ட்டுர்..ர்ர்..ர்ர் – சிறுகதை
மயான அமைதி மயான அமைதின்னு அடிக்கடி அமைதிக்கு உவமையாக சொல்லுவாங்க. ஆனா யாருக்கு தெரியும் அங்கு தூங்குபவர்கள் எல்லாம் அமைதியாத்தான் தூங்கிறாங்கன்னு. ஒவ்வொரு த்மாக்களுக்குள்ளும் எத்தனை உளைச்சல்கள், போராட்டம்,சாபாசங்கள் அடங்காமல் இருக்கிறதோ? இதோ இது ராமனாதனின் சமாதி. ராமனாதன் எப்படி இங்க வந்தாரு .. .. .. ??
“டேய் எழுந்திருடா.. எருமைக்கடா மாதிரி தூங்கிற. உங்க அப்பா லோலோன்னு கத்திட்டு இருக்காரு.. ” – இது ராமனாதனின் அம்மா. வழக்கமா எல்லா வீட்டிலும் காலையில் நடக்கிற அர்ச்சனைகள் தான் இது. ராமநாதனுக்கு இது வழக்கமான விடியல் இல்லை. இன்னைக்கு அவன் தானே தன் உயிரை மாய்த்துக் கொள்வதென முடிவெடுத்திருந்தான். நேற்று இரவு வெகுநேரம் உறங்காமல் எடுத்த முடிவு.
“ராமு, சந்திரசேகர் சார்கிட்ட உன் பயோடேட்டா கொடுக்க சொன்னனே கொடுத்துவிட்டயா?
“அதுக்கெல்லாம் அவசியம் இல்லை.. ”
“என்ன ? ”
“கொடுத்துட்டேன்னு சொன்னேன்..”
“எந்த வேலையையும் ஒழுங்கா செய்யாத..”
மற்ற நாளாக இருந்தால் பொறிந்து தள்ளி இருப்பான் இந்த இராமு என்கிற ராமநாதன். அப்பாவிற்கே அதிசயமாக இருந்தது அவன் அமைதி கண்டு. குளியலறைக்கு சென்றான் ராமு. கண்ணாடியை பார்த்தான். “இந்த முகம் நாளைக்கு என்ன அகோரமா இருக்க போகுதோ? பல் தேய்க்க வேண்டுமா? குளிக்கனுமா? எப்படியும் கடைசியா ஒரு முறை குளிப்பாட்டுவாங்க. வேண்டாம் வேண்டாம், இந்த சிந்தனைகள் வேண்டவே வேண்டாம், இவை என் முடிவையே மாற்றிவிடும். அரைமணி கழித்து வெளியே வந்தான்.
அப்பா கையில் கோப்பையோடு அன்றைய தினசரியை படித்துக்கொண்டிருந்தார். அம்மா சமையலறையில் கவனமாக இருந்தாள். தம்பி பள்ளி பாடங்களை போர்க்கால அடிப்படையில் முடித்துக்கொண்டிடுந்தான். யாரும் தன்னை கவனிப்பதில்லை, தன் உணர்வுகளுக்கு மதிப்பு தருவதில்லை, மரியாதையுமில்லை.. பசி வயிற்றை கிள்ளுது. ச்சே!! மனிதனுக்கு தன் கடைசி நாளிலாவது பசி வராமல் இருக்ககூடாதா? அம்மாகிட்ட கேட்டா கொஞ்சம் பொறுமையா இருக்க கூடாதான்னு சொல்லுவாங்க. டிவி போட்டா இந்த கோபி பையன் கத்துவான். நினைத்ததை கூட செய்ய முடியவில்லை..தன் அறையில் சன்னலருகே உட்கார்ந்து வெளியே வெறித்துக்கொண்டிருந்தான்..
எவ்வளவு நேரமானதோ தெரியவில்லை..அப்பாவும் கோபியும் சாப்பிட அமர்ந்து விட்டனர். “அண்ணா..வா சாப்பிடலாம்” . பாசக்கார தம்பி… சாப்பிடும் அறையை நோக்கி நடந்தான். அம்மா கையில் பையுடன் எதிர்பட்டாள்
“ராமு, கிருஷ்ணா ஸ்டோருக்கு போய் இந்த மளிகை சாமான் எல்லாம் வாங்கிட்டு வாந்துடேன், ரொம்ப கூட்டமா இருந்த எண்ணெய் மட்டும் வாங்கிட்டு வா..நீ வாங்கி வந்தாதான் அப்பாவுக்கு மத்திய சாப்பாடு கட்டணும்.”
“பசிக்குதுமா ..”
“சும்மாதான வீட்டில் இருக்க போற, அப்பாவுக்கு லேட் குது இல்ல”
இன்னும் முரண்டு பிடித்தால் அப்பாவிடமிருந்து வேண்டாத திட்டு வரும். வெறுப்புடன் கடைக்கு சென்றான். ” ஒரு வேலை இல்லை என்று எத்தனை ஏமாற்றம். இதற்குமேல் என்னால் முயற்சி செய்ய முடியாது. எல்லாவற்றுக்கும் இன்று விடுதலை. இதோ கடைக்கு போய்விட்டு வருவதற்குள் எத்தனை கேலி கிண்டல் ரோட்டிலே. “ராமு நல்லா வேலை செய்யிற போல இருக்கே..” என்ன சமூகம் இது..” பற்பல கேள்விகனைகள்.
காலை முதல் மாலைவரை மீண்டும் மீண்டும் எவ்வாறு தற்கொலை செய்து கொள்வதென தனக்கு தானே லோசித்துக் கொண்டான். பொதுவாக இந்த தற்கொலை எண்ணம் சில மணி நேரம் கடந்து விட்டால் தானாய் அடங்கிவிடும், னால் ராமனாதன் தேவை இல்லாமல் தன்னை குழப்பிக் கொள்ளாமல் தன் முடிவில் தீவிரமானான். வீட்டிலிருக்கும் எலி மருந்து தான் தன் எல்லா பிரச்சனைகளுக்கும் விடிவெள்ளி என முடிவெடுத்தான். அருகிலே இருக்கும் கடற்கரைக்கு சென்று, இரவு மக்கள் நடமாட்டம் குறைந்த பிறகு குடிக்கலாம் என நினைத்தான். சட்டை பையில் தன் மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை, தாங்க முடியாத வயிற்று வலி காரணமாக எலி மருந்தை சாப்பிடுவதாக எழுதி, வீட்டு விலாசத்தையும் எழுதிக் கொண்டான்.
மாலை வீட்டை விட்டு கிளம்பும் போது அம்மாவை காணவில்லை. அவன் தம்பி எதிர்ப்பட்டான் “ராமுண்ணா எங்க போற? அம்மா வீட்டிலே இல்லையா? ” மனதிற்குள் திட்டிக்கொண்டான்,எத்தனை முறை புறப்படும் போது எங்க போறன்னு கேட்காதேன்னு சொல்லி இருக்கேன். இருந்தும் அவன் தலையை கோதிவிட்டு வேகமாக நடந்தான்..
கடற்கரை. . . . . .
பிரதான கடற்கரை இதுவல்ல. கையால் குறைவான கூட்டம் தான் எப்போதும். அங்கும் இங்கும் காதல் ஜோடிகள், பக்கத்து கடற்கரை கிராமத்து சிறுவர்கள், படகிலே சிலர் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அருகே இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து சில வயோதிகர்கள் நடந்து தங்கள் கடந்த காலத்தை அசை போட்டபடி. சூரியன் மறையட்டும், இருள் பிறக்கட்டும் தன் வேலையை முடிக்கலாம் என அமர்ந்து இருந்தான். தனக்கு பக்கத்தில் ஒரு சின்ன குடும்பம் வந்து சேர்ந்தனர். கணவன், மனைவி மற்றும் பத்து வயது சிறுவன்.
“பீச்சுக்கு வரும்போதும் புக்ஸ் எடுத்துட்டு வரனுமா? என்னடா மகேஷ் படுத்துற? புக்ஸ் எல்லாம் மணல் பாரு..”
தனக்கு தானே சிரித்தான் ராமு. படிச்சி மட்டும் என்ன கிழிக்க போறான்.??
“சார் இந்த புக்ஸ், பை எல்லாம் பார்த்துக்கொள்கிறீர்களா? கொஞ்ச நேரம் காலை நனைத்து விட்டு வந்து விடுகிறோம். தேங்ஸ் சார் ” ராமுவிடம் கண்காணிக்கும் பொறுப்பு.
“ட்டுர்.. ர்ர்.ர்ர் ” என்ற சத்தத்துடன் ஒரு சிறுவன் ஓடிக்கொண்டுருந்தான். கையிலே சுண்டல் கூடை. படிய வாறிய தலை. சுத்தமான டைகள். இல்லாத வண்டி ஓட்டியபடி சுண்டல் விற்றான். காதல் ஜோடிகளிடம் சாமர்த்தியமாக விற்றான். முதலிலேயே வாங்கி விட்டால் தப்பித்தார்கள், இல்¨லெயெனில் வண்டியில் சுற்றுவதென அவர்களை சுற்றி சுற்றி வந்தான். கடைசியில் தனிமை கெடுகிறதென சுண்டல் வாங்கினர். அனேகமாக ஒருவரையும் வாங்காமல் விடவில்லை.
“ட்டுர்.. ர்ர்.ர்ர் ” வண்டி ராமுவிடம் நின்றது. கால்களால் ஸ்டேண்டு போடுவதை போல பாவனை செய்து கூடையை இறக்கினான். முகத்தில் சின்ன புன்னகையோடு “சார் சுண்டல் சார் ” என்று வேண்டுமா வேண்டாமா என்று கூட கேட்காமல், சுண்டலை கப்பிலே போட்டான்.
“உன் பேரு என்ன தம்பி? ”
“சுந்தரேசன் ”
” சுண்டல் எவ்வளவு? ஸ்கூல் படிக்கலியா? ”
கேள்விகள் எதற்கும் பதிலில்லை. அருகே இருந்த புத்தகங்களில் அவன் கண்கள் புதைந்து போயிருந்தது. மெதுவாக நகர்ந்து, மண்டியிட்டு அந்த புத்தகத்தை எடுத்தான். நான்காம் வகுப்பு தமிழ் புத்தகம்.
மணல்களை தட்டினான் பொறுமையுடன்..
புத்தகத்தை முகர்ந்தான். . .
மூச்சின் ஆழம் வரை புத்தக வாசனையை இழுத்தான்.. . .
நெஞ்சோடு அணைத்தான்.. . .
கண்களில் கண்ணீர்.. ..
கதறி கதறி தேம்பி தேம்பி அழுதான்…
புத்தகத்திற்கு முத்தமிட்டான்..
ராமனாதன் ஏதும் செய்ய முடியாமல் தவித்தான். அந்த சிறுவன் தன்னை தானே சமாதனப்படித்தியபடி, புத்தகத்தை கீழே வைத்தான். கண்களை துடைத்தபடி கடலை நோக்கி ஓடினான். கடல் நீர் அருகே குனிந்து ஏதோ அந்த கடற்கரை மணலில் எழுதினான். “சுந்” . அலை அடித்தது . நீர் சென்றவுடன் மறுமுறை பிஞ்சு விரல்களால் எழுதினான் “சுந்த§ “.. அடித்து சென்றது. ஒரு பத்து முறையாவது எழுத எழுத ஓயாத அலை அழிக்க, கால்மணியாவது கடந்திருக்கும். இருந்தும் அவன் முன்னால் வந்து கூட எழுத வில்லை. அதே இடத்தில் எழுத முயன்றான்.
சுறுவனின் விடாமுயற்சியையும் நம்பிக்கையும் கண்டு கடலே அஞ்சியதா தெரியவில்லை. அவன் எழுதிய பெயரை அழுக்க அலை முன்வர வில்லை. சிறுவன் முகத்தில் மலர்ச்சி. “சு ந் த ரே ச ன் “. ராமனாதன் அருகே வந்து கூடையை எடுத்துக்கொண்டு “”ட்டுர்.. ர்ர்.ர்ர் ” என்று வேகமாக வண்டியை கிளப்பினான். அதற்கு மேல் விற்பனை செய்யவில்லை. கண்ணிலிருந்து மறைந்தான்..
ராமனாதனை இந்த நிகழ்வு உலுக்கி விட்டது. இந்த சிறுவனையும் தன்னையும் ஒப்பிட்டான். இந்த கல்வி தனக்கு தராத நம்பிக்கையை இந்த சிறுவன் தந்துவிட்டான். என்ன இல்லை வேலை மட்டும் தானே இல்லை, திட்டியது அம்மா அப்பா தானே? அவர்களுக்கு இல்லாத உரிமையா? நடந்தவைகள் எல்லாம் புதிய பார்வையுடன் பார்த்தான். புதிய ரத்தம் பாய்ச்சியது போல இருந்தது. பாட்டிலை கடலில் வீசினான். சூரியன் மறைந்தது. புதிய ராமநாதன் உதயமானான்.
“வாழ்வில் துன்பங்களும் சோகங்கள் இல்லாத மனிதர் யவரும் உண்டோ?? வண்டி ஓட்டும் போது ஏகப்பட்ட குழி பள்ளம் வரும் அதற்காக வண்டியை நிறுத்திவிட முடியுமா.. இடர்பாடுகளை கடந்து போராடி வேகமாக செல்ல வேண்டாமா ? “”ட்டுர்.. ர்ர்.ர்ர் “.
=================================================================
Needs more courage to live…than to die…