Skip to content

கல்லிற்குக்கீழ் நசுங்கும் பூக்கள் – விழியன்

February 6, 2020

கல்லிற்குக்கீழ் நசுங்கும் பூக்கள் – விழியன்

(கல்கி 09-02-2020 இதழில் வெளியான கட்டுரை)

ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு என்ற பாரத்தினை குழந்தைகள் தாங்குவார்களா? பொதுத்தேர்வுகள் வேண்டும் எனவும் தேவையே இல்லை எனவும் இரண்டாக பிரிந்து விவாதங்கள் நடந்துகொண்டு இருக்கின்றன.

தேவை என்பவர்களின் வாதம் பிரதானமாக குழந்தைகளுக்கு படிப்பின் மீது கவனம் வருவதில்லை என்பதே. கடந்த பத்து ஆண்டுகளில் சிறப்புக் குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகின்றன. அவற்றின் ஊற்றுக்கான காரணங்களை ஆராயாமல் அவர்களை பொதுக்கல்வியின் சட்டகத்திற்குள் எப்படி தீவிரமாக எடுத்து வருவது என செயல்பாடுகள் நடக்கும் வேளையில் இந்த முன்னெடுப்பு மிகுந்தபின்னடைவு. கிராமப்புறத்திலும் நகரப்புறத்திலும் வேறு வேறான காரணங்களுக்காக நிராகரிக்கப்பட வேண்டி உள்ளது. நகரங்களில் ஏற்கனவே Peer Pressure அதிகமாக உள்ளது. என் பையன் இது படிச்சான், என் பையன் அந்த களாசில் சேர்ந்திருக்கான் என பெருமைப்பட்டுக் கொள்ளும் பெற்றோர் மத்தியில் இந்த பொதுத்தேர்வு நிச்சயம் சலசலப்பினை ஏற்படுத்தும். தேவையே இல்லாமல் குழந்தைகளை நிர்பந்திக்க ஆரம்பிப்பார்கள். விளையாட்டு, இதர கலைகள் கற்றல், சுற்றுலா, குடும்ப நிகழ்வுகள், சும்மா இருத்தல் என எல்லாவற்றிற்கும் தடா ஆரம்பித்துவிடும். இது பத்தாம வகுப்பிற்கு நடக்கும் அளவிற்கு வீரியமாக இருக்காது என்றபோதிலும் நிச்சயம் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு இருக்கும். இது குழந்தைமையை பறிக்கும் ஒரு மிகப்பெரிய வன்முறை.

 

கூடுதலாக கல்வியில் மட்டுமே கவனத்தை குவிக்க வைக்கும் ஒரு செயலாக அமைந்துவிடும். இதர விஷயங்களில் நாட்டமோ கவனமோ செல்லாமல் பார்த்துக்கொள்ள இந்த சமூகமும், பள்ளியும் வீடும் பார்த்துக்கொள்ளும். இங்கே இதர விஷயங்கள் என குறிப்பிடப்படுவது – விளையாட்டு, கலை, வாழ்க்கை கல்வி, சமூக பண்புகள் ஆகியவை. ஏற்கனவே தினசரி கூடுதல் வகுப்புகளும் சனி ஞாயிறுகளில் சிறப்பு வகுப்புகள் என நெருக்க ஆரம்பித்துவிட்டனர். தினசரி வகுப்புத்தேர்வுகளையும் வைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

 

பொத்தேர்வுக்கு ஏன் பயப்பட வேண்டும் குழந்தைகள் என்ற வாதத்தை ஓரம் கட்டிவிட்டு அதனை எழுதும் மாணவர்கள் எல்லோருக்கும் ஒரே மாதிரியான சூழல் அமைந்துள்ளதா எனவும் பார்க்க வேண்டும். இன்னும் எத்தனையோ தொடக்கப்பள்ளியில் ஈராசிரியர்கள் மட்டுமே உள்ளார்கள். ஐந்து வகுப்புகளுக்கு இரண்டே இரண்டு ஆசிரியர்கள். இதில் அவர்கள் ஏகப்பட்ட பயிற்சிகளுக்கு செல்ல வேண்டும், தரவுகளை கொடுக்க வேண்டும் என பாதி நேரம் விரயமாகின்றது. குழந்தைகளுடன் செலவிடும் நேரம் மிகவும் குறைவு.

மெல்ல கற்கும் மாணவர்கள் பற்றியும் சிறப்புக்குழந்தைகள் பற்றியும் அக்கரையே இல்லாத முடிவு இவர்களுக்கான கல்வி வரும்காலத்தில் என்னவாகும் என்ற கேள்வியை எழுப்பாமல் இல்லை. அது கேள்வி என்பதைவிட வருத்தம் தான். இடைநிற்றலில் குறியீடு ஆரம்பப்பள்ளிகளில் குறைவாக இருக்கின்றது என்ற பெருமை நிலை படிப்படியாக மாறிவிடும். இந்த பயம் ஐந்தாம் வகுப்பில் அல்ல நான்காம் வகுப்பிலேயே துவங்கிவிடும் எப்படி பத்தாம் வகுப்பிற்கு ஒன்பதாம் வகுப்பிலே துவங்குகின்றதோ அதே போலவே.

 

கூடுதலாக கல்வித்துறையில் இருந்து தேர்வை குறித்து திடீர் திடீர் அறிக்கைகளால் பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் குழப்பி அது நேரிடையாகவே குழந்தைகளை பாதிக்க ஆரம்பித்துவிட்டது.

 

சரி, உண்மையில் மாணவர்களின் திறன்களை அறிந்து ஆசிரியர்களுக்கான பயிற்சிகளை அதிகப்படுத்துவது தான் இந்த பொத்தேர்வுகளின் நோக்க எனில் ஏன் மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் இந்த விளக்கு அளிக்க வேண்டும்? இதுவே இந்த தேர்வின் நோக்கின் முரணாக அமைந்துவிடுகின்றது அல்லவா? மூன்று ஆண்டுகளில் பயிற்சி கொடுத்தும் மாணவர்களின் திறன் முன்னேறவில்லையெனில் தண்டிக்கப்படப்போவது ஆசிரியர்களோ,கல்வி அதிகாரிகளோ அல்ல மாறாக ஏதும் அறியாத குழந்தைகள்.

– விழியன்

No comments yet

Leave a comment