Skip to content

அப்பப மெதுவா நடக்கனும்னு தோனுது

February 16, 2009

“அப்பப மெதுவா நடக்கனும்னு தோனுது”

இப்படி ஒரு நாள் அமைதியா கிடைக்காதான்னு ஏங்கிட்டே இருந்தப்ப தான் அந்த நாள் வந்துச்சு. பெங்களூர் போய் கிட்டத்தட்ட நாலு வருஷமாச்சு. வேலூர் வீட்ல ரொம்ப அலுப்பு தட்டியதால வீட்டை விட்டு கிளம்பி ஒரு பெரிய நடை போகலாம்னு கிளம்பிட்டேன். பஸ் நிறுத்தத்திற்கு வந்துட்டேன். எந்த பக்கம் போறதுன்னு குழப்பம் நிலவியது. காலேஜ் ரவுண்டானா நிறுத்தத்தில் இருந்தேன். சரி சில்க் மில் ஸ்டாப் வரைக்கும் நடந்து போகலாம்னு தோனுச்சு. வேலூரில் இருந்து காட்பாடி வரும் போது பாலாறு பாலம், குமரன் மருத்துவமனை, விருதம்பட்டு, சில்க் மில், கல்யாண மண்டபம், போலிஸ் ஸ்டேஷன், E.B ஸ்டாப், காலேஜ் ரவுண்டானா, ஓடைபிள்ளையார் கோவில், சித்தூர் பஸ் ஸ்டாப், ரயில்வே ஸ்டேஷன், காட்பாடி என வழித்தடம். நான் நிற்பது காலேஜ் ரவுண்டானா.

என்ன இருந்தாலும் நம்ம ஊர்ல நடக்கற சுகம் எங்க நடந்தாலும் வரல. அங்க இங்க பார்த்த முகம். பள்ளியில ஜூனிரியரா பார்த்த முகங்கள்ல மீசை, வீராப்பு, சிகிரெட் அப்படின்னு நிறைய மாற்றம். சர் சர்னு வண்டில வேற. இப்ப புதுசா செல்போன்.E.B. ஸ்டாப்பிங் தாண்டி வந்துட்டேன். இடப்பக்கம் ஒரு முதியோர் இல்லம். புதுசா வந்திருக்கு போல. ஐஞ்சு நிமிஷம் அந்த போர்ட்டுல என்ன இருக்குன்னு படிச்சிட்டு இருந்தேன். உள்ளே போகலாம்னு ஒரு மனசு சொல்ல, வேண்டாம்னு இன்னொரு பக்கம் இழுத்துடுச்சு. சில துணிமனிகள் வெளியே காய்ஞ்சிட்டு இருந்தது. வெள்ளை கதர் சட்டைகள். காகங்கள் இரண்டு கத்திட்டு போச்சு. தூரத்துல பாட்டு கேட்டுச்சு. கால் அது பாட்டுக்கு அடுத்த அடி எடுத்து வெச்சிடுச்சு.

வலப்பக்கமா போஸ்ட் ஆபிஸ். இது மட்டும் தான் நிறைய மாறவில்லை இத்தனை ஆண்டுகள்ல. தோற்றத்தை தான் சொல்றேன். பள்ளி முடிந்த நாட்கள்ல சில கடித நண்பர்கள் இருந்தாங்க. அடிக்கடி லெட்டர் போட வருவேன். அம்மா டெலிபோன் பில் கட்ட அனுப்புவாங்க, ஏதாச்சும் காரணம் சொல்லி தப்பிச்சிடுவேன். புது வருடம், பொங்கல், தீபாவளி வந்தா கட்டு கட்டா கடிதம், வாழ்த்து அட்டை (நானே செய்வது) போட வருவேன். அப்பா எப்பவாச்சு ஸ்டேம்ப் வாங்க அனுப்புவார்.நானும் நிறைய வாங்குவேன். லெட்டர் போட்றது இருக்கே அது தனி சொகம். அது ஒரு வகையான சந்தோஷம். எழுதி வெச்சிருந்த முகவரி எல்லாம் எங்க போச்சுன்னு தெரியல. அந்த லெட்டர் போட்ற பழக்கமும் எங்க போச்சுன்னு தெரியல. பத்து வருஷமாச்சு. அப்ப வந்த லெட்டர் எல்லாம் எங்க வெச்சேன்? எங்கயோ பத்திரமா தான் இருக்கும். முகவரிங்க கூட எங்க போச்சுன்னு தெரியல. அந்த நண்பர்களும் காணாம தான் போயிட்டாங்க. வீட்டுக்கு போனது அந்த கடிதங்கள், வந்த அட்டைகளை எல்லாம் தேடனும். போஸ்ட் ஆபிஸ்ல நிறைய மரங்கள் இருந்துச்சு, இப்ப கம்மியாயிடுச்சு. காரணத்தை ஆராய மனசு போகல..விருப்பம்மில்ல.

எனக்கு முன்னால வயசானவர் வேகமா நடந்து போறார். என்ன உற்சாகம். அப்பாடி. கையை வீசிகிட்டு சிரிச்ச முகத்தோட. மனசுக்கு எந்த கவலையும் இல்லையா இவருக்கு? அப்படியும் மனுசங்க இருக்காங்கலா என்ன? வேலைக்கு போன நாலு வருஷத்துல நமக்கு அலுத்து போச்சோ? இல்லை இன்னும் வாழ்க்கைய சரியா புரிஞ்சிக்கலையா? யோசனையில் அவரை கோட்டை விட்டுட்டேன். தூரத்தில புள்ளியா தெரிஞ்சார்.

டான்பாஸ்கோ விளையாட்டு அரங்கம். இப்ப தான் காம்பெளண்ட் எல்லாம் போட்டிருக்காங்க.முன்ன வெறும் வேலி தான். ரோட்டில நடக்கும் போதும் கடக்கும் போது விளையாட்றது நல்லா தெரியும். நுழைவு வாசல்ல நிறைய சைக்கிள் இருந்தது. உள்ள போய் ஒரு ரவுண்ட் வரலாம்னு நெனச்சேன். இல்ல உள்ள போறதுக்கு ஏதாச்சும் அனுமதி வாங்கனுமா? உள்ளாற போயிட்டேன். இரண்டு அணிகள் கால்பந்து விளையாடிட்டு இருந்தாங்க. பயிற்சி தான். சுமார் இருபத்தி எட்டு போர் அந்த அரங்கத்தில் இருந்தார்கள். “மாஸ்டர் மாஸ்டர் டிபண்ட் பண்ணுங்க” “முத்தண்ணா தூக்கிடுங்க” “பாஸ்கர் முன்ன போ” “விடு விடு”..”பாஸ் ஹியர்” விசில் சத்தம். பந்து மேலே பறந்தது. கீழே வரும் போது பந்தை தடுத்தது மணீஷ் (என் பள்ளியில் விளையாட்டு சேம்பியன்). ஆடு களத்தில கமலேஷ், விஷ்னு, சரவணன், வினோத் (எல்லோரும் பள்ளி தோழர்கள்). அடப்பாவிங்களா பள்ளி உடையில சின்ன பசங்களா இருக்கானுங்க? அய்யோ அந்த போஸ்ட் பக்கத்துல “டேய் என்னையும் சேத்துங்கங்கடா”ன்னு நான் தான் அழுதுட்டு நிக்கறேன். ச்சே அப்படியே சின்ன வயசுக்கு போயிட்டேன். நினைவுகளுக்கு தான் எத்தனை வேகம் பாருங்களேன்.

மரத்தின் கீழே திண்ணை போன்ற அமைப்பு. காம்பெளண்ட் ஒட்டினாற் போல இருந்தது. அமர்ந்தேன். சின்ன வயதில் பள்ளியில் இருந்து போது எங்கள் பள்ளிக்கு என பெரிய விளையாட்டு அரங்கம் ஏதும் இல்லை. ஏதேனும் விழாக்கள் என்றால் டான்பாஸ்கோ மைதானத்தில் தான் நடைபெறும். நடனம், விளையாட்டு விழா போட்டிகள் எல்லாம் இங்கே தான். இரண்டு முறை நடனம் ஆடி இருக்கேன். பள்ளியில் இருந்து சாரை சாரையாக வரிசையில் வருவோம்.முதலும் கடைசியுமாக மூன்று பேர் கொண்ட குண்டெரிதல் போட்டியில் கஷ்டப்பட்டு மூன்றாம் பரிசு பெற்றேன். இது தான் விளையாடி வாங்கின ஒரே பரிசு.

டப்புன்னு ஒரு சத்தம். பந்து என்னருகே வந்து விழுந்தது. “சார் பாஸ் ..” எழுந்து எட்டி விட்டேன். பறந்து போனது பந்து. ஏதோ நிறைய வெற்றி பெற்றத் போல இருந்தது. என்ன சொல்வது..ஆங்..பீலிங்ஸ். அப்படியே எழுந்து நடந்து வெளியே வந்தேன். தெம்பாக வேகமாக நடந்தது கால்கள். விருதம்பட்டு காவல் நிலையம் வலப்பக்கத்தில் இருந்தது. காவல் நிலையம் பார்த்த உடனே வேகம் கூடியது. பயம் தான். பாஸ்போர்ட் விசாரணைக்காக ஒரே ஒரு முறை உள்ளே போய் வந்தேன். தபால் அட்டை ஒன்று வந்தது “Come to Passport Enquiry 25-12-2001”. தம்பி ஒரே ஒரு கொயர் பேப்பர் வாங்கி தந்துட்டு போங்க” என்று காக்கி உடையில் இருந்தவர் கூறினார். சினிமா அத்தனை பயத்தை கிளப்பிவிட்டதா என்று தெரியவில்லை.

புதுசா நிறைய கட்டிடங்கள் இந்த சாலையில் நிறை வந்துவிட்டு இருக்கின்றது. சின்ன மருத்துவமனை, பன்னாட்டு நிறுவனத்தின் கிளை என புதிய கடைகள். சில வீடுகளில் அடர்த்தியான செடிகள். காற்றில் ஆடிக்கொண்டே இருந்தது திடீர்னு குழந்தை அழும் சத்தம் கேட்டது, கார் ஒன்று நின்றுகொண்டு இருந்தது ஒரு வீட்டின் வாசலில் பிரியா விடை கொடுத்தபடி அந்த வீட்டுவாசிகள். கணவன்,மனைவி குழந்தை வாசலில். கார் கதவை திறந்தபடி ஒரு இளைஞர், கையில் குழந்தையுடன் ஒரு இளம்பெண். அந்த கையில் இருந்த குழந்தை தான் சத்தம் போட்டுக்கொண்டு இருந்தது.”அக்கா இங்க தான் இருப்பாங்க. நாம அடுத்த வாரம் வரலாம். டாட்டா சொல்லு” அழுகை நிற்கவே இல்லை. விட்டால் வாசலில் இருந்த குழந்தையும் அழுதுவிடும் நிலைமை. அழுகுரல் நின்றது. “டாட்டா அக்கா,பை ஆண்டி”. கார் மெதுவாக நகர்ந்தது. பாவம், அங்கிளுக்கு ஏன் பை செல்லவில்லை என வேண்டாத கேள்வி எழுந்து சிரிப்பை அடக்கி நடந்தேன்.

தெரிந்த உருவம் கண்ணில் பட்டது. ஆமாம் அவரே தான். வேதியல் (தமிழில் கெமிஸ்டிரி) டியூசன் வாத்தியார். பன்னிரெண்டாம் வகுப்பின் போது ஈசல் போல மாணவர்கள் டியூசன் செண்டர்களில் தவம் கிடப்போம். பள்ளியிலும் கடுமையான பயிற்சி இருக்கும். ஆனாலும் வெளியே டியூசன் படித்தால் தான் சாத்தியம் என்று நினைத்ததுண்டு. எல்லாம் நினைப்பு மட்டும் தான். ஒரு பயம் தான். “ஹலோ சார். நல்லா இருக்கீங்களா?”

“என்னப்பா நல்லா இருக்கியா?”

“இருக்கேன் சார்…”

“எங்க வேலை பண்ற?பசங்கெல்லாம் என்ன பண்றாங்க?”

விசாரிப்புகள். வீட்டில் எல்லோர் பற்றியும் விசாரிப்புகள். அப்பாவிடம் அவருக்கு பழக்கம் உண்டு. அவரின் அடுத்த திட்டங்கள் என பேச்சு வளர்ந்தது. அவரிடம் படித்த மாணவர்களின் வளர்ச்சியில் தான் எத்தனை பெருமிதம், எத்தனை பரவசம் அவருக்கு. அவர் அருகாமையில் புத்தகத்தோடு பவ்வியமாக மாணவன் ஒருவன். அவன் கண்களில் ஆர்வம், வேட்கை இன்னும் நிறைய தெரிந்தது. “சரி சரி வரேன்” “ரொம்ப நன்றிபா. அவனவன் ரோட்ல பஸ்ல என்னைய பார்த்தா ஏதோ தெரியாதா ஆளுங்க பாக்கிற மாதிரி ஓடுவான். எங்களுக்கெல்லாம் நீங்க நல்லா இருக்கிறது தான்பா பெரிய டானிக்கே. நல்லா இரு”

நியாயமான உணர்வுகள் தான். முன்னர் சிறிய அறையில் டியூசன் நடத்தி வந்தவர் இப்பொழுது பெரிய வீட்டில் நடத்துகின்றார்.

கல்யாண மண்டபம் பஸ் ஸ்டாப் வந்தாச்சு. பிருந்தா கேப்னு ஒரு ஓட்டல் இருந்துச்சு. அந்த இடத்தில அதை காணல. இப்ப கல்லூரி நினைவுகள் வந்துடுச்சு. வருஷப்பிறப்பு ஒன்றிற்கு எங்களை பற்றி தெரியாமல் Buffet (unlimited) விருந்து செஞ்சிருந்தான். மகனே விடிய விடிய வெட்டினோம். பேசி பேசி சோர்ந்து போய் மீண்டும் சாப்பிட்டோம். சிரிப்பு வெடி தான். மனசுல எந்த கவலையும் இல்லாம இருந்த காலம் அது. பசுமையான நினைவுகள்.

மனசுல இருந்த பாரம் கொறஞ்சது போல இருந்துச்சு. எதையோ தொலைச்சுட்டு வேற எதையோ தேடுற மாதிரி உணர்வு. கால் வலிச்சுது. வந்த காட்பாடி பஸ்ஸில ஏறிட்டேன். “வேகமான பஸ் ஓட்டத்தில் மெதுவாக நடந்து வந்த சுகம் ஏதும் கண்ணில் கூட படவில்லை” நான் அடிக்கடி கொஞ்சம் மெதுவா நடக்க பழகிக்கனும்…

– விழியன்

Advertisements
7 Comments leave one →
 1. February 16, 2009 5:12 pm

  மீ த ஃபர்ஸ்ட்டு!

 2. February 16, 2009 5:12 pm

  முதல்ல கமெண்டு அப்புறம்தான் வாசிப்பெல்லாம்!

  ஹிஹி!

 3. February 16, 2009 5:34 pm

  மென்மையான அழகான நினைவுகள் 🙂

 4. February 16, 2009 6:53 pm

  அருமையா இருக்கு உமா!

  அது என்ன தமிழில் கெமிஸ்டிரி! குசும்பு!

  நீங்க சொன்ன வழி எல்லாம் கொஞ்சம் பழகிய வழி. மீண்டும் நினைவுப்படுத்தியதற்கு நன்றி. சில்க் மில், வெடி பாக்டரி, சுகர் மில் னு அங்கவும் ஒரு சுத்து சுத்தி இருக்கோம்ல.

 5. February 17, 2009 5:34 am

  Hi

  உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory – http://www.valaipookkal.com. ல் தொடுத்துள்ளோம்.

  உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இப்பூக்களில் சரி பார்த்து கொள்ளவும்.

  இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

  வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும.

  நட்புடன்
  வலைபூக்கள் குழுவிநர்

 6. SenthilK permalink
  February 17, 2009 6:53 am

  its nice machi.. Unmayaa sollu Nee avvalo thooram nadanthaa ponaai.. ?? ( did u walk for that much distance ?? ) chumma for joke 🙂

 7. February 17, 2009 11:03 am

  அருமையான நினைவுகள் விழியன்…இப்படி நடக்கனுமுன்னு தோணுது…;)

  \\ குண்டெரிதல் போட்டியில் கஷ்டப்பட்டு மூன்றாம் பரிசு பெற்றேன். இது தான் விளையாடி வாங்கின ஒரே பரிசு.
  \\

  ஆகா…எனக்கு மியூசிக்கல் சேர் கிடைச்சது முதல் பரிசு அத்தோட சரி ;))

  அப்பாவோட சொந்த ஊர் வேலூர் தான்..நீங்க சொன்ன இடம் எல்லாம் அந்த அளவுக்கு தெரியவில்லைன்னாலும் வந்துயிருக்கேன் 😉

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: