Skip to content

பூக்கார செல்வி – சிறுகதை

October 29, 2009

பூக்கார செல்வி – சிறுகதை

சென்னை பரபரப்பிற்கு பஞ்சமில்லாத நகரம்.  யாருக்கும் நிற்காத மனிதர்கள்.  சில சமயம் சோம்பலாய் நாம் இருந்தாலும் மற்றவர்கள் சுறுசுறுப்புத் தொற்றிக் கொள்ளும்.  பல்லவன் பேருந்து மாநகரப் பேருந்திற்கு பெயர் மாறிவிட்டது.  பெயர் மட்டுமே மாற்றம், அதே தகரம் போன்ற வண்டிகள், ஏதாவது ஒரு இருக்கையாவது உடைந்திருக்கும், ஏதாவது கைப்பிடி காணமல் போயிருக்கும்.  இருக்கை சரியாக இருக்கின்றதா என்று தொட்ட பின்னரே அமர்ந்தான் சுரேன்.  கல்லூரியின் மூன்றாம் ஆண்டு தேர்வை முடித்து கிடைத்த ஒரு வாரத்தை சென்னையிலுள்ள தன் மாமா வீட்டில் கழிக்க வந்திருந்தான்.  போரூர் கோபால கிருஷ்ணண் தியேட்டர் பின்னால் தான் அவன் மாமாவின் வீடு.  பேருந்து பாண்டி பஜாரை நோக்கி விரைந்து கொண்டிருந்தது.  தன், பள்ளி தோழன் பாலாஜியை பாண்டி பஜார் வீதியில் “கிளோபஸ்” கடை முன்னர் சந்திப்பதாக திட்டம்.  தன்னுடைய கணிப்பொறி வகுப்புகளை முடித்துவிட்டு வருவதாக வாக்களித்திருந்தான் பாலாஜி.  சுரேன் வருடத்திற்கு ஒரு முறையாவது சென்னை வருவான். ஒரு வருடத்திற்கு முன்னர் பாண்டி பஜார் வந்திருந்தான். இப்போது மீண்டும்.

தொலைக்காட்சியில் நிமிடத்திற்கு ஒரு முறை வந்து நச்சரித்த/நச்சரிக்கும் விளம்பர கடைகளை நேரில் பார்வையிட்டான்.  வீடு திரும்ப என்ன பேருந்தை பிடிக்க வேண்டுமென மாமாவிடம் கேட்க மறந்தது நியாபகம் வந்தது. எத்தனை வழித்தடங்கள், எத்தனை பேருந்து எண்கள், எப்படித்தான் நினைவில் வைத்துக் கொண்டுள்ளார்களோ தெரியவில்லை.  தன் ஊரில் இரண்டு வழித்தடத்திற்கு இன்னும் குழம்புவான் எது எந்த வழி எண் என்று.  கடைகளை அன்னார்ந்து பார்த்துக் கொண்டே எங்கோ மோதினான்.  மோதியது செல்வி மீது.  செல்வி கீழே விழம் முன்னர் அவளை பிடித்தான் சுரேன்.  “நம் தன நம் தன என தாளம் வரும்” என்று பின்னிசை எழ வேண்டாம், செல்வி பத்து வயது குழந்தை.  பதினான்கு வயது வரை எல்லோரும் குழந்தைகள் தான்.  கழுத்திலே இருந்து தொங்கிய கயிறு, இடுப்பிலே பூக்கூடையை பிடித்திருந்தது.  மல்லிகை பூ கொஞ்சம் வாடிய நிலையில் இருந்தது.  கூடை மீது சின்ன கோணி துணி போட்டு, ஈரம் சொட்ட சொட்ட பூக்களை வாடாவிடாமல் வைத்திருந்தாள் செல்வி.

வெள்ளை நிறமா என்ற சந்தேகம் வருமளவிற்கு அழக்கேறியிருந்தது  அவள் சட்டை. நீல நிறத்தில் பாவாடை.  வருடா வருடம் இலவசமாக கிடைக்கும் பள்ளி சீருடை துணிகள் அவை.  நெற்றியில் காலையில் இட்ட சந்தனம், வேர்வை ஒழுகி, இருந்த அடையாளம் மட்டும் காட்டியது.  நல்ல வேளையாக பூக்கள் ஏதும் கீழே விழவில்லை, அதற்குள் தான் சுரேன் பிடித்துவிட்டானே. மூன்று நான்கு பேர் சூழ்ந்து விட்டனர்.  “சோமாறி ரோட்ல ஒழுங்கா போகமாட்டானே பேமானி” சுற்றி இருந்தவர்கள்.

“கொழந்தயோ பூவோ கீழ விழுந்தா நீயா துட்டு கொடுப்ப?”

“அத்தை, என் மேல தான் தப்பு, நான் தான் தடுக்கி விழுந்துட்டேன்.  அந்த அண்ணன் தான் புடிச்சாரு.  நீங்க வியாபரத்தை பாருங்க அத்தை.  அடப் போங்கண்ணே வேலைய பாருங்க” கூட்டத்தை விரட்டினாள் அந்த சிறுமி சுரேனை பார்த்து சின்னதாக புன்னகை.

ரோட்டோரத்தில் வித வித கடைகள். சகலமும் கிடைக்குமிடம்.  புத்தக  முதல் புத்தாடை வரை, வீட்டு சாமான்கள், விளையாட்டு பொம்மை, போர்வைகள், துணிமணிகள், செருப்பு முதற்கொண்டு சகலமும் இருந்தது.  பூமாலை தொடுத்து மாலை மாலையாக தொங்கியது.  எந்த தலைவர் கழுத்தில் விழப்போகிறதோ, இல்லை மறைந்தவர்களுக்கு மாலையாக எங்கே போகப் போகின்றதோ.  புத்தக கடையினில்  சில நேரம் கழித்தான் சுரேன்.  இன்னும் பாலாஜி வர முக்கால் மணியாவது ஆகும். செல்வி புத்தக கடையருகில் வந்தாள்.

“மன்னிசிடுங்க அண்ணே! பாக்காம இடுச்சிட்டேன்.  யாராவது ஏதாவது சொல்லியிருந்தா தப்பா நெனைச்சுகாதீங்க”

புத்தக கடை சோமு ”என்னாச்சு புள்ள” “ஒண்ணுமில்லைண்ணே”

“பூ வாங்கிக்கங்கண்ணே” என ஏக்கமாக பார்த்தாள் செல்வி

சுரேன் “இல்லம்மா வேண்டாம்”

நடக்க ஆரம்பித்தான்.  பின் தொடர்ந்தாள்.

“உங்க மனைவிக்கு வாங்கி கொடுங்கண்ணே, சந்தோஷப்படுவாங்க”

“இன்னும் கல்யாணம் ஆகலம்மா”

“அப்போ மனசுக்கு புடிச்சவங்களுக்கு வாங்கி தாங்க” மனதிற்கு பிடித்தவள்.  ராதாவின் பிம்பம் வந்து மறைந்தது.  மூர்ச்சையானான் அந்த இடத்திலேயே அவள் வாசம், ஸ்பரிசம்.

“ஹலோ, பிரதர்” நிஜத்திற்கு மீண்டும் வந்தான்.

“அப்படியாருமில்லைமா, இன்னும் சந்திக்கல”

“அட நான் அம்மாவுக்கோ, அக்கா தங்கச்சிக்கோ…” முடிப்பதற்குள் “எல்லாம் ஊர்ல இருக்காங்க”

“சரி, சாமிக்காச்சும் வாங்கி சுத்துங்களேன்”

“எனக்கு நம்பிக்கை இல்லை.  அதுவும் இல்லாம் இதுக்காக தேடி கோவிலுக்கு எல்லாம் போக முடியாது”. சாரி செல்வி.

தன் பெயரை கூப்பிட்டதும் சுரேன் மீது பாசம் பொங்கியது.  இதற்கு முன்னர் சந்தித்தது இல்லை பார்த்ததில்லை, பேசியதில்லை ஆனாலும் சுரேனுக்கு இவளிடம் பல வருடம் பேசிய, உறவாடிய சிநேகம் போல இருந்தது.

ஏய் சனியனை.  இங்க என்ன கதையடிச்சிட்டு இருக்க”.  எங்கிருந்து அவள் அத்தை வந்தாளென தெரியவில்லை.  சுரேன் உடலை சற்று திருப்பி டி-ஷட்டுகளை பார்த்தான், செல்வியை நோட்டம் விட்டே.

“அத்தே! இன்னிக்கு வீட்டுக்கு சீக்கிரம் போகணும். எழுத நிறைய இருக்கு.  பாடம் படிக்கணும்”.

“கழுதை, உன்னை பள்ளிக்கூடம் அனுப்பறதே, படாத பாடு படறேன்.  படிச்சு என்னத்த கிழிக்க போறியோ.  சரிசரி, இந்த கூடையில இருக்க பூவ வித்திட்டு ஊட்டுக்கு போ!  தம்பிக்கு காய்ச்சலடிக்குது நம்ம நாய்க்கர் கிட்ட காசு வாங்கியார்ரேன்.  காசு தரானோ இல்லையோ அந்த புண்ணியவான்”.

செல்வியை திட்டினாளா, பாசம் வைத்திருக்கிறாளா, சோகத்தை கொட்டினாளா, என்று குழம்பிபடியே சுரேன் அருகிலேயே நின்றிருந்தான்.

“ செல்வி, இங்க குளோபஸ் கடை எங்கிருங்கு”-சுரேன்.

குளோபஸ் எதிரே இருந்த டீக்கடையில் குடித்துக்கொண்டிருந்தான் சுரேன்.  சில நிமிடத்தில் செல்வி ஓடிவந்து டீக்கடைக்குள் ஓடினாள்.  தன் சட்டைக்குள் மறைத்து வைத்த புத்தகம் எடுத்து டீக்கடை முருகையனிடம் கொடுத்தாள்.  “மாமா, இதை மகேஷ் கிட்ட கொடுத்திருங்க, அவன் தமிழ் புக் கொடுத்தானா? நிறைய படிக்கணும் மாமா?”

“அந்த பையில் இருக்கு பாரு புள்ள”.  எடுத்துக்கொண்டு மீண்டும் ஓடினார் கடைவீதிக்கு.

“ரொம்ப சுறுசுறுப்பான பொண்ணு இல்ல”

“யாரு செல்வியையா சொல்றீங்களா?  அதுக்குள்ள தெரிஞ்சிடுச்ச அவள பத்தி”.

“மகேஷ், உங்க பையனா? ஒன்னா பாடிக்கறாங்களா செல்வியும் அவனும்? மாமான்னு கூப்பிடுதே சொந்தமா?”-அடுக்காய் கேள்விகள்.

என் புள்ள தான் மகேஷ்.  செல்வியும் அவனும் அஞ்சாங்கிலாஸ் படிக்கிறாங்க வேற வேற ஸ்கூல்.  இந்த கடையில தான் கிலாஸ் கழுவுவிட்டு இருந்தான் மகேஷ் போன வருஷம் வரைக்கும்.  இந்த பொண்ணு தான் என் கிட்ட சண்டை போட்டு அவனை ஸ்கூலுக்கு அனுப்ப சொன்னா.  படிச்சி என்  கஷ்டமெல்லாம் தீர்ப்பான்.

செல்வி எனக்கு சொந்தமில்லை தம்பி.  வயித்து சாப்பாட்டுக்கு திண்டாட்ற எல்லாரும் ஒரு இனம்.  சொந்தக்காரங்க தான்.  வந்தவர்களை கவனித்துக்கொண்டே செல்வியின் கதையினை சொன்னார் முருகையன்.

“அப்பன் குடிகாரன்.  ஒரு நாள் ரோட்டோரமா செத்துக் கிடந்தான்.  அவ அம்மாவுக்கும் என்ன நோயோ தெரியல பட்டுன்னு ஒரு மாசத்துக்கப்புறம் பின்னாடியே போய் சேர்ந்துட்டா.  அவ அப்பனோட தங்கச்சி மூக்காயி கிட்ட தான் வளருது செல்வி.  முக்காயி புருஷனும் எங்க போனான்னு தெரியல யாருக்கும்.  பூக்கடை வெச்சி பொழப்பு ஓடுது.  செல்வி, முக்காயி, அவன் பையன் முனு பேரு இருக்காங்க.  படிச்சே தீருவேன்னு ஒத்த கால்ல நின்னு பள்ளிக்கூடம் போகுது.  பள்ளிக்கூடம் விட்டதும் இங்க வந்து வியாபாரத்துக்கு ஒத்தாசையா இருக்கு.  லீவு நாள்ளையும் இங்க தான்.  பத்து வயசு தான் ஆகுது ஆனா படாதபாடு படுது.  மாமா, நான் படிச்சு டாக்டராவேன்னு சொல்லும், கேக்க நல்லா தான் இருக்கும். ஆனா இந்த பொண்ணு மனசு வெச்சா சாதிச்சிடும். ராவுல அவுங்க ஊட்ல கரண்ட் இல்ல, மகேசும் அவளும் எங்க குடிசையில தான் படிப்பாங்க”

சுரேன் கண்கள் குளமாயிருந்தது. தன்னை பற்றி யோசித்த் பார்த்தான். அப்பாவிடம் கல்லூரி செல்ல வண்டி வேண்டும், இல்லையெனில் போகவே மாட்டேன் என மிரட்டிய நாட்கள், தனி அறை வேண்டும் படிப்பதற்கு என்று முரண்டு பிடித்து மொட்டை மாடியில் அப்பா கடன் வாங்கி அறை கட்டிய நாட்கள், சுட்ட தோசை சரியில்லையென காசு வாங்கி ஓட்டலுக்கு சென்ற தினங்கள், இன்னும் என்னென்னமோ எண்ணங்கள் தன்னையும் செல்வியின் நிலையினையும் ஒப்பிட்டு பார்த்துக்கொண்டான். ஒப்பிடுதல் பல நேரங்களில் சரியில்லை தான். ஆயினும் சில நேரம் நம்மையும் தாண்டி ஒப்பிட செய்வதே மனித இயல்பு. வெட்கமாய் இருந்தது அவனுக்கு. மனது ஏதோ செய்தது. குமட்டலாகவும், தொண்டை வரண்டது போன்றும் இருந்தது.

சற்று நேரத்திற்கெல்லாம் பாலாஜி வந்து சேர்ந்தான். டீயும் ஒரு சிகிரெட்டும் வாங்கினான். பற்ற வைத்தான்.

“என்னடா இது புதுசா? “

“சாமியார் இன்னும் மாறலையா? தேர்டு இயர் போயிட்ட இன்னும் தம்மு கூட இல்லையா? என்னாடா வாழ்கை வாழற..”

அது கிண்டலும் கேலியுமாக. தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தாலும் சுரேனின் மனம் செல்வியை விட்டு விலகவில்லை.

“என்னடா ஒரு மாதிரி இருக்க மாமா..வீட்ல ஏதாச்சும் பிரச்சனையா?”

“கையில எவ்வளவு காசிருக்குடா?”

“நான் ஒன்னு கேட்டா நீ ஒன்னு கேக்குற. ஏன் திடீர்னு? ரெண்டு நூறு ரூபா நோட்டு இருக்கு..”

சட்டைபையில் கைவிட்டு தாள்களை எடுத்தான். கடைவீதிக்குள் சென்று செல்வியை தேடிப்பிடித்தான். பார்த்ததும் புன்னகை பூத்தாள். இத்தனை பூகம்பத்திற்குள்ளும் என்ன சாந்தம். படித்துவிட்டோம் என்ற கர்வம் தலையில் இருந்து வேகமாக இறங்கியது. படிக்க வேண்டிய நிறைய இருக்கும் மனிதர்களிடம் இருந்து.

“செல்வி, எல்லா பூவையும் என் கிட்ட தா..”

“என்னண்ணே கோவில் கண்டுபுடிச்சிட்டீங்களா?”

அவளிடம் இரு நூறு ரூபாய் கொடுத்துவிட்டு ‘சில்லரை எல்லாம் வேணாம் செல்வி, மீதிய நீயே வெச்சுக்க, நோட்டோ படிப்பு செலவுக்கோ வெச்சிக்க. நல்லா படி. என்னால இப்போதைக்கு இது தான் முடிச்சது. உனக்கும் புரியுதான்னு தெரியல செல்வி, எங்கயோ போயிட்டு இருந்தவனை ஓங்கி அடிச்சி நீ போகவேண்டிய இது இல்லைன்னு உன் புன்னகை சொல்லிச்சு. என்ன செய்ய போறேன்னு இப்போதைக்கு சொல்ல முடியல, ஆனா நிச்சயம் செய்வேன். திரும்ப நான் இங்க வந்தா உன்னை பெரிய ஆளா பாக்கனும் செல்வி..”

அந்த சின்ன பெண் தன் கண்ணீரை பார்ப்பது முறையல்ல என்று வெட்கப்பட்டு, அவள் முகம் பாராமல் திரும்பி நடந்தான் டீக்கடைக்கு.

சுரேன் பாலாஜியிடம் “அக்காகிட்ட பூவை கொடுடா..”

“இவ்வளவா? எதுக்குடா? லூசாடா நீ?”

செல்வி அத்தையிடம் “ அத்தை, இந்தாங்க தம்பி மருந்து செலவுக்கு காசு “

– விழியன்

Advertisements
7 Comments leave one →
 1. ஷாஜ் permalink
  October 29, 2009 5:54 pm

  மிக இயல்பான கதை

 2. yoga,fr. permalink
  October 29, 2009 5:54 pm

  theivam kuzhanthai vadivil varum enru therinthu thaan sonnarkazh.

 3. October 29, 2009 10:44 pm

  அருமையாக வந்திருக்கிறது.

  \\அப்பாவிடம் கல்லூரி செல்ல வண்டி வேண்டும், இல்லையெனில் போகவே மாட்டேன் என மிரட்டிய நாட்கள், தனி அறை வேண்டும் படிப்பதற்கு என்று முரண்டு பிடித்து மொட்டை மாடியில் அப்பா கடன் வாங்கி அறை கட்டிய நாட்கள், சுட்ட தோசை சரியில்லையென காசு வாங்கி ஓட்டலுக்கு சென்ற தினங்கள், இன்னும் என்னென்னமோ எண்ணங்கள் தன்னையும் செல்வியின் நிலையினையும் ஒப்பிட்டு பார்த்துக்கொண்டான்\\

  ம்ம்ம்..உண்மை தான்…இப்படி பட்டியல் நிறைய உண்டு எனக்கும்

  மிக நெகிழ்ச்சியான கதை 😉

 4. மீனா permalink
  October 30, 2009 3:10 am

  என்ன உமா உன் பிறந்த நாள் அன்று இப்படி கண் கலங்க வைத்துவிட்டாயே..

  உமாவிற்(செல்வி)க்கு என் வாழ்த்துகள்!

 5. Manickam permalink
  October 30, 2009 3:52 am

  !!!! Even i have traveled many times towards PANDI pazaar…!!! I have never imagined such a different view…!!! Good UMA…!!!

  You know 6 months before, the same SUREN’s situation had happened to me also… to meet a Flower selling Girl at VADAPALANI murugan Temple…!!! !!!

  Well done…!!! Kadhaiyalla Nijam nu edhu thaanao…!!! (Of course some of the thing can’t be accepted in the story – Our SELVI’s over matured activity….!!!)

 6. October 30, 2009 8:38 am

  Arumaiyaana kadhai.. Yedhaartham ethuka kashtama irukku.. but I hope someday this girl will really shine.. Yeah, i dont believe that this character is from a fiction story.. It took me back to Pondy bazaar right away and somehow I am able to believe every word in this story.
  Well done!!!

 7. Aravindhan A permalink
  December 1, 2012 8:01 am

  Very touching.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: