Skip to content

அல்ஜீரியமுறை திருமண கொண்டாட்ட அனுபவம்

September 14, 2015

அல்ஜீரியமுறை திருமண கொண்டாட்ட அனுபவம்

ஆம் அது கொண்டாட்டமான அனுபவம் தான். பல்வேறு வகையான இடங்களை சுற்றிப்பார்க்கும் வாய்ப்பு கொஞ்சம் மெனக்கெட்டால் கிடைத்துவிடும் ஆனால் உள்ளூர் திருமணம் ஒன்றில் கலந்துகொள்ளும் வாய்ப்பு அபூர்வமாகவே அமையும். இங்கு திருமணத்திற்கு அழைக்கும்போது ரெண்டு பேர் வரலாம், குழந்தைகள் கூடாது என்ற நிபந்தனை சுவாமிக்கு இருந்தது. சுவாமி என்னை இரண்டு வாரங்கள் லக்ஸம்பர்க்கில் பார்த்துக்கொண்ட நண்பர். திருமணம் பிரான்ஸ் நாட்டின் மெஸ் METZ நகரில் நடந்தது, நாங்கள் திருமண விருந்து நடைபெறும் இடத்தை அடைந்தபோது இரவு 8,30, வாசலிலேயே விருந்தினர்கள் அனைவரும் இருந்தனர்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பகுதியில் புதிதாக துவங்கிய தொழிற்சாலைக்கு ஆட்களை அல்ஜீரியாவில் இருந்து இறக்கினார்கள். மெல்ல மெல்ல அவர்கள் குடும்பங்களை வரவழைத்து ஒரு பகுதியை ஆக்கிரமித்துவிட்டார்களாம். ஐரோப்பியர்கள் அந்த பகுதிக்கு செல்லக்கூட அஞ்சுவார்கள் என்றார்கள். கூட்டத்தில் பிரஞ்சுக்காரர்கள் என குறைவாகவே தென்பட்டனர். பரீத், மாப்பிள்ளை. அவருக்கு இரண்டாவது திருமணம். சுவாமியின் அலுவலக நண்பர். எங்களை வரவேற்றார். வாசலில் விதவிதமான உணவு, நொருக்கு தீனி வகையறா, ஒரு பிஸ்கட்டில் மீன் வாடை வந்தது, மேலே அந்த க்ரீம ஒரு மீனாம். பல வண்ணத்தில் குட்டி குட்டி பிலாஸ்டில் பெட்டிகளில் பான வகை. மது நிச்சயமாக இவர்கள் திருமணத்தில் கிடையாது. நம்மவூர் போல தம்பி மற்றும் தம்பி நண்பர்கள் வெளியே சரக்கு அடிப்பதைபோல கடைசியாக நிகழ்ச்சி முடிந்ததும் வெளியே வந்தபோது பார்த்தோம்,

அரங்கிற்குள் 12 வட்ட மேஜைகள் இருந்தன. ஒவ்வொரு மேஜையிலும் யார் அமரவேண்டும் என முன்னரே தீர்மானிக்கப்பட்டு இருந்தது. நாங்க அமர்ந்த டேபிளில் ஆங்கிலம் மட்டும் தெரிந்தவர்கள். ஐந்து தமிழர்கள். நான், சுவாமி, கேப்ரியல் மதுரைக்காரர், பரத் & துணைவியார். மற்றவர்கள் இதாலி நாட்டுக்காரர்கள் இருவர், சிலர் பெண்ணின் சொந்தக்காரர்கள். அங்கே இருந்தவர்களை பார்த்தபோது எங்கோ பார்த்தது போலவே இருந்தது. சில முகங்கள் நண்பர்களில் உருவத்தை ஒத்து இருந்தன. சில முகங்களை திரைப்படங்களில் பார்த்ததுபோல இருந்தது. யார் எந்த நாட்டுக்காரர்கள் என உங்களால் கண்டுபிடிக்க முடியுமா என கேட்டேன் நண்பர்களிடம், இல்லை சிரமம் என்றனர்.

அங்கே இருந்த ஆர்.ஜே பாடல்களை மாற்றிக்கொண்டிருந்தார். ஆரம்பத்தில் இருந்தே நடனம். முக்கியமாக வந்திருந்த ஒவ்வொரு பெண்ணும் நடுவில் சென்று நடனமாடினார்கள். ஓயாம்ல் ஒலவை சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது, பெண்களும் சத்தம் எழுப்பினார்கள், கருவிகளிலில் இருந்தும் வந்தது . ஆண்கள் மிகக்குறைவாகவே உள்ளே ஆடினார்கள். அத்தனை உற்சாகம். மிக எளிதான அசைவுகள். முதலில் மாப்பிள்ளையும் பெண்ணும் ஆடினார்கள். மணப்பெண் தேவதை உடையிலும் மாப்பிள்ளை சூட்டிலும் இருந்தார்.

திருமண நிகழ்வில் விருந்தில் நம்மூர் திருமணங்களில் பெண்ணின் தாயார் தான் உட்சபட்ச பதட்டத்தில் இருப்பார்கள் . ஆனால் இங்கே பெண்ணின் தாயார் தான் நடுவில் ஆடிக்கொண்டே இருந்தார். எல்லோரையும் அழைத்து எல்லோருடனும் ஆடிக்கொண்டே இருந்தார். எல்லோரையும் இன்முகத்துடன் பார்த்து நன்றி சொல்லிக்கொண்டே இருந்தார்.
மணிக்கு ஒருமுறை மணப்பெண் புது ஆடைகளை மாற்றிக்கொண்டே இருந்தார். ஆடை மாற்றியதும் அரங்கினை சுற்றி எல்லா மேஜைக்கு அருகிலும் ஒரு சுற்று. இருவரும் தான். அதே போல நெருக்கிய உறவினர்களும் ஆடைகளை மாற்றிக்கொண்டே இருந்தார்கள், எல்லாம் கவுன் வகையறாக்கள் தான், சில நேரம் கழித்து ஆர்ஜே எல்லோரையும் நடுவே அழைத்தார். பெண் வீட்டார் ஒருபுறமும் ஆண்வீட்டாரை ஒருபுறமும் நிற்கவைத்தார். இந்தப்பக்கம் இருந்த்து ஆடிக்கொண்டே அவர்களை விரட்ட வேண்டும் அதே போல அந்தப்பக்கமும். பெண் வீட்டார் பக்கம் இருந்து ஒருவரை ஆடக்கூப்பிடுவார், ஒரு வெள்ளை கோலை வைத்து ஆடவேண்டும். திடீர் திடீரேன நம்மவூர் குத்தாட்டம் போலவும் இருந்தது. பல பாடல்களை நாம் சுவாகா செய்திருக்கின்றோம். கொண்டாட்டமான இசை, துள்ளலான இசை.

உணவு வருவதை அறிவிப்பார்கள். முதவில் ஸ்டார்ட்டர்கள் வந்தது. அதற்கு ஒரு அறிவிப்பு. கைத்தட்டல், சிக்கன் சமோசா, சில இலைகள். பால் சாதம், கொஞ்சம் மசாலா. தொட்டுக்க பன். அன்னியமாக இருந்த பொருட்கள் கோக் பாட்டிலும் ஒயாசிஸ் ஆரஞ்சு பாட்டில் மட்டும் தான். எல்லா மேஜைக்கும் பறிமாறப்பட்டது. சாப்பிட்டதும் நடனம். அடுத்த ஒருமணி நேரத்திற்கு பின்னரே முக்கிய உணவு. அதற்கும் கிட்டத்தட்ட பட்டாசு வெடித்து வரவேற்பு, ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு பெரிய தட்டில் இறைச்சி வைக்கப்பட்டது, அன்று மாட்டிறைச்சி. மேஜையில் இருந்தவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு துண்டு வருவது போல வைக்கப்பட்டிருந்தது. மற்றொரு பெரிய தட்டில் உருளையும் பீன்ஸ் பொறியல், அது முடிந்ததும் திரும்ப நடனம்.

ஒரு கட்டத்தில் நேரடி இசை. அட்டகாசம் தூள் கிளப்பியது. என்ன குரல் அந்த மனிதருக்கு. உற்சாகம் பொங்கியது. கால்கள் நமநம என்றது, ஆனாலும் வெளியூரு தெரியாத மக்கள் என அடக்கிக்கொண்டேன். ஆக்கிரோஷமான ஸ்டெப்புகளை யாரும் போடவில்லை, எல்லாம் மிக நளிளமான எளிதான ஸ்டெப்புகள் தான். பாட்டிமார்களும் ஆர்வமுடன் ஆடினார்கள். உடல் பெரியதாக இருக்கின்றது என்ன நினைப்பார்கள் என்ற எந்த சூச்சமும் இருக்கவில்லை. கிட்டத்தட்ட எல்லா பெண்களும் ஆடினார்கள். ஆடினார்கள் ஆடினார்கள் ஆடிக்கொண்டே இருந்தார்கள்,

இரவு 2 மணிக்கு டெசர்ட். பழங்கள் + பானம். ரொம்ப அதிகமாக இல்லாமல் ரொம்பவும் குறைவாக இல்லாமல் சரியான அளவு உணவு, எல்லோரும் எல்லோருடனும் உரையாடினார்கள். குழந்தைகள் வரக்கூடாது என்ற நிபந்தனை மட்டுமே கொஞ்சம் நெருடலாக இருந்தது. நெருக்கிய சொந்தங்களின் குழந்தைகள் மட்டும் இருந்தார்கள், நம்மவூர் திருமணங்களின் சுவாரஸ்யமே குழந்தைகள் இங்கும் அங்கும் ஓடுவது தான். சில குட்டி பாப்பாக்கள் தேவதை உடையில் வந்திருந்தார்கள். திரதிஷ்ட வசமாக கேமராவில் பேட்டரி தீர்ந்துவிட்டது. 10 கிளிக்குகள் கூட எடுக்கவில்லை. யாரும் எந்த பதட்டமுடனும் இருக்கவில்லை. திருமணத்தின் முழு செலவும் மணமக்கள் தான் செய்ய வேண்டுமாம். பக்கத்தில் ஒரு சூட்கோட் போட்ட நபர் துண்டு ஆங்கிலத்தில் பேசினார். பரீதின் நண்பரா என விசாரித்தார், அவர் ஒரு பெயிண்டர் என்றார். பள்ளிக்கே போகவில்லை போயிருந்தால் கம்யூட்டரில் வேலை செய்திருக்கலாம் என கூறினார். பிரஞ்சு மொழி தெரிந்திருந்தால் இன்னும் நிறைய பேருடன் பேசி இருக்கலாம். கூச்சத்தை விட்டொழிந்திருந்தால் நடனமடி இருக்கலாம். எனக்கு மிகவும் பிடித்திருந்த பெண்ணிடம் ஒரு ஹலோ சொல்லி இருக்கலாம். இதோ இந்த விருந்தில் இருந்து கொண்டாட்டமான அந்த அரேபிய இசை கேட்கும் ஆர்வத்தை எடுத்துச்செல்கின்றேன்

ஆம்ம் ஒரு புதுவித அனுபவம்.

விழியன்

Advertisements
No comments yet

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: