Skip to content

தொடர் ஓட்டம்

January 11, 2011

ஒரு மாதத்தின் அனுபவங்கள்

சுமார் ஒரு மாத காலத்திற்கு தொடர் நிகழ்வுகள். சுவாரஸ்யமான நிகழ்வுகளும் கூட. வாழ்வின் மீதும் அதன் கொண்டாட்டம் மீது நம்பிக்கை ஆழமாகியுள்ளது. எல்லா நிகழ்வையும் பதியவேண்டும் என எண்ணம் இருந்தாலும் தொடர் ஓட்டத்தில் பதியப்படாமலே போய்விடும் போல.

பெங்களூர் பயணம்:
திருமணம் முடிந்து முதல் ஆறு மாதம் பெங்களூர் வாசம். சென்னை வந்த இந்த இரண்டு வருடத்தில்  திரும்ப பெங்களூர் சென்று பழைய நினைவுகளை, நண்பர்களை ,ஹோட்டல்களை ரசித்திட வேண்டும் என எத்தனையோ முறை முயன்றும் எதுவும் நடந்தபாடில்லை. தொடர்ச்சியாக திட்டங்கள் தோல்வியை தழுவின. கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் மூவரும் பெங்களூர் பயணித்தோம். மனதிற்கு நெருங்கிய நண்பன் வீட்டில் தங்குதல், மெல்லிய காற்று, பெங்களூர் வாசனை, “டோட்டல்” சுற்றல், “Forum” சந்திப்புகள், நண்பர்களின் இல்லம் செல்லுதல், அலுவக நண்பர்களை சந்தித்தல், பழைய அலுவகம் சென்று பழைய பழகிய முகங்கள் பார்த்தல், ஐந்து வருடம் காலை உணவு உண்ட விடுதியில் சாம்பார் இட்லி உண்ணுதல், ஹோட்டல் கிருஷ்ணாவில் இரவு உணவு, கே ஆர் மார்கெட்டில் ஒரு போட்டோ ஷூட், சளி, சுரம், குளிர், சோர்வு என கலவையாக இருந்தது. கல்லூரி நண்பர்கள் சந்திப்பு ரொம்பவும் நெகிழ்வாக இருந்தது. அவர்கள் என் சொத்து என அடிக்கடி மனைவியிடம் சொல்லுவதுண்டு. எங்கள் பிள்ளைகளும் நண்பர்களாகவேண்டும் என்ற நப்பாசையும் உண்டு.

வேடந்தாங்கல்:
பெங்களூரில் இருந்து திரும்பி வந்த வாரம் வேடந்தாங்கல் பயணித்தோம். அப்பா, அம்மா, தங்கை , குழலி, மனைவி, அக்காக்களின் மகன்கள் என பட்டாளமே கிளம்பினோம். பதிமூன்று ஆண்டுகள் கழித்து என் பள்ளி தோழியும் அவள் கணவனு(மோகன்)டன் வந்திருந்தாள். உதயன், ரத்ன ப்ரபா மற்றும் பிரசன்னா. பள்ளி நாட்களில் ஒரு முறையும் கல்லூரி நாட்களில் ஒரு முறையும் அங்கு சென்றதாக நினைவு. ஆனால் அந்த பயணங்கள் இத்தனை நிறைவை கொடுத்ததாய் நினைவில் இல்லை. அத்தனை பறவைகளை கண் வழியாகவும் கேமரா வழியாகவும் பார்த்தது பெரும் பரவசத்தை கொடுத்தது. இப்போதெல்லாம் பறவைகள் மிகவும் நெருக்கமாகிவிட்டது.

முன்னை போலவே அது என்னிடம் இருந்தாலும் ஒரு நெருக்கத்தை உணர்கின்றேன். கொண்டு சென்ற கேமரா லென்சுகள் போதவில்லை. மிக அருகில் சென்று படம் பிடிக்கவும் முடியவில்லை. ஆனால் பறவைகளின் செய்கைகள் உள்ளுற  ஏதோ உணர்வை தூண்டியது. ஒரே இடத்தில் ஆயிரக்கனக்காண பறவைகள் மனதை கவ்வியது. ஒரு கிளையில் அத்தனை பறவைகளை ஒன்றாக பார்த்தது அதுவே முதல் முறை. இரண்டு பறவைகள் வேறு வேறு திசையில் நின்றபடி ஊடல் செய்தது கவிதை. மனதிற்கு இனியவர்களுடன் ஒரு காலைப்பொழுது. அப்படியே அங்கிருந்து வண்டலூர் உயிரியல் பூங்கா. மனம் உற்சாகமாக இருந்தலும் உடல் சோர்ந்து இருந்தது. பார்த்த மிருகங்களில் மிகவும் கவர்ந்தது ஒட்டகசிவிங்கி.

 

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு:
டிசம்பர் 27-31 வரை நடந்தது மாநாடு. அந்த ஞாயிற்று கிழமையில் இருந்தே ஆயுத்த பணிகள் துவங்கின. நாங்கள் மாநாடு நடக்கும் போது தினமும் வெளிவரும் “NewsLetter” குழுவில் செயல்பட்டோம். இந்தியா முழுவதிலும் இருந்தும் 650 மாணவர்கள். அவர்களுடன் ஆசிரியர்கள். வேறு வேறு கலாச்சாரம், மொழி. அபாரமான திறமை. அபாரமான முயற்சிகள். அவர்களிடம் இருந்த உற்சாகம் நம்மையும் தொற்றிக்கொள்ளும். அவர்களின் ஆர்வம் நம்மை திரும்பி பார்க்க வைக்கும். இந்தியாவின் ஆகச்சிறந்த விஞ்ஞானிகளை சந்திக்கும் பாக்கியமும் கிடைத்தது. அண்ணாதுரை மிக எளிமையாக உரையாடினார். யாஷ்பாலின் பேச்சு ஒவ்வொன்றும் பொக்கிஷம். எளிமையான விளக்கங்கள் ரசமானவை. நியூஸ் லெட்டர் தயாரிக்கும் வேலை சுவாரஸ்யமாக இருந்தது. மினி பத்திரிக்கை உலகம். அகல் பதிப்பகத்தின் பஷீர் தான் வடிவமைப்பாளர். அவருடன் அருந்திய தேநீர்கள் நினைவில் என்றும் நிற்கும். புதிய குழு. ஏகப்பட்ட உரையாடல்கள். சின்ன சின்ன சண்டைகள். ஒரு இயக்கத்தின் தேக்கம், குறைபாடுகள். நிறைய பேட்டிகள். நிறைய பாடங்கள். விஞ்ஞானிகளிடம் மாணவர்கள் சில கேட்ட கேள்விகளை ஆராய்ச்சியாகவே செய்யலாம். அயல் தேசத்து விஞ்ஞானி ஒருவர் குறிப்பிடுகையில் “நான் 30 வருடமாக கெனடா முழுக்க பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு வகுப்பு எடுத்திருக்கின்றேன், ஆனால் இன்று என் வகுப்பில் இருந்த 30 மாணவர்களின் உற்சாகம், ஆர்வம் ஆச்சரியமானது” என குறிப்பிட்டார். நாளைய இந்தியாவின் மீது நம்பிக்கை அதிகரிக்க வைக்கும் தளங்கள் இது போன்ற மாநாடுகள்.

புத்தக வெளியீடுகள் / கண்காட்சிகள்:
மார்கழி – தை இப்போதெல்லாம் வாசகர்களுக்கு கொண்டாட்டமான தருணங்கள். தொடர் புத்தக வெளியீடுகள், பாராட்டு விழாக்கள், இலக்கிய நிகழ்வுகள். ஒரே நாளில் மூன்று நிகழ்வுகள் என அடர்த்தியாக உள்ளது. “அசையும் படம்” என்ற நூல் வெளியீட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஒளிப்பதிவு பற்றி தமிழில் வெளிவரும் தரமான நூல் (முன்னவே ஒளிப்பதிவு என்றால் என்ன?” என்ற தலைப்பில் புத்தகம் பார்த்துள்ளேன்..கண்காட்சியில் )தலைவர் பாலு மகேந்திரா அழகாக பேசினார். அவரின் விவரிப்புகளே அந்த காட்சிகளை நம் கண்முன் நிறுத்தியது. நிறைய பேர் பேசினாலும் என்னை கவர்ந்தது நூல் ஆசிரியர் ராஜ்குமாரின் ஏற்புரை. அவர் இந்த புத்தகம் கொண்டுவருவதில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை கூறினார். அதில் அவர் முக்கியமாக அறிந்தது “அன்பினை”. தழுதழுக்கும் குரலில் தன் மாமியார் பற்றி குறிப்பிடும் போது என் தொண்டையும் தழுதழுத்தது உண்மையே. “ஆயிஷா” படத்தை அவர் தான் ஒளிப்பதிவு செய்துள்ளார். டைரக்டர் சிவக்குமார் இந்த படத்தை பற்றி நிறைய குறிப்பிட்டுள்ளார். (ஆயிஷா அனைவரும் நிச்சயம் படிக்க வேண்டிய குறுநாவல்).

நாஞ்சில் நாடன் சாகித்திய அகேடமி விருது பெற்றதற்கு விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் நடத்திய விழாவில் ஓரமாக இருந்து ரசிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. ஆஹா. நிறைய தெரிந்த முகங்கள். இசைக்கவி ரமணனின் அருகில் அமர்ந்து நிகழ்வை ரசித்தேன். கண்மனி குணசேகரின் பேச்சு “க்ளாஸ்”. ஏற்கனவே ஊட்டி சந்திப்பில் நாஞ்சில் நாடனுடம் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. அந்நாட்களில் நான் மலைகளில் நடக்கவில்லை, பறந்துகொண்டிருந்தேன். ஒரு மாலைப்பொழுதில் இந்தப்பக்கம் கவிஞர் தேவதேவன் இந்தப்பக்கம் நாஞ்சில் நாடன். கை பிடித்து வழிநடத்துவதாகவே உணர்ந்தேன். எழுத்துக்கள் பற்றி எந்த பேச்சும் எழுவில்லை, வாழ்வை எதிர் நோக்கும் விதங்கள் பற்றி நிறைய பேசினார்கள். நினைவுகள் விழாவிலும் அந்த சந்திப்பு பற்றியும் மாறி மாறி சுற்றியது. என் அப்பாவுக்கு பரிசு கிடைத்தது போன்ற ஒரு நிறைவு.

இதோ புத்தக கண்காட்சி. துவங்கியது கொண்டாட்டம். (இது தனி பதிவுப்பா )

தொடர்ச்சியான  நிகழ்ச்சிகள், நெகிழ்ச்சிகள். தொடர்ச்சியான உற்சாகம். நிறைய ஆர்வத்தையும் உந்துதலையும் ஏற்படுத்தி இருக்கின்றது. தொடர்ச்சியாக ஓட இது அவசியம் என்றே தோன்றுகின்றது. 2011 சிறப்பாக துவங்கி இருக்கின்றது. மெல்ல காத்திருந்து காலத்தின் அற்புதங்களை ரசிக்க ஆவலாய் உள்ளேன்.

– விழியன்

Advertisements
9 Comments leave one →
 1. ரமணன் permalink
  January 11, 2011 1:03 pm

  ஒரு நேர்மையான நாட்குறிப்பு போல் இருக்கிறது. தொடர்ந்து எழுது. தினந்தினம் எழுது. தீயும் தேனுமாய் எழுது. மனதைக் கவிழ்த்து எழுது. கனவைக் கலந்தே எழுது. ஊரைக் கண்டு எழுது. உன்னைக் காணவே எழுது.

  உன்னைக் கண்டபின் என்ன எழுதுவாய்? காத்திருக்கிறேன்!

  அன்புடன்,

  ரமணன்

  • January 12, 2011 6:15 am

   நிச்சயம் எழுதுகிறேன் அண்ணா. நானும் காத்திருக்கிறேன் :)0

 2. January 11, 2011 2:17 pm

  புதிய ஆண்டில் மிகவும் புத்துணர்ச்சியுடன் கூடிய பதிவு.

  • January 12, 2011 6:15 am

   உங்கள் தொடர் உற்சாகத்திற்கு நன்றி அண்ணலே.

 3. January 11, 2011 2:53 pm

  மாரத்தான் தொடங்கியாச்சு போலே இருக்கு 🙂 நிறுத்தாதீங்க…
  புத்தக கண்காட்சி பற்றியும் அந்த அனுபவங்களையும் கொஞ்சம் பகிர்ந்து கொள்ளுங்க…

 4. January 11, 2011 5:57 pm

  வாழ்த்துக்க்கள் விழியன்.

  கலக்குங்க..

 5. G.Sundaram permalink
  January 12, 2011 9:26 am

  Hi Vizhiyan,

  Wish you a happy newyear 2011…

  You always to share openminded, it’s reflect your your attitude..

  Keep on write..we always welcome to read…

  Anbudan,
  Sundaram.g

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: