Skip to content

கொஞ்சம் மெளனம் கலையுங்கள் – விழியன்

February 6, 2020

கொஞ்சம் மெளனம் கலையுங்கள்

நேரடியாக மாணவர்களிடம் கேட்டிருக்கேன். கடிதம் எழுதி இருக்கின்றார்கள். கடிதங்களை வாசித்து கதறி அழுதிருக்கின்றேன். “சார், ஸ்கூல்ல விட்றதே இருட்டுற நேரம் அப்புறமும் போய் வீட்ல உக்காந்து ஹோம் வர்க் கொடுப்பாங்க” “அண்ணா, ஞாயித்து கிழமையாச்சும் கலர் டிரஸ் போட்டுவர பர்மிஷன் வாங்கித்தாங்க அண்ணா” “சார், அடிங்க ஆனா பொம்பள புள்ளங்க முன்னாடி எதுக்கு அடிக்கிறாங்க” “கடைசி எக்ஸாம் கூட எழுதிக்கிறேன் சார், க்ளாஸ் டெஸ்ட் எழுத ஏதாச்சும் மெஷின் இருக்கா சொல்லுங்க” கிராமத்தில் வசதி வாய்ப்புகளே குறைவாக இருக்கும் மூன்று நான்கு அரசுப்பள்ளிகளுக்கு சென்று அவர்களிடம் நெருக்கமாக பேசிப்பாருங்க (அதிகாரி தோரணையில் இல்லாமல் ஒரு அண்ணன், அக்காள் தோரணையில்) அவர்களுக்கு எவ்வளவு மறுக்கப்பட்டிருக்கு என்பது விளங்கும். இனி எவ்வளவு மறுக்கப்பட இருக்கு என்பது புரியும். மேலே சொன்னவை யாவும் பத்தாம் வகுப்பு குழந்தைகள் சொன்னவையே. இது எட்டாம் மற்றும் ஐந்தாம் வகுப்பிற்கு பரவிக்கொண்டிருக்கின்றது. குழந்தைகள் மீது அக்கரை கொண்ட அத்தனை பேரும் கொஞ்சம் மெளனம் கலையுங்கள்

– விழியன்

#TNStop5th8thPublicExam

ஆசிரியர் என்பவர் வெறும் ஒன்றும் ஒன்றும் ரெண்டு என கற்றுக்கொடுப்பவரா? – விழியன்

February 6, 2020

ஆசிரியர் என்பவர் வெறும் ஒன்றும் ஒன்றும் ரெண்டு என கற்றுக்கொடுப்பவரா? – விழியன்

கீழே இருக்கும் வாட்ஸப் பார்வர்ட் வைரலாக ஆசிரியர்கள் மத்தியில் பரவி வருகின்றது. ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுக்கான எதிர்ப்புக் குரல் ஆசிரியர்கள் எழுப்பத்தேவையில்லை என்பதே அதன் சாராம்சம். NCFன் (National Curriculum Framework) முதல் பக்கத்திலேயே ஒரு வரி வரும். ஒரு தேசத்தின் உயரித்தினை நிர்ணயிப்பவர்கள் ஆசிரியர்கள். அவ்வளவு பொறுப்புமிக்கவர்கள். சமூகத்தில் வேறு எவரை விடமும் மிகமிக உயரிய பணியில் ஈடுபட்டு இருப்பவர்கள் ஆசிரியர்கள். அவர்களே அடுத்த தலைமுறையினரை கட்டமைக்கின்றார்கள். அவர்களே பெற்றோர்களை விடவும் அதிக நேரம் குழந்தைகளுடன் செலவிடுகின்றனர். அவரக்ளுக்கு தான் நிச்சயம் எது குழந்தைக்கு நல்லது எது சரிவராது எனத் தெரியும். தேவையில்லாத பாரத்தை பிஞ்சுகளின் மீது வைக்கும்போது அவர்கள் என்ன இன்னல்களுக்கு ஆளாவார்கள் என ஆசிரியர்களுக்கே அதிகம் தெரியும், தெரிய வேண்டும். இது மாணவர்களின் திறனை அறிய அல்ல ஆசிரியர்களின் திறனை அறிய என்று ஒரு வரியை சேர்த்து ஆசிரியர்களை அமைதியாக்க முயல்கின்றார்கள். எது சரி எது தவறு என பேசவாவது செய்ய வேண்டிய கடமை ஆசிரியர்களுடையது. சரி இப்படி வைத்துக்கொள்வோம், மாணவர்களின் திறன் விரும்பிய அளவிற்கு இல்லையெனில் ஆசிரியர்களின் வேலைக்கு சிக்கல் எனில் சும்மா விட்டுவிடலாமா? மூன்று ஆண்டுகளுக்கு மாணவர்களின் தேர்ச்சிக்கு உத்திரவாதம் அளித்திருப்பதையும் நம்பிக்கொண்டு இருக்கின்றோம்.

இன்னும் இன்னும் எத்தனை ஆசிரியர்கள் வீடுவீடாக சென்று ஸ்கூலுக்கு வாங்கடா ஸ்கூலுக்கு வாங்கடா என அழைத்து வந்துகொண்டு இருக்கின்றார்கள். தேர்வு என்ற ஒற்றை வார்த்தை அவர்களை ஓடச்செய்துவிடாதா? பொதுமக்கள், பெற்றோர்கள், இன்னும் சொல்லப்போனால் அரசியல் கட்சிகளிடம் இருந்து ஒலி காத்திரமாக வரவேண்டும் ஆனால் அதனை விட அன்பான ஒலி ஆசிரியர்களிடம் இருந்து ஒலிக்க வேண்டும், ஓய்ந்துவிடாதீர்கள் ஆசிரிய சமூகமே. மெளனத்தை களையுங்கள்.

ஒன்றும் ஒன்றும் ரெண்டு என மட்டும் கற்றுக்கொடுப்பவர்கள் ஆசிரியர்கள் அல்ல. ஒன்றும் ஒன்றும் ஏன் மூன்றல்ல, ஏன் ஒன்றும் ஒன்றும் இரண்டென்று கற்றுக்கொள்ள வேண்டும், ஒன்றும் ஒன்றும் எப்படி 10 என டிஜிட்டலில் மாறுகின்றது என்பதையும் கற்றுத்தரவேண்டும். ஒன்றும் ஒன்றும் இரண்டென குழந்தை கற்கவிடாமல் தடுக்கப்படும்போதும் குரல் கொடுக்க வேண்டியதும் ஆசிரியர் தான்.

– விழியன்

Whatsapp Forward
ஒரு சந்தேகம்,
5,8 ஆம் வகுப்புகளுக்கு பொது தேர்வு வைப்பதில் ஆசிரியர்களுக்கு ஏன் இவ்வளவு வேதனை. கோபம்
முதலாம் வகுப்புக்கு வேண்டுமானாலும் பொது தேர்வு வைக்கட்டும். நாம் சிறப்பாக கற்றுக்கொடுப்பது நம் கடமை அதனை சிறப்பாக செய்வோம். அது போதும் பெற்றோரும், பொதுமக்களும்தான் பொதுதேர்வுக்கு கலவைபடனும் ஆனால் அவர்கள் யாரும் துளி கூட கவலைபடவில்லை, வருத்தப்படவும் இல்லை. பின் ஏன் ஆசிரியர்கள் இதனை இப்படி பிரச்சினை ஆக்குகிறீர்கள், போராடுகிறீர்கள்… ஆசிரியர்கள் பொது தேர்வை எதிர்பதனால் பெற்றோரும் பொதுமக்களும் ஆசிரியர்கள் ஒழுங்காக பாடங்களை நடத்தவில்லை எனவே அவர்கள் இதனை எதிர்கிறார்கள் என கூறுகின்றனர்..

கல்லிற்குக்கீழ் நசுங்கும் பூக்கள் – விழியன்

February 6, 2020

கல்லிற்குக்கீழ் நசுங்கும் பூக்கள் – விழியன்

(கல்கி 09-02-2020 இதழில் வெளியான கட்டுரை)

ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு என்ற பாரத்தினை குழந்தைகள் தாங்குவார்களா? பொதுத்தேர்வுகள் வேண்டும் எனவும் தேவையே இல்லை எனவும் இரண்டாக பிரிந்து விவாதங்கள் நடந்துகொண்டு இருக்கின்றன.

தேவை என்பவர்களின் வாதம் பிரதானமாக குழந்தைகளுக்கு படிப்பின் மீது கவனம் வருவதில்லை என்பதே. கடந்த பத்து ஆண்டுகளில் சிறப்புக் குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகின்றன. அவற்றின் ஊற்றுக்கான காரணங்களை ஆராயாமல் அவர்களை பொதுக்கல்வியின் சட்டகத்திற்குள் எப்படி தீவிரமாக எடுத்து வருவது என செயல்பாடுகள் நடக்கும் வேளையில் இந்த முன்னெடுப்பு மிகுந்தபின்னடைவு. கிராமப்புறத்திலும் நகரப்புறத்திலும் வேறு வேறான காரணங்களுக்காக நிராகரிக்கப்பட வேண்டி உள்ளது. நகரங்களில் ஏற்கனவே Peer Pressure அதிகமாக உள்ளது. என் பையன் இது படிச்சான், என் பையன் அந்த களாசில் சேர்ந்திருக்கான் என பெருமைப்பட்டுக் கொள்ளும் பெற்றோர் மத்தியில் இந்த பொதுத்தேர்வு நிச்சயம் சலசலப்பினை ஏற்படுத்தும். தேவையே இல்லாமல் குழந்தைகளை நிர்பந்திக்க ஆரம்பிப்பார்கள். விளையாட்டு, இதர கலைகள் கற்றல், சுற்றுலா, குடும்ப நிகழ்வுகள், சும்மா இருத்தல் என எல்லாவற்றிற்கும் தடா ஆரம்பித்துவிடும். இது பத்தாம வகுப்பிற்கு நடக்கும் அளவிற்கு வீரியமாக இருக்காது என்றபோதிலும் நிச்சயம் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு இருக்கும். இது குழந்தைமையை பறிக்கும் ஒரு மிகப்பெரிய வன்முறை.

 

கூடுதலாக கல்வியில் மட்டுமே கவனத்தை குவிக்க வைக்கும் ஒரு செயலாக அமைந்துவிடும். இதர விஷயங்களில் நாட்டமோ கவனமோ செல்லாமல் பார்த்துக்கொள்ள இந்த சமூகமும், பள்ளியும் வீடும் பார்த்துக்கொள்ளும். இங்கே இதர விஷயங்கள் என குறிப்பிடப்படுவது – விளையாட்டு, கலை, வாழ்க்கை கல்வி, சமூக பண்புகள் ஆகியவை. ஏற்கனவே தினசரி கூடுதல் வகுப்புகளும் சனி ஞாயிறுகளில் சிறப்பு வகுப்புகள் என நெருக்க ஆரம்பித்துவிட்டனர். தினசரி வகுப்புத்தேர்வுகளையும் வைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

 

பொத்தேர்வுக்கு ஏன் பயப்பட வேண்டும் குழந்தைகள் என்ற வாதத்தை ஓரம் கட்டிவிட்டு அதனை எழுதும் மாணவர்கள் எல்லோருக்கும் ஒரே மாதிரியான சூழல் அமைந்துள்ளதா எனவும் பார்க்க வேண்டும். இன்னும் எத்தனையோ தொடக்கப்பள்ளியில் ஈராசிரியர்கள் மட்டுமே உள்ளார்கள். ஐந்து வகுப்புகளுக்கு இரண்டே இரண்டு ஆசிரியர்கள். இதில் அவர்கள் ஏகப்பட்ட பயிற்சிகளுக்கு செல்ல வேண்டும், தரவுகளை கொடுக்க வேண்டும் என பாதி நேரம் விரயமாகின்றது. குழந்தைகளுடன் செலவிடும் நேரம் மிகவும் குறைவு.

மெல்ல கற்கும் மாணவர்கள் பற்றியும் சிறப்புக்குழந்தைகள் பற்றியும் அக்கரையே இல்லாத முடிவு இவர்களுக்கான கல்வி வரும்காலத்தில் என்னவாகும் என்ற கேள்வியை எழுப்பாமல் இல்லை. அது கேள்வி என்பதைவிட வருத்தம் தான். இடைநிற்றலில் குறியீடு ஆரம்பப்பள்ளிகளில் குறைவாக இருக்கின்றது என்ற பெருமை நிலை படிப்படியாக மாறிவிடும். இந்த பயம் ஐந்தாம் வகுப்பில் அல்ல நான்காம் வகுப்பிலேயே துவங்கிவிடும் எப்படி பத்தாம் வகுப்பிற்கு ஒன்பதாம் வகுப்பிலே துவங்குகின்றதோ அதே போலவே.

 

கூடுதலாக கல்வித்துறையில் இருந்து தேர்வை குறித்து திடீர் திடீர் அறிக்கைகளால் பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் குழப்பி அது நேரிடையாகவே குழந்தைகளை பாதிக்க ஆரம்பித்துவிட்டது.

 

சரி, உண்மையில் மாணவர்களின் திறன்களை அறிந்து ஆசிரியர்களுக்கான பயிற்சிகளை அதிகப்படுத்துவது தான் இந்த பொத்தேர்வுகளின் நோக்க எனில் ஏன் மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் இந்த விளக்கு அளிக்க வேண்டும்? இதுவே இந்த தேர்வின் நோக்கின் முரணாக அமைந்துவிடுகின்றது அல்லவா? மூன்று ஆண்டுகளில் பயிற்சி கொடுத்தும் மாணவர்களின் திறன் முன்னேறவில்லையெனில் தண்டிக்கப்படப்போவது ஆசிரியர்களோ,கல்வி அதிகாரிகளோ அல்ல மாறாக ஏதும் அறியாத குழந்தைகள்.

– விழியன்

குழந்தைமையை காவு வாங்கும் பொதுத்தேர்வுகள் – விழியன்

February 6, 2020

குழந்தைமையை காவு வாங்கும் பொதுத்தேர்வுகள் – விழியன்

(தேசத்தின் நம்ப்க்கை பிப்ரவரி 2020 இதழில் வெளியான முழுகட்டுரை)

ஐந்து மற்றும் எட்டாம் பொதுத்தேர்வுகள் குறித்து இன்னும் பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை. முக்கியமாக பெற்றோர்கள் மத்தியிலும் ஆசிரிய சமூகம் மத்தியிலும் இதனைப் பற்றிய புரிதலும் பல்வேறு கூறுகள் பற்றியும் இன்னும் நிறைய பேச வேண்டி இருக்கின்றது. வெறும் இன்றைய சூழலை மட்டும் பார்க்காமல் ஒட்டுமொத்த கல்வி நகர்வினை கணக்கில் கொண்டு இந்த பொதுத்தேர்வுகளை அனுகவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொத்தேர்வுகள் யாருக்கு?
இது தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறைக்கு உட்பட்ட எல்லா வகையான பள்ளிகளுக்கு உண்டு. குறிப்பாக சமச்சீர் கல்வி முறைய போதிக்கும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் இதில் அடங்கும். சி.பி.எஸ்.சி மற்றும் ஐ.சி.எஸ். கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு இவை இல்லை.

பொதுத்தேர்வு வைத்தால் தான் பயம் வரும், பசங்க விளையாட்டுத்தனமா இருக்காங்க. எட்டாவதுக்கு வந்தாலும் பெயர் கூட தெரியல, கூட்டல் கழித்தல் கூட வரல?

கற்றல் என்பது ஒரு குழந்தை மகிழ்வாக இருக்கும்போதே நிகழும். நிர்பந்தத்தால் கற்றலை உட்புகுத்த முடியவே முடியாது, மாறாக அது வேறுமாதிரியான விளைவுகளையே விளைவிக்கும். கற்க மறுக்கின்றார்கள் எனில் இன்னும் இனிமையாக மாற்ற மாற்று வழிகளை சிந்திக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானவர்கள், அவர்களின் கற்றல் வேகம், கற்றல் ஆர்வம் நிச்சயம் வேறுபடும். பொதுவான ஒரு கற்றல் நடையினால் எல்லோரும் கற்பார்கள் என்பதும் சாத்தியமில்லை. தேர்வுகளால் பயம் வந்து வாசிப்போரின் எண்ணிக்க சொற்பமாக இருக்கும் மாறாக விடுபட்டு செல்வோரின் எண்ணிக்கை பெருவாரியாக அமைந்துவிடும்.

குழந்தைகளுக்கு எப்படி பாதிப்பு உண்டாகும், வழக்கம் போல அவர்கள் ஆண்டுத்தேர்வு எழுதுவது போல எழுதினால் என்ன?

குழந்தைகளுக்கு பொதுத்தேர்வே பள்ளி நடத்தும் தேர்வா என்பது நிச்சயம் தெரியாது. அவர்களைப்பொறுத்த வரையில் அது ஒரு தேர்வு அவ்வளவே ஆனால் பெற்றோர்களும், ஆசிரியர்களும் சமூகமும் அவர்களை நெம்பி எடுத்துவிடும். தினமும் மாலையில் சிறப்பு வகுப்புகள், சனி, ஞாயிறுகளில் சிறப்பு வகுப்புகள், வீட்டிலும் “பப்ளிக் எக்ஸாம் வெச்சுகிட்டு என்ன விளையாட்டு வேண்டி கிடக்கு” என்ற மிரட்டல், சொந்தகளை பார்த்தால் “படிச்சிட்டியா படிச்சிட்டியா” என்று கேள்வி கேட்டே குழந்தைகள் மீது பாரம் சுமத்திவிடுவார்கள். சுமத்திவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும். ஏற்கனவே பள்ளிகளில் இப்படித்தான் நிலைமை இருக்கின்றது.

குழந்தைமையை பலி கொடுக்க துவங்கிவிட்டோம். பன்முக ஆளுமைத்திறனை கொடுக்க மறுக்க ஆரம்பித்துவிட்டோம். இனி நான்காம் வகுப்பில் இருந்தே அனைத்தும் ‘கட்’. விளையாட்டும் இல்லை. மற்ற கலைகளுக்கான வகுப்புகள் இல்லை. பள்ளியில் விளையாட்டு பாடவேளை இல்லை. நூலகத்திற்கு இல்லை. ஆண்டுவிழாக்களிலும் பள்ளி விழாக்களிலும் ஒருங்கிணைப்பில் பங்கு இல்லை. வீடுகளில் நடக்கும் விசேஷங்களில் பங்கெடுக்க வாய்ப்புகள் குறைந்துவிடும். முழு நேரமும் படி படி படி. பெற்றோர்கள் புரிதலுடன் இருந்தாலும் இந்த Peer Pressure குழந்தைகளை கொன்று விடும். பள்ளிகளுக்கும் தங்களுடைய திறனை காட்டியாகவேண்டும் என தீவிரமான பயிற்சிகளில் இறங்கும். அதிக வகுப்பு தேர்வுகளை நடத்தி குழந்தைகளின் கைகளை உடைக்கும்.

சமூகத்திலும் மிகப்பெரிய சிக்கலை உருவாக்கும். குறிப்பாக பெண் குழந்தைகள் பள்ளியில் இருந்து அதிகம் விடுபடுவார்கள். நலிந்தவர்களின் குழந்தைகள் நிச்சயம் இடைநின்று தத்தமது பெற்றோர்களின் தொழில்களில் ஈடுபடுவார்கள். பள்ளியை விட்டு ஓடி குழந்தை தொழிலாளர்கள் அதிகரிப்பார்கள். இது சாதாரண குழந்தைகளுக்கே பாரம் எனில் சிறப்பு குழந்தைகளுக்கும் குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்டெடுத்து பள்ளிகளில் காலெடுத்து வைத்துள்ள குழந்தைகளுக்கும் எவ்வளவு பெரிய பாரமாக இருக்கும். எப்படியேனும் பத்தாம் வகுப்பு வரையில் குழந்தை படித்திடுவான், தட்டுத்தடுமாறி கரையேற்றிவிடலாம் என எண்ணில் இருக்கும் பெற்றோர்களின் மனங்களில் இனி மண் தன்.

இப்படி நியாயமற்ற, குழந்தைமையின் மீது நடக்கும் வன்முறை செயலுக்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். பெற்றோர்களை ஒருங்கிணைப்பதில் சிக்கல் உள்ளது, ஆசிரியர்கள் எளிதாக குரல் கொடுக்கலாம், அரசியல் கட்சிகளும், குழந்தைகள் மீது அக்கரை உள்ள அத்தனை நபர்களும் கொஞ்சம் மெளனம் கலைக்க வேண்டியுள்ளது.

– விழியன்

Children’s Magazines in Tamil (as of Sept 2019)

September 7, 2019

Children’s Magazines in Tamil (as of Sept 2019)

இன்றைய பெரும்பாலான வாசகர்களும் எழுத்தாளர்களும் சிறுவர்கள் இதழ்கள் வழியே தான் வாசிப்பினை துவங்கினர். தற்சமயம் (பிப்ரவரி 2018) வந்துகொண்டிருக்கும் இதழ்களின் தொகுப்பு. உங்கள் குழந்தைகளுக்கு/மாணவர்களுக்கு இயன்ற அளவு இந்த இதழ்களை அறிமுக செய்யுங்கள்.

தமிழில் சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான இதழ்கள் & விவரங்கள்

1. துளிர் – சிறுவர்களுக்கான அறிவியல் மாத இதழ்
Contact 044 28113630, MJP – 99943 68501

2. பட்டம் – (மாணவர்களுக்கான இதழ்) தினமலர்
http://www.dinamalar.com/supply.asp?ncat=1360

3. சிறுவர் மலர் – தினமலர் – பிரதி வெள்ளி

4. பெரியார் பிஞ்சு – மாத இதழ் – விடுதலை
To subscribe – http://www.periyarpinju.com/new/

5. தங்கமலர் – தினத்தந்தியின் வாராந்திர இணைப்பு இதழ் –

6. சிறுவர்மணி – தினமணி – வாராந்திர இணைப்பு இதழ்

7. மாயாபஜார் – தி இந்து – பிரதி புதன்

8. குட்டி ஆகாயம் – காலாண்டிதழ்
தொடர்புக்கு – வெங்கட் +919843472092

9. தும்பி
தொடர்புக்கு-9843870059

10. பஞ்சுமிட்டாய். (காலாண்டிதழ்)
தொடர்புக்கு – பிரபு- 97317 36363

11. றெக்கை – சிறுவர் மாத இதழ்
தொடர்புக்கு – 9884208075

12. பொம்மி – சிறுவர் மாத இதழ்

(தொகுப்பு – விழியன்)

Vizhiyan talks on DNEP

July 14, 2019

தேசிய கல்விக் கொள்கை பற்றி விழியன் பேசிய உரைகளில் தொகுப்பு

1. ஆதான் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி

2. ஆசிரியர் கூட்டமைப்புகள் நடத்திய மாநில கருத்தரங்கம்

3. தோழன் அமைப்பு நடத்திய கருத்தரங்கத்தில்

4. ஏசியவில் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி

5. அகரம் அறக்கட்டளை ஏற்பாடு செய்த ப்ரஸ் மீட்டில்

– விழியன்

DNEP Links

July 14, 2019

தேசிய கல்விக் கொள்கை வரைவினை ஒட்டி வெளி வந்துள்ள கோப்புகள்

NEP – English

NEP – Tamil Brief format

NEP – Whole translation in Tamil by volunteers

SCERT வெளியிட்டுள்ள தமிழ் கோப்பு

How to submit the views

  1. Email to nep.edu@gov.in – MHRD before July 31st
  2. Register and submit views at https://www.mygov.in/task/national-education-policy-2019/
  3. Email to scert.nep2019@gmail.com – TNSCERT before July 25th