Skip to content

The Lost Nose – Kids Story

December 6, 2006

தொலைந்த மூக்கு – சிறுவர்களுக்கான கதை

அண்ணன் தங்கை இருவருக்கும் எப்போதும் சண்டை தான். அண்ணன் பரத் மகா குறும்பன். இரண்டாம் வகுப்பில் படிக்கின்றான். தங்கை நந்தினி இன்னும் பள்ளிக்கு செல்லவில்லை.சின்னப் பெண். தாய் தந்தை இருவரும் பணி புரிகின்றார்கள். அப்பத்தாவும் தாத்தாவும் இவர்களுடன் இருக்கிறார்கள். பரத் , நந்தினி குடும்பம் இருப்பது ஒரு அடுக்குமாடி குடியிருப்பில். அந்த குடியிருப்பில் மொத்தம் 5 மாடி. மூன்றாவது மாடியில் இவர்கள் குடியிருக்கின்றார்கள்.

ஒரு சனிக்கிழமை காலை அப்பாவும் அம்மாவும் பணிக்கு சென்றபின்னர் பரத்தும் நந்தினியும் விளையாடிக் கொண்டு இருந்தனர். தாத்தா வெளியே தன் நண்பர்களைக் காண கிளம்பினார்

“பரத் தங்கையை சீண்டாமல் விளையாடு. சண்டை போட்டுக்க கூடாது சரியா? தாத்தா சீக்கிரம் வந்துவிடுகின்றேன்”

“சரிங்க தாத்தா” – இருவரும்.

விளையாட்டு சாமான்கள் எடுத்துக்கொண்டு இருவரும் மொட்டைமாடியில் விளையாடச் சென்றனர். நிழலாக இருந்த ஓரத்தில் விளையாடினர்.எந்த பொருள் பரத் எடுத்தாலும் உடனே நந்தினி அது வேண்டும் என்பாள். அப்போது திடீர் என்று பரத் “உஷ் உஷ்” என்று கத்தியபடி ஓடினான்.

“அண்ணா என்ன ஆச்சு?” பயத்துடன் அண்ணன் சட்டைக்கு பின்னால் ஒளிந்து கொண்டாள்..

“ஒரு பருந்து வந்தது பார்த்தியா?”

“இல்லையே”

“பெரிய பருந்து”

”அச்சோ அப்புறம்?. ஏன் விரட்டிக்கொண்டு ஓடினீர்கள்?”

“அழக்கூடாது சரியா. அந்த பருந்து உன் மூக்கை கடிச்சி எடுத்துக்கொண்டு போய் விட்டது. அது தான் துரத்திக்கொண்டு சென்றேன். அதற்குள் பறந்தே போய்விட்டது”..

இவன் சொல்லி முடிப்பதற்குள் நந்தினி அழ ஆரம்பித்துவிட்டாள்..”அம்மா என் மூக்கு..என் மூக்கு ” என்று அழுதபடி படிக்கட்டுகளில் இறங்கி தன் வீட்டிற்கு சென்றாள். அவள் விட்ட சத்தத்திற்கு அந்த கட்டிடத்தில் உள்ள அனைவருமே பயந்துவிட்டனர். யார் என்ன சொல்லியும் அழுகை நின்ற பாடில்லை. அப்பத்தா அதெல்லாம் ஒன்றும் இல்லை.அண்ணன் விளையாடுகிறான் என்றாள். கேட்கவே இல்லையே. அழுதபடியே இருந்தாள்.கை கால் உதைத்தாள்.

தாத்தா அந்த சமயம் வீட்டிற்குள் வந்தார். “என்னாச்சு பாப்பாக்கு? ஏன் என் தங்கம் அழுகின்றது?”

தன் அழுகையை நிறுத்தி “தாத்தா, நானும் அண்ணனும் விளையாடிக் கொண்டு இருந்தோம்.ஒரு பெரிய பருந்து கறுப்பு நிறத்தில் வந்தது. என் மூக்கை…” மீண்டும் அழுகை…

“அழாமல் சொன்னால் தானே புரியும்…”

“என் மூக்கை கடிச்சி எடுத்துக்கொண்டு போய்விட்டது..ம்ம்ம்..ம்ம்ம்”

நிலைமையை புரிந்து கொண்டார் தாத்தா. “ஓ உன் மூக்கு தானா அது? ” என்றார்.

அமைதியானாள் நந்தினி. “நான் தெருவில் வந்த போது ஒரு பருந்து வந்து என்னிடம் பேசியது.ஒரு அழகான குட்டி பெண்ணின் மூக்கை எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன். பாவம் அவள் நல்ல பெண், சமத்து பெண், என்று சொல்லிவிட்டு மூக்கை என்னிடம் கொடுத்து விட்டு பறந்து சென்றது.”

“இதோ பத்திரமாக என் பாக்கெட்டில் வைத்திருக்கிறேன்.எங்கே கிட்டவா..கண்ணை மூடிக்கொள்..”

பாக்கெட்டில் இருந்து ஏதோ எடுப்பது போல் பாவனை செய்து அவள் முகத்தில் வைத்து அழுத்தினார்.

“ஆகா. மூக்கு ஒட்டியாச்சே..போய் கண்ணாடியில் பார்.” நந்தினி கண்ணாடியை நோக்கி ஓடினாள்..”படவா..குழந்தையை ஏன் இப்படி ஏமாற்றுகிறாய்” என்று செல்லமாக பரத் கன்னத்தை கிள்ளினார் தாத்தா..

“ஹைய்யா மூக்கு வந்துடுச்சே..ஜாலி..ஜாலி..அண்ணா மூக்கு வந்துடுச்சு…ஜாலி ஜாலி…” மீண்டும் மாடிக்கு சென்று விளையாட துவங்கினர் ஆனந்தமாக.விழியன் மாமா

Advertisements
15 Comments leave one →
 1. Madhavan permalink
  December 6, 2006 3:56 am

  Thambi, Yenna kadhai idhu

 2. December 6, 2006 4:03 am

  சூப்பருங்கோ!! படிக்கும்போது நானும் சின்ன பிள்ளையாய் மாறிட்டேன்..

 3. சேர்ம ராஜா permalink
  December 6, 2006 4:11 am

  என்ன மாமா இப்படி தங்கச்சியை ஏமாத்துறீங்க??

  பாவம் இல்ல பாப்பா..

 4. வீ.ஆனந்த திருமுருகன் permalink
  December 6, 2006 4:52 am

  நீங்கள் இன்னோரு பூந்தளர் வாண்டுமாமா ஆக வாழ்த்துக்கள்

 5. மாணிக்கம் permalink
  December 6, 2006 6:07 am

  m… கலக்குங்க…

 6. December 6, 2006 6:35 am

  இந்தக்கதை ஒரு அருமையான குழந்தைகளுக்கான கதை..
  இதேபோல ஒரு கதை… ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கி யுனித்தமிழாக்கி உள்ளேன்

  ஒரு ஊரில் இரண்டு குறும்புச்சிறுவர்கள் இருந்தனர். 8 மற்றும் 10 வயதே உடைய அவர்களின் குறும்பு ஊரில் எல்லோருக்கும் பிரசித்தம். இருவருமே எப்போதும் பிறருக்கு இன்னல்கள் தருவதிலேயே இன்பம் அடையும் வழக்கம் கொண்டு இருந்தனர்.

  ஊரில் எதாவது பிரச்சினை நடந்தால் அதற்கு இந்த சிறார்களே காரணம் என்கிற அளவுக்கு இவர்களை ஊர் அறிந்து வைத்து இருந்தது.

  இவர்களின் தாய்க்கு – அதே ஊரில் புதிதாக வந்த ஒரு சாமியாரைபற்றி தெரியவந்தது. அவள் சாமியாரிடம் சென்று சிறுவர்களைப் பற்றித் தெரிவித்து – அவர்களை நல்வழிப்படுத்துமாறு சொன்னாள்.

  சாமியாரும் சிறுவர்களைப் பண்படுத்துவதாக வாக்குக் கொடுத்தார். அவர்களைச் சந்திக்க முடிவு செய்தவர் – ஒருவனை காலையிலும் – மற்றவனை மாலையிலும் சந்திப்பதாகவும் சொன்னார்.

  அதேபோல சிறியவனை காலையில் இருந்து கண்காணித்து வந்தார். மாலைநேரமும் ஆனது.. சாமியார் சிறியவனைக் கூட்டிக் கொண்டு தாயிடத்தில் வந்தார். சிறுவனிடம் ‘கடவுள் எங்கே?” என்று சாதுவாகக்கேட்டார். சிறுவன் அசையவில்லை. சாமியார் – சிறுவனிடம் சற்று சப்தத்தை உயர்த்தி – ‘கடவுள் எங்கே?” – என்றார். பதில் இல்லை.
  மீண்டும் மீண்டும் மிரட்டி உருட்டி கேட்டார். பதில் இல்லை. திடீரென்று
  இந்தப்பையன் ஒரே ஓட்டமாக வீட்டினுள்ளே ஓடி இருட்டான அறைக்குள்ளே மறைந்தான்.

  இவனது நடவடிக்கையைக் கண்ட மூத்தபையனோ – “அடேய். ஏனடா ஓடி வந்து இங்கே மறைகிறாய்” – என்றான். வீட்டினுள் மறைந்தவனோ – சற்றும் தயக்கமின்றி சொன்னான் – “இல்லடா… அந்த சாமியாரு — திரும்ப திரும்ப கடவுள் எங்கே? கடவுள் எங்கே? ” அப்படின்னு கேட்டுத் தொந்தரவு செய்தாரு.
  “நான் கடவுளை ஒன்னும் பண்ணலை. எதையாவது காணவில்லை என்றால் அம்மா அடிப்பாங்க இல்லையா… அதுமாதிரி சாமியாரு கடவுள் எங்கேனு கேட்டாரு. நானும் அடிவாங்கப் பிடிக்காமல் ஓடி வந்து இங்கே மறைந்து கொண்டேன். அது சரி கடவுளை நீ எதுவும் செய்தாயா?” என்றான்.

 7. December 6, 2006 6:52 am

  superb

 8. December 6, 2006 7:04 am

  வணக்கம் உமா,
  சிறுவர்களுக்காக எழுத முடிவெடுத்திருப்பது வரவேற்கத்தக்க விஷயம்.
  வரவேற்பும் பாராட்டுக்களும்!
  ‘ஆஹா! பேஷ்! பலே!’ மட்டுமே சொல்லிவிட்டுப் போகாமல், என்னாலான உதவியை உங்களுக்குச் செய்ய ஆசைப்படுகிறேன்.
  அதாவது ஒரு சில திருத்தங்கள் சொல்கிறேன், ஒருவேளை அது உங்களுக்குப் பயன்படலாம்! 🙂

  1.ஆரம்பம்
  //அண்ணன் தங்கை இருவருக்கும் எப்போதும் சண்டைதான்//
  இப்படி half wayல் சிறுவர் கதைகளை ஆரம்பிக்கக் கூடாது. //பரத், நந்தினி இருவரும் அண்ணன் – தங்கை.// என ஆரம்பிக்க வேண்டும். இதுதான் சிறுவர்களுக்கு எளிதில் ஜீரணமாகும் ‘ஒரு ஊரில ஒரு ராஜா’ பாணி ஆரம்பம்!

  2.உரிச்சொல்
  //மகா குறும்பன். //
  கூடுமானவரை சிறுவர்களுக்கு அடிக்கடி புழக்கத்தில் இல்லாத adjective களை தவிர்க்க வேண்டும். மகா என்பது அந்த வகையில்தான் சேர்த்தி. //அண்ணன் பரத் இருக்கிறானே, அவன் பெரிய குறும்புக்காரப் பையன்!/ இப்படி இருக்கலாம்!

  3.நடை
  ஃப்ரெண்ட்லியான நடை இருக்கட்டும்.
  உதாரணம்.. //ஒரு ஊரில ஒரு ராஜா// மற்றும் //அண்ணன் பரத் இருக்கிறானே, அவன் பெரிய குறும்புக்காரப் பையன்!/

  4.எண்ணும் எழுத்தும்
  //மொத்தம் 5 மாடி//
  எண்ணையும் எழுத்தையும் மிக்ஸ் பண்ணக்கூடாது. இன்னும் சரியாகச் சொல்லப்போனால் எண்ணையே உபயோகப்படுத்தக் கூடாது. //மொத்தம் ஐந்து மாடி// என்றுதான் எழுத வேண்டும். எழுத்துக்களைப்படிக்கும்போது எண்களும் எழுத்துக்களாகவே வரவேண்டும்.

  5.குழப்பம் வேண்டாம்
  //அப்பத்தாவும் தாத்தாவும் இவர்களுடன் இருக்கிறார்கள்//
  //மாடியில் இவர்கள் குடியிருக்கின்றார்கள்.//
  முதல் உதாரணத்தில் ”இருக்கிறார்கள்” என்று எழுதி இருக்கிறீர்கள். அடுத்ததில் ”இருக்கின்றார்கள்!”. எது சரி என சிறுவர்கள் குழம்பலாம்! இலக்கணம் எது சரியோ அதை அடிபிறழாமல் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.

  6.எளிமை தேவை
  //தாய் தந்தை இருவரும் பணி புரிகின்றார்கள்// இதற்குப் பதில் //அம்மா அப்பா இருவரும் வேலைக்குப் போய் வருபவர்கள்// எனச் சொல்லலாம்.

  7.Avoid compound sentenses
  //ஒரு சனிக்கிழமை காலை அப்பாவும் அம்மாவும் பணிக்கு சென்றபின்னர் பரத்தும் நந்தினியும் விளையாடிக் கொண்டு இருந்தனர்.//
  இதனை இப்படி தனித்தனியாக்கினால் சிறுவர்களுக்குப் பிடித்ததாகும்.
  //அன்று சனிக்கிழமை. பள்ளிக்கு விடுமுறை. அம்மாவும் அப்பாவும் வேலைக்குப் போனபிறகு பரத்தும் நந்தினியும் விளையாடத் தொடங்கினார்கள்.//

  8.நோ ஷார்ட் கட்ஸ்
  //விளையாடிக் கொண்டு இருந்தனர்//
  இருந்தனர், இருந்தார்கள்… இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் அர்த்தம் ஒன்றுதான். எனினும் சிறுவர்களுக்குச் சொல்லும்போது ஷார்ட் கட் தவிர்ப்பதே நல்லது. //இருந்தார்கள்//தான் சரி!

  9.பெயரில் இருக்கு விஷயம்
  கதாபாத்திரங்களுக்குப் பெயர் வைக்கும்போது நமக்குப் பிடித்ததைவிட சிறுவர்களுக்கு மிகவும் பிடித்த பெயராக இருக்கட்டும். பரத், நந்தினி என்பது எல்லா தரப்பு சிறார்களையும் ஈர்க்காது.
  ராமு, கமலா, சோமு.. இப்படி மிக மிக எளிமையாகவே இருக்க வேண்டும்.
  பெயர் வைப்பதில் இன்னொரு இலக்கணமும் இருக்கிறது. உதாரணத்துக்கு பையன் பெயர் ராமன் என வைத்துக் கொள்வோம்.
  ராமன், ராமனிடம், ராமனை, ராமனுக்கு.. இப்படி பலவாறாக பெயரை எழுதும்போதும் படிக்க இலகுவாகவே இருக்கும். ராமனுக்குப் பதில் பரத் போட்டுப்பாருங்கள்!
  பரத்திடம்!! பரத்தை!!!

  10.ஒரே நடை
  //“பரத் தங்கையை சீண்டாமல் விளையாடு. சண்டை போட்டுக்க கூடாது சரியா? தாத்தா சீக்கிரம் வந்துவிடுகின்றேன்”//
  பேச்சு நடை மற்றும் எழுத்து நடை இரண்டுமே இங்கே மாறி மாறி வருகிறது.
  மாறாக ஏதாவது ஒன்றில்தான் இருக்கவேண்டும்.
  உதாரணத்துக்கு பேச்சு நடை எனில்..//பரத், தங்கச்சிய சீண்டாம விளையாடு. சண்டை போட்டுக்கக் கூடாது. சரியா?தாத்தா சீக்கிரம் வந்துடுறேன்//
  கொட்டேஷனுக்குள் வருவது பேச்சுத் தமிழிலேயே இருக்கலாம். என்றாலும் சிறுவர்களுக்கு இலக்கணக் குழப்பம் ஏற்படலாம்(தங்கச்சிய அல்லது தங்கச்சியை அல்லது தங்கையை) என்பதால் பெரும்பாலும் இலக்கணப்படி வரும் பேச்சுத்தமிழிலேயே எழுதலாம்.

  11.முழுமை தேவை
  //தாத்தா அந்த சமயம் வீட்டிற்குள் வந்தார். “என்னாச்சு பாப்பாக்கு? ஏன் என் தங்கம் அழுகின்றது?”//
  இந்த உத்தி பெரியவர்களுக்குத்தான் புரிபடும். சிறுவர்களுக்கு எழுதும்போது முழுமை இருக்கவேண்டும். அதாவது
  //தாத்தா அந்த சமயம் வீட்டிற்குள் வந்தார். “என்னாச்சு பாப்பாவுக்கு? என் தங்கம் ஏன் அழுகின்றது?” என்று பதட்டத்துடன் கேட்டார்.

  12.கமா, புள்ளி.. கவனம்!
  //பரத் தங்கையை சீண்டாமல் விளையாடு//
  பரத்’துக்கு அடுத்ததாக கமா கட்டாயம் இருக்க வேண்டும்.

 9. December 6, 2006 8:21 am

  என்ன உமா,
  இவ்வளவு மெனக்கெடல் தேவைப்படுவதால்தான் சிறுவர்/குழந்தைகளுக்காக எழுதுபவர்கள் சொற்ப எண்ணிக்கையில் இருக்கிறார்கள்!
  உங்களிடம் இருக்கும் ஆர்வமும்
  பொருத்தமான கதைக் கரு தேர்வும்
  நீங்கள் மெனக்கெட்டால் இந்தத் துறையில் உயரத்துக்கு வரமுடியும் என்பதையே எனக்குக் காட்டியது. அதனால்தான் ஒரு சில ஆலோசனைகள் சொன்னேன்.
  உங்கள் கதையைத் துவைத்துக் காயப்போட்டதாக தப்பர்த்தம் செய்துகொள்ளவேண்டாம்.
  அடுத்த படைப்பு இதையெல்லாம் கவனத்தில் வைத்து எழுத என்னாலான ஆலோசனை!
  வாழ்த்துக்கள், உயரங்களுக்கு உயருங்கள்!

 10. December 6, 2006 9:06 am

  மிக்க நன்றி கெளதம்.

  இப்படிப்பட்ட விமர்சங்களை தான் எதிர்பார்க்கிறேன்.

  நான் அடிபட உதைபட தயார். அடுத்த சமுதாயத்திற்கு ஏதாவது என்னால் செய்ய முடியும் என்றால்..

  உங்கள் அனைவரின் துணை என்றும் அவசியம் தேவை.

 11. December 7, 2006 5:28 am

  அய்யா நான் உங்களை அடிக்கவோ உதைக்கவோ இல்லை! ஏறிப்போக ஒரு படி காட்டியிருக்கிறேன், அவ்வளவே!! புரிந்துகொள்ளல் இல்லாமை என் துரதிர்ஷ்டமே!!!
  நன்றி!!!!

 12. December 7, 2006 5:46 am

  கொளதம்,

  நான் சொல்ல வந்ததை நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள் என நினைக்கிறேன்.

  உங்கள் விமர்சனத்தை நான் மிக மிக வரவேற்றேன்.தவறாக ஏதும் வார்த்தைகள் வந்திருந்தால் மன்னிக்கவும்..

  உங்கள் மேலான விமர்சனம் அவசியம் தேவை.

  நன்றி.

 13. December 7, 2006 12:01 pm

  கெளதம் சொல்வதை கேள் தம்பி.

  அப்புறம் ஒரு விசயம் உன்னெ போய் அடிச்சி துவைக்க முடியமாங்கறது பெரியதொரு கேள்வி

 14. இளங்குமரன் permalink
  April 18, 2007 2:36 pm

  குழந்தைகளுக்கான கதையும் குழந்தைக் கதையைப் படிக்க மட்டுமே தெரிந்த என்னைப் போன்ற குழந்தைகள் கூட புரிந்து கொள்ளுமளவிற்கு எளிமையாக எடுத்துக் காட்டுகளுடன் எழுதி விளக்கியிருக்கும் கௌதம் அவர்களைப் பாராட்டுவதா என்று தெரியவில்லை.

  இருவருக்கும் வாழ்த்துகள்.

  அன்புடன் விழியனுக்கு உங்கள் கதைகளை வெளியிடும் வாய்ப்பை எனக்குத் தருவீர்களா?

 15. இளங்குமரன் permalink
  April 18, 2007 2:38 pm

  குழந்தைகளுக்கான கதையும் கதைக்கான விமர்சனமும் அருமை.

  குழந்தைக் கதையைப் படிக்க மட்டுமே தெரிந்த என்னைப் போன்ற குழந்தைகள் கூட புரிந்து கொள்ளுமளவிற்கு எளிமையாக எடுத்துக் காட்டுகளுடன் எழுதி விளக்கியிருக்கும் கௌதம் அவர்களை எப்படிப் பாராட்டுவது என்று தெரியவில்லை.

  இருவருக்கும் வாழ்த்துகள்.

  அன்புடன் விழியனுக்கு உங்கள் கதைகளை வெளியிடும் வாய்ப்பை எனக்குத் தருவீர்களா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: