சிறார் நூல் தயாரிப்பில் கவனிக்கவேண்டிய அம்சங்கள்
August 3, 2021
சிறார் நூல் தயாரிப்பில் கவனிக்கவேண்டிய அம்சங்கள் – விழியன்
ஒரு சிறுவர் நூலில் உள்ளடக்கத்தை தாண்டி நிறைய விஷயங்களை கவனிக்க வேண்டும். உள்ளே இருக்கும் எழுத்து எவ்வளவு வலிமையானதாக இருக்கவேண்டுமோ அதே போல book makingலிலும் கவனம் நிறைய தேவை. என் பார்வையில் இருந்து இதனை முன் வைக்கின்றேன். பல விஷயங்களை கவனித்து செய்தாலும் சில சமயம் சமரசம் செய்ய வேண்டியும் இருக்கின்றது.
- புத்தகம் என்ன வயதினருக்கானது என குறிப்பிட வேண்டும். மழலைப்புத்தகம் (<8) அல்லது சிறார்களுக்கானது (>8) என்றாவது குறிப்பிட்டு இருக்கவேண்டும். சமீபத்திய வருடங்களில் இந்த போக்கு வெகுவாக தமிழ் சூழலில் மாறி வருகின்றது.
- சிறார் புத்தகத்திற்கு வாழ்த்துரை தேவையா என்பதே என் எண்ணம். அது இருந்தாலும் ஒரு பக்கதிற்கு மிகாமல் இருந்தால் நலம். மற்ற மொழி புத்தகங்களில் இந்த போக்கினை காணமுடியாது. நேராக கதைக்கோ நாவலுக்கோ பாடலுக்கோ சென்றிடுவார்கள். பெரியவர்களுக்கான புத்தகத்தினை வடிவத்தை பார்த்து அதே போல இருக்கவேண்டும் என்று செய்கின்றார்கள் என்றே நினைக்கிறேன். என்னைப்பொறுத்தவரை முன்னுரைகள் தேவையில்லை. அரைபக்கத்தில் நன்றிகளையும் புத்தகம் உருவான விதத்தையும் குறிப்பிடலாம்.
- லே அவுட் மிக முக்கியம். வடிவமைப்புகள் மாறிக்கொண்டே வருகின்றது. தொலைக்காட்சி, வீடியோ கேம்களில் இருந்து மீட்டு புத்தகத்தின்பால் குழந்தைகளை கொண்டுவருகின்றோம் எனில் புத்தகம் புத்தம் புதியதாக, பார்த்ததும் வாசிக்கும்படியான அமைப்பில் இருக்கவேண்டும்.
- அச்சிடுவது தரமான தாள்களாக இருப்பது அவசியம்.
- ஓவியங்களில் அதிக கவனம் செல்லவேண்டும். சிறார்களுக்கான புத்தகத்தில் ஓவியங்களில் வேறு வேறு முயற்சிகளை செய்ய வேண்டும். வேறு வேறு ஸ்டைல்கள். அப்ப மழலைப்புத்தகத்தில், அதில் இன்னும் அதிகமாக செய்ய வேண்டும். ஓவியம் எப்படி இருக்கவேண்டும் என்பது மிக நெடிய தலைப்பு.
- ஒரே ஓவியத்தை நூலின் வெவ்வேறு இடங்களில் பயன்படுத்துவதை (பாதி வெட்டி, ஒரு பகுதி) தவிர்க்கவேண்டும். அது பக்கத்தை நிரப்ப பயன்படுத்தபப்டும் உத்திமட்டுமே. அது ஒருவகையில் குழந்தைகளுக்கு ஏமாற்றமே.
- எழுத்துப்பிழைகள் எவ்வளவு தவிர்க்கமுடியுமோ அவ்வளவு தவிர்க்கப்படவேண்டும். குழந்தைகளின் மனதில் ஆழமாக இவை பதிந்துவிடும். ஏகப்பட்ட எடிட்டிட் கண்டிப்பாக தேவை. பிழைகளை 99% குறைக்கவேண்டும். 1% நமக்கே தெரியாமல் என்ன செய்தாலும் நிகழும்.
- ஏராளமான எழுத்துருக்கள் தற்சமயம் வந்துவிட்டது. அவற்றை பயன்படுத்தலாம். ஆனால் அச்சுக்கு போகும் முன்னர் ஒரு முறை ப்ரிண்ட் எடுத்து பார்ப்பதும் நல்லது. பல சமயங்களில் கணினியில் நன்றாக தெரியும் எழுத்துரு அச்சில் கொஞ்சம் ஏமாற்றிவிடும்.
- தொகுப்பு புத்தகங்களை போடும்போது கதை ஆசிரியர்களின் சிறு குறிப்பே போதுமானது அதே சமயம் அது சரியானதாகவும் பார்த்துக்கொள்ளவேண்டும், அதிலே தகவல் பிழைகள் வராமல் பார்த்துக்கொள்வது நல்லது.
- தொகுப்பு நூல்கள பதிப்பிக்கும்போது ஆசிரியர்களின் குறிப்புகளை மொத்தமாக இரண்டு பக்கத்தில் அடக்கிடுவது நல்லது. நடுநடுவே கொடுப்பது வாசகர்களை எரிச்சலூட்டும். தொகுப்புகள் எல்லாம் வாசகர்கள் வாசிக்கத்தானே? மேலும் தொகுப்புக்களில் கதை எந்த மாதம்/ஆண்டில் எழுதப்பட்டது என்றும் இருப்பது நலம். வரலாற்று ஆவணமாகவும் அது அமையும்.
- நிறுத்தக்குறிகள், கமா, ஆச்சரியக்குறிகள், மேற்கோள்கள ஆரம்பிப்பது முடிப்பதும் (quotation marks), single quotesல் ஆரம்பித்தால் அதிலேயே முடிப்பது ஆகியவைகளை கவனிப்பது அவசியம். இது வாசிப்பினை எளிமையாக்கும். தேவையான இடங்களில் பெரிய பாராக்களை உடைத்துபோடுவதும் நல்லது.
இவை அனைத்துமே ஒரு உடலின் மேல் தோல்,எலும்பு மட்டுமே உயிர் உள்ளே இருக்கும் உள்ளடக்கமும் எழுத்தும் தான்.
- விழியன்.
No comments yet