Skip to content

வானமே கூரை – சிறுகதை

வானமே கூரை.

“எனக்கு கல்யாணம்.. எனக்கு கல்யாணம்” என்கின்ற பாணியில் ஊரை சுற்றி வருவார்கள் என்றே மனநலம் குன்றியவர்களை நமக்கு முன்னர் சினிமா காட்டியுள்ளது. இந்திரன் அப்படிப்பட்டவன் இல்லை.அமைதியே உருவானவன்.ஏன் இப்படி ஆனான்..யாருக்கும் தெரியாது. அவனுக்கும் தான், பேசவே மாட்டான். அவன் பேசிக்கேட்டவர்கள் மிக அபூர்வம். மனதிற்கு மதம் பிடித்த பின்னர் அவனுக்கு எம்மதமும் சம்மதமாகியது.

மாதா கோவிலில் மணியடித்தால் இவன் செயலாக இருக்கும். பெருமாள் கோவில் மணியடித்தாலும் இவனாக தான் இருக்கும். காலையில் அர்ச்சகர் வீட்டிற்கு போய் நிற்பான் அவர்கள் அங்கு கொடுப்பதை சாப்பிடுவான்.. மதியம் பாதிரியார் அவனுக்கும் சேர்த்து சாப்பாடு எடுத்து வைப்பார். தூக்கம் வந்தால் எந்த இடமென்று பாராமல் அங்கேயே படுத்து தூங்கிவிடுவான். அவனுக்கு வானமே கூரை. உடைகளை பார்த்து இவன் மனநலம் குன்றியவன் என்று யரும் சொல்ல முடியாது.. அவ்வளவு சுத்தம். தினமும் துவைத்த துணிகளையே உடுத்துவான். குளக்கரையில் இருக்கும் கிணற்றில் குளித்து முடித்து, அர்ச்சகருக்கு குடம் குடமாக தண்ணீர் எடுத்து தருவான். ஆனால் பிராகாரத்திற்குள் போகமாட்டான். பிரார்த்தனையும் செய்ய மாட்டான். பின்னெ மணி எதற்கு அடிக்கிறான்? அடித்தால் சத்தம் வருமே, அந்த சத்தத்தில் களிப்பான். ஆனந்த கூத்தாடுவான்.சில நாட்களில் அவன் விரக்தியான மனநிலையில் இருப்பான். அழுதுகொண்டே மணி அடிப்பான். வேகமாக அடிப்பான். பார்ப்பவர்களுக்கு பயமாக இருக்கும்.கதறி அழுவான்.மணி அடித்தபடியே அங்கேயே மயக்கமுற்று விழுந்துவிடுவான். அர்ச்சகரோ, பாதிரியாரோ அவன் மீது தண்ணீர் தெளித்து அவனை எழுப்பி உண்பதற்கு ஏதேனும் தருவார்கள்.

ஊர் குழந்தைகளுக்கு இவனை கண்டால் பாதி பயம், பாதி சந்தோசம். இவனுக்கு சலாம் போட்டால் திரும்ப சலாம் போடுவான். “காலை வணக்கம்” என்றால் “காலை வணக்கம்” என்று இருகரம் கூப்பி வணக்கம் சொல்வான். பத்து முறை வணக்கம் சொன்னாலும், எந்த எரிச்சலும் படாமல் மீண்டும் மீண்டும் வணக்கம் தெரிவிப்பான். அதுவும் அவன் நீண்ட தாடியுடன் வணக்கம் சொல்வது ஏதோ ஒரு யோகி வணங்குவது போல் இருக்கும்.பல வருடங்களாக வளரும் தாடி.சாப்பிடும் போது சாப்பாட்டு எச்சங்கள் சில சமயம் ஒட்டிக்கொண்டு அசிங்கமாக காட்சி தரும். அவன் சாப்பிடுவதை பார்க்க அருவருப்பாக இருக்கும். நாகரீகம் இல்லாமல் சாப்பிடுவான். சாம்பார், ரசம், பொரியல், மோர், தயிர் என்று அனைத்தையும் ஒன்றாக குழைத்து சாப்பிடுவான்.

அவன் ஏன் இப்படி ஆனான் என்று யாரும் கேட்டதும் இல்லை. இவனும் கவலைபட்டதில்லை. அவனுக்கு என்ன தெரியும் கவலைகொள்ள? பாதிரியார் சில சமயம் அவனை பற்றி கேட்பார். அர்ச்சகரும் கேட்பார். அவனுக்கு எதுவும் நினைவில் இல்லை, தன் பேர் இந்திரன் என்பது மட்டும் நினைவில் இருந்தது.மற்ற விடயம் ஒன்றும் நினைவில் இல்லை. தான் திருமணம் ஆனவனா? தந்தை தாயார் யார், எந்த ஊர், என்ன படித்தான், நண்பர்கள் எங்கே? ஒரு கேள்விக்கும் விடை கிடைக்கவேயில்லை.

ஒரு நாள் எல்லாவற்றிற்கும் விடைக் கிடைத்தது. அந்த விடை கிடைத்த போது விடை கிடைக்காமலே இருந்திருக்கலாம் என்று தோன்றியது. நடுநிசியில் யாரோ எழுப்பக் கண்டான். அவனை சுற்றி பத்து இருபது பேர். அவன் எங்கு தூங்கி கொண்டிருந்தான் என்பது நினைவில் இல்லை. ஊருக்கு வெளியே இருந்த ஆலமரத்தின் அடியில் அனைத்தும் நடந்தது. அத்தனை பேரின் கையிலும் தீப்பந்தமும் வெட்டரிவாளும் இருந்தது.
“உன் பேர் என்ன?”. பதறினான்.ஏதும் பேசவில்லை. “கேட்கிறோம் இல்லை. உன் பேர் என்ன? சொல்லுடா”. குரல்களில் கலவரம் தெரிந்தது. “அவன் வேட்டியை கழட்டி பாருங்க. அவனை என்ன கேட்பது”.

இந்திரனுக்கு லேசாக பழைய நினைவுகள் வந்தது. சில ஆண்டுகள் முன்னர் அவனுடைய குடும்பம், நண்பர்கள் அனைவரும் பக்கத்து ஊரில் நடந்த திருவிழாவிற்கு சென்று இரவு வந்து கொண்டிருந்தனர். இதே போல சுமார் நூறு ஆட்கள் தீப்பந்தமும் கத்தியுடன் இவர்கள் வந்த வண்டியை நோக்கி வந்தனர். இவன் ஓடி மரத்தின் ஓரத்தில் ஒளிந்து கொண்டான். இவன் கண் முன்னே, இவனது குடும்பம், நண்பர்கள் அனைவரும் கொடூரமாக வெட்டி சாய்க்கப்பட்டனர். ஏதோ இனக்கலவரமாம். பழைய நினைவுகள் மீண்டும் வர அதிர்ச்சியுற்று கதறினான்.பதற்றம். அப்பா அம்மா குடும்பம் முழுவது கண் முன்னே பிரிந்ததற்கு இப்போது தான் அழுகின்றான். அழமுடியவில்லை. சக்தி இல்லை. இவன் உடல் முழுவதும் இரத்த காயங்கள். கழுத்து வெட்டுப்பட்டு இருந்தது. உயிர் கொஞ்சம் கொஞ்சமாக பிரிந்து கொண்டிருந்தது. “பாதர் என் ஊரு நினைவிற்கு வந்துவிட்டது, என் அப்பா அம்மா கிட்ட போகிறேன். சாமி என் நண்பர்கள் என் பக்கத்தில் இருக்கிறார்கள். அவர்களை பார்க்கபோகிறேன்…” அழுதபடி, குரல் உடைந்து.. அவன் உயிர் பிரிந்தது.

மாதா கோவிலிலும் பெருமாள் கோவிலிலும் மணி அடிக்கும் சத்தம் கேட்கின்றது. சில சமயம் வேகமாகவும், சில சமயம் நிதானமாகவும்.காலையில் அர்ச்சகர் வீட்டு நெய் சாதம் திண்கிறான். மதியம் பாதிரியார் பக்கத்தில் உண்கிறான். தூக்கம் என்பதை நினைத்த போது நினைத்த இடத்தில் செய்பவன் ஊரிலேயே இந்திரனுக்கு அடுத்து இவன் ஒருவனாக தான் இருப்பான். வானமே கூரை. இந்திரன் இறக்கும் போது இவன் ஆலமரத்தின் பின்னால் ஒளியாமல் இருந்திருக்கலாம்.வானமே கூரை…

– விழியன்

நன்றி (திண்ணை)

One Comment leave one →
  1. May 30, 2012 7:12 am

    not bad please try new thing

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: