Skip to content

லக்ஸம்பர்க் – நான்சி பயணம்

September 15, 2015

லக்ஸம்பர்க் – நான்சி பயணம்

முதன்முறையாக ப்ளாப்ளா காரில் ஒரு பெண் காரோட்டி செல்கின்றேன். இந்த பெண் ‘அம்பாசிடர்’ என குறிப்பிடப்பட்டு இருந்தது. அதாவது ஆரம்பநிலை, எக்ஸ்பர்ட், அடுத்து அம்பாசிடர். உள்ளே அமரும்போதே “உங்களுக்கு ஃபேர் அடிக்குமெனில் என் முயலுடன் விளையாடுங்கள்” என்றாள். நான்சியில் ஐந்தாமாம் ஆண்டு மார்கெட்டிங் படிக்கின்றார். கார் கிளம்பியது முதல் கேள்வி முயல் பற்றியது தான். “இதன் பெயர் என்ன?” “ட்வீட்லி” என்றாள். நான் பின்னிருக்கையில் அமர்ந்திருந்தேன். முன்னிருக்கையில் அவள் காரோட்டியும் பக்கத்தில் ஒரு இளைஞனிருந்தார். அவரும் நான்சியில் கல்லூரியில் படிப்பதாக கூறினார். ஆனால் அவரும் என்னைப்போலவே ஒரு பயணி.

“நான் இதாலியின் காட்டுப்பகுதியில் நடந்துகொண்டிருந்தபோது யாருமற்ற அனாதையாக இந்த முயல் இருந்தது. இதோ இந்த கையளவிற்கு தான் இருந்தது. எடுத்து வந்துவிட்டேன். பெயர் வைத்தேன். வாரம் இரண்டு முறை கேரட்டும் ப்ரோக்ளியும் தருகின்றேன். மற்றபடி சில காய்கறிகளும் பழமும் தருவேன். ஆப்பிளை நறுக்கி கொடுத்தால் மகிழ்வாக சாப்பிடும். இது சைவ பிராணியாகவே வளர்க்கின்றேன்” என முயல் கதையுடன் துவங்கியது. கல்லூரி மாணவர்களுடன் எனக்கு பேச சந்தர்ப்பமே கிடைக்கவில்லை. ஒரு அல்ஜீரிய மாணவனை பாரிஸ் செல்லும்போது சந்தித்தேன். ஆனால் அவனுடன் பேசமுடியவில்லை.

ஒரு கல்லூரி யுவதியின் வாழ்வினைப்பற்றி குறிப்பிட்டாள். தன் பெற்றோர்கள் வேறு ஊரில் இருப்பதாகவும் அவள் இங்கே வசிப்பதாகவும் கூறினாள். புகைப்பிடிப்பது, மது அருந்துவது, ஆண் பெண் உறவு பற்றி எல்லாம் கேள்விகள் கேட்டேன். இருவரும் பதில் கூறினார்கள். ஆணுடைய பார்வை வித்யாசமாகவே இருந்தது. “சரி, இங்கே ஒரு ஆணை எப்போதாவது அண்ணன் என அழைப்பீர்களா?” என்று கேட்டேன். “ரொம்ப ரொம்ப அரிது. மிக மிக நெருக்கமாக பரிசுத்தமான உறவாக உணர்ந்தால் தான் அழைப்போம்” என்றாள், “இல்லை, இது சாதாரணான விஷயம், நிறைய கூப்பிடுவார்கள்” என்றான் அவன். அவர் ஒரு மொறை மொறைக்க இருவரும் “ஆனால் உங்கள் நாட்டில் இருப்பது போல அழைக்கமாட்டார்கள் என ஒரு சேர கூறினார்கள்.

இருவருக்கும் இருக்கும் கனவு இடம் பற்றி குறிப்பிடுங்கள் என்றேன். அவள் ஆப்பிரிக்க காடுகளில் மிருகங்கள் இயற்கையாக வாழும் பகுதியில் வாழ வேண்டும், அங்கே சில நாட்கள் கழிக்க வேண்டும் என்றாள். அவன் ஒரு தீவின் பெயரை குறிப்பிட்டு அங்கே போகவேண்டும் என்றான். என்னை கேட்டதற்கு திரு.குரு ஏர்லைன்ஸில் அண்டார்டிக்கா போக வேண்டும் என்றேன்.

இந்தியாவை பற்றி பேச்சு திரும்பியது. தட்பவெட்பம், மக்கள், குழந்தைகள் என கேட்டார்கள். புத்தர் பற்றி அங்கே இருக்கும் யோகா பற்றி கேள்விகேட்டாள். எனக்கு அதனை பற்றி நேரில் அறிந்துகொள்ள ஆவல் என்றாள். இந்தியாவில் சிறந்த இடம் எது என்றதற்கு காசிக்கு போய் வாருங்கள் என்றேன். வாட்ஸப்பில் அந்த பெயரை அனுப்பக்கூறினாள். வாரணாசி என அனுப்பினேன். ஏன் சிறந்தது. எத்தனை நாட்கள் ஆகும் என விவரித்தேன். நீங்கள் அடிக்கடி செல்வீர்களா எனக் கேட்டாள். இந்தியா பரந்த நாடு அது ஒரு முனை நான் வசிப்பது வேறு முனை. பயணங்களும் எளிதல்ல. மூன்றுமுறை சென்றிருக்கின்றேன் ஆனால் சமயம் கிடைக்கும்போதெல்லாம் செல்வேன் என்றேன். சில நிமிடங்கள் கண்மூடி காசிக்கு சென்றுவந்தேன்.

வீட்டு நினைப்பு வந்ததும் வித்யாவிற்கு அழைத்து பேசினேன். திரும்பவும் பயணங்கள் பற்றியே பேச்சு சென்றது. ஐந்து வருடங்களாக அவளுடைய அப்பாவின் காரினை ஓட்டுவதாகவும் இந்த காரை அன்றைய தினம் தான் முதல்முறையாக ஓட்டுவதாக கூறினாள். லக்ஸம்பர்க்கில் தன் நண்பன் இருக்கின்றான் அவனைக்காண அடிக்கடி வருவேன் அப்படித்தான் ப்ளாப்ளாகாரில் சேர்ந்தேன் என்றாள். உணவு ஒத்துக்கொண்டதா? எங்கெல்லாம் சென்றீர்கள் என விடாமல் பேசிக்கொண்டே வந்தாள், ஒரு செல்பி எடுத்துக்கொண்டோம். முந்தைய பயண தாத்தாவை விட வேகம் குறைவு தான். வழியில் அந்த இளைஞனை இறக்கிவிட்டு, டிராம் ஸ்டேஷனுக்கு அருகே என்னை இறக்கிவிட்டாள். இந்தியா வரும்போது செய்தி அனுப்புகிறேன் என சொல்லிவிட்டு காரை கிளப்பினாள்.

– விழியன்

Advertisements
No comments yet

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: