Skip to content

மேட்டூர் பயண நினைவுகள் – 1

September 15, 2010

மேட்டூர் பயண நினைவுகள்

“கூட படித்தவனா?” “கூட வேலை பார்த்தவனா?” இல்லை. அப்புறம் யார் கல்யாணத்துக்கு இத்தனை மல்லுகட்டி போகின்றாய் என்ற கேள்விகளுக்கு “நட்பு” என்ற உறவினை பற்றி எப்படி விளக்கி சொல்ல? நரேஷ்-நந்தா இருவரும் இணையத்தில் கிடைத்த அற்புதமான நட்புகள். நரேஷின் திருமணத்திற்கு தான் மேட்டூர் பயணித்தோம். நான், மனைவி, குழலி என்று தான் திட்டம் இருந்தது. போகும் முன்னர் தங்கையும் வருகின்றேன் என்றாள். மேட்டூர் பேருந்து நிலையத்தில் காலை 4.00 மணிக்கு நின்றுகொண்டிருந்தோம். மார்கெட்டில் கூட்டம் வழிந்தது. பழம், காய் என வியாபாரம் சூடாக நடந்துகொண்டிருந்தது. மாப்பிள்ளை வீடு கொளத்தூரில். எங்களை அழைத்து செல்ல ஒரு மாருதி ஆம்னியை அனுப்பி இருந்தார் நந்தா.

நண்பர்களிடம் மேட்டூர் அருகே எங்கே செல்வது என கேட்ட போது மேட்டூர் அணைக்கு செல்லுங்கள் என்றனர். பின்னர் தாராமங்கலம் போகலாம் என்றார்கள். இரண்டு நாட்களில் இவை இரண்டை மட்டும் பார்த்தால் போதும் என்று இருந்தது. டீ சாப்பிட வழியில் வண்டியை நிறுத்தினோம். அங்கே மாதேஸ்வர மலை 50 கி.மீ என திசைகாட்டி இருந்தது. வண்டி ஓட்டியவரிடம் அது என்ன மலை என விசாரித்தவுடனே, திட்டங்கள் மாறியது. காலை பத்துமணிக்கு வெளியே கிளம்பலாம் என இருந்த திட்டம் காலை 7 மணி என மாறியது. கொளத்தூரை அடைத்து வேகமாக கிளம்பி இண்டிகாவில் மாதேஸ்வர மலையினை நோக்கி கிளம்பினோம்.

வழியில் காவேரிபுரத்தில் சுவையான சிற்றுண்டி. நிறைய சிற்றுண்டிகளில் பூரி மற்றும் பொங்கல் கிடைக்கவே இல்லை. தூத்துக்குடி பகுதியிலும் பரோட்டாக்கள் நிறைய கிடைத்தன, இங்கும் அப்படியே. 80 ரூபாய்க்கு வயிறு நிறைய சுவையான டிபன். பசுமையான பச்சை புல்வெளிகள். மஞ்சள் மற்றும் வாழை தோட்டங்கள்.முதலில் பாலாறு என்று இடத்தை அடைந்தோம். அங்கிருந்து தமிழகம் முடிந்து கர்நாடகா நுழைந்தோம். கிராமம் எதுவும் தென்படவில்லை. பாதை அருமையாக இருந்தது. வழியின் வண்டி நிறுத்தி தூரத்தில் மணல் திருட்டு நடக்கின்றது பாருங்க என்றார். சின்ன படகில் (ஓடத்தில்) சென்று மணலை வாரி ஓடத்தில் போட்டுக்கொள்கின்றனர். பின்னர் அதனை பெரிய வண்டியில் ஏற்றி சென்றுவிடுகின்றார்கள். இங்கே இருக்கும் பலருக்கு இது தான் தொழிலாம். மலை ஏறுவது என்றாலும் குளிர் அடிக்கவில்லை. வானம் மூடிக்கொண்டு இருந்தபடியால் வெயிலின் தாக்கம் தெரியவில்லை.

பெங்களூரில் இருந்து வந்த பிறகு கன்னட எழுத்துக்களை பார்க்கவே முடியவில்லை..மலே மதேஸ்வர மலையில் மீண்டும் காணக்கிடைத்தது. பல வராலாற்று கதைகளை சொன்னார்கள். சிவன் தரிசனம் அற்புதமாக கிடைத்தது. கோவிலுக்குள் எங்கு செல்வது எப்படி வருவது என தெரியவில்லை. கோவிலில் கட்டமைப்பு வித்யாசமாக இருந்தது. சுவர்களில் கதைகள் வரைந்து வைத்திருந்தார்கள். சிவன் லிங்க வடிவில் இல்லாமல், உருவ வடிவில் இருந்தது. மலைகளுக்குள் நடுவே ரம்மியமாக இருந்தது கோவில்.

வரும் வழியில் மலைப்பாதையில் வண்டி நிறுத்தினோம். வெயில் மெல்ல மெல்ல அதன் தாக்கத்தை காட்டிக்கொண்டிருந்தது.புகைப்படங்கள் சில எடுத்துக்கொண்டோம். உண்மையில் மலைகளில் பயணிக்கும் போது இது போன்ற நிறுத்தங்கள் தான் மகிழ்ச்சி தருபவையாக இருந்தது. குழலி துள்ளி விளையாடினாள். தூரத்து பச்சை மலைகளை காட்டி “மலை” “மலை” என சொல்ல சொன்னேன். ம்கும்..”மலி” மலி என்று தான் சொன்னாள். பின்புறம் இருந்த பச்சை மலை புகைப்படங்களுக்கு நல்ல பிண்ணனியாக அமைந்து இருந்தது. சின்ன லிங்க கோவில் இருந்தது. ஆள் நடமாட்டமே இல்லை. பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை ஏதோ ஒரு வண்டி கடக்கும். தூரத்தில் தென்பட்ட கிணறு கிறுகிறுக்க வைத்தது. ஆனால் போய்விடலாம், திரும்பி வர வேண்டுமே என்ற அச்சம் மேட்டூருக்கு எங்களை செல்ல சொன்னது.

மேட்டூர் பூங்காவில் வண்டி நின்றது. புகைப்படம் எடுக்க தடா 😦 பூங்காவை மேம்படுத்திக்கொண்டிருந்தார்கள். அங்கும் இங்கும் கொத்தி வைத்திருந்தார்கள். புதிய உருவ பொம்மைகள் வைத்திருக்கின்றார்கள். குழலி கிளியை பார்த்து என்ன என்று கேட்டது காக்கா என்றாள். பறவைகள் அனைத்து தற்போதைக்கு காக்கா தானாம். பூங்காவின் ஒரு பகுதியில் பெரிய பெரிய பாத்திரங்களில் உணவிட்டு கொண்டிருந்தார்கள். ரோட்டோர ஹோட்டல் போலவா என எண்ணினோம். மணி 1 என்றதால் பசி வேறு லேசாக கடித்தது. கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள், ஜொய்யென பறந்த வந்த ஜோடி புறக்கள் என சிறுவர் பகுதியில் நிறைய நடமாட்டம். சருக்காமரம், ஊஞ்சல் என எங்கும் மக்கள்.

அங்கே ஒரு ரிஷி சிலை இருந்தது. கையில் கமண்டலத்துடன் அமர்ந்திருந்தார். வித்யா தான் அங்க பாருங்க, ஷூட் பண்ணுங்க என்றாள். ஒரு சிறுவன், ரிஷியிடன் பேசிக்கொண்டிருந்தான். தோளில் கைபோட்டு..”என்ன?
அப்படி மொறைக்குற…அட…பிச்சுபுடுவேன்..பேசுன்னு சொன்னா பேசனும்…” என ரிஷியை மிரட்டுக்கொண்டிருந்தான். அவனை விட சின்ன பையன் குறிக்கிட்டு..என்ன பிரச்சனையா என்றான்.. 🙂

ஊஞ்சலில் கொஞ்ச நேரம் விளையாடியபின், அங்கிருந்த சில விலங்குகளை பார்த்தபின் பூங்காவிட்டு வெளியேறிமோம். பூங்காவை ஒட்டியபடியே ஐய்யனார் கோவில் ஒன்றும் இருந்தது. பசி அதிகரித்துவிட்டதால் கிளம்பிவிட்டோம். சரவணா பவனின் மதிய உணவு முடித்தோம். மேட்டூரில் ஓரளவு நல்ல ஹோட்டல் என்றால் சரவணா பவன் , ஓட்டல் கிருஷ்ணா தான்.

அடுத்து தாரமங்கலத்திற்கு பயணம். இரவும் பயணத்தின் போது சரியான உறக்கம் இல்லை. லேசாக கண் அயர்ந்துவிட்டேன். விழித்தால் ஏதோ கேரளாவில் இருப்பது போல இருந்தது.

(தொடரும்)

Advertisements
One Comment leave one →
 1. G.SUNDARAM permalink
  September 16, 2010 7:23 am

  En naban ela.alagiri eluthu pol ullathu…

  Innum eluthungal..

  Anbudan
  G.Sundaram

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: