Skip to content

“நான் நடிகனான கதை” – புத்தக அறிமுகம்

February 4, 2008

“நான் நடிகனான கதை” – சார்லி சாப்ளின்
தமிழில் – சுரா
வெளியீடு – வ.உ.சி நூலகம்
விலை : ரூபாய் 70
பக்கங்கள் : 176


ஆளுமைகளை பற்றிய வாசிப்பே சுவாரஸ்யம் தான். அதுவும் நம்மை மயக்கிய, ஆச்சரியப்படுத்திய ஆளுமைகளை பற்றி தெரிந்து கொள்வது இன்னும் சுவாரஸ்யம். அதுவும் அந்த ஆளுமையே தான் வளர்ந்த விதத்தை விளக்கினால்.. அப்படிப்பட்ட ஒரு சுயசரிதை தான் “நான் நடிகனான கதை”. அந்த நபர் நம்மை எல்லாம் சிரிக்க வைத்த, இன்னும் பல ஆண்டுகளாகியும் இளம் சிறார் முதல் முதியவர் வரை பார்த்தவுடன் புன்சிரிப்பை வரவழைக்கும், கடந்த நூற்றாண்டின் மாபெரும் நடிகர், சார்லி சாப்ளின்.

அரசியல் ரீதியாக பல சர்ச்சைகள் இருந்தும், ஒரு நடிகனாக, ஒரு சிந்தனையாளனாக, வாழ்வின் அடித்தளத்தில் இருந்து உயர்ந்த இடத்திற்கு சென்று நம்பிக்கை நட்சத்திரமாக விளக்கியவர் சார்லி சாப்ளின் என்பதில் ஐயமே இல்லை எனலாம். சார்லி சாப்ளின் தன் கதையினை குழந்தை பருவம் முதல் துவங்குகின்றார்.

அவருக்கு நினைவு வரும் போது, அவருடைய தாயும் தந்தையும் பிரிந்துவிட்டு இருந்தார்கள். தனக்கும் ஒரு தந்தை இருக்கின்றார் என்பது பிற்காலங்களில் தெரியவருகின்றது. தாயும் தந்தையும் நாடக நடிகர்கள். அவருடைய தாய் பற்றி அவர் கூறும் போது தாயின் மீது அளவுகடந்த பாசம் வைத்திருப்பது புலனாகின்றது. அடுத்த வேளை உணவிற்கு கூட என்ன வழி என்று தெரியாமல் பல நாட்கள், மாதங்கள், வருடங்கள் கடந்திருக்கின்றது. பசியின் வலியினை அந்த இளம் பருவத்திலேயே அதிகம் அனுபவித்து இருக்கின்றார்.

சார்லிக்கு உற்ற நண்பன், தோழன், துணைவன் அவருடைய அண்ணன் சிட்னி. சிட்னி, தன் தாயின் முதல் கணவருடைய மகன். சார்லி இரண்டாவது கணவரின் மகன்.வாழ்வின் எல்லா நிலைகளிலும் சிட்னி சார்லிக்கு துணையாக நிற்கின்றார். இருவரும் அனாதை விடுதியில் படும் வேதனைகள், தாயினை மனநல காப்பகத்தில் விட்டுவிட்டு தனியே இருக்கும் காலங்கள், பணத்திற்காக படும் அல்லல்கள், வேலை தேடி அலையும் நேரங்கள், எல்லா காலகட்டத்திலும் கூடவே இருக்கின்றார் சிட்னி. பிற்காலத்தில் இவரும் நல்ல நடிகராக விலங்கினார்.

சார்லி தன் தாய் மற்றும் சிட்னியுடன் வளர்கின்றார். பின்னர் வருமானம் ஏதும் இல்லாத நிலையில் அனாதை விடுதிக்கு மூவரும் செல்கின்றனர். தாயும் மகன்களும் பிரிந்துவிடுகின்றார்கள். சில காலம் கழித்து மீண்டும் ஒன்று சேர்கின்றார்கள். வரும் பணத்திற்கு ஏற்ப வீட்டினை மாற்றிக்கொண்டே இருக்கின்றார்கள். பல்வேறு நபர்களையும் நண்பர்களையும் சந்திக்கின்றார்கள். தன் தந்தையுடன் மீண்டும் சேர்கின்றார்கள். இதனிடையில் தன் தாய் மனநலம் குன்றி மனநல காப்பகத்தில் அனுமதிக்கபடுகின்றார். தந்தை மிக்பெரிய நடிகர், அதே சமயம் பெரிய குடிகாரர். அவருடைய இரண்டாம் மனைவி லூசி வீட்டில் வளர்கின்றார்கள். சிட்னிக்கும் லூசிக்கும் சரவரவில்லை. தாய் குணமாகி திரும்புகின்றார். தையல் தொழில் செய்து வாழ்கை தொடர்கின்றது. இடையில் ஒருவருடம் சார்லி குழந்தைகள் நாடக குழுவில் சேர்கின்றார். தொடர்ந்து பள்ளி படிப்பை தொடர முடியவில்லை, அவருக்கும் படிப்பில் ஆர்வம் அதிகமில்லை. மீண்டும் தாய் மனநலம் காப்பகத்தில் சேர்கின்றார். அண்ணனும் வெளியூர் செல்கின்றார். தனிமை. வறுமை. போராட்டம். யாரும் இல்லாத சாலைகளில் பயணம். ஒரு வழியாக நாடக கம்பெனி ஒன்றில் இணைகின்றார். படிப்படியாக முன்னேறுகின்றார். அமெரிக்கா பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்கும் போது புத்தகம் நிறைவு பெருகின்றது. அதன் பின்னால் நடந்தை கதை உலகமே அறியும்.

இந்த புத்தகம் மொழிபெயர்ப்பு புத்தகம் என்பது வாசிக்கும் போது தெரியாத அளவிற்கு மிக எதார்த்தமான வார்தைகளை தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்துள்ளார் ஆசிரியர். மேலை நாட்டின் சில பழக்க வழக்கங்கள் தான் சில சமயம் நம்மை குழப்பத்தில் ஆழ்த்தி விடுகின்றது. என்ன செய்ய நாம் வளர்ந்துவிட்ட சூழல் அப்படி. சுயசரிதையில் ஒரு பகுதியில் ஒரு வீட்டில் மூன்று சிறுவர்கள் இருப்பார்கள். சார்லி, சிட்னி, மற்றும் நான்கு வயது சிறுவன். இவர்கள் மூவரும் சகோதரர்கள். ஆனால் சிட்னி தன் தாயின் முதல் கணவருடைய மகன், அந்த சிறுவன் தன் தந்தையின் இரண்டாவது மனைவியின் மகன். என்ன இருப்பினும் அது அவர்கள் வாழ்கை முறை. எதை எடுத்துக்கொள்ள வேண்டும் அதை மட்டும் எடுத்துக்கொள்வோம்.

சார்லி சாப்ளின் திரைப்படங்களில் நகைச்சுவைக்கு நடுவே மெல்லிய சோக இழை ஓடும். அனேகமாக எல்லா திரைப்படங்களிலும் இதனை காணலாம். சுயசரிதையில் அதற்கான அடித்தளத்தினை விளக்குகின்றார். மாபெரும் நடிகன் உருவான கதை உருக்கமாக, உணர்வு பூர்வமாக இருக்கின்றது. பட்ட காயங்களை எல்லாம் நினைத்து வந்தாமல் தொடந்து போராடு என்பதை உணர்த்துகின்றது. வீழ்வது வெட்கமல்ல வீழ்ந்து கிடப்பதே வெட்கம் என்பதை சொல்லாமல் சொல்கின்றது. எது வெற்றி, எதை நாம் அடைய வேண்டும் என்று நாம் தான் நிச்சயிக்க வேண்டும்.

– விழியன்

8 Comments leave one →
  1. February 4, 2008 9:29 am

    நல்லதொரு பதிவு. 🙂

  2. Bala permalink
    February 4, 2008 9:57 am

    Nice work. Continue forever. My wishes.

  3. February 4, 2008 10:10 am

    நன்றி பாலமுருகன்.

  4. arunrayan permalink
    February 4, 2008 12:23 pm

    //வீழ்வது வெட்கமல்ல வீழ்ந்து கிடப்பதே வெட்கம்//

    //எது வெற்றி, எதை நாம் அடைய வேண்டும் என்று நாம் தான் நிச்சயிக்க வேண்டும்//

    சிந்தனைக்குறிய சிறந்த சொற்றொடர்கள்.

  5. bagya permalink
    February 5, 2008 4:51 am

    very good post Mr. Umanath. your summary for the book is good. i think u spent real good time in reading this book. I recently read something similar content in some book. sorry i forgot the name. But good work. Keep it up.

  6. February 7, 2008 9:38 am

    அருமையான பதிவு
    அவரது இங்கிலாந்து வாழ்க்கையை விட அமேரிக்க வாழ்க்கை சற்று நன்றாக இருந்ததை ஆ.வில் வந்த தொடரில் அறிந்தேன்.

  7. Surya permalink
    February 26, 2008 7:13 pm

    அருமையான பதிவு

  8. June 19, 2008 5:20 am

    Arumaiya irunthathu ungal karuthukalai varavetkren

Leave a comment