Skip to content

இரவின் இருட்டில் – சிறுகதை

February 20, 2008

இரவின் இருட்டில் – சிறுகதை

மூன்று வருடம் இருக்கும். அந்த இரவின் ஒவ்வொரு நிகழ்வும் இப்போது நினைத்தாலும் கண்முன்னே விரிகின்றது. இரவு ஒரு மணிக்கு எனது இரயில். விடுமுறையில் ஊருக்கு சென்றிருந்த நான், அன்று இரவு அம்மா அப்பாவுடன் சண்டை போட்டிருந்தேன். மாதம் ஒரு முறை வீடு வரும் போதும் இப்படி தான் சாப்பிட வெறும் சாம்பார், ரசம் மட்டும் வைப்பீர்களா? இன்றாவது நல்ல சாப்பாடு செய்யக்கூடாதா என்று கத்தியிருந்தேன். என் சத்தத்தில் தம்பி பயந்திருந்தான். அம்மா, அப்பா யாரும் பேசவில்லை அந்த கூச்சலுக்கு பின்னர். அப்பா ஏற்கனவே நொறுங்கிபோயிருந்தார் ஏகப்பட்ட பிரச்சனைகளில். அம்மாவை அத்தனை சொல்லியும் நான் கிளம்பும் போது வந்து வழியனுப்பி வைத்துவிட்டே சென்றார்கள்.

“கிளம்பு, என்ன ஸ்டேஷன்ல விட்டுட்டுவா” என்றதும் தம்பி மறுப்பேதும் சொல்லாமல் லுங்கியில் இருந்து பேண்டுக்கு மாறி அப்பாவின் பழைய டி.வீ.ஸ் 50யினை வெளியில் தள்ளினான்.

“வரேன்மா..”

“எப்ப திரும்ப வர. போனது போன் பண்ணு சங்கர்..”

“ம்ம்ம்…”

தம்பி என்னை ஸ்டேஷனில் விடும்வரை ஏதும் பேச்சில்லை. இறங்கிய போது ஏதோ சொல்ல வாயெடுத்தான். அவனுக்கான தேவைகள் நிறைய இருக்கும். இருந்தும் “ட்ரெயின் வர வரைக்கும் இருக்கவா அண்ணா?” என்றான்.

“இல்லடா நான் பாத்துகறேன்.பனி நெறைய இருக்கு. நீ வீட்டுக்கு போ. கைல காசிருக்கா? ”

“வேண்டண்ணா…”

சட்டை பையில் இரண்டு காந்தி சிரிக்கும் சின்ன நோட்டுகளை வைத்தேன்.அவன் போன திசையில் சிறிது நேரம் பார்த்துவிட்டு ரயில் எத்தனை மணிக்கு வருகின்றது என பார்க்க சென்றேன். அடடா தம்பியை இருக்க சொல்லி இருக்கலாம் என்று தோன்றியது. ஒரு மணி நேர கால தாமதம். புத்தக வாசிப்பு அன்றைய காலகட்டத்தில் எனக்கு புதிய விஷயம். புத்தகத்தின்பால் ஈர்க்கப்பட்ட ஆரம்பகாலம்.இரண்டு புத்தகங்கள் பையில் இருந்தது. ஒரு மணி நேரத்தை கடத்துவதா கடினம்.

இரவில் ரயில் நிலையம் நான் இன்றும் ரசிக்கும் விஷயங்களில் முக்கிய இடம் வகிக்கும். எப்போதும் நிற்கும் கூட்ஸ் வண்டிகள்.அடுத்த ரயிலுக்காக காத்திருக்கும் கேண்டீன் பையன்கள், பச்சை கொடியினை கையில் பிடித்தபடி வெள்ளை ஆடையில் ஓருவர். எல்லையில் போரிடும் மிலிட்டரி மனிதர் ஒருவர் நிலைய அதிகாரியிடம் சண்டையிட்டுக்கொண்டிருந்தார். நிறைய சாமான்கள் இருப்பதற்காக அதிகாரி அதிக பணம் கேட்டார் என்பதற்காக சண்டை இருக்கலாம் என்பது என் ஊகம். மெல்ல நடந்து சூடான காபியினை வாங்கி நிலையத்தின் கடைசிவரை நடக்கலானேன்.

நிலையத்தின் கடைசி விளக்கினை அடைந்த போது, எதிர்புறம் இருந்த ரயில்வே காவல் நிலையத்தில் ஏதோ பரபரப்பு. இரண்டு மூன்று தொப்பை ஆசாமிகள் வெளியே வந்தனர். அதே நேரத்தில் எதிர்புறம் ரயில் ஒன்று வந்தது. நின்றது. கிளம்பியது. அந்த தொப்பை ஆசாமிகள், ஒல்லியான தோகத்தில் இருக்கும் ஒருவனை பிடித்திருந்தனர். “எங்கடா எங்ககிட்டயே உன் கைவரிசைய காட்றியா” என்று லத்தியில் அடிவிழுந்தது. “சார். அடிக்கற வேலையெல்லாம் வேணாம்..” ஏதோ கல்லூரி தோழனிடம் பேசுவது போல சாதாரணமாக பேசினார் அவர். எப்படி இவர்களுக்கு இந்த ரயிலில் இந்த பெட்டியின் இப்படி ஒரு திருடன் வருகிறான் என தெரிந்தது? இவர்களுக்கு எல்லாம் தெரியுமோ? நான் யோசிப்பது கூட எங்கே கண்டுபிடித்திடுவார்களோ என்று நான் நழுவத்துவங்கினேன்.

அம்மாவின் நினைவு மீண்டும் வந்தது. அப்படி பேசி இருக்க கூடாதோ. அட நாம மாசத்திற்கு ஒருமுறை வருகிறோம், வெளியூருல இருக்கான் பையன் எப்படி சாப்பிடுறானோ, எங்க சாப்பிடுறானோ வீட்டுலயாவது நல்ல சாப்பாடு போடலாம்னு இருக்கா? ஆனாலும் அம்மா பாவம் தான். என்ன முப்பது நாள்ல ரெண்டு நாள் தான வரேன்.அது கூட செய்ய முடியாதா? சின்ன வயசில் இருந்தே எனக்கு புளிசாதம் என்றால் உயிர். அதும் அம்மா செய்தால் அருமையோ அருமை. வேலைக்கு சென்ற ஆரம்பத்தில் தூக்கு நிறைய புளி தொக்கு செய்து ஊருக்கு எடுத்து செல்வேன். அப்போது அறையில் சமைத்துக்கொண்டு இருந்தோம். வேலை அதிகமானதால் விட்டுவிட்டோம். அப்பளம், வத்தல் அது கூட தொட்டுக்க இல்லை இன்று. நான் சொல்லி தான் இதெல்லாம் தெரியனுமா? அம்மாவுக்கே இதெல்லாம் தெரியக்கூடாது? அம்மா மாலை எங்கோ வெளி சென்று வந்ததால் சோர்வாக இருந்தார்கள். அதனால செய்ய முடியாம போயிருக்கலாம். இரண்டு பக்கமும் மனம் மாறி மாறி பேசிக்கொண்டே போனது. கேண்டீன் எதிரே அமர இடம் இருந்தது.

திண்ணை போல வட்டமாக இருந்த அந்த இடத்தில் அமர்ந்தேன். மின்விசிறியின் சத்தம் மட்டும் சில சமயம் அதிகமாக கேட்டது. பையில் இருந்து புத்தகத்தினை எடுத்து படிக்க துவங்கினேன். தூரத்தில் நாயின் குரைச்சல். நாளைய வேலையின் எண்ணங்கள். ரயில் ஒரு மணி தாமதம் என்றால் சில வேலைகள் தடைபடும். அச்சோ, சவரம் செய்யவேண்டும் என நினைத்திருந்தேன், ஏற்கனவே நிறைய தாடி வளர்ந்துவிட்டு இருந்தது. மேலாளர் கடிந்து கொள்வார். வண்டி ஸ்டேஷனில் இருக்கு, பத்திரமாக இருக்குமா? போன முறை கொஞ்சம் பெட்ரோல் காணவில்லை.இந்த முறை கொஞ்சமாக இருந்த போது தான் விட்டுவைத்து வந்திருக்கிறேன். எப்படியும் காலை பெட்ரோல் பங்க் திறந்திருக்கும். புத்தகங்களில் பக்கங்கள் நகரவில்லை.

இன்னும் ரயில் வர அரைமணி நேரம் இருந்தது. கண் லேசாக அயர துவங்கியது. அப்போது கருத்த உருவம் என்னை நோக்கி வந்தது. என் தம்பி வயது இருக்கலாம். அல்லது ஒன்று இரண்டு வயது கூட குறைச்சல் இருக்கலாம். தம்பி கண்ணாடி அணிந்திருப்பான், இவன் கண்ணாடி அணியவில்லை. காலில் செருப்பு ஏதும் இல்லை. அடுத்த முறை தம்பிக்கு நல்ல செருப்பு வாங்கி வர வேண்டும், அல்லது  கடைக்கு அவனை கூட்டிக்கொண்டு வாங்கி தர வேண்டும். பாவம் ஹவாய் செருப்பு தான் பயன்படுத்துகிறேன். இவனுக்கு அது கூட வாங்கி தர ஆளில்லை போலும். நீட்டு முகம். வாரப்படாத தலை முடி. கருப்பு என்றால் அட்டை கருப்பெல்லாம் கிடையாது.

அவன் என்னை நோக்கி வருவது தெரிந்தது. என்னையே பார்த்துக்கொண்டு வந்தான். அந்த பகுதியில் அப்போது யாரும் இல்லை. அந்த மிலிட்டரி ஆளும் எப்போழுதோ சென்றுவிட்டார். அதிகாரி காணவில்லை. காவல் நிலையத்தில் அந்த ஆளை கவனிக்க தொப்பையர்கள் உள்ளே சென்றுவிட்டார்கள். கேண்டீன் ஆளும் அடுத்த ரயில் வரும் வரை உறங்க சென்றிருக்க வேண்டும். இவன் பார்வையே சரியில்லையே. இவன் திருடனாக இருக்க கூடும், என் கண்களை உறங்குவது போல மூடிக்கொள்கிறேன். நமக்கான தைரியம் எல்லாம் நம்மைவிட அடங்கி இருப்பவர்கள் இடத்தில் மட்டும் தானே இருக்கும்.

என் மிக அருகில் வந்துவிட்டான். நான் உறங்குகிறேனா என என்னை எட்டிப்பார்க்கிறான். கேண்டீனை நோக்கி திரும்புகிறான். என் மீது ஒரு பார்வை இருந்து கொண்டே இருந்தது. அங்கே குளிர்பானங்களை அடுக்கி வைத்திருந்த பெட்டிகள் மீது கைகள் போனது. காலி பாட்டில்கள் தான் இருந்தன. கல்லாப்பெட்டியில் கைவைக்க போகிறான், நான் உடனே அவனை பிடித்துவிடுவேன். கூச்சலிடுவேன். போலிஸ் காரர்கள் வந்துவிடுவார்கள், அல்லது கேண்டீன்கார்கள் வந்துவிடுவார்கள், இல்லை யாரேனும் வந்துவிடுவார்கள். இல்லை விட்டுவிடலாமா? என்னை அவன் அடித்துவிட்டால், போலிஸ் கேசு என்று ரயிலை விட்டுவிட்டால்…..ஒரு நாள் வேலை தடைபட்டுவிடும். மேலாளரிடம் திட்டு விழும். மீண்டும் வீட்டிற்கு இரவே சென்றுவிட வேண்டும். வேண்டாம் விட்டுவிடலாம்.

காலி பாட்டில் ஒன்றினை கையில் எடுத்தான். என்னை பார்த்தான். என் மண்டையை உடைக்கவா? அய்யோ !!.. சற்றே அவனை உன்னிப்பாக கவனிக்கிறேன்.அவன் பார்வையில் கொடூரம் ஏதும் தெரியவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தான். அந்த பாட்டிலை நேராக அவன் வாயருகில் எடுத்து சென்றான். யாரோ ஒரு புண்ணியவான் /புண்ணியவதி பாட்டிலில் கடைசி சொட்டு விட்டுவைத்திருக்கிறார்கள். அந்த ஒரு சொட்டு பானம், அவன் தொண்டை வழியே பயணித்தது மிகத்துள்ளியமாய் தெரிந்தது. எத்தனை நாளாச்சோ அவ்வழியே ஒரு குவளை சோறு சென்று . பசி எத்தனை கொடூரமானது. பாட்டிலை ஒரு உலுக்கு உலுக்கினான். அடுத்த பாட்டிலை எடுத்தான், அதற்கு மேல் ஏதும் தெரியவில்லை. கண் முன்னே குளம் தோன்றியிருந்தது.

நான் நினைத்திருந்தால் அவனுக்கு உதவி செய்திருக்கலாம். காசு ஏதேனும் கொடுத்திருக்கலாம், அதெல்லாம் பெரிய உதவியா தெரியவில்லை. அவன் வாங்கி இருப்பானா என்பது அடுத்த விஷயம். ஆனாலும் அந்த நொடியில் எதுவும் செய்ய முடியாமல் இருந்துவிட்டேன். அவன் சென்ற திசையினை பார்க்க கூட திராணி இல்லை. என்னையும் அவனையும் ஒரே நிமிடம் ஒப்பிட்டு பார்த்துக்கொண்டேன். இப்பொழுதெல்லாம் பசிக்கும் பொழுதெல்லாம் ஒரு சொட்டு பானம் அவன் தொண்டைக்குள் பயணிக்கும் காட்சி கண்ணில் வந்துபோகும்.

– விழியன்

Advertisements
6 Comments leave one →
 1. February 20, 2008 5:31 am

  அருமையா இருக்குணா.

  அம்மாவிடம் சண்டை, பின் அப்படி செய்திருக்க வேண்டாமோ எனும் எண்ணம், பொதுவான இடத்தில் நம்மை தப்பிக்க வைக்கும் மனம்…

 2. shanv permalink
  February 20, 2008 9:19 am

  Nice one 🙂

 3. February 21, 2008 4:36 am

  முழு கதையையும் எண்ணத்தின் ஓட்டமாக சொல்லியிருக்கும் விதம் நன்று. தொடர்ச்சியும், விதவிதமான எண்ணங்கள் கடந்து செல்வதும் அழகு. குறிப்பா, ஸ்டேஷனில் விட்டு வந்த வண்டியைப் பற்றிய சிந்தனையெல்லாம் வெகு இயல்பா வந்திருக்கு.

 4. February 21, 2008 2:39 pm

  வழியில் பார்க்கும் ஒவ்வொன்றும் ஒரு கதைதான். சுவாரசியமாக சொல்லியிருக்கிறீர்கள்.

 5. loveish permalink
  February 26, 2008 5:24 am

  Fantastic………keep going buddy!

 6. February 29, 2008 9:59 am

  Cool!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: