Skip to content

நெஞ்சுக்குள்ளே தூறல் – சிறுகதை

நெஞ்சுக்குள்ளே தூறல்
 
மழைக்காலம் ஆரம்பித்துவிட்டது.தினமும் மாலை வேளையில் மழை சும்மா புகுந்து விளையாடுகின்றது. பெங்களூரில் குளிர் வேறு சற்று அதிகம். தினமும் அலுவலகத்திலிருந்து வீடு சேர்வதற்குள் பாதி பேர் நனைந்து கொண்டு தான் செல்கின்றனர். இன்று சனிக்கிழமை. நண்பர் ஒருவரை சந்தித்துவிட்டு அறைக்கு திரும்பிக்கொண்டிருந்தான் பிரபு. இவன் ஒரு இளநிலை பட்டதாரி. கணிப்பொறி நிறுவனம் ஒன்றில் வேலைப் பார்த்துக் கொண்டுருக்கிறான். மற்றவர்களை விட குறைந்த சம்பளம் தான். ஆனால் நிறைவாய் வாழ்பவன். சாலை ஓர நிழற் கூடையில் சிறிது நேரம் மழைக்கு ஒதுங்கினான். மழை விட்டபாடில்லை. ஒன்றரை மணியாக சகட்டு மேனிக்கு கொட்டி தீர்த்தது. லேசான தூரல் தற்போது. இனி அதே இடத்தில் நின்றால், இரவு முழுதும் அங்கேயே கழிக்க வேண்டியதது தான் என்று எண்ணி தன் இருசக்கர வாகனத்தை கிளப்பினான்.
இந்திராநகரை கடக்கையில் நன்றாகவே நனைந்தாகிவிட்டது. இத்தனைக்கும் ஒரு ரெயின் கோட் வைத்து இருந்தான். அந்த சிக்னலில் நிற்கும் போது தான், தன் அருகாமையில் முப்பது – முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க பெண் கைநெடிக் வண்டியில், முன்னால் ஒரு ஏழு வயது குழந்தை பின்னால் ஒரு மூன்று வயது குழந்தையுடன் நின்று கொண்டிருந்தாள். அச்சோ !! அந்த சின்ன குழந்தை நன்றாக உறங்கி கொண்டிருக்கிறது. விழப்போகும் நிலையில் இருந்தது. கண் ஜாடையில் பிரபு அந்த பெண்ணிடம் குழந்தையை காண்பித்தான். பாவம் குழந்தை எழவேயில்லை. “சுதா சுதா”. ம்ம்ம் ஒன்றும் வேலைக்காகவில்லை. சிக்னல் விழுந்ததால் சிக்கலாகி விட்டது. சர் சர் என்று வண்டிகள் சீறிப் பாய்ந்தன. சிக்னல் தாண்டி வண்டியை நிறுத்தினாள். பிரபுவும் நின்றான்.
 “குழந்தையை முன்னாடி நிற்க சொல்லுங்க” – பிரபு
எழவே இல்லை சுதா.
என்ன செய்வது என் தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தாள் அம்மா.
 “எங்க போகனும்?”
சிறிது மௌனம் ” சாஸ்திரி நகர்”
 “ஓ நம்ம இடம் தான். உங்களுக்கு ஆட்சேபனை இல்லையெனில், நான் உங்க குழந்தையை முன்னால் வைத்து, உங்களை பின் தொடர்கிறேன்.”
சில நொடிகள் யோசித்தாள். இந்த இளைஞனை நம்பலாமா? குழந்தையை கடத்தும் கும்பல் இப்படி டீக்காக உடை அணிந்து கடத்த ஆரம்பித்து விட்டார்களோ? முகத்தை பார்த்தால் நம்பலாம் போல தான் இருக்கிறது. ஆனால்?? இந்த காலத்தில் யாரைத்தான் நம்புவது என்றே தெரியவில்லையே. எண்ணங்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்க, தன் ரெயின் கோட்டை சுதா மீது சுற்றிவிட்டான். “வேண்டாம் சார். உங்களுக்கு எதற்கு சிரமம்”.. “என்னை நம்பலாம். என் பேரு பிரபு. இது என் ஐடி கார்டு. சாஸ்திரி நகர் PM ஸ்டோர்ஸ் மாடியில் குடியிருக்கேன். உங்க பின்னாடியே வரேன். பயப்பட வேண்டாம்”
சுதா விழித்தபோது மழை சுத்தமாக இல்லை. “அம்மா அம்மா ..” அம்மாவின் வண்டியில் தான் இல்லாதது முதலில் பயத்தை ஏற்படுத்தினாலும் தன் அருகாமையிலேயே வருவது கண்டு சமாதானாம் அடைந்தாள். யார் வண்டியில் போகிறோம் என்று மேலே பார்த்தாள். “ஹலோ சுதா. என்னமா குளிர்கிறதா?” என்ன கிலாஸ் படிக்கிற?”.
பேசவே தட்டுதடுமாறினான்.ச்சே ஒரு குழந்தை கிட்ட பேச தெரியல. குளிருக்கு அவளால் பேச முடியவில்லை. வீட்டை அடைந்தது இரண்டு வண்டியும். சுப்பிரமணி வாசலிலேயே காத்துக்கொண்டு இருந்தார். சுதா வேறு வண்டியில் வருவதை கண்டு முதலில் பதறிவிட்டார். “ஹாய் அப்பா” என்று சுதா கையசைத்தவுடன் தான் நிம்மதி அடைந்தார். அந்த கன நொடிக்குள் இல்லாதையும் பொல்லாதையும் நினைத்தார். மனம் என்றாலே அப்படித்தானே. ஒரே நிலையில் இருக்குமா என்ன? நடந்ததை சுருக்க சொன்னாள் லதா. சுப்பிரமணி பிரபுவை வற்புறித்தி வீட்டிற்கு அழைத்து தண்ணீராவது அருந்தி விட்டு தான் போகணும் என்றார். வேறொரு நாள் வந்து சாப்பாடே சப்பிடுவதாக சுறிவிட்டு கிளம்பிவிட்டான். “அது தான் கம்மி விலையிலேயே அலைபேசி கிடைக்குதே, லதாவுக்கு வாங்கி தந்தால் ஆத்திர அவசரத்திற்கு உதவும் இல்லை.” வயதான குரல் உள்ளே இருந்து.
இரண்டு வாரம் கழிந்து இருக்கும். ஊருக்கு சென்றுவிட்டு இரவு 11 மணிக்கு பிரபு திரும்பிக்கொண்டுருந்தான். திருடர்கள் பயம் ஒரு புறம் இருக்க, நாய்களின் அட்டகாசம் தாங்கவே தாங்காது இந்த நரகத்திலே..ஸாரி நகரத்திலே. வாகனம் வீட்டில் இருந்தது. பிரபு நடந்து வந்து கொண்டிருந்தான். தூரத்தில் சத்தமிட்டபடியே ஒரு ஆம்புலன்ஸ் வண்டி கதறியபடி இருந்தது. வேகமாய் நடந்தான் அதனை நோக்கி.வளைவின் சேற்றில் சிக்கியிருந்தது வாகனம். ஓட்டுனர் முறுக்கிகொண்டுருந்தார்.
“என்ன ஆச்சுங்க”
“இங்கே பள்ளம் இருக்கும்னு தெரியல சார். செகண்டு கிராஸ்ல ஒருத்தருக்கு அட்டாக் வந்துருக்கிறது.வேகமா வந்தேன் பள்ளத்தில் மாட்டிக் கொண்டது. போகிறவன் வருகிறவன் எவனும் கண்டுக்கல. இதனைக்கும் சிகப்பு விளக்கு , சைரன் எல்லாம் போட்டுருக்கேன்”. அலுத்துக் கொண்டார் ஓட்டுனர், தன் பைகளை வண்டியினுள் வைத்து, ஒற்றையாளாக தள்ள முயற்சித்தான். இவன் தள்ளுவதை பார்த்து வண்டியில் சென்ற இரண்டு இளசுகள் உதவிக்கு வந்திருந்தனர். ஐந்து நிமிட போராட்டத்தில் வண்டி சேற்றில் இருந்து வெளிவந்தது. அந்த இருவருக்கும் நன்றி சொல்வதற்குள் மறைந்துவிட்டனர். ஆம்புலன்சில் பிரபுவும் அமர்ந்தான். “எந்த வீடு, போன் நம்பர் இருக்கா? நாம் வருகிறோம் என்று போன் பண்ணலாம் ?” அலைபேசி எடுக்க முயன்றான் பிரபு. அலைபேசி ..??.. எங்கே சென்றது. சர் சர் என ரீவைண்டு செய்தான். வண்டியை தள்ள கை வைக்கும் போது பாக்கேட்டில் இருந்தது. அந்த இரண்டு பேர்..? ச்சே உதவி செய்தவர்களை தப்பாக நினைக்க கூடாது. “எங்க சார். சேற்றில் விழுந்துவிட்டதா? திருப்பட்டுமா சார்?”
இதெல்லாம் இப்ப முக்கியமில்லை அங்கே ஏதோ உயிர் பிரச்சனை நடந்துகிட்டு இருக்கு, என்ன மிஞ்சி போனால் மூவாயிரம் ரூபாய்..உயிர்..இவ்வாறாக பிரபுவின் எண்ணங்கள்.
“வீட்டு எண் என்ன? பேரு என்ன சொன்னீங்க?”
“அதோ அந்த வீடுன்னு நினைக்கிறேன் சார். பரபரப்பா இருக்காங்க பாருங்க..”
ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்கு சென்றுவிட்டது.லதாவின் அப்பாவிற்கு அட்டாக் வந்திருந்தது. பக்கத்து வீட்டில் டாக்டர் வெங்கடாத்திரி இருந்ததால் சமயத்தில் ஊசி, மருந்து கொடுத்து உதவினார், அவரே அவருடைய மருத்துவமனைக்கு தொலைபேசியில் அழைத்து வண்டியும் வரவழைத்தார்.மருத்துவமனைக்கு லதா கணவர் சுப்பிரமணியும் டாக்டரும் சென்றனர். லதா கண்ணை கசக்கி அழுது கொண்டிருந்தாள். “அம்மா அழாதீங்க அம்மா. ஏன் அழறீங்க” –சுதா அம்மாவை சமாதானப்படுத்தினாள். பிரபு “அழாதீங்க, ஒன்னும் பயப்படுவதற்கு இல்லை, அது தான் டாக்டர் சொன்னார் இல்லையா? குழந்தையும் அழுகின்றது பாருங்கள்”
“நீ எங்கப்பா வண்டியில ஏறினாய்?”
“அந்த கதையை பொறுமையாக சொல்கின்றேன். நான் அறைக்கு கிளம்புகின்றேன். அவசரம் என்றால் 9342168401 இந்த எண்ணுக்கு அழையுங்கள். இல்லை நான் இங்கேயே இருக்கவா?”
“உனக்கேன் சிரமம் . ஊரிலிருந்து வருகின்றாய் போலிருக்கின்றது. அறைக்கு சென்று தூங்குங்க தம்பி ”
சற்றே தெளிவானாள் லதா.
“வரேங்க. சுதா குட்டி டாட்டா”
சொன்ன பிறகு தான் அடடா இது அவர்களுக்கு கெட்ட நைட் அல்லவா என்பது நினைவிற்கு வந்தது.
மறுநாள் காலை தாத்தா எப்படி இருக்கின்றார் என விசாரிக்க அலுவலகம் போகும் வழியில் லதா வீட்டிற்கு சென்றான் பிரபு.
“அப்பா நல்லா இருக்கார் தம்பி, சின்ன உதவி. சுதாவை பள்ளியில் விடவேண்டும்.விட்டுவிடுகின்றாயா? நான் அவசரமாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். அவர் மட்டும் தனியாக இருக்கின்றார்” அவர் சம்மதம் கூட கேளாமல் (அத்தனை உரிமை) “சுதா அழாம சமத்தாக மாமாவுடன் பள்ளிக்கு போடா கண்ணா”
“நீயும் அழாம போடி கண்ணு” –சுதா
மழலைகளின் பேச்சினில் தான் எந்த வலியும் கறைந்து போகுமே.
மறந்தே போய்விட்டான் பிரபு வேலை பளுவினில் அனைத்தையும். இரவு பகல் பாராமல் சனி, ஞாயிறு என்று பாராமல் அலுவலகமே கதி என்று இருந்தான். ஒரு ஞாயிற்று கிழமை காலை, மூன்று வாரம் கழித்து, மளிகைக்கடையில் சாமான்கள் வாங்கி கொண்டு இருந்தான். சட்டையை யாரோ இழுப்பது போல உணர்ந்து திரும்பினான். “யேய் ..சுதா..” நிமிர்ந்து பார்க்க லதா
“அலோ! எப்படி இருக்கீங்க? தாத்தா வீட்டிற்கு வந்துவிட்டாரா? பயங்கர வேலை பளுங்க”
விசாரிப்பின் முடிவில் “இன்றைக்கு மதியம் எங்க வீட்டில் தான் சாப்பிடுகின்றாய். ரொம்ப நல்லா சமைக்க மாட்டேன். பொறுத்துக்கொள் ” லதா கட்டாயப்படுத்திவிட்டு வண்டியில் சென்றாள்.
——————–
“என்னங்க இவ்வளவு நல்லா சமைத்துவிட்டு, பொறுத்துக்கொள் என்று சொல்லிட்டீங்களே?” கைகழுவிக்கொண்டே பிரபு.அனைவரும் உண்ட பிறகு கேரம் போர்டு விளையாடினார்கள். தன் அணி தோற்றுப்போகும் தருவாயில் கலைத்துவிட்டாள் சுதா.
“ஹா ஹா..”
“நான் கிளம்புகின்றேன். என் நண்பனை சந்திக்க வேண்டும்”
“நண்பனா ? இல்லை நண்பியா? ” என கிண்டலடித்தார் சுப்பிரமணி. உள்ளே சென்று ஒரு கவரில் ஏதோ பெரியதாக எடுத்து வந்தாள் லதா. “அன்றைக்கு மட்டும் நீ உதவாது போயிருந்தாள் அப்பா உயிருக்கே ஆபத்தாகி இருக்கும். நீ உதவியது பற்றி, அலைபேசியை சேற்றில் விட்டது, அவசரத்திற்கு உதவினது, அனைத்தையும் அந்த ஆம்புலண்ஸ் ஓட்டுனர் பத்து முறையாவது சொல்லிவிட்டார். உன் அலைபேசி எண்ணுக்கு எத்தனையோ முறை அழைத்தும் தொடர்பு கிடைக்கவில்லை. பிறகு தான் நீ தொலைத்த விஷயம் நினைவிற்கு வந்தது. அப்பா உனக்காக இந்த அலைபேசியை அன்பின் அடையாளமாக கொடுக்க சொன்னார். மறுக்காமல் வாங்கிக்க” படபட வென பேசி, கையில் திணித்தாள் லதா.
என்ன சொல்வதென பிரபுவிற்கு சொல்ல தெரியவில்லை. வார்த்தைகளை தேடி கண்டுபிடித்து “உங்க அன்பிற்கு நன்றி அக்கா. மனிதர்களின் அன்பு சாதாரண விஷயம் அல்ல. ஆனால் இந்த பரிசு வேண்டாம் என்று தோன்றுகின்றது.என் அதிர்ஷ்டம் அன்றைக்கு அலைபேசி தொலைந்தது. ஆனால், அதற்காக நான் இதை வாங்கிகொள்ள முடியாது. இதை வாங்கி கொண்டால் பின்னர் ஒவ்வொரு முறை யாருக்கேனும் உதவி செய்யும் போது பிரதிபலன் எதிர்பார்க்க சொல்லிவிடும் மனது. அதற்கு பெயர் உதவியில்லை.”
“மனிதனாக பிறந்த எல்லோருக்கும் முடிந்த அளவிற்கு அவரவர் அளவிற்கு உதவி செய்யவேண்டும், அதற்கு காசு, பொருள் முக்கியம் இல்லை என்று நம்புகின்றவன் நான்.” சிறிது இடைவெளி விட்டு “இதை வாங்கிக்கொண்டால், உங்களை சந்திக்கும் போதெல்லாம் ஒரு உறுத்தல் வந்துவிடும். அதெல்லாம் வேண்டாமே. இந்த பக்கமாக சென்றால் உள்ளே வந்து காபி குடித்துவிட்டு போகின்றேன். வீட்டு நினைவுகள் வந்தால் உங்க கையால் சாப்பாடு சாப்பிடுகின்றேன்.உங்க ஆனந்தத்தில் பங்கு தாங்க, துக்கத்தில் இருக்கேன் நான் தாங்க. சுதாவோட சிரிப்பு, மழலைப்பேச்சு, தாத்தாவோட அன்பு, பாசம் இது போதும் எனக்கு. ஒரு நல்ல குடும்பம் சொந்தம் கொண்டாட கிடைத்திருக்கின்றது. “
“என்னடா இவன் வேதாந்தம் பேசுகின்றான் என்று பார்க்காதீர்கள். யோசித்து பாருங்க. நான் வரேன் அக்கா. சுதா உனக்கு அடுத்த வாரம் ஒரு கிறுக்கு மாமாவை அறிமுகம் செய்து வைக்கிறேன். சரியா?
வண்டியை கிளப்பி சர்ர்ர்.. என சென்றான். சந்தோஷத்தில் மொத்த குடும்பமும். வாசலில் டாட்டா காட்டியபடி சுதா. வெளியே லேசான தூறல். எல்லோர் நெஞ்சுக்குள்ளும்.
– விழியன்
5 Comments leave one →
  1. Johny permalink
    February 21, 2012 11:21 am

    a very good msg in the story vizhiyan..i loved it…im also vitian..im johny..mca 2011 passed out 🙂

  2. Karpagam permalink
    May 22, 2012 5:01 am

    Precious to be human… But most of the the time we forget it…

  3. bharathi permalink
    February 15, 2013 10:52 am

    athu sari malaila(rain) epudi kulandai thungum

  4. Veera permalink
    June 17, 2013 11:18 am

    Nice one……

  5. Krishnamurthi Balaji permalink
    April 24, 2017 7:37 am

    very humane , like you! Congratulations

Leave a comment