Skip to content

ஆட்டிசம் பற்றி அறிந்துகொள்வோம்

June 8, 2013
tags:

ஆட்டிசம் பற்றி அறிந்துகொள்வோம் – விழியன்

(நன்றி : துளிர் மே மாதம் 2013 – சிறுவர்களுக்கான அறிவியல் மாத இதழ்)

உங்க வீட்டு அருகாமையிலோ அல்லது வழியிலோ சில சிறுவர்கள் அசாதரணமாக நடந்துகொள்வதை பார்த்ததுண்டா? மனவளர்ச்சி இல்லாத குழந்தைகள் என நீங்கள் நினைத்தவர்களில் பெரும்பாலானோர் ஆட்டிசம் என்னும் குறைபாடு உடையவர்களாக இருப்பார்கள். ஆட்டிசம் என்பது ஒரு குறைபாடு. அவ்வகையான குழந்தைகள் எதன்மீது கவனமில்லாமல் இருப்பார்கள், தானாக சிரித்துக்கொள்வார்கள், எவரிடத்திலும் எளிதாக ஒட்டமாட்டார்கள், தனியாகவே இருப்பார்கள், சுழலும் பொருட்கள் மீது ஆர்வமாக இருப்பார்கள். இவை ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குகான அடையாளங்கள். இவை அனைத்தும் ஒரே குழந்தையிடம் இல்லாமலும் போகலாம். முன் எப்போதைக்காட்டிலும் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகின்றது, அதே சமயம் இந்த குறைபாடிற்கான காரணம் என்ன என்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதத்தை ஆட்டிச விழிப்புணர்வு மாதமாகவும் ஏப்ரல் இரண்டை ஆட்டிச நாளாகவும் கடைபிடிக்கின்றனர்.

ஆட்டிசம் கண்டுபிடிக்கப்பட்டது எப்போது?

ஆட்டிசம் என்பதை தமிழில் தன்முனைப்பு குறைபாடு என்கின்றார்கள். ஆட்டிசம் பற்றிய முதல் ஆய்வு அறிக்கையை 1943ல் டாக்டர் லியோ கானீர் என்பவர் நெர்வஸ் சைல்ட் என்ற அறிக்கையில் அறிமுகம் செய்தார். அதன் கருத்துக்கள் பெருமளவிற்கு மறுக்கப்பட்டுவிட்டாலும் அதுவே முதல் அறிமுகம். அங்கிருந்து அவர் ஆய்வுகளில் முன்னேற்றம் கண்டு தற்சமயம் ஆட்டிசத்தில் சில உட்பிரிவுகளையும் கண்டறிந்து உள்ளனர்.

ஆட்டிசம் பற்றி தவறாக நிலவும் கருத்துக்கள்

ஆட்டிசம் பற்றி தெளிவான கருத்துக்கள் இருக்கின்றதோ இல்லையோ, ஆனால் பல தவறான கருத்துக்கள் நிலவிவருகின்றது அவற்றில் சில – ஆட்டிசம் என்பது உணர்வுகளின் குறைபாடு, ஆட்டிசமும் மனச்சிதைவும் ஒன்று, ஆட்டிசம் குழந்தை பவருத்தில் மட்டும் இருக்கும், பெரியவர்களானவுடன் மறைந்துவிடும், கொடுமையானவர்கள், யாரிடமும் அன்பாக இருக்கமாட்டார்கள், ஆட்டிச குழந்தைகள் அனைவரும் புத்தி கூர்மையுள்ளவர்கள், ஆட்டிச குழந்தைகள் பேசவே மாட்டார்கள், ஆட்டிச குழந்தைகள் அனைவரும் ஒன்று போலவே இருப்பார்கள், போன்றவை

ஆட்டிசம் குறைபாடு இருப்பவர்களுக்கு என்ன நிகழ்கின்றது?

புலன் சார்ந்த உணர்வுகளை அனுபவிப்பதில் மற்றவர்களிடமிருந்து இக்குழந்தைகள் வேறுபட்டு இருப்பர்கள். புலன் சார்ந்த தூண்டல்களுக்கு இவர்கள் அளவுக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உணர்ச்சிகளை வெளிக்காட்டுவார்கள். ஒரு சிலருக்கு ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட புலன்கள் குறைவாகவோ (ஹைபோ) அதிகமாகவோ(ஹைபர்) தூண்டப்படும். சுற்றுப்புறச் சூழலில் உள்ள புலன் சார்ந்த விடயங்கள் ஒரு சிலரைக் கடுமையாகப் பாதிகும். சிலருக்கு அது மிகவும் வேதனை அளிப்பதாகவும் இருக்கும். இது எல்லா புலன் சார்ந்த தூண்டலுக்கும் பொருந்தும். ஆனால் அவர்களுக்கு ஒலி, ஒளி, சுவை, மணம் மற்றும் தொடு உணர்வுகள் சராசரியை விட அதிகமாகவோ குறைவாகவோ செயல்படும். ஆகையால்தான் அவர்களில் பலர் மாற்றமில்லா ஒரேவகையான நடைமுறையை விரும்புகின்றனர்.

எப்படி சரிபடுத்துவது?

ஆட்டிசத்தை சரி செய்ய முடியாது. முன்னேற்றம் காண வைக்கலாம். அவர்களுக்கு என்று பிரத்தியேக பயிற்சிகள் உண்டு. அவர்களுக்கு என்று உணவு முறைகள் உண்டு. ஒவ்வொரு குழந்தைக்கு ஒவ்வொரு பயிற்சி முறை. எந்த பயிற்சி என்பதை பெற்றோர்கள் தான் தீர்மானிக்க முடியும்.

ஆட்டிச சாதனையாளர்கள்:

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உலகின் கவனத்தை தன்பக்கம் இழுத்துள்ளார்கள். இவர்களைப்பற்றி வாசித்தாலே பெரும் உற்சாகம் நமக்கு கிடைத்துவிடும். ஸ்டீபன் வில்ட்ஷையர் என்பவர் ஏரியல்வியூவில் பார்க்கும் ஒரு நகரத்தை 15 நிமிடத்தில் ஓவியமாக வரைவார் . டெம்பிள் கிராண்டின் என்பவர் கொலராடோ பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறை பேராசிரியராகவும் அதே சமயம் எழுத்தாளராகவும் இருக்கின்றார். அமெரிக்காவில் இந்திய பெற்றோர்களுக்கு பிறந்த கிருஷ்ணன் நாராயணன் ஒரு எழுத்தாளராக இருக்கின்றார். டார்வின், ஹிட்லர்,  தாமஸ் ஜெஃபர்சன், மைக்கல் ஏஞ்சலோ, சீனிவாச ராமானுஜன்,  ஜார்ஜ் ஆர்வெல் போன்றோர்களும் ஆட்டிசம் குழந்தைகளாக இருந்திருப்பார்கள் என யூகிக்கின்றனர்.

பெரும்பாலான ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், மனநலம் குன்றியவர்கள் என அடையாளப்படுத்தி விடுகின்றனர். இன்னும் பெற்றோர்களுக்கும் மருத்துவர்களுக்கும் பரவலான விழிப்புணர்வு இதைப்பற்றி கிடையாது. கிராமப்புறத்தில் இதன் விழிப்புணர்வு மிக மிக குறைவு. இந்த மாதிரியான அடையாளங்களுடன் இருக்கும் குழந்தைகளை நீங்கள் உங்கள் பகுதியில் அல்லது அருகாமையில் பார்த்தீர்கள் என்றால், அந்த பெற்றோர்கள் இது ஆட்டிச குறைபாடு என்பதை கண்டுகொண்டு விட்டார்களா என்பதை உறுதி செய்யுங்கள். அதுவே ஆட்டிச குழந்தைகளுக்கு நாம் செய்யும் பெரும் பங்களிப்பாக இருக்கும்.

Image

சிறுவர்களாக நீங்கள் என்ன செய்யலாம்?

* ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பட்டாசு வெடித்தால் தன்னிலை மறந்து வெறி வந்தவர்கள் போல நடந்துகொள்வார்கள். உங்கள் அருகாமையில் அந்த குழந்தைகள் இருந்தால் தூரமாக சென்று பட்டாசுகை வெடிக்கலாம் (வெடிக்காமல் இருந்தால் இன்னும் நலம்), வேறு யாரேனும் வெடித்தாலும் அவர்களிடம் இந்த பிரச்சனையை விவரிக்கலாம்.

* அந்த குழந்தைகளுக்கு அளவுகடந்த அன்பும் அரவணைப்பும் அவசியம். பெற்றோர்களிடம் இருந்து மட்டுமில்லாமல் உங்களைப்போன்ற சிறுவர்களிடம் இருந்து கிடைத்தால் அவர்கள் வெகு எளிதாக முன்னேற்றம் காண்பார்கள்.

* நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர்களிடம் விளையாடுங்கள், அவர்கள் பெற்றோர்களிடம் முன்னமே என்னென்ன செய்யலாம் செய்யக்கூடாது என கேட்டறிந்து அதன்படி விளையாட்டு காட்டலாம்.

* ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிறைய அன்பு உண்டு, ஆனால் அவற்றை செய்கை மூலமும் வார்த்தைகள் மூலமும்வெளிப்படுத்த தெரியாது, ஆகையால் பொறுமையாக பழகுங்கள், அவர்கள் அன்பு நிச்சயம் புரியும்.

சரி.. இக்குழந்தைகளை எப்படி அடையாளம் கண்டுபிடிப்பது என்று கேட்கிறீர்களா?

சில எளிய முறைகள் இருக்கு.

இவங்க கண்ணோடு கண்பார்த்து பேசமாட்டாங்க.

எப்பவும் தனித்தே இருக்க விரும்புவாங்க.

பேச்சு சரியா வராது, தங்களுக்கு தேவையானதை உணர்த்த மற்றவங்க கையைப் பிடிச்சி அழைச்சிட்டுப் போவாங்க.

சுத்துற பொருட்கள் மீது இவங்களுக்கு ரொம்ப ஆர்வம். அதனால.. எது கிடைச்சாலும் சுத்திவிட்டுப் பார்ப்பாங்க. இப்படி இன்னும் நிறைய வழிகள் இருக்கு.

ஆட்டிசம் பற்றி எளிய தமிழில் அறிந்துகொள்ள ஆட்டிசம் – சில புரிதல்கள்புத்தகத்தை வாசிக்கவும். எழுதியவர் எஸ்.பாலபாரதி, பாரதி புத்தகாலயம். விலை. ரூ. 50/-

Advertisements
5 Comments leave one →
 1. June 8, 2013 6:59 am

  உலகில் எந்தக் குழந்தைக்கும் இந்தக் குறைபாடு இல்லாமல் பிறக்க அருள் புரியுமாறு எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். பிறந்த அனைத்துக் குழந்தைகளும் நலமுடன் இருக்கவும் பிரார்த்தனைகள்.

 2. Sashidharan V permalink
  June 8, 2013 4:33 pm

  அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய , மிக அவசியமான விஷயம் இது. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி விழியன்.

 3. meenal.n permalink
  June 30, 2013 12:57 pm

  very informative

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: