Skip to content

அப்படி இப்படி – மே 2012

May 31, 2012

வெயில்நதி வெளியிடு விழா

அத்தனை அம்சமான பயணங்கள் வெகு அரிதாகவே நிகழும். நான், நிலா, கணேசகுமரன் வேல்கண்ணன் செஞ்சியை நோக்கி பயணத்தை துவங்கினோம். கணேசகுமரனை நிலா அவரின் சிறுகதை தொகுப்பின் மூலம் அறிமுகம் செய்துவைத்திருந்தான். வேல்கண்ணனை சாருவின் நிகழ்வில் சந்தித்திருந்தேன். தேநீருடன் துவங்கியது. ஏராளமான பேச்சுக்கள், பல புதிய புதிய செய்திகள் எனக்கு. எப்படியோ பேசிக்கொண்டே நெடுஞ்சாலையில் இருந்து செஞ்சிக்கு செல்லும் சாலையை விட்டுவிட்டு, சமாளித்து சுமார் 20 கி.மீ சுற்றி வந்தோம். நிலா கேமரா பிடிக்க ஆரம்பித்திருந்ததால் கண்டதையெல்லாம் சுட்டுக்கொண்டே வந்தான். வண்டி ஓட்டிக்கொண்டே கிளிக்கவும் செய்தான். ஸப்பா முடியல.. வெகுவிரைவில் கவிக்கண்ணுடன் சிறந்த புகைப்பட கலைஞனாகவும் உலா வருவான்.

செஞ்சியை அடைந்ததும் சுரேஷ் எங்களை வரவேற்றார். அவரின் வரவேற்பிலேயே எத்தனை உற்சாகமாக இருந்தார் என்பது தெரிந்தது. தன்னையும் மீறி கை தட்டி இன்பத்தை வெளிப்படுத்தினார். இப்படி ஒருவர் என்றால் அன்பின் பிழம்பாக காட்சி தந்தார் கவிஞர் கண்டராதித்தன். சுமார் 3-4 மாதங்கள் அலைபேசியிலும் முகப்புத்தகத்திலும் பேசி வருகின்றோம், முதல் முறையாக நேரில் பார்த்ததும் கட்டியணைத்து முத்தமிட்டு அன்பினை வெளிப்படுத்தினார். இம்மாதிரியான உறவுகளை காலம் கொடுத்துக்கொண்டே / தக்கவைத்துக்கொண்டே இருந்தாலே வாழ்வு இனித்துவிடும்.

வெயிலின் தாக்கம் வெகு அதிகமாக இருந்தபடியால் அன்றைய தினம் முழுக்க கருப்பு வெள்ளையில் கிளிக்கினேன். ரசமான அனுபவமாக இருந்தது. 2 மணி நேரம் கிளிக்கி இருப்போம். விரைவில் 3 நாட்கள் குறைந்தது வர வேண்டும் என தோன்றியது. மதியம் சூடான பிரியாணி. பின்னர் வெயில்நதி சிற்றிதழ் வெளியீட்டு விழாவிற்கு சென்றோம். சுரேஷ் கொண்டு வந்திருக்கும் சிற்றிதழ். நல்ல முயற்சி. நிகழ்ச்சி நடக்கும்போதே யுவன் சந்திரசேகரின் கதையினை வாசித்து முடித்திருந்தேன். எட்வின் சிற்றிதழ் கொண்டுவரும் சிரமங்களை பற்றி பேசினார். சீக்கிரம் ஊர் திரும்பவேண்டும் என 4 மணிக்கு கிளம்பிவிட்டோம். வீட்டிற்கு நடந்து செல்லும் போது பல புதிய உறவுகளை பெற்ற திருப்தியுடன் வேகமாக நடந்தேன்.

வாழ்த்துக்கள் சுரேஷ்.

இரவும் போட்டோஷாப் பயிலரங்கம்
ஒரு இரவு திட்டமிட்டபடி நடப்பது அரிதான ஒன்று. இல்லாளும் குட்டியும் விடுமுறைக்கு ஊர் சென்றிருந்ததால் இரவு பயிலரங்கம் ஒன்று வீட்டில் ஏற்பாடாகி இருந்தது. ஜகதீஷ் தலைமையில் நான், நந்தா, ப்ரவீன், உதயன் & வில்லன் கூடி இருந்தோம். போட்டோஷாப் பயிலரங்கம். புகைப்படத்தினை எப்படி அழகாக்கலாம் என்பதின் ஆரம்ப பாடங்களை ஜகதீஷ் விளக்கினான். அதே தொழிலாக வைத்திருக்கும் நந்தாவுன் உதயனும் இடையிடையே சேர்ந்துகொண்டனர். காசியில் எடுத்த ஒரு இருட்டு புகைப்படத்தை கொண்டு மெல்ல மெல்ல மிக அழகாக மாற்றி காண்பித்தான் ஜகதீஷ். நிறைய இருக்கு குமாரு.. ஆனா பொறுமையும் நேரமும் ரொம்ப தேவை. (ஜேசன் பிச்சர்ஸ்)

பயிலரங்கம் முடித்ததும் நானும் ப்ரவீனும் அடுத்த புத்தகத்திற்கான ஓவியங்களை பற்றி பேசினோம். வெகு இலகுவாக இரண்டு ஓவியங்களை நான் நினைத்தது மாதிரியே வரைந்தும் கொடுத்தான். மிச்ச மீதியையும் அண்ணன் கொடுத்துட்டாருன்னா அடுத்த புத்தகத்தையும் ரெடி செய்திடலாம். காத்து கெடக்கேன் ராசா.

ஆத்ம நண்பன் சந்திப்பு:

பால்ய நண்பனிடன் பல வருடம் பேசாமல் இருந்து, அவன் குரல் கேட்காமல் இருந்து, மீண்டும் அவனை நேரில் சந்தித்தால் அது தரும் இன்பம் அலாதியானது. மனீஷ் என் பால்ய நண்பன். என் இள வயது ஹீரொ. அத்லெட். பணி காரணமாக சிங்கப்பூர் சென்று, பின்னர் அங்கிருந்து ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்தான். அவன் திருமணத்தின் போது சில வார்த்தைகள் பேசிக்கொண்டோம். சுமார் 7 வருடம் கழித்து அவன் குரலினை நேரில் கேட்டேன். உடலினை இன்னும் திடமாக வைத்திருந்தான். காதோரம் நரை தட்டியிருந்தது. அவன் அப்பாவை போலவே உருமாறியிருந்தான். தன் அப்பாவின் முதல்வருட திதிக்கு ஆஸ்திரேலியாவில் இருந்து வந்திருந்தான். ரொம்ப சந்தோஷம் ரொம்ப சந்தோஷம் என அடிக்கடி குறிப்பிட்டான். அவன் என்னுடனே  இந்தியாவில் இருந்திருந்தால் இன்னும் சந்தோஷமாக இருந்திருப்பேன் என தோன்றியது. மனிதிற்கு இனியவர்கள் உடன் இருப்பது சுகம் தானே.

 

 

செம்பரம்பாக்கம் ஏரி
செம்பரம்பாக்கம் ஏரி செல்வது அது ஐந்து அல்லது ஆறாவது முறை என நினைக்கிறேன். நிலா, நான், வித்யா மற்றும் அக்கா மகன் பரத். “தமிழகம் எங்கும் போகலாம் மச்சி நம்ம காரிலே” என நிலா சொன்னவுடன் கிடைத்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கலையை பிடித்துவிட்டால் அது நம்மை பைத்தியமாக்கிவிடும். எந்த கலை வேண்டுமானாலும் இருக்கட்டும். ரம்மியமான காலை. நிறைய புகைப்படங்கள் சிக்கவில்லை என்றாலும் இனிமையாக இருந்தது. புகைப்படங்கள் பற்றியே பெரும்பாலான பேச்சுக்கள் அமைந்தது. செம்பரம்பாக்கம் சென்ற இரண்டு நாள் முன்னர் 361 டிகிரி சிற்றிதழிற்கு சுஜாதா விருதினை பெற்றிருந்தான் நிலா. வாழ்த்துக்கள் டா. அந்த நிகழ்ச்சி பற்றியும் பேசிக்கொண்டு இருந்தோம். விரைவில் அடுத்தடுத்த ஊருக்கு திட்டம்போட்டு நண்பனின் கோரிக்கையை நிறைவேற்றவேண்டும். ஜூன் 15-17 இராமேஷ்வரம் & தனுஷ்கோடி பயணிக்கிறோம்.

 

இந்த மாதத்தின் ஒரே வருத்தம் ஜெமோவின் ஊட்டி முகாமை தவறவிட்டமை தான் 😦

குழலி ஸ்பெஷல்

மேடம் சுமார் இரண்டு வாரங்கள் விடுமுறைக்கு ஊர் சென்றிருந்தாள். காக்காய் போல வீதிகளில் சுற்றிக்கொண்டிருந்தாளாம். இன்னும் 3 நாட்களில் பள்ளி ஆரம்பிக்கின்றது. எதோ எனக்கு பள்ளி ஆரம்பிப்பது போல ஒரு ஆர்வம். புதிய ஆடைகள், புத்தகங்கள், ஷூ, பெல்ட், பைகள். புத்தகங்களுக்கு அட்டை. அவளும் உற்சாகமாக தான் இருக்கின்றாள். பள்ளியை அவளை என்ன பாடுபடுத்துவாள் என பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

இன்று காலை மனைவிக்கு தொண்டை கட்டிக்கொண்டு பேசமுடியவில்லை. சைகை மூலமே பேசிக்கொண்டிருந்தாள். எல்லாவற்றையும் கவனித்த குழலி

“நேத்து கூட நல்லாதானமா பேசனிங்க..” என சொன்னாளாம் 🙂

– விழியன்

புத்தக வெளியிட்டிற்கு வரவும் (நினைவூட்டல்)

Advertisements
3 Comments leave one →
 1. May 31, 2012 6:35 am

  அப்பப்ப இப்படி எழுதி என் ஆசையை தூண்டிவிட்டுகிட்டே இருக்கே!… என்னிக்கி தான் நானும் உங்கக்கூட சுத்தப் போறேனோ தெரியலெ!

 2. June 1, 2012 1:30 pm

  வாழ்த்துகள்.

 3. June 3, 2012 6:54 am

  மேடம் சுமார் இரண்டு வாரங்கள் விடுமுறைக்கு ஊர் சென்றிருந்தாள். காக்காய் போல வீதிகளில் சுற்றிக்கொண்டிருந்தாளாம். //

  ஹாஹா, குழலிக்கு ஜாலி தான்! பள்ளிக்கு இப்போத் தான் முதலிலே போகப் போறா இல்ல?? ப்ளே ஸ்கூல் போனாளா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: