Skip to content

எருமை வாசகம் – சிறுவர் கதை

August 30, 2007

எருமை வாசகம் – சிறுவர் கதை

முதன் முதலாக அதை கவனித்து சொன்னது சங்கர் தான் என்று நினைக்கிறேன். நாங்கள் பள்ளிக்கு செல்வதே தினம் தினம் சுவாரஸ்யமான விஷயம் தான். எங்கள் தெருவில் இருந்து சைக்கிளில் சென்றாலும், சுமார் ஆறு ஏழு பேர் ஒன்றாக சைக்கிள் தள்ளியபடி மெதுவாக நடந்து செல்வோம். தாமதமாகிவிட்டது என்றால் தான் சைக்கிளை ஓட்டி செல்வோம். அன்று சங்கர் தான் முதலில் பார்த்து..”அங்கபாருங்கடா எருமை மாட்ட”. எருமை மாடு என்பது எங்கள் பகுதிக்கு புதிதான ஒன்றில்லை. எங்கள் பகுதி நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத குடியிருப்பு பகுதி. அருகே இருக்கும் சுள்ளூர், நல்லாபுரம் கிராமங்களில் இருந்து ஏராளமான பசு மாடுகள், எருமைகள், ஆடுகள் எங்கள் பகுதிக்கு வரும்.

சங்கர் சுட்டிய திசையில் இருந்த எருமையின் மீது “நன்றே செய், அதை இன்றே செய்” என்று எழுதி இருந்தது. சைக்கிள்கள் நின்றது. மதி மிகவும் மெதுவாக தான் வாசிப்பான், “ந ன் றே..நன்றே செ ய் செய்..அ தை அதை இ ன் றே இன்றே செ ய் செய்…” வாசித்து முடிந்தான். யார் அதன் மீது எழுதி இருப்பார்கள் என்று எங்களுக்கு குழப்பம். மாடுகள் எங்கிருந்து வருகின்றது? மாடு மேய்ப்பவர்கள் என்று யாராவது இருப்பார்களா? சுற்றிலும் யாரையும் காணவில்லை. தூரத்தில் ஒரு வயதான பாட்டி மட்டும் இருந்தாள். மற்றொரு மாட்டினை மரம் ஒன்றில் கட்டிக்கொண்டு இருந்தாள். இந்த பாட்டியா எழுதி இருப்பாள்? எதை வைத்து எழுதி இருப்பாள் என்று எங்களுக்குள் விவாதம். “பல்பம் ” என்றான் சுருளி. “பாவம் அழுத்தி எழுதினா மாட்டுக்கு வலிக்கும் இல்லை” என்றான் மதி. “பாட்டி எந்த பள்ளிக்கூடத்தில் படித்தது?” என்றான் குள்ளமாக இருக்கும் சுந்தர். இப்படியாக வேறு வேறு கேள்விகள். அட பள்ளிக்கூடம் வந்துவிட்டது.

காலை இடைவேளையின் போது மீண்டும் இந்த விவாதம் தொடர்ந்தது. இன்னும் சில மாணவர்களும் சேர்ந்து கொண்டனர். அவர்களுக்கும் ஆச்சர்யம். “அது படித்த மாடாக இருக்கலாம். அதுவே எழுதிக்கொண்டு இருக்க கூடும்” என்றான் ஆதி. “எருமை மாடு என்ன கலர்டா?” என்ற அசோக்கினை எல்லோரும் ஒரு பார்வை பார்த்தனர். கப்சிப் என அடங்கிவிட்டான். கூட்டமாக இருந்ததை பார்த்த பி.டி மாஸ்டர் “என்னட அங்கே மாநாடு? வகுப்பிற்கு போங்க நேரமாச்சு” என்று விரட்டினார். இவருக்கு எப்படி தெரியும் இந்த எருமையின் விவகாரம்.

மதியம் சீக்கிரமாக உணவினை உண்டு முடித்துவிட்டு ஆறு சைக்கிள்களில் எங்கள் சகாக்கள் கூட்டம் அந்த எருமை மாட்டை பார்க்க கிளம்பியது. பள்ளியில் இருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் தான் நாங்கள் அதை வரும்போது பார்த்தோம்.அதே இடத்திற்கு சொன்றோம். தற்போது எருமைகளின் கூட்டம் அதிகரித்து இருந்தது. அந்த படித்த எருமையை கண்டுபிடிப்பது சற்று சிரமமாக தான் இருந்தது. “ஆமாண்டா..அங்க பாரேன். எருமை மீது யாரோ எழுதி இருக்காங்க..” . அதுவரையில் இந்த சம்பவத்தை நம்பாத ஆதியின் கண்களுக்கு தான் முதலில் தெரிந்தது. எல்லோர் கண்களும் அந்த எருமை மீதே. அது யாரையும் சட்டை செய்து கொள்ளவில்லை. தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தது. “அடுத்து தமிழ் மிஸ் க்ளாஸ்டா..வாங்க சீக்கிரம் பள்ளிக்கு போவோம்.”

எங்கள் வகுப்பு, அடுத்த வகுப்பு, குமார் வகுப்பு என்று எல்லா வகுப்புகளிலும் இந்த படித்த எருமை பற்றின விஷயம் பரவ ஆரம்பித்தது. அன்றைய நாள் முழுவது இதே பேச்சு தான். அன்று மாலை மீண்டும் வீட்டிற்கு செல்லும் வழியில் அந்த எருமை இருக்கின்றதா என்று பார்த்தோம். காணவே இல்லை. மாலை அதன் இருப்பிடத்திற்கு சென்று இருக்க வேண்டும்.

மறுநாள் காலை வழக்கமான நேரத்திற்கு முன்னரே கிளம்பி, சைக்கிளை மிதித்துக்கொண்டு அதே இடத்திற்கு வந்து சேர்ந்தோம். எங்களுக்கு முன்னரே சில மாணவர்கள் அங்கே இருந்தார்கள். இன்று “பெரியோரை வணங்கு” என்று எழுதி இருந்தது. நாட்பட தினமும் இந்த வாசகத்தை படிப்பது சுவாரஸ்யமாகிவிட்டது. யார் எழுதுவது, எப்படி எழுதுகின்றார்கள், யாருடைய மாடு, எப்படி வந்தது போன்ற பேச்சுக்கள் குறைந்து என்ன எழுதி இருக்கின்றதோ அதனை பற்றிய பேச்சுக்கள் துவங்கியது. பள்ளியின் தலைமை ஆசிரியர் அறை முன்னதாக பெரிய கரும் பலகை ஒன்று இருந்தது. வருடத்திற்கு இரண்டு முறை ஏதேனும் அறிவிப்பு எழுதி இருக்கும். ஒரு நாள் நான் எருமை மாட்டின் மீது இருந்த வாசகத்தினை அந்த கரும்பலகையில் எழுதினேன். தலைமை ஆசிரியர் பாராட்டினார். தினமும் எழுது என்றார். அந்த மாட்டின் மீது என்ன எழுதி இருக்குமோ அப்படியே எழுதினேன்.

யார் எழுதுவது பற்றியது என்பதனை ஆராய மனம் செல்லவில்லை. ஆனாலும் அதில் எழுதி இருக்கும் வாசகங்கள் எங்களில் வாழ்கையினை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக்கொண்டு வந்தது உண்மை தான்.வாசகங்களை படிப்பதோடு நிறுத்தாமல் முடிந்த அளவு எங்கள் வாழ்விலும் அதனை பின்பற்றினோம். வருடங்கள் கடந்து சென்றது. விடுமுறை நாட்களிலும் தவறாமல் அங்கு வந்து படித்துவிட்டு போகும் அளவிற்கு ஈர்த்துவிட்டது.

பள்ளி இறுதி ஆண்டு முடித்து மேல் படிப்பிற்கு வேறு ஊருக்கு சென்றுவிட்டேன். இப்போது கூட ஊருக்கு சென்றால் அந்த எருமை மாட்டினை தேடுவேன். ஆனால் அது அதன் பின்னர் கிடைக்கவே இல்லை. யார் எழுதினார்களோ தெரியாது ஆனால் அந்த வாசகங்கள் என் நெஞ்சிற்குள் ஆழமாக பதிந்து விட்டது. வாழ்கையை திசை திருப்பிவிட்டது.எருமை வாசகங்கள் அருமையான வாசகங்கள்

– விழியன்

Advertisements
5 Comments leave one →
 1. August 30, 2007 5:35 am

  மாநாடு,
  படித்த எருமை…

  படிக்கும் போதே புன்முறுவலுடன் படிக்க வைத்து நல்ல விசயத்துடன் முடித்து உள்ளீர்கள்.

  சுவை…

 2. August 30, 2007 5:46 am

  நல்ல விசயம் எங்கிருந்தாலும் ஏற்றுக்கொள்ளலாம்…

 3. August 30, 2007 12:48 pm

  //// கூட்டமாக இருந்ததை பார்த்த பி.டி மாஸ்டர் “என்னட அங்கே மாநாடு? வகுப்பிற்கு போங்க நேரமாச்சு” என்று விரட்டினார். இவருக்கு எப்படி தெரியும் இந்த எருமையின் விவகாரம்.///

  ஒரு சுவையான சுனையின் ஓட்டத்தோடு அற்புதமாக மேஜிக் வரிகளில் தங்களின் இந்த அனுபவம் (ஒரிஜினலா இல்லை கற்பனையா – தெரியாததே சுகம்தானே…) படித்து மயங்கினேன். முடிவில் இந்த புதிர் விடுவிக்கப்படவில்லையே. அந்த மாட்டின் கதை இப்படி மர்மமாகவே ஆகிவிட்டதே. சப்பென்று இருக்கிறது.

  நன்றி

 4. K.Balaji permalink
  September 19, 2007 10:10 am

  “எருமை மாடு” – சுவை குன்றாமல் எழுதப்பட்டுள்ள விதம் பாரட்டத்தக்கது. தொடரட்டும் ! – பாலாஜி

 5. இளங்குமரன் permalink
  September 24, 2007 7:50 am

  நன்றாக உள்ளது விழியன் வாழ்த்துகள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: