Skip to content

தி.நகரில் நலிவடையும் பொக்கிஷக்கடல்

December 21, 2009

தியாகராய நகர் செல்வதென்றாலே கொஞ்சம் எரிச்சல் தான். அந்த வெயிலும், எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமும் கொஞ்சம் எரிச்சலுற செய்தாலும், அங்கே கிடைக்கும் சமோசாவிற்காகவும், கரும்பு பானத்திற்காகவும் தலையசைத்து கிளம்பிவிடுவேன். சென்ற சனிக்கிழமை பொங்கலுக்கு புத்தாடை எடுக்கலாம் வாங்க என வீட்டில் எல்லோரும் கிளம்பினோம். எல்லோரையும் சென்னை சில்க்ஸில் தள்ளிவிட்டு நடை கட்டினேன்.

எதிர் புறத்தில் பாரதி பதிப்பகம் என்று இருந்தது. என் முதல் புத்தகத்தை அச்சடித்தது பாரதி புத்தகலாயத்தில், அதுவா என்கின்ற சந்தேகம். அது வேறு இது வேறு என்பது அருகே சென்றபோது தெரிந்தது. புத்தகம் ஏதேனும் கிடைக்குமாவென பார்த்தால், கடை மூடி இருந்தது. இரண்டு கடைகள் தள்ளி ஒரு பழைய புத்தக கடை. பல முறை இதே சாலையில் கடந்து சென்றுள்ள போதும் இந்த கடை கண்ணில் சிக்கியது கிடையாது. பழைய புத்தகங்களை உள்ளடக்கிய நூலகம்.

ஐய்யப்ப மாலை போட்ட ஒரு பெரியவர் அங்கும் இங்கும் புத்தகங்களை அடுக்கிக்கொண்டு பரபரப்பாக இருந்தார். புத்தகம் வாடகைக்கு கிடைக்குமா என்ற சந்தேகம் இருந்தது. எதை நம்பி புத்தகம் கொடுப்பார்? சின்ன வயதில் பள்ளிக்கு பக்கத்தில் ஜீ.கே லைப்ரரி என்று ஒரு நூலகம் இருக்கும். நண்பன் ஒருத்தன் மட்டும் அதில் உறுப்பினர், நாங்க எல்லோரும் புத்தகம் எடுத்துக்கொள்வோம். “ஐயா, புத்தகம் வாடகைக்கு தருவீங்களா?” என்று கேட்டேன். “வாடகைக்கு என்ன சார், விலைக்கே எடுத்துக்கோங்க..” என்று உள்ளே வரவேற்றார். நுழைந்தவுடன் சேதன் பகத்தில் சில புத்தகங்கள் தரையில் இருந்தது. மேலும் சில சமீபத்திய வார/மாத இதழ்கள் இருந்தது.

ஏன் சார் ஏன் புத்தகங்களை விக்கறீங்க..

எவன் சார் படிக்கிறான் இந்த காலத்தில. படிக்கிற பழக்கமே போயிடுச்சு. எவ்வளவு அருமையான புத்தகங்கள் எல்லாம் வருது வந்திருக்கு, அதெல்லாம் இப்ப இருக்கறவங்க படிக்க்கறதே இல்லை.”

அவர் பாட்டுக்கு தன் வேலையில் மூழ்கினார். என்னைப்போல எத்தனைபேரை பார்க்கின்றாரோ தெரியவில்லை. உள்ளே பழைய புத்தக வாசம் சுண்டி இழுத்தது. புகழ் பெற்ற எழுத்தாளர்களின் நூல்கள். கல்லூரி முடித்த காலத்தில் புவனபாரதி என்றொரு நூலகம் எங்கள் பள்ளிக்கு முன்பாக இருந்தது. அதன் நூலகர் என் வகுப்பு தோழியின் தந்தை. என்ன வகையான வாசகர் இவர் என புரிந்து வைத்து, சரியாக புத்தகம் எடுத்து தருவார் பரிந்துரைப்பார். அதே சமயம் மெல்ல மெல்ல தீவிர வாசகராக மாற்றி விடுவார். அவர் எனக்கு பரிந்துரைத்த ஆசிரியர்களின் பெயர்களை கண்டவுடன் கொஞ்சம் பரவசம் அடைந்தேன். ஆனாலும் அவர்களை நான் அனுகியதே இல்லை.

குழந்தைகள் புத்தகத்தில் முதலில் துவங்கினேன். அம்மா சொன்ன கதைகளில் ஆரம்பித்து, சாச்சா செளதிரி, நடு இரவு திகில் கதைகள்,காகமும் அன்னமும், என்று தலைப்பிட்ட புத்தகங்களை சேகரித்தேன். அள்ள அள்ள ஆனந்தம் தான் போங்க. வரிசையாக டிங்கிள் புத்தகங்கள். பல காமிக்ஸ்கள். மாயாவி கதைகளை ஏராளமாக சின்ன வயதில் படித்துள்ளேன். சில நாட்களாகவே அந்த புத்தகங்கள் மீண்டும் வாசிக்க கிடைக்குமா என ஏங்கிய தருணத்தில் இங்காவது கிடைக்குமா என கிண்டி பார்த்தேன், தோண்டிப் பார்த்தேன். கிடைக்கவில்லை. (நண்பர்கள் யாரித்தேனும் இருந்தால் தெரிவிக்கவும். படிச்சிட்டு கண்டிப்பா திருப்பி கொடுத்திடறேன்).

வாசலில் மூன்று கல்லூரி பெண்கள். “வாங்கம்மா என்ன புத்தகம் வேணும்…” “ஹாரி பாட்டர் இருக்கா..” ” எந்த பகுதி..”..”ரெண்டா மூனாடி..??” “ரெண்டு…” நமுட்டு சிரிப்புடன் மீண்டும் தேடலின் அமர்ந்தேன். ஆமாம் கீழே உக்காந்துகிட்டேன். நீண்ட நேரம் நிற்கவோ குனியவோ முடியவில்லை. இப்போது தமிழ் நாவல்கள் பக்கம். நிறைய கசடுகள் இருந்தாலும் சில மாணிக்கங்களும் தென்பட்டன. பல புத்தகங்கள் 1959, 1964, 1976, 1960 என்று அச்சிடப்பட்டு இருந்தது. ஆனந்த விகடன், குமுதம், கலைமகள் போன்ற இதழ்களில் வெளிவந்த கட்டுரைகள், கதைகள், நாவல்கள் போன்றவற்றை நல்ல பைண்டிங் செய்து வைத்திருக்கின்றார். ஆர்வமும், அலாதி இன்பமும் இல்லாமல் இது போன்ற காரியங்களை வெறும் வியாபாரத்திற்காக செய்ய இயலாது. கா.நா.சு வின் நாவல் கிடைத்தது. இலக்கிய சிந்தனையின் சிறுகதை தொகுப்புகள் சில கிடைத்தது. லியோ டால்ஸ்டாயின் புத்தகமும் சேர்ந்தது. பிரபஞ்சனின் ஒரு நாவல், இரா. முருகனின் நாவல் ஒன்றும், பாக்கியம் ராமசாமியின் நாவல் ஒன்றும் சிக்கியது (வாங்கிக்கொண்டு வந்ததும் அப்பா அந்த புத்தகத்தை வைத்து ரசித்து ரசித்து படித்தது மகிழ்வாக இருந்தது. “ரொம்ப நல்லா எழுதுவார்..” என்றார் )

அலைபேசி அழைப்பு வந்த போது தான் நான் தங்கமணிக்கு ஒரு புது அலைபேசி வாங்க தான் கடையைவிட்டு எஸ் ஆனது நினைவிற்கு வந்தது. புத்தகம் எல்லாம் எடுத்து வைத்து எவ்வளவு என்றேன். கேட்ட விலையினை கொடுத்துவிட்டேன். பக்கத்து கடைகளில் என்ன விலை போட்டாலும் மறுப்பேதும் சொல்லாமல் பல்லிளித்து வாங்குவதை விட இது எவ்வளவோ மேல். அதுவும் கண்ணெதிரே புத்தகங்களை கட்டி காத்த ஒரு பெரியவருக்கு உதவினோம் என்கின்ற ஒரு திருப்தி.

“42 வருஷமா கடை வேச்சி இருக்கேன். எதிரில இருக்காரே தங்க கடை மொதலாளி, சின்னப்பயனா தெரியும் என் கடையில தான் தினமும் படிப்பாரு, இப்ப பணத்தில மெதக்குறாரு. கண்ணதாசன், வாலி, எல்லோரும் நம்ம கடைக்கு வந்து புத்தகம் எடுத்துட்டு போவாங்க. ரொம்ப பேமஸான நூலகம். ஈஸ்வரி புக் ஹவுஸ் தெரியுமா? அவரோட தம்பி தான் நான். டைம்ஸ் ஆப் இண்டியா, (இன்னும் இரண்டு இதழ்கள்) அதிலெல்லாம் என்னோட கடை வந்திருக்கு. பேட்டி எல்லாம் எடுத்திருக்காங்க. இப்ப யாரும் படிக்கறதே இல்லை. ஏதோ பொழப்பு ஓடுது”

“ரசமான புத்தகம், பொக்கிஷங்களை எல்லாம் வைச்சிருக்கீங்க..”

“என்னத்தை வெச்சி என்ன செய்ய.. இன்னும் மேல செல்லரிச்சு நிறைய புத்தகம் இருக்கு. எடைக்கு போடும் போது தான் ரொம்ப கஷ்டமா இருக்கும்…”

அவருக்கு துக்கம் தொண்டையை அடைத்ததோ இல்லையோ எனக்கு அடைத்தது. பொக்கிஷங்களை எடைக்கு போடும் அவலத்திற்கு சென்றுவிட்டோம்.

இலக்கியத்தில் புரல்வதாலோ என்னவோ அவர் பேசிய வார்த்தைகள் அனைத்து உள்ளே சென்றுவிட்டன. ஒரு இலக்கிய கதாபாத்திரத்திற்கான அனைத்து அடையாளமும் அவரிடம் இருந்தது. வாடிக்கையாளர் ஒவ்வொருவரையும் கையாளும் விதம் நேர்த்தி.

“நானும் எழுதறேன். குழந்தைகளுக்கு…” என்ற போது, வாழ்த்தி நல்லா எழுதுங்க நிறைய எழுதுங்க என்றார் கை குலுக்கி, மகிழ்வுடன், கள்ளமில்லா புன்னகையுடன், பரந்த மனதுடன்.

உங்களிடம் ஒரு விண்ணப்பம் தான்.
1. சென்னையில் இருப்பவர்கள் சமயம் கிடைக்கும் போது இந்த கடைக்கு சென்று புத்தகங்களை அள்ளிச் செல்லுங்கள். (முடிஞ்சா என்னையும் கூப்பிடுங்க..நேரம் இருந்தா வரேன்)
2. வெளியூர் நண்பர்கள், உங்களுக்கு தேவையான பழைய புத்தகங்களை இவருக்கு தொடர்பு கொண்டு, புத்தகம் இருக்கும் பட்சத்தில் நானே வாங்கி அனுப்ப முயற்சிக்கிறேன்.

ரவிராஜ்
அலைபேசி எண் 91763-12489
Raviraj Lending Library
Old No 63, New no 45, Usman Road
T.Nagar
Chennai – 17
(சென்னை சில்க்ஸில் இருந்து இரண்டாவது அல்லது மூன்றாவது கட்டிடம்)

– விழியன்

(பின் குறிப்பு : புத்தக வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. வாழ்த்திய அனைவருக்கும், வந்திருந்த அனைத்து நெஞ்சங்களுக்கும் நன்றி நன்றி நன்றி !!!)

Advertisements
10 Comments leave one →
 1. கதிரவன் permalink
  December 21, 2009 8:58 pm

  அறிமுகத்துக்கு நன்றி விழியன்.

 2. Rathakrishnan permalink
  December 22, 2009 5:27 am

  Thanks for bringing such valuable information. In my childhood I used to walk 15 mnts to reach Library. I used to spend most of the time in the Library during Exam holidays. Thanks for giving me an opportunity to recall my old days. Yes, thats true that reading habits has been not there or reduced. Please let me know if there are any historical novels like Kalki.

 3. top10shares permalink
  December 22, 2009 3:10 pm

  தகவலுக்கு மிக்க நன்றி…

  அடுத்த வாரம் சென்னை வரும் சமயம் அவசியம் நேரில் சென்று அதிக புத்தகங்களை வாங்குவது என்று முடிவு செய்துள்ளேன்.

 4. December 22, 2009 4:24 pm

  அன்பின் விழியன்,
  80-90 களில் நான் ரவிராஜ் நூலகத்தின் உறுப்பினன். அப்போதெல்லாம் எப்போவும் கூட்டமாக இருக்கும். உங்க பதிவை படிச்சதும் மனசு கனத்துப் போச்சு. 2 ஃப்ளோர்ல இருந்தது அப்போது, இப்போ எப்படின்னு தெரியல..
  அடுத்த முறை இந்தியா போகும் போது கண்டிப்பா போறேன்
  என்றும அன்புடன்
  பாஸ்டன் ஸ்ரீராம்

 5. December 22, 2009 6:44 pm

  thanks for sharing, I too visit that shop .

  Even I too have reduced my reading habits (reading the printed book).

 6. December 23, 2009 3:44 am

  தகவலுக்கு நன்றி விழியன். கண்டிப்பாக செல்கிறேன்..

 7. Vivek permalink
  December 23, 2009 4:18 am

  Thanks for the Info.. And also for reminding bhuvanabharathi where i started reaading ..padikiroma illayo ..its hard to digest when hearing that valuable books are getting unnoticed forever..

 8. February 22, 2010 10:59 am

  நானும் தி நகர் போகும் போதெல்லாம் இந்த நூலகத்திற்கு மறக்காமல் சென்று விடுவேன், நான் வெகு நாட்கள் தேடிகொண்டிருந்த புத்தங்கங்கள் அங்கே தான் கிடைத்தன, அற்புதமான இடம் அது……. மனதிற்கு நெருக்கமான பதிவு இது, சிறுவர்களுக்காக புத்தகம் எழுதுகிறீர்கள் என்று அறிய ஆவல் அதிகம் ஏற்படுகிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: