Skip to content

சிறுவர் இதழ் – சில எண்ணங்களும் ஆலோசனைகளும் – விழியன்

November 23, 2017

சிறுவர் இதழ் – சில எண்ணங்களும் ஆலோசனைகளும்
– விழியன்

சிறுவர் இலக்கியத்தின் மிக முக்கிய அங்கம் சிறுவர்களுக்கான இதழ்கள். இதில் பலவேறு நுட்பங்கள் இருக்கவே செய்கின்றது. தமிழில் வெளிவரும் சிறுவர் இதழ்களின் எண்ணிக்கை போதவே போதாது. மேலும் மேலும் பல பல சிறுவர் இதழ்கள் வெளிவந்துகொண்டே இருக்க வேண்டும். ஒரு காலத்தில் ஒரே நேரத்தில் சுமார் 50 சிறுவர் இதழ்கள் வந்திருக்கின்றது, அந்த பொற்காலத்தை நாம் மீட்டுக்கொண்டு வருவோம். சிறுவர் இதழ்களை துவங்க இருப்போருக்கு சில எண்ணங்களும் ஆலோசனைகளும் இதோ

என்னென்ன உள்ளடக்கம் இருக்க வேண்டும் என்னென்ன தவிர்க்கலாம்?
1. கதை:
கட்டாயம் நம்ம ஊர் எழுத்தாளர்கள் நேரடியாக எழுதிய ஒன்று அல்லது இரண்டு கதைகள் இருப்பது அவசியம். சிறுவர்கள் இதழுக்கான உயிர் நாடியே கதைகள் தான். கதைகளும் குழந்தைகளை வசீகரிக்கும் விதமாகவும், அதே சமயம் அவர்களாகவே வாசிக்க ஏதுவாகவும் இருப்பது அவசியம்.

2. மொழிபெயர்ப்பு கதை :
நிச்சயம் ஒரு மொழிபெயர்ப்பு கதையாவது இருப்பது அவசியம். மொழிபெயர்ப்பு கதைகள் என்ன செய்யும்? அது மற்ற ஊர்களில் நிலப்பரப்பு, பழக்க வழக்கம், விழுமியங்கள், நம்பிக்கைகள், மக்கள் உணவுப்பழக்கம், வேறு சிந்தனை என பலவற்றினை விதைக்கும். இவ்வாறு அமையும் கதைகளை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

3. பாடல்:
பாடல் என்றதும் அழ.வள்ளியப்பாவிற்கு ஓடிவிடக்கூடாது. இன்னும் அழ.வள்ளியப்பாவைத் தாண்டி வரவே இல்லை என்பது வருத்தமான விஷயம். அவர் பாடல்கள் உச்சம் என்பது நிதர்சனம் ஆனாலும் தற்காலத்தில் எழுதப்படும் பாடல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். இது ஒரு கண்டுகொள்ளப்படாத பகுதி. பாடதிட்டத்திலும் இன்னும் அழ.வள்ளியப்பாவை வைத்தே பாடிக்கொண்டு இருக்கின்றோம். வெற்றிச்செழியன் (பள்ளி முதல்வர்), செந்தில் பாலா(ஆசிரியர்), பாவண்ணன் (எழுத்தாளர்) ஆகியோர் சிறந்த சிறுவர் பாடல்களை எழுதி வருகின்றனர். மாறிவரும் சமூக சூழல்களில் இது அவசியம்.

4. ஓவியம்:
இதழ் முழுக்க ஓவியங்களால் நிரம்பி இருக்க வேண்டும். அது சின்ன சின்ன ஓவியமாகவும் ஒரு பக்க ஓவியமாகவும் இருக்கலாம். ஏனெனில் எல்லா குழந்தைகளும் (மாணவர் என்ற பதத்தை வேண்டுமென்றே தவிர்க்கின்றேன், காரணம் பின்னர்) எழுத்தில் ஆர்வம் காட்டமாட்டார்கள். ஓவியம் அவர்களை ஈர்த்து அதில் இருந்து எழுத்திற்கு தாவுவார்கள்.

5. சிறுவர்களின் பங்களிப்பு:
குறைந்தது 20-30% சிறுவர்களின் பங்களிப்பு ஒரு சிறுவர் இதழுக்கு அவசியம். அதன் வடிவம் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கதை, கட்டுரை, பேட்டி, அனுபவம், கேள்விகள், பயணம், புதிர், புதிய விளையாட்டு. இப்படி எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஏராளமான திறன்கள் மாணவர்களிடையே கொட்டிக்கிடக்கின்றது அதனை வெளிக்கொணரும் விதமாக இந்த பகுதி அமைய வேண்டும். வழக்கமாக இந்த பகுதி தமிழ் சிறுவர்கள் இதழில் ஒரு filler ஆக தான் இருக்கின்றது. இடத்தை நிரப்பும் வேலை. கவனத்துடன் தேர்ந்தெடுத்த படைப்புகளும் அதே போல குழந்தைகளை தொடர்ந்து உற்சாகப்படுத்தி எழுதவோ படைப்பினை வெளிக்கொணரவோ முயற்சிகள் அவசியம்.

6. சின்னஞ்சிறு கட்டுரைகள்:
கட்டுரைகளை அரை பக்கத்திற்கு மிகாமல் பார்த்துக்கொள்வது அவசியம். அந்த கட்டுரையில் வடிவம் தற்சமயம் கடித வடிவமும் கதைக்கட்டுரை வடிவமும் பெற்றுள்ளது. இந்த கட்டுரைகள் அவர்களின் செயல்பாடுகளுக்கு வழிவகுக்கும் விதமாக, வாழ்கை திறன்களை Life Skills களை மேம்படுத்தும் விதமாக அமையலாம்.

7. புதிர்கள்:
1-8 வகுப்பு குழந்தைகள் இதனை வாசிக்கின்றார்கள் என்பதால் இருவருக்கும் 1-4 வகுப்பு 5-8 வகுப்பு சமமான பகுதிகள் இருப்பது அவசியம். Primary மாணவர்களை எழுத்தின் பக்கம் தள்ளும் முயற்சியாக இந்த புதிர்கள் அமைந்திட வேண்டும். நிச்சயம் 1-2 பக்கங்கள் புதிர்களுக்காக ஒதுக்கலாம்.

8. புதிய கதாபாத்திரம்:
ஒவ்வொரு இதழுக்கும் ஒரு கதாபாத்திரம் பேசுவது போக செய்யலாம். எ.கா மண்புழுவினை ஒரு இதழின் நாயகனாக வைக்கலாம். எல்லா கட்டுரை, புதிர், கதைக்கு அருகே ஒரு மண்புழு அந்த படைப்பு மீது ஒரு கேள்வி வைக்கும்படி ஓவியம் வரைந்து லேஅவுட் செய்யலாம். அது கோக்குமாக்கான கேள்வியாகவும் இருக்கலாம். அல்லது ஒரு ஆச்சர்ய வெளிப்பாடு.

9. தலையங்கம்:
இது மிகவும் அவசியமான ஒன்று. நேரடியாக குழந்தைகளிடம் பேசுவதற்காக வாய்ப்பு. எப்படி இந்த இதழை பயன்படுத்தலாம் இந்த இதழில் ஸ்பெஷல் என்ன அல்லது அந்த சமயம் உலகில்/இந்தியாவில் நடக்கும் சம்பவம் குறித்து உரையாடலாம்.

10. Theme
இரண்டு அல்லது மூன்று இதழ்களுக்கு ஒருமுறை தீம் வைக்கலாம். அந்த மாதத்தில் வரும் ஏதேனும் ஒரு நாள் அல்லது ஒரு பறவை, ஒரு விலங்கு, மரம், பூ, உயிரினம் என ஒரு தீம் தீர்மானித்து கதைகளும், கட்டுரைகளும் அதனை ஒட்டி இருக்கலாம்.

11. நூல் அறிமுகம்:
இந்த பகுதி மிக அவசியம். நம் இதழில் நோக்கமே இங்கிருந்து இங்கிருந்து அவர்கள் பறந்து செல்ல வேண்டும், அது நூலகம் நோக்கியோ, சரணாலயம் நோக்கியோ, தங்கள் ஊர் மக்கள் நோக்கியோ, வரலாற்றினை நோக்கியோ, ஆனால் பயணப்பட வைக்க வேண்டும்.

12. குறும்படம்/சினிமா அறிமுகம்:
இதனை ஒரு கதை போலவே சொல்லிடலாம். ஏனெனில் அவர்கள் இந்த படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைக்குமோ கிடைக்காதோ. நம் நாட்டு படங்கள் மட்டுமல்ல அயல் நாட்டு படங்களையும் அறிமுகம் செய்யலாம்.

13. படக்கதை:
கதையினைப் போலவே படக்கதையும் சிறப்பான கவனத்தை ஈர்க்கும்.

14. கலைகள் அறிமுகம்
15. விளையாட்டுகள் அறிமுகம் / உள்ளூர் சொல்லாடல்கள் / பழமொழியும் அதன் கதைகளும்

16. அவர்களின் செயல்பாட்டிற்கான திட்டங்களை தரலாம் :
எ.கா – கையெழுத்து சிறுவர் இதழ் தயாரிக்க ஐடியா தரலாம் – சிறப்பாக வந்திருக்கும் இதழை அடுத்த இதழில் அறிமுகம் செய்யலாம்.
ஊரின் வரைபடத்தினை மாணவர்களே வரையச் சொல்லலாம். தபால்பெட்டி, பஸ் நிலையம், கோவில், சர்ச், வீதி பெயர்கள் ஆகியவற்றை அவர்களே குறிப்பிட்டு படம் வரைய ஊக்கப்படுத்தலாம்.

17. நான் வாசித்த நூல் – நூலகம் சென்று குழந்தை வாசித்த நூல் பற்றி 4 வரி – 10 வரி அறிமுகம்.
18. எங்கள் ஊரில் நடந்தது / ஊர் திருவிழா
19. என் சிறப்பு மாணவன்
20. நகரங்களின் அறிமுகத்தொடர்.

தவிர்க்கப்பட வேண்டியவைகள்:
1. இதர பத்திரிக்கைகளில் வெளியான கட்டுரைகளை வெட்டி ஒட்டி நன்றி தெரிவித்தல். நம்மிடமே ஏராளமான source உள்ளது. அவற்றினை பயன்படுத்துவது அவசியம்.
2. அரை பக்கத்திற்கு மிகாத கட்டுரைகள்
3. அறிவியல் செய்திகள் என்ற பெயரில் திணித்தல் அவசியமே இல்லை. குழந்தைகளுக்கு தேவை செய்திகள் அல்லவே அல்ல.
4. அறிஞர்களின் வாழ்கை வரலாற்றை சொல்கிறோம் என்று அவர் பிறந்த ஊர், தேதி, பெற்றோர் என அதில் கவனம் செலுத்துவதை தவிர்த்து அவர்கள் அறிஞர்களான மாறிய சூழல், சிறுவர்களாக இருந்த போது அவர்கள் சந்தித்த சவால்கள் என்று விவரிக்கலாம்.
5. சமகால கார்ட்டூன் கேரக்டர்கள் நம் இதழில் இடம் பிடிப்பதை தவிர்த்தல் நலம். அந்த டீவிக்களுக்கு நாமே மார்கெட்டிங் செய்தது போலாகிவிடும். ஒவ்வொரு கார்ட்டூன் கேரக்டர் பின்னும் ஏராளமான விளம்பரமும் அரசியலும் உள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
6. வலைதள அறிமுகமும் சுட்டிகளும். எட்டாம் வகுப்பு வரை குழந்தைகளுக்கான இதழ் என்று இருந்தால் இந்த வலைதள அறிமுகமும் சுட்டிகளையும் தவிர்க்கலாம். இது மற்ற இதழ்களில் இடம்பெறக்காரணம் அவை நல்ல Fillers.

சர்வதேச இதழ்கள்:
சர்வதேச அளவில் இதழ்கள் எக்கச்சக்கமாக உள்ளன. அவற்றில் எல்லாம் ஒரு அசாத்தியமான விஷயம் அதன் வடிவமைப்பு தான். அத்தனை நேர்த்தியாக அத்தனை அத்தனை வண்ணங்களுடன் வடிவகைப்பட்டு இருக்கின்றது.

ஆசிரியர் குழு:
• குறைந்தது ஆறு இதழ்களுக்காவது 90% ஆசிரியர் குழு உறுப்பினர்கள் மாறக்கூடாது. அப்போது தான் தீர்க்கமாக இதழ்கள் இருக்கும்.
• பள்ளி ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், பத்திரிக்கை நண்பர்களையும் ஆலோசனைக்காவது வைத்துக்கொள்ளலாம். ஏனெனில் ஒரு பரந்த பார்வை அப்பொழுது கிடைக்கும்.
• தமிழில் வெளிவரும் சுமார் 10 சிறுவர் இதழ்களையும் ஒன்றாக அமர்ந்து எல்லா ஆசிரியர் குழு உறுப்பினர்களும் அரை நாளாவது ஆய்வு / கலந்தாய்வு செய்ய வேண்டும். அப்போது தான் எதை விடலாம் / எதனை சிறப்பாக செய்யலாம் என்ற புரிதல் கிடைக்கும்.
• Randomஆக 20 குழந்தைகளுக்கு இதழ் அச்சிடும் முன்னரே கட்டுரைகளை கதைகளை வாசிக்க கொடுக்கலாம். அவர்களின் கருத்துக்களை கேட்டு அதன்படி மாற்றங்களை செய்யலாம்.
• நட்சத்திர எழுத்தாளர் / புகழ்பெற்ற ஆசிரியர் ஒரு கதை / கட்டுரை கொடுத்துள்ளார் என்பதற்காகவே ஒர் படைப்பினை அச்சில் ஏற்ற வேண்டிய அவசியமில்லை.
• இதழில் இடம்பெறும் எல்லா பகுதிகளும் ஆசிரியர் குழுவின் எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டும்.
• முதல் இதழினை தவிர்த்து மற்ற இதழ் content ஒரு மாதம் முன்னரே தயாரானால் சிறப்பாக பட்டி தீட்டலாம்.
• தமிழகம் முழுக்க இருக்கும் வளங்களை (ஆசிரியர் / மாணவர்கள்) பயன்படுத்திக்கொள்ளுதல் அவசியம்.
• லேஅவுட்டில் நிறைய விஷயங்களை கொடுக்க வேண்டும் என நினைக்க வேண்டாம் நிறைவான விஷயங்களை கொடுத்தாலே போது.
• வாசிப்பவர்களை குழந்தைகளாக பாவித்து இதழினை தயார் செய்யவும், மாணவர் என்றால் போதிக்கும் எண்ணம் வந்துவிடும். இதழில் அவர்கள் அறிவினை பெறுவதைவிட உணர்வினை பெற வேண்டும்.

சிறுவர் இதழ்களை துவங்க இருக்கும் ஒவ்வொரு குழுவிற்கும் / நண்பர்களுக்கும் / ஆர்வலர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் அன்பும்

– விழியன்

Advertisements
No comments yet

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: