Skip to content

அப்படி – இப்படி (ஜனவரி)

January 31, 2012

ஜனவரி நல்ல வாசிப்பு மாதமாக அமைந்தது. புத்தக கண்காட்சி வேறு நல்ல தீனியாக போட்டது. ஐந்து முறை சென்று வந்தேன் ஆனாலும் கடைசி நாள் ‘அடச்ச முடியுதா’ என்ற மனநிலையினையே கொடுத்தது. நல்ல புத்தக வேட்டை, பல நண்பர்கள் சந்திப்பு, எழுதவும் வாசிக்கவும் நல்ல உற்சாகம், புத்தக வாசம், அப்படியே பொங்கலும் முடிந்தது.

பாரதி கிருஷ்ணகுமாரின் அப்பத்தாவும், தல பாலபாரதியின் சாமியாட்டமும் இந்த மாத வாசிப்பின் முக்கிய சிறுகதை தொகுப்புகள்.சாமியாட்டம் உள்ளுக்குள் புகுந்து பல கதைகளை வெளியே எடுத்து வந்த அற்புதமான தொகுப்பு. சுமார் 3 வருடம் கழித்து சிறுகதையை எழுத வைத்தது.  நன்றி தல.

Pleasure of Reading வேண்டும் என்றால் RK Narayanan புத்தகங்களை தயங்காமல் எடுத்துவிடுவேன். Grandmother’s tale அப்படி ஓடிய நாவல். நிச்சயம் நாம் கொண்டாடவேண்டிய ஆளுமை.

கல்லுக்குள் ஈரம் (ர.சு.நல்லபெருமாள்) நாவலில் ரொம்ப ஈர்த்த பாத்திரம் திருவேணி. பால்யகால சகி’ வாசித்து வைக்கம் முகமது பஷீரை ரொம்பவுமே பிடித்துபோனது. பல இடங்களில் பால்யங்களுக்கு திரும்ப அழைத்து சென்ற, கண்ணிர் மல்க வைத்த நல்ல புத்தகம். அதனை தொடர்ந்தே அவருடைய 4 நாவல்களை  புத்தக கண்காட்சியில் வாங்கினேன்.

‘சப்தங்கள்’ என்ற குறுநாவலை இன்று காலை முடித்தேன். இருவர் பேசும் உரையாடலே முழு நாவல். எப்படி சாத்தியம் என்ற ஆச்சரியத்துடனே உள்ளே இழுக்கின்றது. காமம், போர், தனிமனித ஒழுக்கம், அழுகை, சப்தம் என நேர்கோட்டில் செல்லாமல் இங்குமங்கும் பயணித்து முடிகின்றது. ஒருவர் கதை சொல்லி மற்றொருவர் நாவலாசிரியர். அவர் சொல்ல சொல்ல கதையை எழுதியபடியே வருகின்றார். மொழிபெயர்ப்பு தான் என்றாலும் நல்ல ஓட்டம். (மொழிபெயர்ப்பு : குளச்சல் யூசிப் ) 70 ஆண்டுக்கு முன்னரே இத்தனை முன்னோடியான எழுத்தா என ஆச்சரியம்.

முடிந்தால் வாசியுங்கள். (

இன்னும் சில புத்தகங்களும் ஓடிக்கொண்டிருக்கு)

வழக்கம் போல ஜனவரி 26 வசந்த காலத்திற்கு சென்று வந்தேன். VIT. கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு. இம்முறை சென்னையில் இருந்து 100+ பேரை அழைத்து செல்ல ஏற்பாடுகள் செய்ய கடமைப்பட்டிருந்தேன். பழைய முகங்கள், பழைய அறைகள், நூலகம், நட்புகள், ஜூனியர்கள், சீனியர்கள் என ரசமாக இருந்தது. மதியம் பிரியாணி ஆஹா. ரொம்ப வளர்ந்துவிட்டது. விரிவா எழுதனும்.


ஜனவரி 29 வேலூரில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக வாசிப்பு- எழுத்து – இயக்கம் என்ற தலைப்பில் பட்டறை நடந்தது. வாசிப்பை அதிகப்படுத்தவும், உற்சாகப்படுத்தவும், இயக்கம் மூலம் மக்களை சந்தித்து கிடைத்த அனுபவங்களை எழுத்தின் மூலம் பதிவு செய்வதை ஊக்கப்படுத்தவும், அறிவியல் வெளியீட்டு புத்தகங்களை மக்களிடம் எப்படி எடுத்து செல்வது என்பதை திட்டமிடமும் நடைபெற்றது. எழுத்தாளர் கமலாளயுடன் இரவுப்பொழுது ரம்மியமாக இருந்தது. ஒன்பது நூல்களை எழுதி இருக்கார். நடமாடும் நூலகம். எழுத்தின் மீது அபார அன்பு, வெறி. தொடர்ந்து மக்கள் இயக்கங்களில் பணியாற்றி வருகின்றார். சமகால எழுத்து பற்றியும், பதிப்புலம், அதனை சார்ந்த அரசியல், புத்தகம் பேசுது பற்றியும் நல்ல உரையாடல். அடுத்த வாசக வட்ட சந்திப்பிற்கு நிச்சயம் வருவதாக சம்மதம் தெரிவித்தார். என்னுடைய சமீபத்திய சிறுகதையை வாசிக்க தந்தேன். நல்ல விமர்சனத்தை கொடுத்தார் உற்சாகமாக இருந்தது. பட்டறையில் அவர் ‘உலகை குலுக்கிய முக்கிய புத்தகங்கள்’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். நான் கேட்ட அற்புதமான உரைகளில் ஒன்று. ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’ என்ற பிடலின் புத்தகத்தில் ஆரம்பித்து ‘நினைவுகள் அழிவதில்லை’யில் முடித்தார். நேரம் போதாத காரணத்தினால் ஐந்து புத்தகம் பற்றி மட்டுமே பேசினார். அவரை தொடர்ந்து முகில் தனது வாசிக்கவேண்டிய புத்தகங்கள் பற்றியும் அதன் முக்கியம் பற்றியும் பேசினால். பட்டறையின் முடிவில் அனைவரும் பரிந்துரைத்த 200 புத்தகத்தின் பட்டியலை தயாரித்தோம்.

சம்பந்தமமே இல்லாமல் நானும் ‘வாசிப்பின் பரவசம்’ பற்றில் கொஞ்சம் பேசினேன். யாராச்சும் காசு கொடுத்தால் வேலை எல்லாம் உதறிவிட்டு முழுசா படிச்சிட்டே இருக்கலாம்னு தோன்றியது.ஆனால் இந்த பாழா போன ‘ஊர் சுற்றி புராணம்’ (ராகுல்ஜி) புத்தகம், ஒரே இடத்தில் உட்காராதே ஓடு ஓடு கால்களில் வலு இருக்கும்வரை ஓடு என சொல்கிறது. பதின்ம வயதில் இந்த புத்தகம் கையில் கிடைத்திருந்தால் நிச்சயம் இங்கே இருந்திருக்க மாட்டேன். இதே கருத்தை வாசித்தவர்கள் ஒவ்வொருவரும் பகிர்ந்துகொண்டபோது தெரிவித்தனர். வாசிப்பின் அவசியம் பரவசம் பற்றி சொல்லவே சென்ற நான், இன்னும் இன்னும் வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்துடனும் கிளர்ச்சியுடனும் கிளம்பிவந்தேன்.

குழலி கதை சொல்ல ஆரம்பித்து இருக்காங்க . தன்னை சுற்றி நிகழும் சம்பவங்கள் வைத்து. அவளுக்கு சொல்லும் சின்ன சின்ன கதைகளை வைத்து. குழந்தைகள் அற்புதமான கதை சொல்லிகள். ஒரு வரிக்கும் அடுத்த வரிக்கும் சம்பந்தம் இருக்காது. வார்த்தை கிடைக்காமல் சில நேரம் தவித்தும் நிற்பார்கள். சற்றே பெரும் வாக்கியங்களாக்கி இதையே பின்நவீனத்துவ கதை என பீலா விட்டு திரிகின்றோம் நாம்.

கடவுள் அமிர்தத்தை நேரடியாக விநியோகம் செய்ய முடியாத காரணத்தினால் ‘பன்னீர் சோடா’வை அறிமுகம் படுத்தினார். thru Ravi Soda Factory, Near St. Thomas Mount station. அந்த பக்கம் சென்றால் பருகவும். நன்றாக இருந்தால் வீட்டிற்கு ஒரு பார்சலும் அனுப்பவும்.

இந்த மாதம் எந்த பயணமும் எந்த புகைப்படமும் எடுக்காதது வருத்தமாகவே இருக்கின்றது. ஆனாலும் நிறைவான மாதம். பல ஊர்களுக்கும் / பல மனிதர்களை  கதைவழியாக பயணித்த/ சந்தித்த உற்சாகம் உடலெங்கும் விரவி கிடக்கின்றது

– விழியன்

4 Comments leave one →
  1. January 31, 2012 6:16 am

    A writer Umanath…!!! 🙂

  2. February 1, 2012 12:28 pm

    பொங்கல் கொண்டாடியதை சொல்லவே இல்லை :))))

  3. February 1, 2012 5:49 pm

    அருமையான பதிவு.
    வாழ்த்துகள்.

Leave a comment