Skip to content

2013ன் மறக்க முடியாத கொடூர அழகிய இரவு

December 30, 2013

2013ன் மறக்க முடியாத கொடூர அழகிய இரவு
——————————————————–

செப்டம்பர் 22. டிஸ்கவரியில் எழுத்தாளர் நீலபத்மநாபன் சந்திப்பு நடைபெற்றது. மற்றவர்கள் பேசிவிட்டு சந்திப்பு நாயகன் பேச ஆரம்பிக்கும் சமயம் ஏனோ வீட்டிற்கு செல் வீட்டிற்கு செல் என உள்ளிருந்து ஒரு குரல். இத்தனைக்கு அவர் பேச்சை கேட்கவே சென்று இருந்தேன். அவர் பேச ஆரம்பித்ததும் வண்டியை கிளப்பி வீடு சேர்ந்திருந்தேன். வித்யாவிற்கு வலி ஆரம்பித்து இருந்தது. பிரசவ வலி. உள்ளிருப்பவர் தான் அப்பா வாங்க என அழைத்து இருக்க வேண்டும். டாக்டர் கொடுத்த தேதிக்கு இன்னும் பத்து நாட்கள் இருந்தது . ஆனாலும் வலி கொஞ்சம் அதிகமாகவே நான் ஆடைகளை பையில் போட ஆரம்பித்துவிட்டேன். மருத்துவமனை செய்ய தயாரானேன். குழலியும் என்னப்பா ஊருக்கு போறமா என அவளுடைய டிராவல் பையினை நிரப்ப ஆரம்பித்தாள். தன் பழைய சின்ன ஆடைகளை வரப்போகும் தம்பி/தங்கைக்கு எடுத்து வைத்தாள். திடீரென அப்பா அவ பொண்ணா பொறந்துட்டா என ஒரு தாவணியையும் எடுத்து நொந்தினாள். அம்மா வித்யாவிற்கு கசாயம் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். “இன்னைக்கே பெத்துக்கப்பா என் க்ளோஸ் பிரண்டு பர்த்டே, நல்ல மெம்மரியா இருக்கும்’ என்றேன். வலித்தபடியே சிரித்து ‘போங்க’ என்றாள்.

ஆனால் கிளம்பும்போது தூக்கம் வந்து இங்கயே தான் இருக்கணும் என அழ ஆரம்பித்துவிட்டாள் குழலி. அவள் தூங்கியதும் அவளை தூக்கிக்கொண்டு நான், வித்யா, அம்மா ஆகியோர் கீழ்வீட்டு சக்தியுடன் சேத்பட் நோக்கி வேகமாக நகர்ந்தோம். நாங்கள் கொஞ்சம் டென்ஷன் ப்ரியாக இருந்ததை பார்த்து சக்தி தான் கலவரமடைந்தார். ‘என்னஜி ஏதோ டூருக்கு போற மாதிரி வரீங்க’ என்றார். ஹாஸ்பிட்டலில் காண்பித்ததில் இது உண்மையான வலி தான், காலைக்குள் குழந்தை பிறந்துவிடும் என்றார்கள். வழக்கமான பார்மாலிட்டீஸ் முடித்துவிட்டு சக்தி கிளம்பிவிட்டார். மணி 11 இருக்கும். தனி அறை கொடுக்கப்பட்டது. குழலி பார்வையாளர் கட்டிலில் உறங்கினாள். வித்யா வலியால் துடித்தபடி இருந்தாள். அந்த சமயம் மருத்துவமனை ஊழியர் ‘சார், ஆண்கள் இரவு ஹாஸ்பிட்டலில் தங்க இடமில்லை. நீங்க வெளியே போகவேண்டும் ‘ என்றார்.

11.15 இருக்கும். இரவு சாப்பிடவில்லை. கொஞ்சம் அந்த ஊழியர்களுடன் சத்தம் போட்டதில் இருந்த சக்தியும் போயிருந்தது. வளாகத்திற்குள்ளேயே தங்கக்கூடாது என தீர்க்கமாக சொல்லிவிட்டார்கள். லேபர் ரூமிற்குள் தாய் சென்றால் நீங்க வரலாம் என்றார். இல்லையேல் காலை 6 மணிக்கு தான் வரலாம் என்றார். வீட்டிற்கு சென்று தூங்குவது என்பது நடக்காத காரியம். சரி எப்படியும் டீக்கடை இருக்கும், பையில் 2-3 புத்தகங்கள் இருக்கு, சமாளித்துவிடலாம் என வெளியே வந்தேன்.

மருத்துவமனையில் இருந்து 200 மீட்டரில் பூந்தமல்லி பிரதான சாலை. பிரதான சாலைக்கு சென்று வலது பக்கம் நடக்க துவங்கினேன். ஒரு டீ கிடைத்தால் குடித்துவிட்டு ஒரு சொம்பில் வித்யாவிற்கும் வாங்கிவிடலாம் என்ற திட்டம். சுமார் 1 கி.மீட்டருக்கு எந்த கடையும் இல்லை. நண்பர்கள் சிலருக்கு குறுந்தகவல் அனுப்பி யாரேனும் ப்ரியாக இருந்தால் வரவும் என அனுப்பி இருந்தேன். எல்லோரும் பிசி. திரும்ப அதே சாலைக்கு வந்தேன். கேட்டதில் ஸ்கைவாக் அருகே தான் டீ கிடைக்கும் என்றார் ஒரு வாட்ச்மேன். ஷார் ஆட்டோ பிடித்து ஸ்கைவாக் அருகே இறங்கினேன். அங்கும் டீக்கடைகள் காணவில்லை. தட்டுத்தடுமாறி நின்றபோது போலிஸ்காரர் ஒருவர் வந்து விசாரித்தார்.

மருத்துவமனையில் அனுமதித்திருப்பது பற்றியும் டீ தேடி வந்திருப்பதாகவும் தெரிவித்தேன். சொம்பையும் காட்டினேன். அவர், சீக்கிரம் டீ வாங்கிட்டு போயிங்க சார், இப்ப தான் ஒருத்தரை போட்டுட்டாங்க. யாருன்னு தெரியல. ஐஜி கூட வந்திருக்கார் என்றார். அடையாளம் தெரியாத 4-5 பேர் வண்டியில் வந்து அரசியல் பிரமுகரை தாக்கிவிட்டு எஸ்கேபாகி இருக்கிறார்கள். உடல்சோர்வு, பசி, கோபம், இயலாமை எல்லாம் கலந்த உணர்வில் இருந்தேன். சைக்கிளில் டீ விற்பவர் ஓரமாக அழைத்து டீயை கொடுத்தார். இந்த டீயை சாப்பிடுவதற்கு பதில் வித்யா சாப்பிடாமலே இருக்கலாம் என வாங்கவில்லை. திரும்பவும் டவுன் பஸ் பிடித்து மருத்துவமனை சாலைக்கு அருகே இறங்கி நடந்தேன்.

மணி 12.30யாகி இருந்தது. சரி பிரதான சாலையில் இருந்து மருத்துவமனைக்கு நடக்கலாம் என நடந்து மருத்துவமனையை நெருங்கும் சமயம் டண்டடான் என 10-15 நாய்கள் வரிசையாக நின்றுகொண்டு இருந்தது. வேலைக்கு ஆகாது என திரும்பி பிரதான சாலைக்கு வந்தேன். ஆட்டோ எடுத்துக்கொண்டு வாசலில் இறங்கிவிடலாம் என எண்ணம். ஆனால் தனியாக எந்த ஆட்டோவும் வரவில்லை. ஸ்கார்பியோ அந்த சாலையில் திரும்ப வேகமாக சென்று உதவி கேட்பதற்குள் கடந்துவிட்டது. நடைபாதையில் அமர்ந்தேன். 10 நிமிடத்திற்கு ஒரு முறை அம்மாவிற்கு வித்யாவின் நிலைமை கேட்டு விசாரிப்புகள் வேறு.

தனிமை, பதட்டம், இருட்டு, பயம், சோர்வு எல்லாம் கலந்துகட்டி ஈஈ என பல்லிளித்தது. தள்ளாடியபடி ஆட்டோகாரர் ஒருத்தர் வந்தார். இந்த சாலையின் கடைசியில் விடக்கேட்டேன். 100 ரூபாய் என்றேன். ஓடினால் 30 செகண்டில் போய்விடலாம். அப்ப தான் அம்மா மீட்டரை கட்டாயப்படுத்தி இருந்தாங்க. போங்க என வந்த ஒரு ஆட்டோவையும் விட்டுவிட்டேன். இன்னொருத்தர் 40 ரூபாய் கேட்டார், வேற வழியின்றி அந்த நாய்களை கடந்து மருத்துவமனை வாசலில் இறங்கினேன்.

வாசலில் ஒரு பிள்ளையார் கோவில் இருந்தது. ஒரு தெருவிளக்கு. சின்ன திண்ணை. சில பல கொசுக்கள். அங்கே அமர்ந்து உயிரெழுத்து எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். வயிற்றுக்குள் பசி. தூங்க முடியாது. ஒரு கால் மணி நேரத்தில் அம்மா அழைத்து, வலி ஜாஸ்தியாகி லேபர் அறைக்கு போய்விட்டாள் நீ உள்ளே வா என அழைத்தார்கள். மீண்டும் ஊழியர்களுடன் கொஞ்சம் வாக்குவாதம், கடைசியாக உள்ளே சென்றேன். மேலே ஏறி அறைக்கு செல்லும்போது ஏதோ ஒரு தாயின் உயிர் வலி. வித்யாவினுடையது அல்ல. அறையில் அவள் படுத்திருந்த கட்டில் முழுக்க பனிக்குடம் உடைந்து அதன் கறை. கண்ணீரை கட்டுப்படுத்தமுடியவில்லை.

குழலிக்கு துணையாக அறையில் நான் இருக்க அம்மா லேபர் ரூம் வாசலில் காத்திருந்தார்கள். இடையே வித்யாவின் பெற்றோர்களும் வந்து சேர்ந்து இருந்தனர். குழந்தை பிறக்கப்போகிறது என்பதால் அவர்களை உள்ளே அனுமதித்துவிட்டார்கள். சுமார் 1 மணி நேரத்தில் பூபுமிக்கி பிறந்த செய்தி வந்தது. வலிகள் பறந்தது. கொஞ்ச நேரத்தில் பூபு மிக்கி வந்தார். குழலியை பார்ப்பது மாதிரியே இருந்தது. மனைவி அதிகாலையில் டிரிப்சை ஏற்றிக்கொண்டு வந்தாள். அள்ளி அணைத்து நெற்றியில் ஒரு முத்தமிட்டேன். ஒவ்வொரு தாயும் கடவுளின் பிரதி.

குழலியை எழுப்பி தம்பியை காட்டியதுமே ‘அப்பா, எங்க ஸ்கூல்லயே ப்ரீகேஜியில சேர்த்திடலாம்பா’ என்றாள்.

– விழியன்

Advertisements
One Comment leave one →
  1. December 30, 2013 8:51 am

    வாழ்த்துக்கள்….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: