Skip to content

கேரளா – கடவுளின் செல்ல பிரதேசம் – பயணம்

February 11, 2008

கேரளா – கடவுளின் செல்ல பிரதேசம்

“தோழா, பெங்களூர் சென்றுவிடலாம்.சனி ஞாயிறு அங்கே கழிக்கலாம். கேரளா செல்ல வேண்டுமா?” என்றான் ஹரி (சக ஊழியன்) .”இல்லை நிச்சயம் நாம் செல்கிறோம்” என்பது எனது திடமான பதில். இதுவே ரம்மியமான இரண்டு நாட்களுக்கு வழிவகுத்தது.

நானும் ஹரியும் மூவட்டுப்புழா செல்லும் பேருந்தில் அமர்ந்திருக்கிறோம். சேலத்தில் இருந்து மூவட்டுப்புழா செல்ல ஏழு மணி நேரமாகும். சேலத்திற்கு மற்றொரு நண்பர் சரவணன் திருமணத்திற்கு வந்திருந்தோம்.(21-01-2005). பயணம் சுகமாய் இருந்தது. மனதிற்கு பிடித்தவர்களுடன் பயணிப்பது தனிசுகம் தான். எங்கள் கல்லூரி கதைகளை பேசினோம். அவன் REC கல்லூரியின் முன்னாள் மாணவன். கல்லூரி நிகழ்வுகள், முதல் காதல், வெவ்வேறு விதமான நண்பர்கள், அனுபவங்கள் எல்லாவற்றையும் அமைதியாக பகிர்ந்துகொண்டோம்.நிலவை பார்த்தபடி எப்போது உறங்கினேன் என்று தெரியவில்லை.

சனிக்கிழமை காலை 5.30 மணிக்கு ஒரு பேருந்து நிலையத்தில் இறங்கினோம்.இறங்கிய பின்னரே தெரிந்தது அது தவறான பேருந்து நிலையம் என்று.மது சொன்ன பேருந்து நிலையத்திற்கு நடக்க துவங்கினோம். மது என்கின்ற மதுசூதனன் எங்களுடன் பணி புரிந்தான். வானம் கருமையாக இருந்தது. கோடானுகோடி நட்சத்திரங்கள் தெரிந்தது. இது போன்ற சந்தர்ப்பங்கள் மிக குறைவே.பெங்களூரில் இப்படி ஒரு வானத்தை காணக்கிடைக்காது. மின் விளக்குகளின் ஆதிக்கத்தால் கருமையான வானம் காணக் கிடைப்பது அரிது. வருங்கால சந்ததியினருக்கு இரவு இருட்டு என்பதை நாம் சொல்ல முடியுமா தெரியவில்லை.

மது அலைபேசியில் அழைத்து எங்களிடம் வந்துவிட்டான். புதிய மாருதி காரினை வாங்கி இருந்தான். கருப்பு நிற வாகனம். பின் இருக்கையில் இந்த சின்ன (!!!) உருவம் உட்கார சிரமப்பட்டு முன்னால் சென்றது. இது மது, ஹரி போன்ற சின்ன ஜீவன்களுக்கான வாகனம். வண்டியை ஓட்டியது ராஜேஷ். மதுவின் ஒன்றுவிட்ட அண்ணன். சந்தித்தவர்களின் மிகவும் சுவாரஸ்யமானவர். மூவட்டுப்புழாவில் இருந்து ஊரமனாவிற்கு சென்ற பயணம் விவரிக்க முடியாத அழகுடன் இருந்தது. சூரியன் வரலாமா வேண்டாமா என்ற எண்ணத்துடன் மெதுவாய் மேல் எழுந்தது. இரண்டு பக்கமும் பச்சை பசேல் என்ற காட்சி.மரங்களும்,ஆங்கங்கு தண்ணீர் நிலைகளும், சீரான நிலமில்லாமல் அழகாய் இருந்தது. தலைசிறந்த கேமராவான கண்களில் படம்பிடித்து என்னால் மட்டுமே அடிக்கடி போட்டுப்பார்க்கும் காட்சிகள் இதயத்தில் இங்கே பதிவானது.கண்களுக்கான பரிசு இவை. சூரிய ஒளி மெல்ல படந்தது. கவித்துவமான காட்சியாக மாறியது.மூவட்டுபுழா என்பது ஒரு நதி. மதுவின் வீட்டினை அடைந்தோம்.இனி மதுவினை பாபு என்றே அழைக்கிறேன். அப்படி தான் அவன் வீட்டில் அவனை அழைக்கிறார்கள். அவர்கள் வீட்டிற்கு சென்றிருக்கும் போது நான் அப்படி தானே அவனை அழைக்க வேண்டும்.

அவன் வீடு சின்னதாக அழகாக இருந்தது. ஒரே காம்பெளண்டில் ராஜேஷ் சேட்டாவும் குடி இருந்தார். ராஜேஷின் வீட்டு எதிரே சின்ன அறையினை நாங்கள் தங்க கொடுத்தனர். எங்கும் மண்வாசம். சுற்றிலும் மரங்கள்.வீட்டின் ஓர் மூளை ‘சிக்கு’ என்கின்ற நாய்குட்டி இருந்தது. அதற்கென்று சின்ன வீடு. புதியவர்கள் எங்களாப்பார்த்து குரைத்துக்கொண்டே இருந்தது.சிக்கு பயங்கரமாக காட்சியளித்தது. நாங்கள் சென்ற தினம் பாபு திருச்சூரில் ஒரு பெண் பார்க்க செல்ல இருந்தான். என்னையும் ஹரியையும் அறையில் ஓய்வெடுக்க சொல்லி வெளியே கிளம்பிவிட்டான். நாங்கள் உள்ளுக்குள் தங்காமல் அந்த இடத்தை ஆராய்ச்சி செய்ய கிளம்பினோம். நம் ஊர்களில் இருப்பது போல தொடர்ந்து வீடுகள் இல்லை. தெருக்கள் என்று கூட இல்லை. இங்கொரு வீடு அங்கொரு வீடாக ஆங்காங்கே இருந்தது. அவன் வீட்டு எதிரில் நெற்பயிர்கள் இருந்தது. அதன் பின்னால் தென்னை மரங்களும், ரப்பர் மரங்களும் இருந்தது. சுமார் நூறு மீட்டர் தொலைவில் பாபு படித்த சின்ன பள்ளிக்கூடம் இருந்தது. அங்கு தான் அவன் ஏழாம் வகுப்பு வரை படித்தானாம்.வீட்டின் அருகிலேயே பள்ளி இருப்பது எத்தனை ஆனந்தமான விஷயம்.

பள்ளி பழமையாக இருந்தது. அமைதி. எந்த சத்தமும் இல்லை. வெகு அரிதாக ஓரிரு வண்டி சத்தம் கேட்கும். பள்ளி சமநிலையில் இல்லை. விளையாட்டு திடல் பள்ளியை விட தாழ்வான இடத்தில் இருந்தது. நீண்ட மரங்கள். அங்கு விளையாடுவது எத்தனை ஆனந்தத்தையும் உற்சாகத்தையும் தந்திருக்கு.ம்ம்..அங்கே குயில்கள் பாபுவின் இளமைக்கால வீர தீர செயல்களை ரம்மியமாக பாடிக்கொண்டிருந்தது. நிச்சயம் ஒவ்வொருவருக்கும் பள்ளி அனுபவங்கள் வித்தியாசமாக அற்புதமாக இருந்திருக்கும். ஆனாலும் இந்த பள்ளியின் சூழ்நிலையே மிக ஈர்த்துவிட்டது.

வீட்டிற்கு சென்று குளித்துமுடித்து, துணிகளை துவைத்தோம். பத்து நிமிடம் உறங்கினோம். பாபுவின் அம்மா சாப்பிட அழைத்தார்கள். காலையில் அப்பமும் முட்டைக்கறியும். அக்மார்க் மலையாள உணவு.பாபுவின் 85 வயது பாட்டி எங்களிடம் பேசினார்கள். எங்களுக்கு மலையாளம் புரியாது, அவர்களுக்கு தமிழ் புரியாது. ஆனாலும் பேசினோம். அன்பிற்கு உண்டோ மொழி என்கின்ற தடை?அவன் அப்பா எங்களிடம் ஹிந்தியில் பேசினார். அவர் கிரேன் டிரைவராக பணி புரிந்தார். அவர் பெருமிதத்தோடு பேசினார். மூன்று மகன்கள். மூத்த மகன் பிஜு தில்லியில், அமெரிக்கன் எம்பசியில் ‘Program Manager’. அடுத்த மகன் பினு, எர்ணாகுளத்தில் கட்டிட துறையில் பணி புரிகின்றார். பினு தன் பெற்றோருடன் தங்கி இருந்தார். மூன்றாவது மகன் பாபு என்கின்ற மது என்கின்றது மதுசூதனன். மெல்ல மெல்ல உயர்ந்து, தற்போது நல்ல நிலையில் இருக்கின்றான். பெருமிதம் இருக்காதா என்ன. முதல் இரண்டு மகன்கள் திருமணமும் காதல் திருமணம். பழைய புகைப்படங்களை காண்பித்தார்கள். இரண்டாது அண்ணனுக்கு சின்ன குழந்தை பிறந்து இருந்தது.ஆதித்யா. நாங்கள் பேசினோம். அவன் பேசவில்லை.சிரித்தான்.

பைக்கில் பயணம்:

நானும் ஹரியும் ராஜேஷ் சேட்டாவின் பைக்கை எடுத்துக்கொண்டு கிராமங்களுக்கு உள்ளே சென்றோம். இந்த சின்ன பயணத்தத இருவரும் மிகவும் ரசித்தோம். கிராமத்து மக்கள் எங்களை வேற்றுகிரகவாசிகளைப்போல பார்த்தார்கள். நான் பின்னால் அமர்ந்து கொண்டு சிறுவர்களுக்கும் மலையாள பெண்குட்டிகளுக்கு கையசைத்தேன். அது சொல்ல முடியாத உற்சாகத்தை அளித்தது. முதல் முறை யாரும் திரும்ப கையசக்கவில்லை, மீண்டும் நான் கையசைத்த போதே அங்கிருந்து பதில் கிடைக்கும். கேரளத்து வீடுகளை பற்றி சொல்ல தேவையில்லை, ஒவ்வொன்றும் கலை நுனுக்கத்துடன் இருந்தது. அது கிராமமோ, நகரமோ எதுவாக இருந்தாலும். எல்லா வீடுகளின் முன்னாலும் மாருதி காரோ அல்லது ஜீப் ஒன்றோ நின்று கொண்டிருந்தது. கேள்விபட்டவரையில் ஒரு வீட்டில் ஒருவரேனும் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றார்கள். பன்னிரெண்டாம் வகுப்பு முடிக்கும் நூறு மாணவர்களில் 90 மாணவர்கள் நர்ஸிங் பாடப்பிரிவில் சேர்கின்றார்கள். இந்த சேவைக்காக வெளிநாடுகளில் ஏராளமான வாய்ப்பு இருக்கின்றதாம்.

சென்ற பாதையிலேயே மீண்டும் திரும்ப வர சில குறிப்புகளை நினைவில் வைத்துக்கொண்டோம். வழியில் எங்கும் மலையாள வாசம் கொண்ட மனிதர்கள் தான். பின்ன கேரளாவில யார் இருப்பாங்க. ஹரி ஒரே நொடியில் ஒரு பெண்ணிடம் மனதை பரிகொடுத்தான். அவள் வீட்டின் மாடிக்கு வந்து தலையினை துவட்டிக்கொண்டிருந்தாள். அழகிற்கு உதாரணம் அவள் என்று சொல்லலாம். என் துரதஷ்டம் நான் அப்போது வேறு திசையில் பார்த்துக்கொண்டு வந்தேன். அவன் அவளை பற்றி விவரித்தவுடன் நானும்…அட போங்க.. வீட்டை அடைந்தோம். மணி 10.30. கொச்சினுக்கு செல்வதென முடிவு. அங்கே பாபு எங்களுடன் சேர்ந்துகொள்வான்.

தொலைந்துவிடுமோம் :

பாபுவின் தந்தை நாங்கள் எங்கே பேருந்தில் தொலைந்துவிடுவோமோ என கவலைக்கொண்டார். எப்படி தொலைவோம் என்று எங்களுக்கு புரியவில்லை. ஆனால் நாங்கள் தொலைந்துவிடுவோம் என மிகவும் வருத்தப்பட்டார். பேருந்து நிலையம் வரை எங்களோடு வந்தார். பேருந்துநிலையம் ஐம்பதடி தூரத்தில் இருந்தது. சாலையோரத்தில் ராமர் கோவில் இருந்தது. சாலைகள் நன்றாக இருந்தது. நம்மூர்களில் நகரங்களில் கூட இப்படி சாலைகளை காண்பது அரிது. அதுவும் கேரளாவில் மழை மிக அதிகம். சாலையின் இரு புறமும் எங்கும் செடிகளும் மரங்களும் இருக்கின்றன. ஒவ்வொரு செடியின் பெயரையும் நான் கேட்டுக்கொண்டே வந்தேன். அவரும் சலிக்காமல் சொல்லிக்கொண்டே வந்தார். பாதி பெயர்கள் தமிழ் போல இருந்தாலும் அவை தமிழ் பெயர்கள் இல்லை. ஹரி குறுக்கிட்டு அதன் ஆங்கில பெயரினை சொல்லுவான். நிஜத்தை சொல்லுவதென்றால் முக்கால்வாசி செடிகொடி பெயர்கள் எனக்கு தெரியவில்லை. எங்களையும் எங்கள் சேட்டைகளையும் பார்த்து ஊர் மக்கள் பாபு அப்பாவிடன் யார் இவர்கள் என விளித்தார்கள். “பாபு கூட்டாளியான..” என்பது போல ஏதோ சொன்னார். நாங்கள் ஹி என சிரித்தோம். சின்ன பேருந்து நிலையம். எதிரே ரப்பர் கடை இருந்தது. எப்படி தயாரிக்கின்றார்கள் என கேட்க அங்கிருந்த வயதான பெண்மனி படபடவென மலையாளத்தில் விவரித்தார். பேருந்து வந்தது. அது பேருந்து அல்ல, சிற்றுந்து (Mini Bus).

அந்த பேருந்தின் நினைவுகள் இன்னும் இருக்கின்றது. அதனை போலவே பாபுவின் திருமணத்திற்கு சென்ற போது கேரளாவில் பேருந்தில் பயணம் செய்தது மறக்க முடியாத பயணம். அதிகாலை ஆல்வாயில் இரயிலறங்கி நெடுந்தூரம் கிராமம் கிராமமாக சென்ற அந்த பயணம் மறக்கவே முடியாது. வண்டியை நிறுத்த மணியோசை கேட்கும். அது ஏதோ செய்துவிடும்.பாபுவின் தந்தை கொளச்சேரி வரையில் எங்களுடன் வந்தார். அவரும் எர்ணாகுளம் வரை வருகிறேன் நீங்கள் தொலைந்து போய்விடுவீர்கள் என்றார். அவரை சமாதானம் செய்து எப்படியோ எர்ணாகுளம் பேருந்தில் நாங்கள் இருவரும் கிளம்பினோம்.

கொச்சினில்…

பாபு எங்களை மாநில பேருந்து நிலையத்தில் நிற்க சொல்லியிருந்தான். கேரளாவை பற்றி பள்ளியில் படித்தவை, கேரளாவில் ஒரு கி.மீ சதுர பரப்பளவில் அதிக மக்கள் வாழ்கின்றார்கள் என்று. ஆனால் கிராமத்தில் அப்படி நிறைய மக்கள் இருப்பததாக தெரியவில்லை. பேருந்து நிலையம் கூட அவ்வளவு பெரியதாக இல்லை. அதிகபட்சமாக முப்பது முதல் நாற்பது பேருந்துகள் மட்டுமே நிற்கும். நானும் ஹரியும் பேருந்து நிலையத்தை அடைந்தோம். சுற்றி வந்தோம். இணைய இணைப்பை தேடி அலைந்தோம். வாழ்வில் முக்கியமான ஒரு மடலை எதிர்ப்பார்த்து இருந்தேன். எங்கும் கிடைக்கவில்லை. பாபு எங்களை அலைபேசியில் அழைத்து கல்லூர் விளையாட்டு மைதானத்திற்கு வரச்சொன்னான். 35 ரூபாய் கேட்பான் ஆட்டோவில் என்றான். சில ஆட்டோக்களை விசாரித்து 20 ரூபாய்க்கு உள்ளேறினோம். ஊரில் இருந்த சந்து பொந்துகள் எல்லாம் தெரிந்தது ஆட்டோகாரர்களுக்கு மட்டும் தான். ஒரு இடத்தில் நிறுத்தி இது தான் நீங்க சொன்ன இடம் என்றான். நான் சொன்னது விளையாட்டு மைதானம். இன்னும் பத்து ரூபாய் கேட்டு வண்டியை கிளப்பினான். உர் என்றானான் ஹரி. அந்த வருடம் மார்ச்சில் இந்தியா பாகிஸ்தான் போட்டி இங்கு தான் நடைபெறுவதாக இருந்தது. எர்ணாகுளம் கூடான நகரம். கூட்டை தாங்கும் தோள்கள் பெங்களூரில் இருந்ததால் வலுவிழந்து போயிருந்தது.

மதிய உணவினை முடிந்தோம். பின்னர் கொச்சின் மரைன் டிரவ்விற்கு சென்றோம். படகுகள் தயாராக இருந்தது. ஏற்கனவே எனது கல்லூரி காலத்தில் இங்கே ஆனந்தமாக கழித்திருந்ததால் எங்கே அந்த ஆனந்ததிற்கும் இன்றை அனுபவத்திற்கும் சண்டை வந்துவிடுமோவென போகாமல் இருந்துவிட்டேன். யாரும் போகவில்லை. கடலில் கரையில் இருக்கும் சுவரில் அமர்ந்தோம். கடலை பார்த்து அமர்வது எப்போதும் சுவாரஸ்யம் தான். சுனாமி பற்றி பேச்சு எழுந்தது. மனம் கதிகொண்டது. கொச்சின் அதிகம் சேதாரம் அடையவில்லை. இருந்தும் 25 பேரை பலிகொண்டது. கடலை பார்த்த போது தூரத்தில் ஒரு பாலம் தெரிந்தது. அந்த பாலத்திற்கு போகலாம் என்று கிளம்பி போகதி அரண்மனைக்கு சென்றோம். அங்கே மோட்டர் படகில் சவாரி செய்தோம். வண்டி வேகமாக செல்ல முடியவில்லை :(. ஊரணமனாவிற்கு திரும்பினோம். ராஜேஷிற்கு வீட்டில் ஏதோ முக்கிய வேலை இருந்தது.

மாலை அந்த சின்ன அறையில் ஐவரும் அமர்ந்தோம். நான், ஹரி, பாபு, பினு மற்றும் ராஜேஷ். சின்ன அரட்டை. இரவின் உணவிற்கு பிறகு பாபு பள்ளி இருக்கும் திசையில் நடந்தோம். வெளிச்சம் இல்லாத வீதிகள் அழகை கூட்டியது. ரசிக்கக்த்தக்க இரவு. வானம் அசத்திக்கொண்டிருந்தது. நட்சத்திரங்கள் கண்ணடித்துக்கொண்டிருந்தது.

மறுநாள்:-

என் தோழி லில்லியனின் நிச்சயதார்த்தற்கு அன்று செல்ல வேண்டும். காலை 7.30 மணிக்கு எழுந்தோம். முந்தைய இரண்டு இரவுகள் சரியான தூக்கம் இல்லை. கிளம்பி, உணவு முடித்தோம். எங்களுக்கு ஹீரோ ஹோண்டா வண்டியினை கொடுத்தனர், கோதமங்கலத்திற்கு செல்வதற்கு.ஊரமணாவில் இருந்து கோதமங்கலம் சுமார் 25 கி.மீ. எப்படி செல்ல வேண்டும் என்பதனை ராஜேஷ் சேட்டா கூறினார். மது வேறு ஒரு பெண்ணை பார்க்க சென்றான்( இவளை திருமணம் புரிந்து கொண்டு பெங்களூரில் ஆனந்தமாக வாழ்கின்றான்). நாங்கள் சென்றது தேசிய நெடுஞ்சாலையாம். ஆனால் வழி குறுகலாக தான் இருந்தது. அது செம்மையான பயணம். செழிப்பான பயணம். நிறைய வளைவுகள். ஒவ்வொரு சந்தியிலும் இது தான் சரியான வழியா என விசாரித்துக்கொண்டோம். ரஜினி போல ஏதோ ஊருக்கு சென்று உம்மா எல்லாம் எங்களால் வாங்க முடியாத காரணத்தால். எப்படியோ லில்லியன் வீட்டினை அடைந்தோம்.

அது வீடு என்னும் சொல் அதன் அழகினை குறைத்து மதிப்பிட்டு விடும். . அது கிராமமும் அல்லாத நகரமும் அல்லாத ஊர். இந்த வீட்டிற்கு ஒரு வருடம் முன்னர் கல்லூரி நண்பர்களுடன் வந்திருக்கின்றேன். லில்லியனின் தந்தை ஓய்வுபெற்ற  பேராசிரியர். அவர் இந்த வீட்டை பற்றி சொல்லும் போது” எந்த ஒரு இடமும் வெறுமையாக இருக்க கூடாது”. நிஜம். எல்லா இடமும் ஏதாவது கலைநுணுக்கத்துடன் அமைந்து இருக்கு. மீன் தொட்டியோ, அழகிய புராதான பொருளோ, மர வேலைப்பாடோ, புகைப்படமோ, சாரளத்திற்கு வெளியே பச்சை மரமோ ஏதாவது ஒன்று எங்கும் இருந்தது. நிச்சயம் அனைவரின் கனவாக இருக்கும் இந்த வீடு, அல்ல மாளிகை.ரசனையுள்ள மனிதர். இந்த வீட்டில் இருந்தாலே ஒரு அமைதி, சுகம். இந்த முறை நானும் ஹரியும் லில்லியனின் நிச்சயதாம்பூல விழாவிற்கு சென்றிருந்தோம். எங்கும் மக்கள். லில்லியன் தம்பி எங்களை வரவேற்றான். அவள் தந்தை எங்களுக்கு சூடான் தேநீர்அளித்து பயண களைப்பை போக்கினார்.

கல்லூரி நண்பன் நடராஜ், அருகே இருக்கும் விடுதியில் தங்கி இருப்பதாக சொன்னார். நிறைய நேரம் இருந்ததால் அங்கே சென்று ஓய்வெடுத்து மீண்டும் கிளம்பி வந்தோம். வழியில் அலுவலக நண்பர்களுக்கும் அறைவாசிகளுக்கு கேரளா ஸ்பெஷல் அயிட்டங்கள் (அட சிப்ஸ் தான்பா) வாங்கினோம். கூட்டம் அதிகரித்து இருந்தது. எங்கும் அழகான அலங்காரம். ஐஸ் கட்டியில் சிற்பங்கள் செய்திருந்தார்கள். ஒருவர் ஐஸ்கட்டியில் அற்புத பறவை ஒன்றினை செதுக்கினார். அதன் தலையில் சிகப்பு சாயத்தை ஊற்றினார், அது மெல்ல எல்லா இடங்களிலும் பரவி அழகாக தோற்றமளித்தது. ஆஹா. மேலும் மக்கள் வர துவங்கிவிட்டனர். மாப்பிள்ளை பெங்களூரில் பணி புரிகின்றார். நாங்கள் மதுவிடன் வாக்களித்தபடி 12க்கு அவன் வீட்டில் இருக்க விரைவாக, விழாவிற்கு முன்னரே கிளம்பிவிட்டோம், மணமக்களை வாழ்த்திவிட்டு.

மீண்டும் ஊரமனாவிற்கு பத்திரமாக திரும்பினோம். கேமராவில் அதன் அழகை படம்பிடித்திருந்தால் மறக்கமுடியா அனுபவமாக இருந்திருக்கு, ஆனால் ஒவ்வொரு முறையும் படச்சுருளை மறந்துவிடுவோம். கோதமங்களத்தில் வாங்கிடவேண்டும் என்று இருந்தோம், மறந்துவிட்டோம்.

ஆனந்த குளியல்…

நாங்கள் விரைவில் திரும்பியது ஒரு காரணத்திற்காக தான். மது எங்களை பக்கத்து ஆற்றுக்கு அழைத்து செல்வதாக சொன்னான். அங்கே நல்ல குளியல் போடலாம். மதுவீட்டில் இருந்து நான், ஹரி, மது, ராஜேஷ் காரில் சென்றோம். சிரிஷா எங்களோடு இணைந்து கொண்டார். சிரிஷா மதுவின் ஒன்றுவிட்ட தம்பியோ இரண்டுவிட்ட தம்பியோ. சொந்தமாக ஒரு கடையினை கொளச்சேரியில் வைத்துள்ளார். சிறிது நேரம், ஏன் கேரளாவில் மஞ்சள் காமாலை நோய் அதிகமாக இருக்கின்றது என ஆராய்ந்தோம். சமீபத்தில் சிரிஷாவிற்கும் அந்த சிரமம் ஏற்பட்டிருக்கின்றது. மதுவிற்கு பெங்களூரில் மஞ்சள் காமாலை வந்தது. அரை மணி நேரம் பயணம். கள்ளு கடைக்கு சென்றோம். கள்ளு, தயாரிக்கப்பட்ட உடன் அதிக விட்டமின் சி கொண்டது. இங்கே கள்ளு அருந்துவது ஆரோக்கிய பானமாக கருதுகின்றனர். பெண்களும் சரளமாக அருந்துவது வியப்பே.

ஒரு வாய் கூட வைக்க முடியவில்லை. எங்கள் மேஜை மீது பறப்பன, ஊர்வன, கூவுவன என எல்லாம் இருந்தது. “கப்பா”வை வரவைத்தார்கள். கப்பா என்பது ஒரு வகை உணவு. நிறைய விட்டமின்களும் புரதங்களும் அடங்கிய உணவு. ஐந்து வகையான உயிரினங்கள் மேஜையின் மீது இருந்தது. சில துண்டுகள் ரொட்டியினை மட்டுமே என்னால் உண்ண முடிந்தது. உள்ளிருந்தது ஏதோ செய்ததால் வெளியே வந்துவிட்டேன். அவர்களின் ஆனந்த சிரிப்புகள் சத்தமும் கேட்டுக்கொண்டு இருந்தது. அங்கிருந்து மூவட்டுப்புழா ஆறுக்கு புறப்பட்டோம். வழியில் பாபு குட்டனும் எங்களுடன் சேர்ந்து கொண்டார்.அவருக்காக மீண்டும் ஒரு கள்ளு கடையில் வண்டி நின்றது. நான் காரிலேயே இருந்தேன். நீண்ட நாட்களுக்கு பிறகு சிறுது தூரம் வண்டியை செலுத்தினேன்.

இன்னும் கொஞ்ச தூரத்தில் ஆறு வந்தது. ஆடைகள் களைந்து குதுத்தோம்.ஆற்றின் நடுவில் மட்டும் 30 அடி ஆழத்திற்கு தண்ணீர்.ஆறு தெளிவாக இருந்தது. அந்த இடத்தின் அமைதியும் ரம்மியமும் இன்னும் நெஞ்சினில் நிற்கின்றது. ஆற்றின் அந்த கரையில் தென்னைமரமும், ரப்பர் தோட்டங்களும் கண்கொள்ளா காட்சியாக இருந்தது. இரண்டு மணி நேரம் குளித்திருப்போம். மகிழ்ச்சி ஆரவாரம் தான். கண்ணாடியினை கழற்றி விட்டதால் மேற்கொண்டு நடந்தது என்ன என்று என்னால் சொல்ல இயலாது. நான் பார்க்க முடியாத ஒன்றை உங்களிடம் எப்படி சொல்வது? நான் மிகவும் ரசித்த ஒன்று ஆற்றின் கரையில் தலையினை மூழ்கி வான் நோக்கி படுத்து இருந்த அந்த அரை மணி நேரம். சுவாசிக்க மூக்கு மட்டும் தண்ணீர் வெளியே இருந்தது. காதுகளில் ஆற்றின் சலசலப்பு. அந்த சத்தமும் நின்று போய், நான் மூச்சுவிடும் சத்தம் மட்டும் கேட்டது. அமைதி அமைதி. மனதிலும் அமைதி. 10 கி.மீட்டர் தூரத்தில் யாரோ அழைப்பது போல இருந்தது..கண்களை திறந்து வெளியே பார்த்தால் ராஜேஷ் நின்றுகொண்டிருந்தார். “ப்ளீஸ்…” அவருக்கே உரிய பாணியில்…வீட்டிற்கு அழைத்தார்.

வீட்டிற்கு சென்றோம். ஹரியில் உடல்நிலை சரியாக இல்லை. பைகளில் உடைகளை அடைத்தோம். அனைவரிடமும் விடை பெற்றுக்கொண்டு கிளம்பினோம். மற்றொரு உறவினன் பாபு குட்டன் உதித்தார்.எங்களை எர்ணாகுளம் வரை காரில் விட அவரும் வந்தார். அவரிடம் இரண்டு நாள் நடந்ததை விவரித்து வந்தேன். திடீரென ஹரி காரை நிறுத்த சொன்னான். கீழே இறங்கினான்.”உவாக் உவாக்” சத்தம். குவா குவா சத்தம் இல்லை. உள்ளிருந்தது வெளியே வந்து கொண்டிருந்தது. கள்ளு ஒத்துக்கொள்ளவில்லை. அவன் சோர்வாக காணப்பட்டான்.

எர்ணாகுளத்தை அடைந்தோம். காரை நிறுத்திவிட்டு பேருந்து அருகே சென்றோம். “உவாக் உவாக்” சத்தம். ஹரி அதிரடியில்.

பாபு குட்டனின் கடைசி வார்த்தைகள்..”இந்த கள்ளு சரியில்லை. அடுத்த முறை நன்னா இருக்கும்…”

– பயணங்கள் தொடரும்.

Advertisements
8 Comments leave one →
 1. பாலாஜி இராமு permalink
  February 11, 2008 9:18 am

  good da..super

 2. February 11, 2008 11:14 am

  இதுப்போன்ற கேரள கிராமங்களுக்குள்ளான பயணத்தை நானும் அனுபவித்திருப்பதால் அதன் சுவையை உணரமுடிகிறது.

  புகைப்படங்கள் எடுக்காதது பெரும் பிழை.

 3. thamilannan permalink
  February 11, 2008 1:03 pm

  PHOTOS ILATHATHU ORU PERIA KURAI

  Anbudan
  Raams

 4. February 11, 2008 5:13 pm

  அருமையான பதிவு. புகைப்படங்களையும் கொடுத்திருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும்.

  அனுவங்களைப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி.

 5. February 11, 2008 6:18 pm

  என்ன கொடுமைங்க இது சரவணன்.

  ஏன் புகைப்படம் எதுவும் போடலை,

  நான் கேரளா சென்றிருந்த பொழுது எழுதிய பதிவு.

  http://kundavai.wordpress.com/2007/12/03/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d/

 6. February 12, 2008 6:21 am

  இந்த பயணம் மூன்று வருடம் முந்தைய பயணம். அப்பொழுது கையில் கருவி ஏதும் இல்லாத நிலை.

 7. February 13, 2008 12:33 pm

  //வீட்டின் அருகிலேயே பள்ளி இருப்பது எத்தனை ஆனந்தமான விஷயம்.//

  இது படிக்குற பசங்களுக்கு.
  எங்களுக்கு மட்டும் தான் தெரியும் அதன் வேதனை.

  அருமை 3 வருஷம் முன்னாடி போனது.இப்போ போனப்ள எழுதிருக்கிங்க.

 8. March 1, 2009 4:23 pm

  உங்கள் வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன்.
  சுட்டி இதோ!
  http://blogintamil.blogspot.com/2009/03/blog-post.html

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: