Skip to content

சற்றே பெரிய காதுகள் – குழந்தை வளர்ப்பு கட்டுரை

September 20, 2013

‘தி இந்து’ ஆன்லனனில் வெளிவந்த குழந்ததை வளர்ப்பு கட்டடுரை.

சற்றே பெரிய காதுகள் !!

குழந்தைகளின் உலகம் எப்படிப்பட்டது என நாமாக ஒன்றினை விவரிக்கலாம் அல்லது கற்பனை செய்துகொள்ளலாம். ஆனால் அதில் நித்தமும் வாழ்வது சாத்தியமல்ல அதனைக் கடந்து வந்த நாம் நிச்சயம் அதனை மிச்சம் மீதியின்றி மறந்திருப்போம். குழந்தைகளின் செயல்களின் வார்த்தைகளின் விவரிப்புகள் கொண்டு அது இப்படி இருக்கலாம் என யூகம் மட்டுமே செய்யலாம். ஆனாலும் அவர்களின் உலகத்தை பெற்றோராகிய நாம் அணுக வேண்டும். ஒவ்வொரு பெற்றோருக்கும் அந்தத் தேவை அதிகரித்து உள்ளது, முன் எப்போதும் இல்லாதது அளவிற்கு. மாறி வரும் சமூகச் சூழலும், புதிய தொழில்நுட்பமும், அவசர வாழ்வும், கலாச்சார மாற்றங்களும் குழந்தைகளை இன்னும் அக்கறையுடன் அணுக நம்மை நகர்த்துகின்றது.

குழலியின் பள்ளி வாழ்கை எப்படி இருக்கும் எனப் பல சமயம் யோசனை செய்தும், பயந்ததும் உண்டு. குழந்தைகள் தான் மீண்டும் மீண்டும் தாங்கள் வளர்ந்துவிட்டதை உணர்த்துகின்றார்கள். சிறுதுளி கண்ணீர் இல்லாமலே பள்ளியினை உள்வாங்கிக்கொண்டாள். அவளது உலகில் அது ஒரு அறை, ஒரு நாடு, ஒரு ஊர். பள்ளிவிட்டு வந்த முதல் நாள் மாலை ஆரம்பித்த அவளுடைய விவரிப்புகள் அந்த ஆண்டின் கடைசி நாள் வரை முடியவே இல்லை.

அவளின் கற்பனை உலக நண்பர்கள் அனைவரும் எங்களுக்கு அத்துப்படி. அவளது நிஜ உலக நண்பர்களின் ஒவ்வொரு பெயராக ஏதோ ஒரு சம்பவத்தின் ஊடே அறிமுகம் செய்வாள். சில்வா பானு மஞ்ச பூ வெச்சு இருந்தா, மணிகண்டன் காலில் அடி, ரோஷன் ஸ்கூலுக்கு வரல, வசந்த கிருஷ்ணன் வீடு மாறிட்டான்/ வகுப்புகளுக்கு இடையேயும், உணவு இடைவேளைகளின் பொழுதும், காலை வேளையும், பயண வேளைகளும் தான் வகுப்புகளில் கற்காத பாடங்களையும் அனுபவங்களையும் உறவுகளைப் பற்றியும் அவர்களுக்கு சொல்லித்தருகின்றது.

எங்க வீட்டில் குழலி பேச ஆரம்பித்த உடனே நாங்கள் (நான், மனைவி, அப்பா, அம்மா) சற்றே பெரிய காதுகளை வளர்க்க ஆரம்பித்தோம். நிதானமாகக் குழந்தை சொல்வதை மாறி மாறி கேட்போம். கேட்பதோடு அல்லாமல் அதனைக் கவிதையான தருணங்களாக்கி இரசிக்கவும் செய்தோம். குழந்தைகளுக்கு அதிக நேரம் அவர்களின் பிரச்சனைகளை, பயங்களை, தவறுகளை நம்மிடம மறைக்க முடியாது, தெரியவும் தெரியாது. அவர்களின் சொற்களின் வழியே அவை வழிந்தபடியே இருக்கின்றன. நாம் தான் அவற்றை அடையாளம் கண்டு கொண்டு நிவர்த்திச் செய்ய வேண்டும்.

நாளின் மிகச் சிறப்பான தருணங்களாக நான் உணர்ந்தது மகளை வண்டியின் டேங்கில் அமர்த்திப் பள்ளிக்குச் செல்லும்போது நிகழ்த்தும் உரையாடல்களைத்தான். அவளின் பள்ளி நண்பர்களிடம் செலவிடும் சில விநாடிகளில் அந்நாளிற்கான உற்சாக பானமாய் அமைந்துவிடும். விநோதமாக, வண்டியில் செல்லும் போது குழலியின் கவனமும் கேட்கும் திறனும், கதை வளமும் அதிகமாக இருந்தது. பள்ளியில் சேரும் முன்னரே அவளுக்குச் சொல்லிக்கொடுத்த பாடல்கள் அனைத்தும் இந்த டேங்கரில் அமர்ந்த படியே.

குழலியின் நண்பர்களுக்குள் என்னையும் இணைக்கத் துவங்கினேன். பள்ளி வேனில் வரும் குழந்தைகள் வகுப்பிற்குக் கொஞ்சம் முன்னரே வந்துவிடுவார்கள். தினமும் அவர்களுடன் பத்து நிமிடம் தான் செலவு செய்வேன். அன்றைக்குத் தேவையான சக்தியினையும் உற்சாகத்தையும் ஊட்டிவிடுவார்கள். வெறும் களத்தினையும் உரையாடலுக்கான ஆரம்பத்தினை மட்டுமே அவர்களுக்கு நான் தருவேன், அதுவும் சில நேரத்தில் தான்.

ஊருக்கு போன கதை, போகப்போகிற கதை, அவள் லீவு, அவனுக்கு முட்டியில அடி, குர்ஷாத்துக்கு உடம்பு சரியில்லை, எங்க சித்தி தான் என்னை ஸ்கூட்டர்ல விட்டாங்க, எங்க அப்பா யாரு தெரியுமா?, எனக்கு தம்பி பாப்பா பொறந்திருக்கே, எனக்கு கைல அடி, நான் ஹோம்வொர்க் செய்யல, நான் ஏரோப்ளைன் பார்த்தேன், நானும், நான் கூட, மிஸ் என்னை குட் பாய் சொன்னாங்க, என் பொம்மை உடைஞ்சிடுச்சு, உங்க வீட்டுக்கு வரேன், குழலிக்குச் சாக்லெட் கொடுத்தேன், நான் லட்டு சாப்பிட்டேன், எனக்கு வயித்து வலி…இவ்வாறாகக் கதைகள் நீளும் சுவாரஸ்யமாக.

இங்கே இவர்களுடன் நான் பகிர்ந்ததெல்லாம் ஒரு கைநீட்டலும் காது நீட்டலும் தான். அவர்கள் பேசுவதைப் பொறுமையாகக் கேட்டேன். தினமும் இருந்த உரையாடல் தொடர்ந்தது. அப்போது கவனித்த விஷயம் இவர்களின் சின்னச் சின்னச் சந்தோஷங்கள் காது கொடுத்து கேட்கப்படுவதே இல்லை. நமக்குச் சின்ன விஷயமாக இருக்கலாம், ஆனால் அவர்களின் குதூகலத்திற்கு அதுவே வித்தாக இருக்கும். பள்ளியில் ஆசிரியர்கள் பேச விடப்போவதில்லை, எத்தனை மாணவர்களுக்குத் தான் அவர்கள் காது கொடுப்பது ? முடிந்த அளவிற்கு அவர்களும் தர தான் வேண்டும். அடுத்தது பெற்றோர்கள். இவர்களுக்கு இந்த முழுப் பொறுப்பும் இருக்கின்றது. அவர்கள் கூறுவதைத் கவனமாக கேளுங்கள், அவர்கள் கேட்கும் கேள்விகளைக் காது கொடுத்துக் கேளுங்க, கேள்விகளை நசுக்கிவிட வேண்டாம். கேள்விக்கு பல சமயம் பதில் தெரியாமல் போகலாம், அல்லது கேள்விகேட்கும்போது நமக்கு உடல்சோர்வு, வேலை பளு இப்படி இருக்கலாம், ஆனால் கேள்விகேட்கும் அவர்கள் ஆர்வத்தை நசுக்கிவிட வேண்டாம்.

குழந்தைகளின் உலகினை முழுமையாகப் புரிந்துகொள்ளப் பெரிய காதுகள் அவசியமாகின்றது. அதன் மூலமே அவர்களின் சொல் வளமும் நமக்குத் தெரியும். அவர்களின் கதை சொல்லும் திறன் நமக்கு விளங்கும். அவர்கள் நம்மிடம் விரும்புவது எதைவிடவும் நம் காதுகளைத்தான்.

பள்ளியின் கடைசி நாள். குழலியை வகுப்பில் விட்டு அவளுடைய நண்பர்களுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு வெளியே வந்தேன். கொஞ்சம் சோர்வாககூட இருந்தது கடைசி நாள், இனி கொஞ்ச காலத்திற்கு எல்லோரையும் பார்க்க முடியாது என்று. தூரத்தில் குழலியின் வகுப்பு தோழி மிகச்சோர்வுடன் மெல்ல அவள் தாயுடன் நடந்து வந்தாள். இந்த வயதில் என்ன வாட்டம் என்று தெரியவில்லை. சில முறை அவளுடன் பேசி இருக்கேன். எனக்குக் கை கொடுப்பதில் அவ்வளவு ப்ரியம் அவளுக்கு. தூரத்தில் என்னைப் பார்த்ததும் முகம் மலர்ந்து ஓடி வந்தாள். கை கொடுத்தாள். ‘குழலி எனக்கு நேத்து ஒரு நூல் கொடுத்தா’ ( துணியில் இருக்கும் நூல். அது இவர்களுக்குள் ஒரு விளையாட்டு) ‘லீவுக்கு நான் நாளைக்கு ஊருக்கு போனேன் (போறேன்)..’ இப்படியாகப் பேச ஆரம்பித்தாள். அவளுடைய அம்மா ‘வா வா நேரமாச்சு பாரு..’ எனத் தள்ளிக்கொண்டு போனார்கள்.சோர்வாக இருந்தவள் மிக உற்சாகமாக மாறி இருந்தாள். திரும்பி ஒரு டாட்டா காட்டிவிட்டு மறைந்தாள். என்னிடம் வந்து பேசியதற்கு முக்கியக் காரணம் அவர்களிடம் காட்டிய என் பெரிய காதுகளை மட்டும் தான்.

பெற்றோர்களே, கொஞ்சம் பெரிய காதுகளை வளர்த்துக்கொள்ளுங்கள் !

கட்டுரையாளரின் வலைப்பதிவுத் தளம் https://vizhiyan.wordpress.com

Advertisements
12 Comments leave one →
 1. September 20, 2013 6:17 am

  மிகவும் அருமையாக எழுதியிருக்கிறீர்கள். குழந்தைகள் இருக்கும் வீட்டில் எல்லோருக்கும் நீங்கள் சொல்லியிருக்கும் பெரிய காதுகள் அவசியம் தேவை.

 2. September 20, 2013 6:23 am

  எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். நன்றி!

  • September 20, 2013 9:41 am

   நன்றி. உங்களுக்கு நட்பு கோரிக்கை விடுத்துள்ளேன்

 3. Sashidharan V permalink
  September 21, 2013 4:40 pm

  மிக அருமை..

 4. September 22, 2013 4:34 am

  very true and important thalai.. nice narration as usual.. 🙂 Keep going..

 5. September 22, 2013 11:48 am

  உண்மை தான். குழந்தைகள் சொல்லுவதைக் கவனித்துக் கேட்கத்தான் வேண்டும். பெரும்பாலான பெற்றோர்களுக்குத் தெரியறதில்லை. இதைப் படிச்சுட்டாவது புரிஞ்சுக்கணும்.

 6. September 22, 2013 11:48 am

  பெரிய காதுகள்ங்கற பேரைப் பார்த்ததும் எம்.வி.வெங்கட்ராமின் “காதுகள்” நாவல் நினைவில் வந்தது. :)))))

 7. September 26, 2013 4:13 am

  வணக்கம்…

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/09/blog-post_26.html) சென்று பார்க்கவும்… நன்றி…

 8. September 28, 2013 9:02 am

  நல்ல கட்டுரை… இந்தக் கட்டுரையில் சொல்லப்படும் அதே செயல்பாடுகள்… 60 வயதுக்கு மேலான குழந்தைகளுக்கும் பொருந்தும்…. அந்தக் குழந்தைகள் இந்தக் குழந்தைகளைவிடச் சற்று மோசம்… இன்னும் அதிக பெரிய காதினை விரும்புவார்கள்.

 9. December 14, 2013 5:11 am

  பயனுள்ள பகிர்வுகள்..

  வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..!

Trackbacks

 1. பெற்றோர்க்கு சில பரிந்துரைகள் – இசைதல்
 2. பரிந்துரைகள் – இசைதல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: