தெரியாதுமா – சிறுகதை
தெரியாதுமா – சிறுகதை
என்ன ஒரு வாசனை அவ மேல.வெயிலுக்கு அந்த வாசனை இதமா தான் இருந்தது.அப்ப காலங்கார்த்தால பத்து பத்தரை இருக்கும்.முந்தின நாளே ஊருக்கு போய் இருக்கனும், ஆனா இந்த பாழாப்போன கஸ்டமர் முக்கியமான வேலை இருக்குன்னு சொல்லி விட்டான்.அந்த வாசனை வந்த திசையையே பார்த்துட்டு இருந்தேன். இளம்பச்சை நிறத்தில சுடிதார் போட்டு இருந்தா அவ. சின்ன கண்ணாடி. இரண்டு மணி நேரம் முன்னர் தலை வாரியது போல இருந்தது. அம்மணி எந்த மேனி பராமரிப்பு சாயமும் பயன்படுத்தமாட்டாங்க போல இருக்கு. ரொம்ப மொறைச்சு எல்லாம் பாக்கல.
எங்க கூட நின்னுகிட்டு இருந்த ஜனங்க எல்லாம் பஸ் வரவர போயிட்டே இருந்தாங்க.அனேகமா நான் போக வேண்டிய ஊருக்கு தான் அம்மணியும் போகணும்னு நெனச்சேன். இந்த இடத்தில இதுக்கு முன்னடி நல்ல பெரிய மரம் இருந்தது.சாலையை அகலப்படுத்தறோம்னு வெட்டிட்டாங்க. ஆனாலும் அந்த மரம் இருந்த சுவடு இன்னும் இருக்க தான் செய்யுது. அரை மணி நேரமாகி இருக்கும். கையில் பெண்களுக்கே உரிய சின்ன பை மட்டும் இருந்தது. முகத்தில கொஞ்சம் பதட்டம் தெரிஞ்சது. என்ன கவலைன்னு தெரியல. ஒரு வேலை அவசர அவசரமாக கிளம்பி இருக்கலாம் அதனால பெரிய பை எதுவும் இல்ல போல.நாங்க ரெண்டு பேரு மட்டும் இருந்தோம். அப்ப அவங்க செல்போன் பேசினாங்க.பேச பேச முகத்தில நல்லா மாற்றம் தெரிஞ்சது.திரும்பி பாக்கறதுக்கு முன்னாடி மயக்கம் போட்டு விழுந்து இருந்தாங்க.எனக்கு ஒரு விநாடி என்ன செய்யறதுன்னு தெரியல.அதுக்குள்ள பக்கத்தில பூக்கடையில இருந்த வயசான அம்மா வந்துட்டாங்க.பங்க் கடையில இருந்து ஒரு சோடா வந்துடுச்சி. சின்ன கும்பல் கூடிடுச்சு.சோடாவை முகத்தில தெளிச்சதும் லேசா கண்ணை சிமிட்டினாங்க.”அட போங்கப்பா..போய் வேலைய பாருங்க..” யாரோ ஒருவர் விரட்டினார்..
“காலையில சாப்பிடல போல”
“இந்த காலத்து பசங்களுக்கு சக்தியே இல்ல பாரு”
அப்புறம் நான், அந்த பெண், பூக்கடை அம்மா மட்டும் தனித்துவிடப்பட்டோம்.தண்ணீரோடு கண்ணீரும் பெருகுவதை நான் கவனித்தேன். ஏதோ கேட்க கூடாத செய்தி கேட்டுவிட்டாள் என நினைக்கிறேன். ஏதும் பேசவில்லை. தூரத்தில என் ஊர் பஸ் வந்துகொண்டிருந்தது. போகலாமா? இருக்கலாமா? அவளும் பஸ்ஸை பார்த்தாள்.எழுந்துவிட்டாள்.ஓ அதே ஊரு தான் போல. பூக்கடைகார அம்மாவிற்கு நன்றி கூட சொல்லாமல் பஸ்ஸை நோக்கி விரைந்தாள்.அவளும் நானும் மட்டும் தான் ஏறினோம். பேருந்து நிலையத்திலேயே எல்லா சீட்டும் நிரம்பி இருந்தது.இரண்டு பேர் அமரும் சீட்டில் அமர்ந்திருந்த சின்ன பையன் அவன் அம்மா பக்கத்தில் நகர்ந்து உட்கார்ந்து கொண்டான். அவள் சன்னலோரம் உட்கார்ந்தாள்.
முன்னேயும் பின்னேயும் பார்த்தேன் எங்கும் சீட் காலி இல்லை. அவளே நகர்ந்து எனக்கு உட்கார இடமளித்தாள். அந்த வாசனை இன்னும் இருந்தது.பஸ் நகரத்துவங்கி, ஊரில் இருந்து நெடுஞ்சாலையை அடைந்தது. வேகம் பிடித்தது. சன்னலுக்கு வெளியே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தாள். இடப்பக்கம் இருந்த சீட்டில் சின்ன குழந்தை ஒன்று என்னையே பார்த்தபடி இருந்தது. முகத்திலே பாவலா காட்டினேன்.
சில நிமிடத்தில் மற்றொரு பயணிக்கு பார்வை மாறிவிட்டது. என் மடி ஈரமாய் இருந்தது. அவள் என் மடியினில் புதைந்து அழுது கொண்டு இருந்தாள். யார் என்றே தெரியாமல் என் மடியில் எப்படி ஒரு பெண் விழுந்தாள். யாரிடமேனும் இதை சொன்னால் கூட ஒத்துக்கொள்ள மாட்டடர்களே. அவர்கள் அவள் மனநிலையில் பயணித்திருக்க முடியாது என்பதை பின்னர் தான் உணர்ந்து கொண்டேன்.
நான் எதுவும் சொல்லவில்லை. இது போல ஒரு சூழ்நிலைக்கு இதுவரை மனது பயன்பட்டது இல்லை. யாரோ ஒரு பெண் என்ன காரணத்திற்காக அழுகின்றாள், அதுவும் என் மடிமீது அழுகின்றாள் என்று தெரியவில்லை. அவளாக எழுந்தாள், என் கைக்குட்டையை கொடுத்தேன் கண்ணீர் துடைத்துக்கொள்ள. என் முகத்தை தவிர்த்து மீண்டும் சன்னலுக்கு வெளியே விரைந்தோடும் மரங்களையும், வீடுகளையும் பார்த்தபடி வந்தாள்.
இரண்டு மணி நேரம் கழித்து சாப்பிட நிறுத்தினார்கள். நானும் அவளும் ஒரே மேசையில் உட்கார்ந்தோம். தலைவலிக்கின்றது சூடாக ஒரு காபி கேட்டாள். ஏகப்பட்ட பசி, இருந்தாலும் நானும் ஒரு காபி மட்டும் சாப்பிட்டேன்.”அப்பா என்னை எப்பவும் திட்டியதே கிடையாது. நான் கேட்டதெல்லாம் வாங்கி தருவாரு. நான் தான் அவருக்கு ரொம்ப பிரியம். தங்கச்சி பொறந்த அப்ப கூட என்னை தான் தூக்கி வெச்சிப்பாறாம்.எந்த கெட்டபழக்கமும் கிடையாது. எப்பவாச்சும் பீடி பிடிப்பார். ஒரு முறை நான் அவரை திட்டனதுல அவருக்கு ரொம்ப வருத்தம். அம்மா கிட்ட கம்மியா தான் பேசுவார். எனக்கு ஒரு கல்யாணம் பண்ணனும்மு நினைச்சார். நான் தான் முடியாதுன்னு சொல்லிட்டேன். ச்ச நான் யாரையும் விரும்பலங்க. ஏதோ பிடிக்கல. நான் ஊருக்கு வரேன்னா பஸ்ஸ்டாண்டுக்கு ஒரு மணி நேரம் முன்னாடியே வந்துடுவார். என் கிட்ட தான் பேசுவார். அந்த மாதம் படிச்ச வாரப்பத்திரிக்கை, கிசு கிசு எல்லாம் சொல்லுவார்…”
அவளாக கேள்வி கேட்டுக்கொண்டு, அவளாக பதிலளித்து என்ன பேசுகின்றாள் என்பது புரியவில்லை. ஆனால் அவள் அப்பாவிற்கு ஏதோ நடந்தது என மட்டும் புரிந்தது “ஹாஸ்டல்ல படிக்கறேன்னு சொன்னப்பா அப்பா வருத்தப்பட்டார். என்னை பிரிஞ்சி இருக்க முடியாதுன்னு அம்மா கிட்ட சண்டை போட்டார். அம்மா தான் வற்புறுத்தி போக வெச்சாங்க. நான் படிக்க கூடாதுன்னு இல்ல, ஆனா அப்பாக்கு என்னை விட்டு விலகி இருக்கறது பிடிக்காது. என் பக்கத்துல உக்காந்தா கூட என் துப்பாடாவை விரல் நுனியால சுத்திட்டே இருப்பார். எதுக்கு சிரிக்கிறார் ஏன் சிரிக்கிறார்ன்னு தெரியாது. ஆனா ஒரு நாளைக்கு ரெண்டு முறை சிரிச்சா அதுவே ரொம்ப அதிசயம் தான். வேட்டி தான் எப்பவும் கட்டிட்டு இருப்பார். காலேஜ் பட்டமளிப்பு விழாவுக்கு தான் முதல் முறையா பேண்ட் போட்டார். கிராமத்தான் எல்லா இல்லை. அவருக்கு சின்ன வயசில இருந்தே பிடிக்கல”
பஸ் புறப்பட்டு விட்டது. நான் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ம்ம் மட்டும் கொட்டினேன். பேசிகிட்டே இருந்தாள் திடீர் என்று உதட்டை கடிச்சிகிட்டு அழத்துவங்கிவிட்டாள். என் கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டாள். அவளுக்கு தேவையெல்லாம் ஆறுதலான பிடிப்பு ஒன்று.அது நானாக இருந்ததில் சந்தோஷம் தான்.
“போன முறை ஊருக்கு போயிருந்தப்ப நல்லா தான் இருந்தார். திடீர்னு பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டு இருக்கார். பின் மண்டையில பலத்த அடி. அம்மாவும் கடைக்கு போயிருந்ததால அரை மணிக்கு அப்புறம் தான் பாத்து இருக்காங்க. ஆஸ்பத்திரியில சேர்த்து ஒரு நாள் தான் ஆச்சு. நல்லா இருக்கார்னு சொன்னாங்க. ஊருக்கு போலான்னு கிளம்ப தான் பஸ்ஸ்டாண்டல நின்னேன்.” இடை இடையே தடுமாற்றம். நடுக்கம்.”அப்பா போயிட்டாருங்க..அப்பா போயிட்டார். இனி நீங்களோ நானோ பாக்க முடியாது. பேச மாட்டார்…”
மெளனம் இடைவெளிகளை அடைத்து இருந்தது.தேம்பித்தேம்பி அழுதுகொண்டு மடியினில் தஞ்சம் புகுந்தாள். உறங்கிவிட்டாள். மனம் இறுகி இருந்தது. நான் இவளுக்கு என்ன உறவு? அண்ணனா? தம்பியா? நண்பனா? ஒரு சகப்பயணி. வாழ்கை என்னும் போராட்டத்தில் எல்லோரும் சகப்பயணிகள் மட்டுமே.
ஏதோ நிறுத்தத்தில் வண்டி நின்றதும் இருவரும் வண்டிவிட்டு இறங்கினோம். நான் ஏன் இறங்கினேன் என்று எனக்கு புரியவில்லை. ஆட்டோ பிடித்து அவள் வீட்டிற்கு சென்றோம். அழுகுரல்கள் மனதை பிசைந்தது. நான் யார் என்று யாரும் கேட்கவும் இல்லை, நானும் சொல்லவும் இல்லை. அவள் வெள்ளை துணியில் சுற்றி இருந்த அவள் அப்பாவின் அருகே அமர்ந்திருந்தாள். தெருமுனையில் இருந்த டீக்கடையில் சூடாக ஒரு டீயும் இரண்டு சமோசாவும் சாப்பிட்டும் போது தான், அவள் காலையில் இருந்து எதுவும் சாப்பிடாதது நினைவிற்கு வந்தது. பக்கத்து கடையில் இருந்து பெரிய மாலை வாங்கி பெரியவருக்கு போட்டுவிட்டு அவளிடம் சொல்லாமல் கிளம்பினேன்.
இனி அவளை எங்கு பார்ப்பேன், மீண்டும் பார்ப்பேனா என்பது கூட சந்தேகம் தான். லோக்கல் பஸ் பிடித்து வீடு சேர்ந்தேன். நேராக குளிக்க சென்றேன். அம்மா எதற்கு என்றாள்…
“சாவு வீட்டுக்கு போயிட்டு வந்தேம்மா”
“அய்யோ..யாருப்பா?”
“தெரியாதுமா…”
—
விழியன்
உங்களின் எழுத்து அனுபவம் மிளிர்கிறது அண்ணே… எழுத்துகளின் தாக்கம் கண்டிப்பாய் வாசிப்போர் அனைவருக்குள்ளும்… (ஒரு எழுத்தாளன் வாசிப்போருக்கு ஏற்படுத்த வேண்டிய ஒன்று)
idhu nijam alla kadhai endru manam innamum yerka marukindrathu…
thalaivare… ithu ennamo thordar kadathia pola ullathu…
mudinthaal innamum neetikavum…!
martra padi… kadai nadaiyum ootamum paaratukuriyathu…!
vaalthukkal
Pathivu nalla irukku. Aanalum aanalum kathaiyin nayakan pesave illai enbathu engo nerudukirathu
Tell me how you find time to write… good job.
Nalle Sindanii. Thodurangal!!!!
//Tell me how you find time to write… good job.//
உண்டு என்பவர்களுக்கு உண்டு, இல்லை என்பவர்களுக்கு இல்லை.
இது தான் தாரக மந்திரம்.
//Pathivu nalla irukku. Aanalum aanalum kathaiyin nayakan pesave illai enbathu engo nerudukirathu//
நன்றி விபாகை.
கதையை சொல்வதே கதாநாயகன் தானே. இருந்தாலும் டயலாக் கொடுத்திருக்கலாம்.
நன்றி மாணிக்கம், கார்த்திக், மக்கா, பாலா..
//mudinthaal innamum neetikavum…!
இந்த கதைக்கு இதுவே போதும் என்று தோன்றியதுப்பா..
விமர்சனத்திற்கு நன்றி
முதலில் நான் உண்மையான நண்பனாகவே இருக்க விரும்புகிறேன் தவறுகளை மட்டுமே சுட்டிக்காட்டுவதால்,
நன்றாக போய்க்கொண்டிருந்த கதையில் சட்டென அவள் மடி சாய்ந்தாள் என்கிறீர்கள்,எப்படி??பெண்கள் அவ்வளவு சீக்கிரம் உணர்ச்சிவசப்படமாட்டார்கள்.இந்த இடத்தில் கதையில் பெரும் வீழ்ச்சி.
ஒரு இடத்தில் இருந்தாள் என எழுதி மற்றோரு இடத்தில் இருந்தாங்க என்று சொல்வது கதையின் ஓட்டத்துக்கு போடும் வேகத்தடை.கதை முழுவது ஒரே வழக்கில் இருக்க வேண்டுமென்பதுதானே கதை எழுத்துபவர்களுக்கு பாலபாடமே.கவனிக்கவும்.
மற்றபடி அருமையான கரு இன்னும் நன்றாக எழுதி இருக்கலாம்.முயற்சிக்கு வாழ்த்துக்கள் இன்னும் எழுதுங்கள் 🙂
(எப்படியோ மதிய இடைவேளையில் படித்து கருத்தும் சொல்லிவிட்டேன் :))
மிக்க நன்றி நண்பனே..!!
உன்னுடைய விமர்சனத்தை ஏற்கின்றேன் விக்கி.
ஆரம்பத்தில் அவன் சாதாரண மனநிலையில் இருக்கின்றான்.அப்போது சாதாரண வழக்கில் எழுத முயற்சித்தேன். பின்னர் அவன் மனம் இறுக்கமான போது சற்றே உரைநடைக்கு மாற்ற முயற்சித்தேன். அந்த முயற்சி தவறிவிட்டது என நினைக்கிறேன்.
பேருந்து நிலையத்தில் இருந்தே நாயகனை பார்த்து வருவதால், தனக்கு உடனடியாக ஒரு ஆறுதல் வேண்டும் என்பதாலும் அந்த பெண் இப்படி செய்வாள் என நினைத்தேன்.
மீண்டும் நன்றி விக்கி..!!!
ங்க..அவள் தவறுதான்..சீராக இல்லை..மன்னிக்கவும்
நல்ல கதை(?) உமா! பிரியன் சொல்வது போல் எப்படித்தான் ஆறுதல் தேடினாலும் முன்பின் தெரியாத
(தெரிஞ்சாலும்)வங்க கிட்டே அப்படி நடந்து கொள்ள மாட்டாங்க
தம்பி, கதை நெஞ்சைப் பிசைந்தது என்னவோ உண்மை. உண்மையாக நடந்த நிகழ்வோ என எண்ணவைக்கும் அளவுக்கு வார்த்தைகளைத் தேர்ந்து எடுத்துக் கையாண்டிருக்கின்றீர்கள்.!
வாழ்த்துக்கள் தம்பி.
கவிதையிலிர்ந்து கதைக்கும் வந்து விட்டீர்கள்!!
வாழ்த்துக்கள் !!! கரு அருமை!! இன்னும் எழுதுங்கள் !!!
Arumai.
தெரியாதுமா.. கடைசி வரியைத் தலைப்பாக இடுவது தற்போதுள்ள வழக்கம் என்று நினைக்கிறேன்.. பெரும்பாலான கதைகள் இப்படியே இருக்கின்றன நடைமுறையில்…
நானும் எங்கே அந்த வரி வருகிறது என்ற எண்ணத்திலேயே படித்தேன் உண்மையிலேயே.. சினிமாவில் கூடப் படத்தின் தலைப்பைக் கொண்ட பாடல்வரிகளைப் போல…
ஒரு உணர்ச்சிப்பூர்வமான, மனிதாபிமானம் நிறைந்த கதை விழியன்..
ஆனாலும் ப்ரியன் மற்றும் மீனா சொன்னதுபோல் திடீரென்று பரிச்சயமே இல்லாத ஒருவரின் மடிமீது தலைவைத்து அழுது ஆறுதல் தேடுவது கதையளவில் மட்டுமே வாஸ்தவமாக இருக்கக்கூடும் என்ற வினா எழுவது நிச்சயம்…
தொடரட்டும் உங்கள் எழுத்துப்பயணம்.
வாழ்த்துக்கள்..
தோழமையுடன்,
இராகவன் என்ற சரவணன் மு.
hi thalai,
you have been tagged. for details pls check,
http://blogsofraghs.blogspot.com/2007/04/naanum-oru-thinusu-thaanga.html
No Escape 😉
அன்பு விழியன் மிகவும் நல்ல யதார்த்தமான கதை யாரோ தெரியாத ஒருவரின் சாவுக்குப் போய் அங்கு உதவி பின் வந்ததும் ,அந்தப் பெண் உங்கள் மடியில் அழுது ஆறுதல் பெற்றதும் உலகத்தில் நடக்கக் கூடியதுதான் நாம் முன் ஜன்மத்தில் மிகவும் நட்பாகப் பழகி இருந்தவரின் தொடர்ப்பு எப்படியாவது இந்த ஜன்மத்திலும் இருக்கும் என்று கேட்டிருக்கிறேன் அதுப் போல் இருக்கலாம் ,நல்ல கதை
வாழ்த்துக்கள் அன்புடன் விசாலம்