Skip to content

வழிநடையில் – சிறுகதை

June 27, 2007

வழிநடையில் – சிறுகதை
“த்த..அந்த தெருவுக்கு போயிடு” சலித்துக்கொண்டபடி பாண்டியம்மாள். கருத்த தோல். அறுபதைத் தாண்டிய சுருக்கங்கள்.கையிலே குச்சி.நாய்களை விரட்டுவதற்கா, ஊன்றுகோலாக பயன்படுத்தவா என்று தெரியவில்லை.கையில் சிமெண்ட் சாக்கு ப் பை. உள்ளே இரண்டு சீலைகள்.பாண்டியம்மாள் ரவிக்கை போட்டு முப்பது வருடமாச்சு. பாண்டியம்மாள் விரட்டியது அந்த ஊருக்கு புதிதாக வந்த இவள் போட்டியாளரை தான்.இவளுக்கு யார் அந்த போட்டியாளர்?

பவுன்குஞ்சு பாண்டியம்மாளைவிட இந்த பூவுலகை சில வருடம் அதிகமாக பார்த்தவர். இப்படியும் சொல்லலாம், பாண்டியம்மாவை விட சில வருடம் அதிகமாக இந்த உலகில் துன்பப்பட்டவர்.வெள்ளை சட்டை போட்டிருக்கிறார் என்றால், அதை சொல்பவரை மேலும் கீழும் வித்தியாசமாக பார்க்கும் இந்த உலகம்.அவர் வெள்ளை சட்டை போட்டிருந்தார்.இறந்த காலம்.எத்தனை சாலைகளை நெடுச்சாலைகளை க் கடந்து வந்திருப்பாரோ அத்தனை கோடுகள் நெற்றியில்.தற்கொலை என்னும் கொடூரத்திற்கு பலியாகி விழாமல் ஆந்திராவில் இருந்து தப்பித்து, நடந்து ஓடி வந்தவர்.

மாலையும் இரவும் சந்திக்கும் வேளையில் மீண்டும் சந்தித்துக்கொண்டனர் பவுனாரும், பாண்டியம்மாளும்.கூரைகள் என்னேரமும் விழும் அந்த பள்ளிக்கூட வாசலிலே நிகழ்ந்தது அந்த சந்திப்பு. மழைக்கு கூட பள்ளி யில் ஒதுங்க கூடாது என்ற வீறாப்பில் இருந்த பவுனார் இப்போதெல்லாம் பள்ளியில் தான் பாதி இரவுகளைக் கழிக்கின்றார்.ஊருக்கு ஊர் எது இல்லாமல் போனாலும் பள்ளிக்கூடங்கள் இருந்துவிடுகின்றது. அதில் ஆசிரியர்களும் நிர்வாகமும் ஒழுங்காக இருக்கின்றதா என்பது வேறு கதை.இந்த ஊர் புதிதாக இருந்ததால் பவுனாருக்கு யாரும் யாசகம் செய்யவில்லையா என்று தெரியவில்லை.ஓ..பவுனாரின் தொழிலும் பாண்டியம்மாளின் தொழிலும் ஒன்று தான் என குறிப்பிடாததற்கு மன்னிக்கவும்.இருவரும் வீட்டு வாசலில் தென்படும் தர்ம உள்ளங்களை நம்பியே வாழ்கின்றனர். கால் வயிறு கூட நிரம்பாத தின வலியில் வானத்தை வெறித்துக்கொண்டிருந்தார்.பாண்டியம்மாளிடம் கடைசியாக கிடைத்த அரை தட்டு சாதத்தை கருணையின் அடிப்படையில் பவுனாருக்கு சென்றது அவரின் அன்றைய லட்சியத்தை நிறைவேற்றியது. கடந்த கால வடுக்களை பாதி இரவில் பகிர்ந்து கொள்ள துவங்கினர், கொசுக்களி ன் பின்னிசையோடு.

மறுநாள் முதல் இருவரும் தத்தம் தெருக்களைப் பிரித்துக்கொண்டனர்.யார் யார் வீட்டில் உணவு கிடைக்கும், எந்த திருமண மண்டபத்தில் எந்த இடத்தில் மிச்சங்கள் கிடைக்கும் என விலாவாரியாக சொன்ன பாண்டியம்மாளின் சொற்படியே நடக்க துவங்கிவிட்டார் பவுனார்.தினமும் இப்படியே நாள் ஓடியது. மதிய வேளையும் , இரவும் எங்கேனும் சந்தித்திக்கொண்டு கிடைத்த உணவினை பற்றி பேசுவார்கள்.பழைய நினைவுகளை அசை போடுவார்கள். தெலுங்கும் தமிழும் கலந்த மொழியொன்றில் பேசுவார் பவுனார். வீட்டு வாசல் முன்னர் சென்று சத்தம் போட்டு ஏதும் கேட்க மாட்டார். அரை மணி நேரமானாலும் வாசலிலேயே காத்து கிடப்பார். ஏதோ அவருக்கு “அம்மா..ஐய்யா ” என்று அழைப்பதில் அத்தனை வருத்தம். அரை சாண் வயிறு மட்டும் இல்லாமல் போயிருந்தால் எந்த கவலையும் இல்லாமல் வாழ்ந்திருக்கலாமோ என அடிக்கடி பவுனார் எண்ணுவதுண்டு.

மற்ற ஊர்களுக்கு சென்று வரலாம் என்ற யோசனை சரி எனப்பட்டது பாண்டியம்மாளுக்கு.பவுனார் ஒரே ஊரில் தங்கியது கிடையாது.ஏற்கனவே அவர் நாடோடி தான்.இந்த ஊரில் தான் அதிக நாட்கள் தங்கிவிட்டார்.பாண்டியம்மாளிடம் அடுத்த ஊருக்கு செல்லும் யோசனையை அவரே தெரிவித்தார். தயங்கியபடி தான் ஒத்துக்கொண்டாள். அங்கே சரிபடவில்லையெனில் மீண்டும் வந்துவிடலாம் என்ற முடிவி ன் பேரில் கிளம்பினார்கள்.மூட்டை முடிச்சுகள் என்று பெரிதாக ஏதும் இல்லாததால் அடுத்த நாளே கிளம்பிவிட்டனர்.

தனியாக இருந்த பிள்ளையாருடன் இரவினை செலவிட்டனர்.இரண்டு ஊருக்கும் இடையே இருந்த அந்த கோவிலில் ஒரு இரவு தங்குவதற்கு எந்த தொந்தரவும் இல்லை அந்த கோவில் பூசாரி வரும் வரையில். “ச்சீ போ..” என்று விரட்டி விட்டார்.இரண்டு ஜிவன்கள் அடுத்த ஊரை அடைந்தது.

விடியற்காலை வேளையில் சூரியன் பூமியில் படரும் முன்னர் இவர்கள் ஊரை படர்ந்தனர். முந்தைய ஊரை விட சற்றே பெரிய ஊர். சின்ன நகரம் என்றும் கொள்ளலாம்.சற்றே அதிகமான அரசல்புரசல்,நெருக்கடி, அவசரம். யாரும் இவர்களை கவனித்தபாடாக இல்லை. எந்த வீட்டிலும் இவர்களுக்கு உணவும் கிடைக்கவில்லை.கோவில் ஒன்றில் கிடைத்த பிரசாதம் இரண்டு நாள் பிழைப்பை ஓட்டியது.

அலுத்து ஓய்ந்த மாலை வேளையில், பவுனாரும் பாண்டியம்மாளும் நகர உலா வந்து கொண்டிருந்தனர்.இந்த ஊருக்கு வந்ததில் இருந்தே பவுனாருக்கு சற்று உடல் சரியில்லாமல் போய்விட்டது.சரியாக உணவு கிடைக்காதது வேறு இவரின் நிலையை மோசமாக்கியது.குறுக்கு சந்தில் ஒருவர் கருமையாக அமர்ந்து இருப்பாரே அவர் ஒரு வேட்டியை பரிசாக கொடுத்தார். என்ன தாராள குணம் அவருக்கு, ஏழு எட்டு ஓட்டைகள் வேட்டியில். இருந்தாலும் பழைய வேட்டியை விட, துணி என்று குறிப்பிட்டால் தகும், இந்த வேட்டி சிறப்பாக இருந்ததால், மாற்றி விட்டார்.பாண்டியம்மாளுக்கு ஏதாவது சீலை கிடைக்குமா என்று ஏக்கம் அதிகரித்துக்கொண்டே இருந்தது.

முணுமுணுக்க துவங்கிவிட்டாள். நான் என் ஊருக்கே போகிறேன். என் பிராணன் என் ஊரிலே போகட்டும் என சொல்ல துவங்கிவிட்டாள்.உடல்நிலை மோசமாகிக்கொண்டிருந்தது என்னவோ தலைவருக்கு.சில தினங்களில் சென்றுவிடலாம் என தீர்மானித்துவிட்டனர். முன்பிருந்த ஊரைப்போல வெறும் உணவு மட்டும் கேட்காமல், இங்கு கேட்காமலே சில்லரைகள் தேறிவிட்டது. திரும்ப செல்லும் போது பேருந்தில் போகலாம் என்றார் பவுனார்.இனி நடக்க முடியாது என நினைத்தாரோ என்னவோ. நகர உலா முடிக்கும் போது தான் அந்த சம்பவம் நிகழ்ந்தது.

வழக்கமாக தங்கும் இடத்தினை நோக்கி நடக்கின்றனர்.பழைய இரும்புக்கடையினை கடக்கின்றனர்.வங்கி வந்தது.வங்கி வாசலில் ஸ்தம்பித்து நின்றார் பவுனார். அங்கே நாற்பது வயதுமிக்க நபரை பார்த்து முகத்தை மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.இருவர் பார்வையும் சந்தித்தபோது, இவர்களுக்குள் ஏதோ பந்தம் இருப்பதாக உணர்ந்தாள். பவுனாரால் நடக்க முடியவில்லை. கால்களை அசைக்க முயன்றும் நகர மறுத்தது. அந்த நபர் இவர் அருகில் வந்துவிட்டார். பாண்டியம்மாளை மேலும் கீழும் பார்த்தார்.ஏளனப்பார்வையில் துவங்கி சட்டென்று கண்களில் கண்ணீர் கரைபுரல்வதை மிக எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.எந்த வார்த்தையும் செலவிடப்படவில்லை.ஓரமாக இருந்த காரை தரையில் உட்கார்ந்து கொண்டார் பவுனார் நிற்கமுடியாமல். நடுவயதுக்காரர் நகரவில்லை சற்றே பதபதத்தார். தன் பையில் இருந்து சில நூறு ரூபாய் நோட்டுக்களை எடுத்து பவுனார் பையில் வைத்துவிட்டு திரும்பி கூட பார்க்காமல் வேகமாக நடந்து விரைந்தார்.

யார் அது என்று என்ன கேட்டாலும், எந்த பதிலும் கிடைக்கவில்லை. இரவு உணவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். கிடைப்பதே குதிரைக்கொம்பு.பவுனாரின் உடல் மோசமாகிவிட்டது.வழக்கமாக இவர்கள் தங்கும் பேருந்து நிலைய கட்டிடத்தில் தங்கியிருந்தனர். மேல் மூச்சும் கீழ்மூச்சும் வேகமாக அடித்தது. பாண்டியம்மாளுக்கு புரிந்து விட்டது இவை கடைசி மூச்சுக்கள் என்று. இரவின் குளுமையும் இருட்டும் அதிகரிக்க அதிகரிக்க, பவுனாரின் இன்னல்களும் அதிகரித்தது.பாண்டியம்மாள் எந்த பதட்டமும் அடையவில்லை.விடியற்காலையில் பவுனாரில் பையில் இருந்த அந்த ரூபாய் நோட்டுக்களை எடுத்துக்கொண்டு, முதல் பேருந்திற்கு தனியாக கிளம்பினார். பவுனாரின் கடைசி மூச்சு கதிரவனை தரிசித்துவிட்டு,வாழ்வின் எந்த சூட்சுமத்தையும் புரிந்து கொள்ளாமல் பிரிந்தது.

விழியன்

Keywords: Short Story Tamil

6 Comments leave one →
 1. Bhuvana permalink
  June 27, 2007 4:53 am

  hey too good!

 2. Mythili permalink
  June 27, 2007 7:06 am

  Kadhai Nalla irukku

 3. Nagarajan permalink
  June 27, 2007 9:54 am

  இது கதை போல் தெரியவில்லை…உண்மையாக சமுதாயத்தில் இது போல் நிறைய நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது

 4. June 27, 2007 11:24 am

  நல்ல கதை விழியன். சிற்சில இடங்களில் எட்டிப்பார்க்கும் “எளிமைப் படுத்தும்” முயற்சிகளை நீக்கினால் இது மிகச்சிறந்த கதையாய் மாறி விடும் என தோன்றுகிறது.

 5. June 28, 2007 3:20 am

  நல்ல கதை விழியன் … நிஜ உலகில் கூட இவர்களைப்போல் திரிபவர்கள் பலர் . நல்ல நிலையில் இருந்து கைவிடப்பட்டவர்களே ..

  இதை அந்த ஒரு வரியில் காட்டிவிட்டீர்கள் …

  பணம் மட்டுமே குறியாய், மனிதாபிமானத்தை தொலைத்து அலையும் நகர வாழ்க்கையின் இழிநிலையை, கிடைத்த சில்லரையும் கிடைக்காத சோறும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன..

  அன்புடன்
  தனசேகர்

 6. muthaib permalink
  April 7, 2009 4:40 pm

  I have no words to say other than awesome. If you know any better word than awesome, please let me know. I wanna fill this comment column with it.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: