Skip to content

காந்தி புன்னகைக்கிறார் – சிறுகதை

காந்தி புன்னகைக்கிறார்
==================================================

சென்னை தாம்பரம் ரயில் நிலையம் ஜமுனா ஜூஸ் லாண்ட்.மாலை வேளை கூட்டம் அதிசயமாக குறைச்சலாக இருந்தது. மோகன், பாபு இருவரும் குளிர்பானம் அருந்தி கொண்டு இருந்தனர்.

“அண்ணே ! எவ்வளவு ஆச்சு ! ” – மோகன்

“இரண்டு மாதுளம் – 20 ரூபாய் தம்பி ”

“இருபது ரூபாவா, என்ன அண்ணே, மாசம் ஒருக்கா இப்படி வெல ஏத்தறீங்க ”

“த்தோடா ! ஊர்ல விலைவாசி ஏறுது, நாங்களும் ஏத்தறோம்பா. எங்க பொழப்பும் போகணும் இல்லை ! ”
பர்சை துளாவியதில் பதினைந்து ரூபாய் இருந்தது. சில்லரையாக மற்றும் ஒரு ஐநூறு ரூபாய் இருந்தது.

“பாபு ஒரு அஞ்சு ரூபாய் இருக்கா? இல்லைனா, இந்த ஐநூறு ரூபாய் நோட்டை உடைக்கணும்டா”

“இல்லடா, பாங்க்ல எடுத்தாத்தான் உண்டு .. ”

“சரி, இரு நான் போய் சில்லரை வாங்கிட்டு வரேன் ”

கால்மணி நேரமாக சில்லரை கிடைக்கவில்லை, கடைசியாக ஒரு கடையில் கிடைத்தது. ஜமுனா ஜூஸ் லாண்ட், கடைக்காரரிடம் காசைக் கொடுத்துவிட்டு வண்டியில் கிளம்பினர். Yamaha R135. மோகன் வண்டி. மோனன் கொஞ்சம் களைப்பாய் இருந்ததால் பாபு ஓட்டிக்கொண்டு வந்தான். தங்கி இருந்த வீட்டின் அருகாமையில் வண்டி சென்றுகொண்டிருந்தது. “பாபு வண்டியை நிறுத்துடா, சலவைக்கு போட்ட துணிகளை வாங்கிட்டு போயிடலாம். அந்த ரசீதை நீதான வச்சிருக்க, எங்க அது?”
“பின்னாடி பர்சுல இருக்குபார் மோகன். அப்படியே எடு”. சிறிது நேரத்தில் வீட்டை அடைந்தனர்.
வீட்டை திறந்து உள்ளே போகும் போதே “பாபு , நீ இப்படி பண்ணுவேன்னு நினைத்துகூட பார்க்கவில்லை. கடையில ஐஞ்சு ரூபா கேட்டதற்கு இல்லைன்னு சொல்லிட்ட. கால்மணி நேரம் தண்டமா போச்சி, அதைவிட அலைச்சல். ரசீதை எடுக்கும் போது தான் உன் பர்சுல கசிங்கின அஞ்சு ரூபாய் இருந்ததை பார்த்தேன். ஏன் கேட்ட போது கொடுக்க வேண்டியது தானே? உன்னை எவ்வளவு பெருமையா நினைத்திருந்தேன். கிராமத்தில் இருந்து ஒரு இளைஞன் கஷ்ட்டப்பட்டு வந்து, இப்ப ஏதோ சமாளிக்கும் அளவிற்கு சம்பளம் வாங்கற. நல்ல நண்பனா தான உன்னை நடத்தினேன். அப்புறம் எதுக்கு இப்படி செய்தாய்? ஏன் டா? பதில் சொல்லு? ஏன் யாரச்சும் இளிச்சிகிட்டு வந்து கொடுத்தாளா? ” அதிகம் பேசிவிட்டான் மோகன். தவிர்த்திருக்கலாம் இந்த வார்த்தைகளை.

பாபு அமைதியாக மனமுடைந்து தன் அறைக்கு சென்றான். கையில் கிடைத்த புத்தகத்தை புரட்டினான். மனம் அதில் லயிக்கவில்லை. நினைவுகள் றுமாதங்களுக்கு பின்நோக்கி நகர்கின்றது. .

வேலை கிடைத்து முதல்முறையாக வீட்டிற்கு மூன்று மாதம் கழித்து செல்கிறான். அப்பா பஸ் நிலையத்தில் காத்திருந்தார்.”யாருப்பா குமரப்பட்டி இறங்கு, இறங்கு.” பேருந்து நின்றது.
“பாபு ! நல்ல இருக்கியா?” பையை வாங்கியபடி
குரல் நடுக்கத்திலேயே அப்பாவிற்கு வேகமாக வயோதிகம் வருவதை உணர்ந்தான்.
“நல்லா இருக்கேன். வீட்டில எல்லாம் எப்படி இருக்காங்க? எங்க மதனும் லதாவும் காணல? ஸ்கூல்ல இருந்து வரலையா?”
அப்பாவும் மகனும் நடையை கட்டினர் வீட்டை நோக்கி. தெருவெங்கும் விசாரிப்புகள்.
“பாபு பட்டணம் எப்படி இருக்கு? ”
“பாபு தலைவர் விஜய நேரில் பார்த்தாயா?
” கோமதி புள்ளா? மூனு மாசமாச்சு இல்ல ஊரவிட்டு போய்? ” மா பாட்டி”

வீடுவந்தது. அம்மா திண்ணையில் காத்திருந்தாள். கொஞ்சம் இளைத்து தான் போயிருந்தாள். நினைவு தெரிந்த நாள் முதலாய் ஓடாய் உழைப்பவள்.
“பாபு என்னபா இளைத்துவிட்ட? வேளா வேளாஈக்கு நீ ஒழுங்கா சாப்பிடுகிறாயா? வா மொதல்ல சாப்பிடு.   அப்புறமா மற்றவை பேசுவோம். வேலை எப்படி ராசா இருக்கு? ஒன்னும் பளு ஜாஸ்தி இல்லையே? ”
விடாமல் பாச மழை. எல்லாவற்றிற்கும் லேசான புன்னகை.
“அடுத்த முறை வரும்போது மோகன் தம்பியையும் கூட்டிட்டு வா. தலைக்கு எண்ணெய் வெக்கிறது இல்லையா? இப்படியா வெச்சிப்ப? நாளைக்கு சீக்காய் போட்டு கசக்கறேன் ”

“உங்க அம்மாக்கு தல கால் புரியாது பாபு. மகன் வந்த சந்தோஷத்தில. முதல்ல கை கால் கழுவிட்டு வா. சாப்பிடு. அப்புறம் அம்மாவும் பையனும் கொஞ்சிப்பீங்க.”
சாப்பிட்டு சிறிது நேரம் கண்ணயர்ந்தான். வறுமை கோரத்தாண்டவம் ஆடவில்லை என்றாலும் கும்மாங்குத்து ஆடுகிறது. அப்பா மளிகை கடையில் கணக்கராக பணி புரிகிறார். சொல்லும் படியான வருமானம் இல்லை. பாபு தலை தூக்கினால் அவரின் பாரம் குறையும். மதன் 12 ம் வகுப்பு படிக்கிறான். லதா பத்தாவது. இந்த காலத்தில் மூன்று பிள்ளைகளை படிக்கவைப்பது சுலபமா என்ன? பாபுவின் சம்பளம் அவன் மாத செலவிற்கும், படிப்பிற்காக வாங்கிய லோணுக்குமே சரியாக இருக்கிறது. பல்லை கடித்து மாதம் ஆயிரம் ரூபாய் வீட்டிற்கு அனுப்புகிறான்.

“அண்ணா ! எப்ப வந்த? நல்லா இருக்கியா?” லதா. மூன்று மாதத்தில் இவள் வளர்ந்திருந்தள்.
லதா லதா கண்ணு ..ஒழுங்கா படிக்கிறியாமா? எங்க மதன்?
“அவன் சைக்கிள் பஞ்சர் கிடுச்சு. கடைல இருக்கான். என்ன வாங்கிட்டு வந்திருக்க? வாண்ணா நம்ம கடை வரைக்கும் போய் வரலாம். ஒரு நல்ல Geometry Box வாங்கி தாண்ணே. பழசு துருபிடிச்சு போச்சு”
கடைக்கு போகும் வழியில் மதன் எதிர்பட்டான்.
“என்னடா தள்ளிட்டே வர? ‘
“நிறைய பஞ்சர் போட்டாச்சாம், அதனால புது ட்யூப் தான் போடணுமாம்.40 ரூபாய் ஆகுமாம். ஒரு வாரம் கழிச்சி போட்டுக்கிறேன் .எப்பண்ணே வந்த?
“இந்தா 50 ரூபா. போய் முதல்ல ட்யூப் மாத்து.”
சைக்கிள் இல்லாம பள்ளிக்கூடம் போறது எவ்வளவு கஷ்டமென பாபுவிற்கு தெரியும்.
இரவு உணவிற்கு பின்னர், பாபு மாடிக்கு சென்று வானத்தை வெறித்துக் கொண்டிருந்தான். மதன் தயங்கி தயங்கி பாபு அருகே வந்தான். “அண்ணா ! அடுத்த முறை வரும் போது உன் பழைய பேண்ட் இரண்டு கொண்டுவா. என் பேண்ட் எல்லாம் சின்னதாகிவிட்டது.டிரவுசர் போட்டா பசங்க கேலி பேசறாங்க. அப்பா அம்மா கிட்ட சொல்லாத. கஷ்டபடுவாங்க. சரியா? ” “ம்ம் “. இருட்டின் போர்வையில் பாபுவின் கண்ணீர் மறைக்கப்பட்டது.
இரண்டு நாள் போனதே தெரியவில்லை. அம்மாவின் கையால் சாப்பாடு, அப்பாவின் அறிவுரைகள், அனுபவங்கள், தம்பி தங்கையின் சேட்டைகள், குறும்பு, கோரிக்கைகள், பால்ய சினேகிதர்களின் பேச்சு, அரும்பு வயதில் நோட்டம் விட்ட மங்சுவின் கல்யாண சோகங்கள். கிளம்பும் போது மீண்டும் லதா நினைவு படுத்தினாள், தனக்கு தாவணி வேண்டுமென, யாருக்கும் தெரியாமல். அப்பா “பத்திரமா இரு தம்பி. காலம் கெட்டு கெடக்கு. மதனுக்கு நல்ல காலேஜ் ஏதச்சும் விசாரி. காசுக்கு தான் என்ன பண்றதுன்னு தெரியல. சரி சரி சீக்கிரம் வா, 5.30 மணி பஸ்சை விட்டா ராவுக்கு தான் பஸ் இருக்கு. பைகளை சைக்கிளில் வைத்து தள்ளிக்கொண்டு நடந்தார்.
“அம்மா வரேன்மா ! உடம்பை பார்த்துக்கொள்”
“எனக்கு என்னபா இருக்கு, நீ பத்திரமா இரு. ரோட்ல போறச்ச பாத்து போ” கையில் ஏதோ நொந்தினாள். பேருந்தில் போகும் போது தான் திறந்தான். கசங்கிய ஐந்து ரூபாய். று மாதம் பின்னரும் இன்னும் செலவழிக்காமல் வைத்து இருந்தான்.
டொக்..டொக்..
நினைவிகளில் இருந்து நிஜத்திற்கு இழுக்கப்பட்டான். வெளியே மோகன். “சாரிடா பாபு. ஏதோ கோபத்தில் என்னென்னமோ பேசிட்டேன். I am very sorry டா. நீ இதை பத்தி என்கிட்ட முன்னரே சொல்லி இருக்க மறந்துவிட்டேன். கோபம் கண்ணை மறைத்துவிட்டது”

“மோகன் இது ஒரு சாதாரண காகிதம் தான். இதுக்கு இவ்வளவு மதிப்பு தர வேண்டிய அவசியம் இல்ல. னா இந்த கசங்கின நோட்டை பார்க்கும் போதெல்லாம் எனக்கு தெரிவதெல்லாம். அம்மாவோட கலங்கமற்ற அன்பு தான் . எதையும் எதிர்பார்க்காத பாசம் தான், என்னதான் பையன் சொந்த கால்ல நின்னாலும் அவ தருகிற பாசத்திற்கு எல்லைகள் இல்லைன்னு சொல்லுகிற காகிதம்.இதை பார்க்கின்ற போது என் குடும்பம், வீடு, தம்பி, தங்கை, அப்பாவின் கஷ்டம் எல்லாம் கண்ணு முன்னாடி வரும்.தேவையில்லாமல் செலவு செய்ய நேரும்போது இந்த காசை பர்சில் பார்த்தவுடன் ச்சே… .. நம்மள நம்பி அங்க நாலு ஜீவன் நிற்கிறது நமக்கு இந்த செலவு தேவை தானா என்று யோசிக்க வைக்கிறது. இப்போதைக்கு என் குடும்பத்தை காப்பாத்தணும், அப்புறம் என்னால முடிச்ச மட்டும் சுத்தி இருக்கிறவங்களுக்கு உதவனும். இதுக்கு எல்லாம் ஒரு ஊந்துகோல இந்த ஐந்து ரூபாய் தான்.
பர்சில் இருந்து மேசை மீது வந்த ஐந்து ரூபாயில் “காந்தி புன்னகைக்கிறார்” அந்த உழவன் விறுவிறுவென வேகமாக உழுகிறான். ஐந்து ரூபாய் பெருமை கொள்கிறது…
==============================================
-விழியன்

நன்றி : நிலாச்சாரல்

No comments yet

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: