Skip to content

இந்த காலாண்டு விடுமுறைக்கு செய்யலாம்?

September 22, 2016

இந்த காலாண்டு விடுமுறைக்கு செய்யலாம்?

(நீண்ட பயணங்கள் சாத்தியமில்லாத, உடனடியாக வெளியூர்களுக்கு சென்று வரமுடியாத இந்த ஒருவாரம் – பத்து நாள் வரையிலான இந்த விடுமுறையில் எப்படி ‘நினைவுகளை’ பரிசளிக்கலாம்)

1. ஒரு வண்டி எடுத்துக்கொண்டு குழந்தையுடன் சென்று கடைகளில் கிடைக்கும் பழைய சிறுவர் இதழ்கள் என்ன? எங்கெங்கு கிடைக்கின்றது என விசாரித்து, வாங்கிவரவும்

2. குழந்தை பாடல்களை (தமிழ்) குழந்தைகளுடன் மெட்டமைத்து பாடி விளையாடலாம்

3. வீட்டை சுற்றி நடந்து சென்று பத்து வகையான இலைகளை பறித்து வரச்சொல்லவும். கொண்டு வந்த இலைகளைக்கொண்டு அழகிய பொருள் ஏதேனும் செய்ய முயற்சிக்கலாம். ஒவ்வொரு இலை எந்த மரத்தில்/ செடியில் இருந்து வந்தது என கண்டுபிடிக்கலாம்.

4. வழக்கமாக பள்ளிக்கு செல்லும் நாட்களில் விரைவில் உறங்க செய்துவிடுவோம். விடுமுறை நாளில் ஒன்பது மணிக்கு மொட்டைமாடிக்கு சென்று படுத்துக்கொண்டு எல்லோரும் வானை பார்க்கவேண்டும். நட்சத்திரங்களையும், நிலாவையும் பார்த்து ஒரு மணி நேரம் பேச வேண்டும். பேச்சு வானை பற்றியதாக மட்டும் இருக்க வேண்டும் (பின்குறிப்பு: இதனை மழை நாளில் முயற்சிக்க வேண்டாம்)

5. நகரில்/ஊரில் இருக்கும் அவர்களுடைய நண்பர்கள் வீட்டிற்கோ/ நம்முடைய நண்பர்கள் வீட்டிற்கு சென்று காலை முதல் மாலை வரையில் அங்கே கழிக்க விடலாம். மறுநாள் அவர்களை நம்வீட்டிற்கு வரவழைக்கலாம்.

6.அருகே எங்கே நூலகம் இருக்கு என்பதை தேடி, அங்கே தினம் சில நிமிடங்கள் அவர்களை அங்கே செலவழிக்க செய்ய வைக்கலாம். தங்கள் நண்பர்களுடன் சென்றால் இன்னும் சில நிமிடங்கள் அதிகமாகவும் உற்சாகமாகவும் செலவழிப்பார்கள்.

7.அருகே இருக்கும் நர்சரி சென்று அங்கே இருக்கும் பூக்கள் செடிகளை நோட்டம்விடலாம். வீட்டில் எதனை வளர்க்க முடியுமோ அதனை வளர்க்க இந்த விடுமுறையில் துவங்கலாம்

8. சிறுவர்களுக்கான நல்ல உலக சினிமாக்கள் ஏராளமாக உள்ளன. அவற்றை டவுன்லோட் / சீடி வாங்கி குழந்தைகளுடன் அமர்ந்து ஒன்றாக பார்க்கலாம்.

9. வீட்டில் இருக்கும் புத்தகங்களை பட்டிலிட செய்யலாம். (புத்தகங்களை தொடுவார்கள், தலைப்புகளை பார்ப்பார்கள். புத்தகம் இல்லாதவர்கள் புத்தகம் வாங்க வேண்டும் என உணர்வீர்களாக)

10. ஒன்றாக சமைக்கலாம்

11. வீட்டின் அருகே இருக்கும் காய்கடைக்கு அனுப்பி, பட்டியலில் இருக்கும் காய்களையோ அவர்களுக்கு பிடித்தமான காய்களையோ வாங்கிவரச்சொல்லலாம்,

12. அருகே இருக்கு காய்கறி சந்தை / சந்தைக்கு சென்று அங்கே என்னென்ன விற்கின்றார்கள் என்பதை மட்டும் பார்த்துவிட்டு வரலாம்.
மிகப்பெரிய பிரச்சனை இக்கால குழந்தைகள் உடனே ‘ஃபோர் அடிக்கின்றது’எனச் சொல்ல துவங்கிவிடுகின்றார்கள். அதற்கு முக்கிய காரணம் நாம் தான். காரணங்கள் பல. முடிந்த அளவிற்கு தொலைக்காட்சி முன்னரும், கணினி, மொபைலுடன் நேரம் செலவழிப்பதை குறைக்கலாம். கொஞ்சம் திட்டமிடலும் கொஞ்சம் நம் நேரமும் செலவிட்டால் இந்த குறுகிய விடுமுறையை நல்ல நினைவுகளாக மாற்றலாம்.

சியர்ஸ் !

-விழியன்

Advertisements

சட்னியில் இருந்து ஆரம்பிப்போம்

September 22, 2016

எந்த மரத்தை காட்டி இது என்ன எனக் கேட்டால் ‘ட்ரீ’ என்று முடித்துவிடும் இளம் தலைமுறையினரை நாம் வளர்த்துக்கொண்டிருக்கின்றோம். அது என்ன மரம், அதில் என்ன காய்க்கும் என எதையும் அவர்கள் எங்கும் கற்பதில்லை. சமீப காலமாக வெகு சுலபமாக இதனைக் கேட்கலாம் “வைட் சட்னியா ரெட் சட்னியா க்ரீன் சட்னியா?”. எல்லா சட்னிகளையும் இந்த மூன்று வண்ணங்களில் அடக்கிவிட்டோம். இன்னும் ஒரு சட்னி இருக்கு ‘ஆரஞ்சு சட்னி’. துவையல்களையும் இப்ப சட்னிக்குள்ள கொண்டு வந்தாச்சு. அந்த அந்த சட்னிக்கு அதற்குரிய பெயர்களை சொல்லியே குழந்தைகளுக்கு அறிமுகம் செய்வோம், அழைப்போம்.

சட்னியில் இருந்து ஆரம்பிப்போம்.

சிறார் இலக்கியத்தின் பிதாமகன் – ஜான் நியூபெரி

September 21, 2016

சிறார் இலக்கியத்தின் பிதாமகன் – ஜான் நியூபெரி

தற்சமயம் நாம் வெற்றிகரமாக பள்ளி கல்வியில் புகுத்தியுள்ள “Joy of Learning” முறையை ஜான் லாக்கி 1740களில் பரிந்துரைத்துள்ளார். இவருடைய கல்வி முறையை உத்தியை வெற்றிகரமாக செயல்படுத்தி அதனை புத்தக வடிவில் கொண்டு வந்தவர் ஜான் நியூபெரி. இவரே உலக சிறார் இலக்கியத்தின் பிதாமகன் என்று அழைக்கப்படுகின்றவர். தன்னுடைய முதல் நூலான A Little Pretty Pocketகை வண்ணமயமான, பிரகாசமான தாள்களில் வெளியிட்டார். நூலினை சிறுவன் வாங்கினால் அவனுக்கு ஒரு பந்தும், சிறுமி வாங்கினால் அவளுக்கு ஒரு ஊசிப்பஞ்சும் கொடுக்கப்பட்டது. இந்த பொருட்களை வைத்து அவர்களின் நற்செயல்களை ஊசி குத்தி விளையாடினார்காளாம். சிறார் இலக்கியத்தின் பிதாமகனாக இவரை கொண்டாட பல காரணங்கள் உள்ளன. இவரே இதனை வணிக வெற்றியாக்கினார். இவரே முதன்முதல் சிறுவர் இதழிற்கான வடிவத்தினை 1751-52ல் கொடுத்துள்ளார். இவருடைய The History of Little Goody Two-Shoes (1765) தான் முதல் சிறார் நாவல் என கருதுகின்றனர்.

– விழியன்

சிறுவர் விளையாட்டு பாடல்கள் சில..

September 7, 2016

சிறுவர் விளையாட்டு பாடல்கள் சில..

சின்ன சின்னக் கல்லு பொறுக்கி
சிங்காரமா பாலங் கட்டி
பாலத்து மேல ஏறிக்கிட்டு
பபூன் வேஷம் போட்டுகிட்டு
தில்லாலங்கடி தில்லாலே
எனக்கு மீசை நல்லால்லே !

—-

எங்க வீட்டு நாய்
எலும்பு திங்கப் போச்சு
கல்லால அடிபட்டு
காலு ஒடிஞ்சு போச்சு

—-

அடடா அடடா அண்ணாமலை
அண்ணாந்து பாத்தா ஒண்ணுமில்லே
போகப் போக ஜவுளிக்கடை
போயிப் பாத்தா இட்லிக்கடை
இட்லிக்கும் சட்னிக்கும் சண்டை வந்ததாம்
ஈரோட்டு மாமனுக்கு தொந்தி வந்ததாம்

—-

எங்கப்பா உங்கப்பா – தகர டப்பா
எங்கம்மா உங்கம்மா – மனோரம்மா
எங்கண்ணன் உங்கண்ணன் – வெளக்கெண்ணே
எங்கண்ணி உங்கண்ணி – தேங்காத்தண்ணி
எங்க பாட்டி உங்க பாட்டி – தலையாட்டி
எங்க தாத்தா உங்க தாத்தா – வெண்ணெய்த் தாத்தா
எங்க் தம்பி உங்க தம்பி – கரண்டு கம்பி
எங்கக்கா உங்கக்கா – வெண்டக்கா

—-

டாம் டூம் பருப்பு
தவலையில வேகுது..
மைசூர் அப்பளம்
பெங்களூர் பாயாசம்
சம்பந்தியக் கூப்பிடுங்க..
சாப்பாடு போடுங்க
வெத்தல பாக்கு வையுங்க..
வெளியே புடிச்சுத் தள்ளுங்க !

—-

மழை வருது… மழை வருது
கொடையப் புடிங்க
முக்காப் படி அரிசி போட்டு
முறுக்கு சுடுங்க..
ஏர் உழும் மாமனுக்கு
எடுத்து வையுங்க
ஊரு சுத்து மாமனுக்கு
சூடு வையுங்க

(நன்றி – பெருந்துறை வட்டம் சிறுவர் விளையாட்டு பாடல்கள் ஆய்வு – உஷாராணி – பெரியார் பல்கலைக்கழகம்)

தமிழில் வெளிவந்த சிறுவர் இதழ்கள்/ வெளிவந்த ஆண்டு

September 6, 2016

தமிழில் வெளிவந்த சிறுவர் இதழ்கள்/ வெளிவந்த ஆண்டு

1. பாலதீபிகை – 1840
2. சிறுபிள்ளைகளின் நேசத்தோழன் – 1841
3. பாலியர் நேசன் – 1859
4. பாலர் தூதன் – 1905
5. பாலியர் மித்ரன் – 1911
6. பாலிய சஞ்சாரி – 1912
7. பால விநோதினி – 1918
8. பால வித்யா – 1930
9. பால சிந்தாமணி – 1935
10. சிறுவர் அறிவுக்கதி – 1935
11. பால போதகன் -1938
12. பாப்பா – 1941
13. அணில் – 1946
14. அம்புலிமாமா – 1947
15. வானவில் – 1948
16. செளசெள – 1948
17. கல்கண்டு – 1948
18. மாணவர் விருந்து – 1949
19. சந்திர ஒளி – 1949
20. பேபி – 1949
21. பிங் பிங் – 1949
22. ஜில் ஜில் – 1949
23. ரயில் – 1949
24. சித்திரக்குள்ளன் – 1949
25. ரசமணி – 1949
26. தம்பி – 1949
27. பாபுஜி – 1949
28. கண்ணன் – 1960
29. கிண்கிண் – 1949
30. பூஞ்சோலை – 1951
31. கதா மலர் – 1951
32. சாக்லெட் – 1952
33. பாலபாரதி – 1953
34. சிறுவர் முரசு – 1954
35. கரும்பு – 1954
36. பால்கோவா – 1954
37. பொக்கிஷராணி – 1954
38. தமிழ்ச்சிட்டு – 1966
39. அரும்பு – 1966
40. இந்திரஜால காமிக்ஸ் – 1966
41. பாலர் பூங்கா – 1967
42. பூந்தோட்டம் – 196
43. பால மித்ரா – 1978
44. ரத்னபாலா – 1978
45. ராக்கி – 1979
46. கோகுலம் – 1982
47. துளிர் – 1986
48. சுட்டி விகடன் – 1999
49. தும்பி – 2016
50. குட்டி ஆகாயம் – 2016
51. மின்மினி – 2015
52. பூந்தளிர் – 1984
53. சித்தாரா – 1980
54. பால பாரதம் –
55. பெரியார் பிஞ்சு – 2010
56. ஸ்வீட் – 1980
57. மணி பாப்பா – 1970
58. மான் – 1940
59. முயல் – 1970
60. ரவி – 1950
61. பாபுஜி – 1940
62. சந்திர ஒளி – 1940
63. கங்கணம் – 1970
64. அல்வா – 1950
65. வெற்றிமனி – 1950
66. அணில் மாமா – 1950
67. தம்பீ – 1949
68. சுட்டி – 1981
69. ஆராய்ச்சி மணி
70. மத்தாப்பூ – 1940
71. மான் – 1940
72. டுமீல் – 1940
73. பாப்பா மாலா – 1940
74. சிறுமி – 1940
75. முயல் – 1940
76. மிட்டாய் – 1940
77. சங்கு – 1940
78. கோமாளி – 1940
79. பூஞ்சோலை – 1940
80. டமாரம் – 1940
81. பாலர் ராஜ்ஜியம் – 1940

82. பொம்மை வீடு

83. கண்ணாடி

84. பஞ்சுமிட்டாய் – 2016 (மின்னிதழ்)

இணைப்பு இதழ்களாக வருபவை:
தங்கமலர், சிறுவர் மலர், பட்டம், சிறுவர் மணி, மாயாபஜார்

தொகுப்பு – விழியன்

நன்றி : இணையம், தமிழ்நாளேடுகளின் சிறுவர் இதழ்கள் உள்ளடக்க பகுப்பாய்வு – புவனேஸ்வரி (2006), http://www.thamizham.net

குழந்தைகள் எழுத்தாளர்கள் பட்டியல்

April 28, 2016

தமிழில் தற்சமயம் குழந்தைகளுக்கு எழுதிவரும் எழுத்தாளர்களின் பட்டியல். பெரும்பாலான பேராசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்களுக்காக செயல்படும் செயல்பாட்டாளர்களுக்கு எழுத்தாளர்களின் பெயர்கள் கூட அறிமுகமாகாத நிலையில் பெயர்களையாவது தெரிந்திருக்க வேண்டும் என்ற முயற்சி. 1975ல் குழந்தைகள் எழுத்தாளர்களின் வெள்ளி விழா கொண்டாடியபோது 400 குழந்தைகளுக்கான எழுத்தாளர்களின் பெயரை/விவரங்களை வெளியிட்டு இருக்கின்றார்கள், அங்கிருந்து வெகுவாக குறைந்துள்ளோம் ஆனால் எழுச்சி நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றோம்.

(விழியனும், விஷ்ணுபுரம் சரவணனும் தொகுத்த பட்டியல். விழியனும் விஷ்ணுபுரம் சரவணனும் குழந்தைகளுக்காக எழுதி வருபவர்கள்)

1. யூமா வாசுகி (மொழிபெயர்ப்பு)
2. ஆயிஷா நடராசன்
3. எஸ்.ராமகிருஷ்ணன் (நாவல், கதைகள்)
4. ஞாநி
5. விழியன்
6. விஷ்ணுபுரம் சரவணன்
7. கோ.ம.கோ.இளங்கோ (கதை, நாவல், மொழிபெயர்ப்பு)
8. மு.முருகேஷ் (கதைகள்)
9. உதயசங்கர்
10. ஜெயமோகன்
11. பாலு சத்யா
12. பெ.கருணாகரன்
13. கன்னிக்கோயில் ராஜா
14. த.வி.வெங்கடேஸ்வரன்
15. லலிதாமதி
16. ரமேஷ் வைத்யா
17. வேலு சரவணன்
18. சுப்ரபாரதி மணியன்
19. நக்கீரன்
20. யாழினி
21. சுட்டி விகடன் யுவராஜ்
22. சுகுமாறன்
23. ஜெ.விக்னேஷ்
24. மதுரை சரவணன்
25. உடுமலை
26. மருதன்
27. சாய் சுந்தர்ராஜன்
28. குமாரநந்தன்
29. பேரா.மோகனா
30. ஆசிரியர் மாதவன்
31. ஜீவா ரகுநாத்
32. சைதன்யா
33. அதிஷா
34. பேரா.மாடசாமி
35.வேலு சரவணன் (நாடகங்கள்)
36. செல்வக்குமார் பழனிச்சாமி (எலி)
37. ஹரீஷ்
38. தேவிகாபுரம் சிவா
39. முரளிதரண்
40. பாண்டியராஜன் (மதுரை)
41. சி.ராமலிங்கம்
42. ஏற்காடு இளங்கோ
43. பிஞ்சண்ணா
44. ச.தமிழ்செல்வன்
45. கெளரி
46. ஆதி வள்ளியப்பன்
47. சந்திரா பிரவீன்குமார்
48. புதுகை அப்துல்லா
49. பேரா. ஜாம்
50. மதுமிதா
51. கெளரி நீலமேகம்
52. கலைவாணன்
53. வெ. ஸ்ரீராம் (குட்டி இளவரசன்)
54. ‘மா’ ( ஏ.எஸ்.பத்மாவதி)
55. வீ.பா.கணேசன் (மொழிபெயர்ப்பு)
56. யெஸ்.பாலபாரதி
57. சரவணன் பார்த்தசாரதி (மொழிபெயர்ப்பு)
58. சொக்கன் (கதைகள், கட்டுரைகள்)
59. நீதிமணி
60. விஜயபாஸ்கர் விஜய்
61. வெற்றிச்செழியன்
62. வாமு.கோமு
63. பாலசுப்பிரமணியன்
64. பாவண்ணன்
65. முத்து
66. கோவை சதாசிவம்
67. அ.முருகானந்தம்
68 ஷாஜகான் (மதுரை)
69. சாலை செல்வம்
70. கொ.மா.கோதண்டம்
71. எஸ்.சுஜாதா
72. தஞ்சாவூர் கவிராயர்
73. ஆனந்த் செல்லையா
74. அராத்து
75. விக்னேஷ்
76. தேமொழி செல்வி
77. ஞானேஷ்வர்
78. எஸ்.பாலகிருஷ்ணன்
79. மணதுணைநாதன்
80. சரண்யா
81. பிரபு ராஜேந்திரன்
82. ராஜேஷ் (பஞ்சுமிட்டாய்)
83. தேசிங்கு (பஞ்சுமிட்டாய்)

(தொகுப்பு விழியன் & விஷ்னுபுரம் சரவணன் – இவர்களும் எழுதுவாங்க)

ஜோரா போகலாம் சுற்றுலா! (சிறுவர்களுக்கான கட்டுரை)

April 28, 2016

ஜோரா போகலாம் சுற்றுலா! – விழியன்
(நன்றி சுட்டி விகடன்)

சுற்றுலா போல சந்தோஷமான விஷயம் வேறு இருக்க முடியுமா? ஒரு வாரமோ, ஓரிரு நாட்களோ… வருடம் முழுக்க காத்திருந்த அந்த உற்சாக நாட்களை முழுமையாக அனுபவிக்க என்னவெல்லாம் செய்யணும், என்னவெல்லாம் செய்யக் கூடாது? வாங்க, ஒரு ரவுண்ட் பார்ப்போம்!

பயணத்துக்கு முன்…

எப்படி பயணிக்கப்போகிறோம், எங்கே தங்கப்போகிறோம் போன்ற ஏற்பாடுகளை பெரியவர்கள் கவனிக்கட்டும். நீங்கள், ஒரு நோட்டுப் புத்தகம் எடுங்கள். அப்பாவுக்கு, அம்மாவுக்கு, தாத்தாவுக்கு, தங்கைக்கு என ஒவ்வொரு பக்கத்தை ஒதுக்குங்கள். ஒவ்வொருவருக்கும் தேவையான பொருட்களை அவர்களிடம் கேட்டு பட்டியலிடுங்கள். அவற்றில் எதையெல்லாம் முன்கூட்டியே எடுத்துவைக்கலாம் எனப் பார்த்து எடுத்துவையுங்கள்.

குடை, ஃப்ளாஸ்க், ஸ்பூன் போன்ற பொதுவான பொருட்களுக்கு ஒரு பக்கம் ஒதுக்குங்கள். எத்தனை டிராவல் பேக், அவற்றின் ஜிப் சரியாக இருக்கிறதா போன்றவற்றைப் பரிசோதித்து சரிசெய்யுங்கள்.

இரண்டு, மூன்று துணிப் பைகளை எடுத்துக்கொள்ளுங்கள். போகும் இடங்களில், வாங்கும் பொருட்களை அவற்றில் வைக்கலாம். இதனால், பிளாஸ்டிக் கவர்களில் வாங்குவதைத் தவிர்த்து, சுற்றுச்சூழலைக் காக்கலாம்.

chutti-sutrla

பயணத்தின்போது…

உங்கள் சுற்றுலாவை ரயில் அல்லது பேருந்தில் ஏறியதில் இருந்தே ஆரம்பித்துவிடலாம். பயணத்தின்போது வெளியே பார்த்துக்கொண்டே வாருங்கள். எந்த ஊர்களைக் கடக்கின்றோம், அந்த ஊரின் அடையாளம், சாலை ஓரங்களில் உள்ள மரங்கள், கிராமத்து தெய்வங்களின் சிலைகள் என ரசியுங்கள். செல்போனில் விளையாடுவதைத் தவிருங்கள். வழியில் வரும் ஸ்டேஷன்களின் பெயர்களைக் குறித்துக்கொள்ளுங்கள்.

பயணத்தின்போது வெளி உணவுகளைத் தவிருங்கள். குறிப்பாக, எண்ணெய்யில் பொரித்த நொறுக்குத்தீனிகள் உடலுக்கு ஒவ்வாமல், சுற்றுலாவின் இன்பத்தையே கெடுத்துவிடும்.

சுற்றுலாத் தலத்தில்…

கண்களையும் காதுகளையும் அகலத் திறந்து கொள்ளுங்கள். நீங்கள் போகும் சுற்றுலாத் தலம் ஒரு மலைப்பிரதேசமாக இருக்கலாம், புனிதத் தலமாக இருக்கலாம். அவற்றின் வரலாறு, சிறப்புகளைத் தெரிந்துகொள்ளுங்கள். அந்த ஊரின் மொழி, உணவு வகைகளைக் கவனியுங்கள்.

மலைப் பகுதியில் செல்லும்போது கவனமாக இருங்கள். வேகமாக ஓடாதீர்கள். மரங்கள் உள்ள இடங்களில் சட்டெனச் சென்றுவிடாதீர்கள். மரத்தின் அடியில் கரையான், எறும்பு போன்றவை இருக்கலாம். கவனித்துச் செல்லுங்கள்.

அருவி, குளம், ஏரி போன்ற இடங்களுக்குச் செல்லும்போது கவனமாக இருங்கள். பாறையில் வழுக்கலாம். படகுச் சவாரி போன்ற சமயங்களில் பொறுமையாக ஏறி, இறங்குங்கள்.

கூட்டமாக இருக்கும் இடங்களில், உங்களின் ஒரு கண் பெற்றோர் மீதே இருக்கட்டும். அவர்களைவிட்டு விலகிவிடாதீர்கள்.

நண்பர்களோடு சேர்ந்து உள்ளூர் சுற்றுலா செல்லும்போது மிகமிகக் கவனமாக இருங்கள். உங்களைக் கண்காணிக்க யாரும் இல்லாத அந்த இடத்தில் உற்சாகத்தில் என்ன செய்கிறோம் எனத் தெரியாது. கடற்கரைக்குச் சென்றால், தண்ணீருக்குள் நீண்ட தூரம் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

ஒரு சுற்றுலா என்பது அதோடு முடிவது இல்லை. திரும்பி வந்த பிறகு, நீங்கள் கண்டு ரசித்த விஷயங்களை எழுதுங்கள். புகைப்பட ஆல்பம் தயாரியுங்கள். அது உங்களுக்கான பொக்கிஷமாக இருக்கட்டும்.

– விழியன்
ஓவியம் – பிள்ளை