Skip to content

சிறுவர் இலக்கியம் – ஒரு பார்வை

April 28, 2016

சிறுவர் இலக்கியம் – விழியன்

சிறுவர் இலக்கியமா? அப்படி ஒன்று இருக்கா நம்மிடையே? சமீபத்தில் பெரிதாகப் பேசப்பட்ட சிறுவர்களுக்கான நூல் ஏதேனும் இருக்கின்றதா? ஆமாம் சிறுவர்கள் வாசிக்கின்றார்களா? அவர்களுக்கு யாரேனும் எழுதுகின்றார்களா? முதலில் சிறுவர் இலக்கியம் என்று கூறுவது எதனை?

சிறுவர் இலக்கியம் என்பது பேசத்துவங்கும் குழந்தை முதல் சுமார் பதினான்கு வயது வரையிலான குழந்தைகளுக்கான இலக்கியம் என்று கூறலாம். ஏழு வயது வரையிலானோர்க்கான இலக்கியத்தைக் குழந்தை இலக்கியம் என்றும் அதற்கும் அதிகமான வயதினருக்கானதைச் சிறுவர் இலக்கியம் என்று வகைப்படுத்துகின்றனர். இரண்டு வகையினருக்குமான தேவை, வடிவம், களம், மொழி ஆகியவை நுட்பமாக மாறுபடும். ஆனாலும் பொதுவாக இவை இரண்டும் சிறுவர் இலக்கியம் என்றே பரவலாக வழங்கப்படுகின்றது. சிறுவர் இலக்கியத்தின் வடிவங்களாக எவை எல்லாம் சேர்த்துக்கொள்ளலாம்? கதைகள், பாடல்கள், கவிதைகள், கட்டுரைகள், நாவல்கள், அறிவியல் கட்டுரைகள், நாடகங்கள், சினிமா, சித்திரக்கதைகள், துணுக்குகள் இவை அனைத்தும் அடங்கும். அச்சு ஊடகம் பிரபலமான பின்னர் மேற்கில் இருந்து தான் சிறுவர் இலக்கியம் என்ற தனிப்பிரிவு வீரியம் கொண்டது எனலாம். அதற்கு முன்னர் சிறுவர்க்குப் பெரியவர்களுக்கு என்ற பிரிவு கிடையாது.

தொன்மையில் சிறுவர் இலக்கியம்

தாயின் ஆராரோ பாடலில் தான் குழந்தைக்கு இலக்கியம் அறிமுகமாகின்றது. இதுவே சிறுவர் இலக்கியத்தின் முன்னோடியாக இருக்க வேண்டும். எந்தக் காலத்தில் இது துவங்கியது என்ற வரலாறு நம்மிடம் இல்லை. ஆராரோ தாலாட்டு மனிதன் நாகரீமகாக வாழத்துவங்குவதற்கு முன்னர் இருந்தே இருந்திருக்க வேண்டும். ஆனால் முன்முதல் பதிவு நமக்கு அகநானூற்றில் கொற்றங்கொற்றனாரிடம் (54வது பாடல்) தாலாட்டு பாடல் மூலம் பதிவாகி இருக்கின்றது. தாயோ அல்லது செவிலித்தாயோ நிலவினைக் காட்டிச் சோறு ஊட்டுவது போன்ற பாடல்.

அடுத்து கிடைக்கும் பதிவு ‘விடுகதை’ வடிவத்தில் தொல்காப்பியத்தில் இருக்கின்றது.. இது ’பிசி’ என்று அழைக்கப்பட்டு இருக்கின்றது. விடுகதையினை விடுவிக்கப்படவேண்டிய கதை எனக் கூறலாம். தாயின் தோழிகள் (செவிலித்தாய்) விடுவிக்கும் விடுகதைகளைத் தொல்காப்பியத்தில் காணலாம். விடுகதைகள் சிறுவர்களுக்கான விளையாட்டு என்பதில் ஐயமே வேண்டாம். அதே தொல்காப்பியத்தில் (485) நாடோடிக்கதைகளுக்கான வித்தும் விதைக்கப்பட்டுள்ளது. ஒரு யானையும் ஒரு குருவியும் நட்பு கொண்டு இங்கு இங்குச் சென்று இவை இவை செய்தது என்ற குறிப்பு வருகின்றது.

பதினொன்றாம் நூற்றாண்டில் தோன்றிய ஒளையாரின் ஆத்திச்சூடி அடுத்த இடத்தில் வருகின்றது. இன்று வரையில் புதிதாய் தோன்றும் ஒவ்வொரு குழந்தைக் கவிஞரும் தனக்கானப் புதிய ஆத்திச்சூடியைப் படைக்காமல் ஆரம்பிப்பது இல்லை. ஒளவையைத் தொடர்ந்து படைக்கப்பட்ட சிறுவர்களுக்கான எழுத்து அதிவீரராம பாண்டியர் எழுதிய ‘வெற்றிவேற்கை’ “எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும்” “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சைப் புகினும் கற்கை நன்றே” ஆகிய புகழ்பெற்ற வரிகள் இவர் எழுதியதே. இந்த நீதிகள் சிறுவர்களுக்காகக் கூறப்பட்டவையே. இதே போல மற்றொரு நீதிநூல் உலகநாதர் எழுதிய உலகநீதி. “ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்” என்ற வரிகள் இடம்பெற்ற நூல் இது தான்.

சிறுவர் இலக்கியத்தில் பாடல்கள்:

சிறுவர்களுக்கான பாடல்கள் மிக முக்கியமான இடத்தினைச் சிறுவர் இலக்கியத்தில் வகிக்கின்றன / வகிக்கவும் செய்யும். சந்த நயத்துடன் பாடப்படும் பாடல் பாடுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்வினைக் கொடுக்கின்றது. பாடுபவருக்கு உற்சாகமும் தொம்பும் அளிக்கின்றது. உலகை மறந்து ரசிக்க வைத்துவிடும். அம்மாவின் தாலாட்டுப் பாடலில் பாடல்கள் துவங்குகின்றது. இசைக்கான ஆரம்பப் புள்ளி அம்மாவின் ஆராரோ பாடல்கள் தான். அதன்வழியே குழந்தை கொஞ்சம் வளர்ந்து அதே போன்ற பாடல்களைக் கேட்க ஆவலாக இருக்கும்.

சிறுவர் இலக்கியத்தில் பதிவு செயப்பட்ட முதல் பாடலாகக் கருதுவது HA கிருஷ்ணப் பிள்ளை (1827-1900) இயற்றிய ‘இரட்சன்ய மனோகரம்’. அதனைத் தொடர்வது 1886 ஆம் ஆண்டில் இலங்கை யாழ்பாணத்தில் தம்பி முத்துப்பிள்ளை எழுதிய ‘பாலியக்கும்பி’ என்று வரலாறு கூறுகின்றது. அதன் பின் 1900களின் தொடக்கத்தில் அய்யாசாமி என்பவர் பால இராமாயணம எழுதுகின்றார். ராமரின் பால்ய பருவத்தை மட்டும் பாடல் வடிவில் கொடுத்த நூல்.

செய்யுள் மூலம் தான் வரலாறு, மருத்துவம், வாழ்கை முறை, நீதிநெறிகள் நமக்கு வழிவழியாகக் கடத்தப்பட்டது. செய்யுள் வடிவத்தைத் தேர்ந்தெடுத்த நோக்கம் அது மறக்கப்படாமல் இருப்பதற்கே. குழந்தைகளுக்கான பாடல்களில் ஒளவை வழியே வந்த பாரதியாரின் பாப்பா பாட்டுக் குறிப்பிடத்தகுந்தது. பாரதியார், கவிமணி, பாரதிதாசன், சுத்தானந்த பாரதி, வாணிதாசன், தமிழ் ஒளி ஆகியோர் சிறுவர் பாடல்களை இயற்றியதில் முதல்வகைக் கவிஞர்கள். இவர்களில் உச்சத்தைத் தொட்டவர் கவிமணி. ஆசியர் பணி மேற்கொண்டு அந்த அனுபவத்தைக் கொண்டே எழுதிய வகையில் கா.நமச்சிவாய முதலியார், மணை திருநாவுக்கரசு மற்றும் மயிலை சிவமுத்து அடங்குவர்.
மூன்றாவது வகை கவிஞர்கள் வள்ளியப்பா, எ.ந.கணபதி, திருச்சி பாரதம், தமிழ்முடி, புவனை கலைச்செழியன் மற்றும் லெமன். இவர்கள் பல புதிய முயற்சிகளை மேற்கொண்டனர்.

கதைகள்;
கதைகளுக்கு நம்மிடையே பஞ்சமே இருந்ததில்லை. கதை என்றால் எந்த வயதினருக்கும் பிடித்துவிடும். ஒரு கதைச் சொல்கிறேன் என ஆரம்பித்தால் எந்த வயதினரும் கேட்க ஆரம்பித்துவிடுவார்கள். நம்முள் அத்தனை ப்ரியமான இடத்தை எப்படியோ பிடித்துள்ளது. அது மகிழ்ச்சி அளிக்கக்கூடியது, கற்பனை வளத்தைத் தூண்டக்கூடுயது, இதற்கெனச் சிறப்பான திறமையும் தேவையில்லை. பாட்டி- காகம் கதையினைக் கேட்டு வளராத பிள்ளைதான் உண்டா நாட்டில்? ஆனால் இந்த கதை எங்கிருந்து வந்தது என்றே பல கதைகள் உண்டு. வாய்வழியாகவே சொல்லப்பட்டு வந்த கதைகள் 17ஆம் நூற்றாண்டில் அச்சில் வந்தது. அது வீரமாமுனிவர் எழுதிய பரமார்த்தகுரு கதைகள். அந்த கதாபாத்திரங்கள் இன்றும் நம்மிடையே நிலவுகின்றது என்பதே அது காலத்தால் அழிக்கமுடியாக ஆக்கம் எனக் கூற வைக்கின்றது. 19ஆம் நூற்றாண்டில் கதா மஞ்சரி வெளியானது. 1853ல் ஈசாப் கதைகள் தொகுக்கப்பட்டு ‘கட்டுக்கதைகள்’ என்று வெளி வந்தது. 1889ல் முதல்முதலாகச் சிறுவர்களுக்கான கதைகளை பன்ருட்டி சி.கோவிந்தசாமி வெளியிடுகின்றார், அதனைத்தொடர்ந்து அ.மாதவய்யா 1917ல் பால விநோதக் கதைகளை வெளியிடுகின்றார்.

விக்ரமாதித்தன் கதைகள், தெனாலிராமன், மரியாதை ராமன், பீர்பால், முல்லா, ஈசாப் கதைகள், அரேபிய இரவுக் கதைகள் என கதைகளுக்கு பஞ்சமேயில்லை. அதனைத்தொடர்ந்து நாடோடிக்கதைகள் பரவியது. சிறுவர் இலக்கியத்தின் பொற்காலமாக குறிப்பிடப்படுவது 1945-1955 காலகட்டம். ஏராளமான சிறுவர் இதழ்கள் வெளிவந்தது. ஏராளமான குழந்தை எழுத்தாளர்கள் போட்டிபோட்டுக்கொண்டு எழுதினார்கள்.

தொடர்கதைகளாக வெளிவந்த பல கதைகள் நாவல்களாகப் பின்னர் வெளியிடப்பட்டது. ஆர்.கே.நாராயணனின் சாமியும் சிநேகிதர்களும், தமிழ்வாணனின் பயம்மா இருக்கே, சுதனின் கள்வர் தலைவன், பூவண்ணனின் ‘பொல்லாத குண்டு’ , ரத்னத்தின் ‘சங்கனும் ரங்கனும்’ ஆகியவைகளைக் குறிப்பிடலாம். பல இதழ்கள் வெளிவந்ததால் இவை எளிதாகச் சாத்தியமானது.

பிற இலக்கியங்கள்;

பாடல், கதை, நாவல் மட்டுமே சிறுவர் இல்லக்கியம் அல்ல. சிறுவர்களுக்கான நாடகங்கள், சிறுவர்களுக்கான திரைப்படம், அறிவியல் கட்டுரைகள், வரலாற்றுக் கட்டுரைகள், ஒலி நிகழ்வுகள் என்று ஏராளம் இருக்கின்றது. 1950க்கு பின்னர் ஒவ்வொரு துறையும் செழித்தது எனலாம். குழந்தைகளுக்கான எழுத்தாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு எழுதினர். சிறுவர்களும் தன் கைகாசினைக்கொண்டே புத்தகக்களையும் இதழ்களையும் வாங்கினர். அவ்வகையில் சித்திரக்கதைகள் பெரும் ஈர்ப்பினைச் சிறுவர் மத்தியில் ஏற்படுத்தியது. அதற்கு ஈடு கொடுக்கும் வண்ணம் கதைகளும் ஓவியங்களும் அமைந்தது. சித்திரக்கதைகள் சிறுவர் இலக்கியத்திற்கான பெரும் வரம் எனலாம்.

தமிழில் சிறுவர்களுக்கான மொழிபெயர்ப்பு நூல்கள்

ரஷ்ய நாட்டுடன் ஏற்பட்ட நல்லுறவில் மிகமுக்கியமான நன்மை நம் குழந்தைகளுக்குக் கிடைத்த நூல்கள். வேறு நாட்டின் கதையினை நம் மொழியில் படிப்பது தனிச்சுவை. உயர்தர் தாள்களில் தரமாக வந்த ரஷ்ய நூல்கள் பெரும்வரும். அதே போல அண்டை மாநிலமான கேரளத்தில் இருந்தும் நிறைய மொழிபெயர்ப்புகள் வந்தன/ வந்துகொண்டு இருக்கின்றன. ஆங்கிலத்தில் வெளிவந்து கிளாசிக்காகக் கொண்டாடப்பட்ட நூல்கள் தமிழில் வெளிவந்துள்ளது என்றாலும் ஏனோ அவை பெரும்கவனைத்தைப் பெறவில்லை. 1970களிலேயே ஆலிசின் அற்புத உலகம் மொழிபெயர்க்கப்பட்டது. ஆனாலும் எஸ்.ராமகிருஷ்ணன் மொழிபெயர்த்த பின்னரே கொஞ்சம் கவனத்தைப் பெற்றது. தொடர்ந்து வெளிவந்துகொண்டு இருந்தாலும் கேரளத்தைப் பார்த்து ஏக்கம் கொள்ளவேண்டியது தான். அரசே முறையான நிறுவனம் கொண்டு வெளிநாடுகளுடன் ஒப்பந்தம் செய்து மொழிபெயர்ப்புகளைச் செவ்வனே செய்து வருகின்றது. அந்நிலை எங்கும் வரவேண்டும்.

சிறுவர் இலக்கியம் முன்னிருக்கும் சவால்கள்;

கல்விச்சூழல் மதிப்பெண் நோக்கியபடியே இருக்கிறது. மாணவன் பாடபுத்தகத்தைத் தாண்டி வாசிப்பது கிட்டத்தட்டப் புஜ்ஜியம் தான். சில ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த வாசிப்பும் (கோகுலம், பூந்தளிர், ராணி காமிக்ஸ், லயன் காமிக்ஸ், சிறுவர் மலர்கள் மற்றும் இன்னபிற சிறுவர் இதழ்கள்) குறைந்துவிட்டது. அடுத்ததாக ஆசிரியர்களும் தன்முனைப்புடன் நூல்களை அறிமுகம் செய்வது, விவாதிப்பது இல்லை. இந்தப்பக்கம் பெற்றோர்களும் ஆர்வம் காட்டுவதில்லை. வாசிப்பு குறைவாக இருக்கும் பட்சத்தில் பதிப்பாளர்களும் முதலீடு செய்ய தயங்குகின்றனர். இதனால் குறைவான செலவில் வரவேண்டிய புத்தகங்களும் அதிக விலையில் வெளிவருகின்றது. புதிய முயற்சிகளை ஊக்கப்படுத்த ஆட்கள் இல்லை. அதே பழைய கதைகளை (தெனாலிராமன், பஞ்சதந்திர கதைகள், மரியாதை ராமன் கதைகள்) வைத்தே காலம் போகின்றது. கைகளைக் கடிக்காமல் இருக்க வழிவகைச் செய்துகொள்கின்றனர்.இப்படி நிலவும் சூழலில் குழந்தைகளுக்காக எழுதும் எழுத்தாளன் நுழைவது பெரும் சிரம்மாகிவிடுகின்றது.

வார்த்தைகளில் எளிமை, அபார கற்பனைத்திறன், பொருளில் இனிமை, குழந்தைகளுடனானத் தொடர் பரிச்சியம், அவர்களின் மன உலகம், அவர்களின் வார்த்தை அகராதி, தற்காலக் குழந்தைகளின் வாழ்கைமுறை, விளையாட்டுகளை அறிந்துகொள்ளுதல், பொருத்தமான ஓவியர்கள் அமைதல், சரியான பதிப்பாளர்களைத் தேர்வு செய்தல் என்று பல சவால்களை ஒவ்வொரு சிறுவர்களுக்கான எழுத்தாளர்களும் எதிர்கொள்ள வேண்டி இருக்கின்றது.

சிறுவர் இலக்கியம் செழிக்க செய்ய வேண்டியவை

1975ல் நடைபெற்ற குழந்தைகள் எழுத்தாளார் சங்கத்தின் வெள்ளிவிழா சாதனைப்பட்டியலில் சுமார் 400 குழந்தைகள் எழுத்தாளர்களின் முகவரியினைப் பிரசுரித்து உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 50 குழந்தைகளுக்கான இதழ்கள் வெளிவந்துள்ளது. ஆனால் அவற்றின் நிலை இன்று நேர்மாறாக உள்ளது. ஆயிரம் காரணங்களை அடுக்கினாலும் சிறுவர்களுக்கான இலக்கியத்தைப் புறந்தள்ளிவிடமுடியாது. தள்ளவும் கூடாது. இது பல முனைகளில் இருந்து செயல்படவேண்டிய தருணம். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பாடதிட்டம் தாண்டி புத்தகங்களை வாசிக்கவும் நேசிக்கவேண்டிய அவசியத்தை உணர்த்திச் சிறுவர்கள் வாசிப்பதை உற்சாகப்படுத்த வேண்டும். வாசிப்பு என்பது சின்ன வயது முதலே இனிக்கச் செய்ய வேண்டும். இதனைக் கதைசொல்லல் நிகழ்வுகள் மூலம் மேலும் சுவாரஸ்யப்படுத்தலாம்.

பதிப்பாளர்களும் எழுத்தாளர்களும் கைகோர்த்துத் தற்காலச் சிறுவர்களின் தேவை / மனநிலை ஆகியவற்றைப் பகுப்பாய்ந்து தரமான புத்தகங்களைக் குறைந்த விலையில் கொண்டுவர முயற்சிக்க வேண்டும். புத்தகங்கள் எல்லாத்தரப்பு மாணவர்களும் அனுகும்விதமாக இருக்கவேண்டும். அரசும் இந்த செயலில் தலையிட்டுத் தனியாக ஒரு நிறுவனத்தை நிறுவி மொழிபெயர்ப்புகள் / சிறுவர் நூல்களைக் கொண்டுவர நல்ல தளத்தினை ஏற்படுத்த வேண்டும். புத்தகங்கள் வாழ்வை வண்ணமயமாக்கும், உயிர்கொடுக்கும் என்பதை ஒவ்வொருவரும் ஆழகாக உணர்ந்து புரிந்துகொள்வது அவசியம். அதன் மீதே சிறுவர் இலக்கியம் கட்டமைக்க முடியும். சிறுவர் இலக்கியம் துளிர்விட்டு செடியாகி, மரமாகும். நம்புவோம் நகர்வோம்.

சிறப்பாக பேசப்பட்ட நூல்கள் சில
– மலரும் முள்ளும் – அழ.வள்ளியப்பா
– பாட்டிலே காந்தி கதை – அழ.வள்ளியப்பா
– பறக்கும் பாப்பா – அழ.வள்ளியப்பா
– பயம்மா இருக்கே – தமிழ்வாணன்
– ராஜா ராணி – தங்கமணி
– சாமியும் சிநேகிதர்களும் – ஆர்.கே.நாராயணன்
– பொல்லாத குண்டு – பூவண்ணன்
– பாலர் களஞ்சியம் – கல்வி கோபாலகிருஷ்ணன்
– ஆயிஷா – இ.ரா.நடராசன்
– இருட்டு எனக்கு பிடிக்கும் – ச.தமிழ்ச்செல்வன்
– தங்கத்தீவு – வாண்டுமாமா
– மந்திரக்குளம் – வாண்டுமாமா
– நிலாப் பாட்டி – பெ.தூரன்
– நாட்டியராணி – பெ.தூரன்

– விழியன்
(நன்றி – தமிழ் புத்தகங்கள் ஓர் அறிமுகம் – தொகுப்பாசிரியர் சுப்பு)

Advertisements
2 Comments leave one →
  1. Viji Senthil permalink
    April 28, 2016 3:19 am

    ஓர் இலக்கியம் பற்றிய இன்னோர் இலக்கிய படைப்பாக அமைந்துள்ளது இக்கட்டுரை. நன்றி.

  2. lakshmana samy permalink
    November 23, 2017 3:59 pm

    கழந்தைகளின் வாசிப்பு உலகை பற்றி ஒரு நல்ல புரிதலை உணர்திமமைக்கு சந்தோஷமான நன்றிகள் பல

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: