Skip to content

குழந்தைமையை காவு வாங்கும் பொதுத்தேர்வுகள் – விழியன்

February 6, 2020

குழந்தைமையை காவு வாங்கும் பொதுத்தேர்வுகள் – விழியன்

(தேசத்தின் நம்ப்க்கை பிப்ரவரி 2020 இதழில் வெளியான முழுகட்டுரை)

ஐந்து மற்றும் எட்டாம் பொதுத்தேர்வுகள் குறித்து இன்னும் பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை. முக்கியமாக பெற்றோர்கள் மத்தியிலும் ஆசிரிய சமூகம் மத்தியிலும் இதனைப் பற்றிய புரிதலும் பல்வேறு கூறுகள் பற்றியும் இன்னும் நிறைய பேச வேண்டி இருக்கின்றது. வெறும் இன்றைய சூழலை மட்டும் பார்க்காமல் ஒட்டுமொத்த கல்வி நகர்வினை கணக்கில் கொண்டு இந்த பொதுத்தேர்வுகளை அனுகவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொத்தேர்வுகள் யாருக்கு?
இது தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறைக்கு உட்பட்ட எல்லா வகையான பள்ளிகளுக்கு உண்டு. குறிப்பாக சமச்சீர் கல்வி முறைய போதிக்கும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் இதில் அடங்கும். சி.பி.எஸ்.சி மற்றும் ஐ.சி.எஸ். கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு இவை இல்லை.

பொதுத்தேர்வு வைத்தால் தான் பயம் வரும், பசங்க விளையாட்டுத்தனமா இருக்காங்க. எட்டாவதுக்கு வந்தாலும் பெயர் கூட தெரியல, கூட்டல் கழித்தல் கூட வரல?

கற்றல் என்பது ஒரு குழந்தை மகிழ்வாக இருக்கும்போதே நிகழும். நிர்பந்தத்தால் கற்றலை உட்புகுத்த முடியவே முடியாது, மாறாக அது வேறுமாதிரியான விளைவுகளையே விளைவிக்கும். கற்க மறுக்கின்றார்கள் எனில் இன்னும் இனிமையாக மாற்ற மாற்று வழிகளை சிந்திக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானவர்கள், அவர்களின் கற்றல் வேகம், கற்றல் ஆர்வம் நிச்சயம் வேறுபடும். பொதுவான ஒரு கற்றல் நடையினால் எல்லோரும் கற்பார்கள் என்பதும் சாத்தியமில்லை. தேர்வுகளால் பயம் வந்து வாசிப்போரின் எண்ணிக்க சொற்பமாக இருக்கும் மாறாக விடுபட்டு செல்வோரின் எண்ணிக்கை பெருவாரியாக அமைந்துவிடும்.

குழந்தைகளுக்கு எப்படி பாதிப்பு உண்டாகும், வழக்கம் போல அவர்கள் ஆண்டுத்தேர்வு எழுதுவது போல எழுதினால் என்ன?

குழந்தைகளுக்கு பொதுத்தேர்வே பள்ளி நடத்தும் தேர்வா என்பது நிச்சயம் தெரியாது. அவர்களைப்பொறுத்த வரையில் அது ஒரு தேர்வு அவ்வளவே ஆனால் பெற்றோர்களும், ஆசிரியர்களும் சமூகமும் அவர்களை நெம்பி எடுத்துவிடும். தினமும் மாலையில் சிறப்பு வகுப்புகள், சனி, ஞாயிறுகளில் சிறப்பு வகுப்புகள், வீட்டிலும் “பப்ளிக் எக்ஸாம் வெச்சுகிட்டு என்ன விளையாட்டு வேண்டி கிடக்கு” என்ற மிரட்டல், சொந்தகளை பார்த்தால் “படிச்சிட்டியா படிச்சிட்டியா” என்று கேள்வி கேட்டே குழந்தைகள் மீது பாரம் சுமத்திவிடுவார்கள். சுமத்திவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும். ஏற்கனவே பள்ளிகளில் இப்படித்தான் நிலைமை இருக்கின்றது.

குழந்தைமையை பலி கொடுக்க துவங்கிவிட்டோம். பன்முக ஆளுமைத்திறனை கொடுக்க மறுக்க ஆரம்பித்துவிட்டோம். இனி நான்காம் வகுப்பில் இருந்தே அனைத்தும் ‘கட்’. விளையாட்டும் இல்லை. மற்ற கலைகளுக்கான வகுப்புகள் இல்லை. பள்ளியில் விளையாட்டு பாடவேளை இல்லை. நூலகத்திற்கு இல்லை. ஆண்டுவிழாக்களிலும் பள்ளி விழாக்களிலும் ஒருங்கிணைப்பில் பங்கு இல்லை. வீடுகளில் நடக்கும் விசேஷங்களில் பங்கெடுக்க வாய்ப்புகள் குறைந்துவிடும். முழு நேரமும் படி படி படி. பெற்றோர்கள் புரிதலுடன் இருந்தாலும் இந்த Peer Pressure குழந்தைகளை கொன்று விடும். பள்ளிகளுக்கும் தங்களுடைய திறனை காட்டியாகவேண்டும் என தீவிரமான பயிற்சிகளில் இறங்கும். அதிக வகுப்பு தேர்வுகளை நடத்தி குழந்தைகளின் கைகளை உடைக்கும்.

சமூகத்திலும் மிகப்பெரிய சிக்கலை உருவாக்கும். குறிப்பாக பெண் குழந்தைகள் பள்ளியில் இருந்து அதிகம் விடுபடுவார்கள். நலிந்தவர்களின் குழந்தைகள் நிச்சயம் இடைநின்று தத்தமது பெற்றோர்களின் தொழில்களில் ஈடுபடுவார்கள். பள்ளியை விட்டு ஓடி குழந்தை தொழிலாளர்கள் அதிகரிப்பார்கள். இது சாதாரண குழந்தைகளுக்கே பாரம் எனில் சிறப்பு குழந்தைகளுக்கும் குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்டெடுத்து பள்ளிகளில் காலெடுத்து வைத்துள்ள குழந்தைகளுக்கும் எவ்வளவு பெரிய பாரமாக இருக்கும். எப்படியேனும் பத்தாம் வகுப்பு வரையில் குழந்தை படித்திடுவான், தட்டுத்தடுமாறி கரையேற்றிவிடலாம் என எண்ணில் இருக்கும் பெற்றோர்களின் மனங்களில் இனி மண் தன்.

இப்படி நியாயமற்ற, குழந்தைமையின் மீது நடக்கும் வன்முறை செயலுக்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். பெற்றோர்களை ஒருங்கிணைப்பதில் சிக்கல் உள்ளது, ஆசிரியர்கள் எளிதாக குரல் கொடுக்கலாம், அரசியல் கட்சிகளும், குழந்தைகள் மீது அக்கரை உள்ள அத்தனை நபர்களும் கொஞ்சம் மெளனம் கலைக்க வேண்டியுள்ளது.

– விழியன்

No comments yet

Leave a comment