மீது இருக்கும் நம்பிக்கைக்கு பாங்கு விளைவிக்கும் என நினைக்காமல் வரப்போகும் அடுத்த தலைமுறையையாவது காப்பாற்றலாம் அல்லவா? திருமணம் முடிக்கும் தன் துணைக்காவது ஏதும் வராமல் காப்பாற்றலாம் அல்லவா? இந்த நோய் தவறான முறையில் மட்டும் வருவது அல்லவே.இப்படிக்கு,

மரணத்தில் வலியோடு பிறக்கப்போகும் பல ஆயிரம் குழந்தைகளில் ஒன்று

விழியன்

One Comment leave one →
  1. Mathangi permalink
    July 8, 2006 2:16 am

    கருவறையே கல்லறையாக- அருமையான பதிவு- ஆண்களின் தவறுகளுக்கு பெண்களும் குழந்தைகளும் பலியாவது சோகம்

Leave a comment