Skip to content

இரவின் மழையும் அதிகாலை நடையும்

July 16, 2008

இரவின் மழையும் அதிகாலை நடையும்

இரவில் பெய்த மழையினை அதிக நேரம் ரசிக்கமுடியவில்லை. சுற்றிலும் வீடுகள். வானைக்கூட காணமுடியவில்லை.
ஜோவென பெய்யும் மழையின் சத்தம் மட்டும் கேட்டுவிட்டு படுக்க சென்றுவிட்டேன். மழை ரசித்த சில கணங்கள் மனத்திரையில் தோன்றி மறைந்தது. அந்தமானில் கடற்கரையில் தனித்துவிடப்பட்டபோது கண்ட அந்த அற்புத காட்சிகளும், காசியில் படகொன்றில் செல்லும் போது பெய்த சாரலும், கேரளாவிலுள்ள மலப்புழா ஆற்றில் குளிக்கும்போது பெய்த தூரலும் மனதில் பெய்தது. படுத்த பிறகும் சத்தம் குறையவேயில்லை.மின்சாரம் இரண்டு முறை தடைபட்ட போது மின்விசிறியின் கதற்ல் ஓய்ந்து லப்டப் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.

அதிகாலை நடை சுகம். அதுவும் முன்னாள் பெய்த மழைவிட்டுச்சென்ற மண்வாசனையினை முகர்ந்து கொண்டே நடப்பது ஆனந்தம். வழக்கமாக வீட்டிலிருந்து இரண்டு கீ.மீ தொலைவில் உள்ள  பூங்கா ஒன்றில் காலை நடப்போம் நானும் துணைவியாரும். பூங்காவிற்கு வண்டியில் சென்றுவிட்டு அங்கே சிறிது நேரம் நடந்துவிட்டு சில பயிற்சிகள் செய்து வீடு திரும்புவது தினசரி வழக்கம். இன்று விடியலில் எழுந்து பூங்காவிற்கு நடந்தே செல்லலாம் என நடக்க துவங்கினேன்.முந்தைய தின பயணக்களைப்பால் வாழ்கைதுணைவி உறங்கிக்கொண்டிருந்தாள்.

பெங்களூர் தற்போது தான் மீண்டும் அதன் பொலிவிற்கு வரத்துவங்கி இருக்கின்றது. நாள் முழுக்க குளிர் காற்று வீசுகின்றது. ஆனால் அடிக்கடி சூரிய கதிரிகளின் சூடும் வாட்டியும் எடுத்துவிடுகின்றது. இரவு பணி முடித்த சிலரை வாகனங்கள் விட்டுசெல்கின்றன. சிலர் வேலைக்கே கிளம்பிவிட்டனர். தெருமுனையில் அந்த சின்ன பெண் பூக்களோடு வந்து அமர்ந்துவிட்டாள், அவள் அம்மாவை காணவில்லை. பால் போடும் கருத்த மனிதர் மெல்லியதாக புன்னகைக்கின்றார்.

கொஞ்ச தூரம் நடந்தும் வீதியெங்கும் கரு நிறமாக இருந்தது. அந்த பால்காரரை பார்த்த கோளாறா என ஒரு நிமிடம் கண்மூடி மீண்டும் திறக்க ஆம் கருப்பாக தான் இருக்கின்றது. சாலையின் இரு புறமும் சக்கைகள்,தென்னை மட்டைகள், ஒற்றை ஷூக்கள், தெர்மோகால்கள், பிளாஸ்டிக் கவர்கள் என்று சிதறி இருந்தது. நடக்க முடியவில்லை. வழுக்குவதை போல இருந்தது. கழிவுகளை எடுத்துச்செல்லும் குழாய் ஒன்றில் கழிவு நீர் பொங்கி இன்னும் சாலையினை நாசப்படுத்திக்கொண்டு இருந்தது. வாகனங்கள் ஓட்டி வருபவர்கள் கொஞ்சம் கூட அக்கரையில்லாமல் வேகமாக சென்று நடந்து செல்பவர்கள் மீது கரை செய்து சென்றுகொண்டே இருந்தனர்.

வாழ்கை என்னும் ஆற்றில்

சக்கைகள்
இறந்த மீன்கள்
நாறும் குப்பைகள்
இவை மட்டுமே
தனக்கென பாதையின்றி
ஆற்றின் போக்கிற்கு
மேலோட்டமாய்
கட்டுப்பாடின்றி மிதக்கின்றது

விழியன்

மடிவாளா பிராதன சாலையின் குறுக்கே பெரிய கால்வாய் ஒன்று இருக்கின்றது. ஒரு நதிபோல எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும்.  இருப்பினும் அதனருகிலேயே பெரிய பெரிய குடியிருப்புகள் இருக்கின்றது. நேற்றிரவு பெய்த பலத்த மழையினால் கால்வாய் நிரம்பி அதன் கழிவுகள் சாலையெங்கும் விரவிக்கிடக்கின்றது.மெல்ல கடந்து செல்கிறேன். இரண்டு குறுக்கு சந்துகளுக்குள்ளும் சாக்கடை நீர் சென்றதற்காக சுவடுகள் இருந்தது.

சாலையின் ஓரம் பெரிய எலி ஒன்று இறந்துகிடந்தது. உடல் தண்ணீரில் நீண்ட நேரம் இருந்திருக்க வேண்டும். மெல்லிய கால்கள். முந்தைய இரவும் தான் எனக்கும் இல்லாளுக்கும் வாக்குவாதம். “பெரிய எலியை வீட்டின் வாசலில் பார்த்தேன். உள்ளே வராம பாத்துக்கனும்..”. “அது எலி இல்லைங்க பெருச்சாளி…” ” என்ன வித்யாசம்…?” “பெருச்சாளி பெருசா இருக்கும்…” என சொல்லிவிட்டு வேறு எங்கோ கவனத்தை திருப்பிவிட்டாள். இது பெருசாளியா எலியா என்று ஆராய்ச்சி செய்ய மனசு கேட்கவில்லை. கொஞ்சம் பாரமாகிவிட்டது.

இன்னும் கொஞ்ச தூரம் செல்ல அங்கே இன்னும் ஒரு கொடூரம். பிறந்து சில வாரங்களே ஆன சின்ன நாய்குட்டி இறந்துகிடந்தது. இதுவும் கருமையாக தான் இருந்தது. அதன் தலை மீது ஏதோ வாகனம் ஏறி சென்று இருக்கின்றது. தலை நசுங்கி இருந்தது.மெதுவாக நடக்கலானேன். பூங்காவில் இருக்கையில் அமர்ந்து கண்கள் மூடி தியானிக்க முயற்சித்தேன். ஏனோ அந்த எலியும் நாய்குட்டியும் மாறி மாறி வந்து போனது. சூரியனை சில நேரம் முறைத்துவிட்டு வீடு வந்தேன் எங்கும் எதையும் காணாமல். மழை கொஞ்சம் கசந்தது.

-விழியன்

12 Comments leave one →
  1. July 16, 2008 7:20 am

    <<>>

    I am touched by your compassion, Vizhiyan!

  2. July 16, 2008 7:22 am

    நானும் மடிவாலாவில் இரண்டு வருடமாகக் குடியிருந்தேன் ஐய்யப்பன் கோவில் பின்புறமாக. நீங்கள் கூறியவையாவும் நானும் சில நேரம் பார்த்திருக்கிறேன். அருமையான பகிர்வு, அழுத்தமான நினைவு. அருமை விழியன் அவர்களே. தியானம் இதனாலெல்லாம் கலையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

  3. July 16, 2008 7:26 am

    mm.. nalla padhivu.. nidharsanam!

  4. Ezhilanbu permalink
    July 16, 2008 9:08 am

    Nalla irukku Vizhiyan.

    “அதிகாலை நடை சுகம். அதுவும் முன்னாள் பெய்த மழைவிட்டுச்சென்ற மண்வாசனையினை முகர்ந்து கொண்டே நடப்பது ஆனந்தம். ” Idhu pudichirukku….

  5. arivakam permalink
    July 16, 2008 11:53 am

    நல்ல பதிவு வாழ்த்துக்கள்

  6. மயில் permalink
    July 16, 2008 2:01 pm

    “ஆற்றின் போக்கிற்கு மேலோட்டமாய்
    கட்டுப்பாடின்றி மிதக்கின்றது”
    குப்பைக மற்றும் மீன்களை பற்றி மட்டும் தான் கூறியிருக்கீறீர்களா 🙂

    பல முறை, சாலையில் இறந்த கிடக்கும் நாய்களை கடந்து சென்று இருக்கிறேன், அவ்வாறு கடக்கும் பொழுது, மனிதன் இந்நிலையை அடையும் நாள் வெகுத்தொலைவில் இல்லை என்று நினைக்கத் தோன்றும். வெறும் நினைப்பாகவே அது இருக்கும், இறங்கி அதை மறியாதையுடன் அடக்கம் செய்ததில்லை :(. நமக்கு ஆறு அறிவு உள்ளதா என்று ஐயம் ஏற்படும் தருனங்களில் இதுவும் ஒன்று.

  7. July 17, 2008 1:42 am

    /மழை கசந்தது !

    உண்மை விழியன். இது ஒவ்வொரு நகருக்கும் பொருந்தும் நிதர்சனமான உண்மை.

    நாம் முந்தைய நாள் தூக்கி எறிந்த‌ பார்சல் சாப்பாட்டின் காகிதமும் , மளிகைக்கடையின் பாலித்தின் பையும் தான் இன்று கழிவு நீரை நம் முகத்தில் வாரி இரைக்கிறது! அதன் மூலம் நோய் பரவுகிறது. நாம் செய்யும் சிறு தவறு நமக்கே வந்து முடிகிறது !

  8. July 17, 2008 2:44 am

    This gives a best picture of our situation today !

    http://www.indianexpress.com/story/335558._.html

  9. July 17, 2008 5:14 am

    மிக இயல்பான வருணனை.. படித்து முடிக்கையில், அனைத்தையும் நேரில் உணர்ந்த பாரம் மனதில்..

  10. July 17, 2008 9:56 am

    // மின்சாரம் இரண்டு முறை தடைபட்ட போது மின்விசிறியின் கதற்ல் ஓய்ந்து லப்டப் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.//

    இதயத்தின் ஒலிகள் புரிந்துவிடில் மனிதற்கு மொழியே தேவை இல்லை
    எனும் மொழி படத்தின் பாடலை நினைவு படுத்தும் வரிகள்.

    ஏன் இப்போ நீங்க படம் எதுவும் பதிவிடுவதில்லை.

  11. July 18, 2008 12:06 pm

    இயல்பாக இருக்கு…;)

  12. September 19, 2008 1:30 pm

    //சூரியனை சில நேரம் முறைத்துவிட்டு வீடு வந்தேன் எங்கும் எதையும் காணாமல். மழை கொஞ்சம் கசந்தது.//

    வாழ்வில் இதுபோல் எத்தனை முறை நடந்திருக்குது…..ம்ம்ம்..தவிர்க்க இயலாத…யதார்த்தம்….
    அன்புடன் அருணா

Leave a comment