Skip to content

கதைக்கு வெளியே ஒரு கதை

May 29, 2007

கதைக்கு வெளியே ஒரு கதை

“வெற்றிகரமாக முடிச்சிட்டேன்” என்ற தகவலை அவன் இணைய நண்பனுக்கு மடலிட்டான். வெற்றிகரமாக முடித்தது ஓரு குழந்தைகளுக்கான ஒரு பக்க சிறுகதை. அதுவும் ஒரு மொழிபெயர்ப்பு சிறுகதை. அந்த நண்பனும் இவனும் ஒரு மாதம் முன்னர் நடந்த மொழிபெயர்ப்பு பட்டறை ஒன்றிற்கு சென்று இருந்ததனர்.

இவனுக்கு ஒரு வித்தியாசமான பழக்கம். ஒவ்வொரு முறை மனதிற்கு நிறைவான செயலை செய்யும் போதும் தனக்கு தானே பரிசளித்துக்கொள்வான். அலுவலகத்தில் இருந்து வெளிவந்து எதிரே இருந்த கடைக்குள் புகுந்தான். 200 ரூபாய் மதிப்பில் பேனா வாங்கினான்.” நமக்கு தான் பேனாவை ஒரு வாரத்திற்கு மேல் வைத்திருக்க முடியாதே. பிறகென்ன 200 ரூபாய்க்கு பேனா?”

“அட பரவாயில்லை. இப்படியாச்சும் பத்திரமா வைத்துக்கொள்கிறேனா பார்க்கலாமே”

வீட்டிற்கு கிளம்பினான்.வழியில் போகும் போது தான், தன் மனைவி ஊரில் இல்லை என்பது நினைவிற்கு வந்தது. வெளியில் தான் சாப்பாடு.வீட்டின் அருகே ஒரு மெஸ் உள்ளது. பெங்களூரில் இப்படி ஒரு மெஸ் கல்யாணமாகாத காளையர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். போகும் போதே சாப்பிட்டு போய்விடலாம். கடையில் கூட்டம் இல்லை

மொத்தம் பத்து பேர் தான் உட்கார முடியும்.சின்ன இடமானாலும் சுத்தமாக இருந்தது. கல்யாணமாகாத காலத்தில் தினமும் இங்கு தான் சாப்பாடு அவனுக்கு

“வாங்க சார்.. என்ன அண்ணி ஊரில் இல்லையா”

“ஆமாம். நல்லா இருக்கியா?”

“எனக்கென்ன சார். சோக்கா இருக்கேன்”

“கடை சுத்தமா இருக்கு? நான் சொன்னப்ப கேட்டதேயில்ல?”

“அதுவா? ஊரில் இருந்து ஒரு பொடியன் வந்திருக்கான் சார். அவன் தான் சுத்தமா வைக்கிறான்.”

சாப்பிடும் போது இடையில் அந்த சிறுவன் தென்பட்டான். பத்து வயதிற்கு குறைவாக தான் இருக்க வேண்டும். நல்ல சுறுசுறுப்பு. கடையில் யாரும் இல்லை. இவன் மட்டும் தான் இருந்தான். கடைசி வாடிக்கையாளர்.திடீர் என்று யோசனை தோன்றியது. “ஏன் நீ எழுதிய கதையை இந்த சிறுவனிடம் படித்துக்காட்ட கூடாது”.

“அட நல்ல யோசனையா இருக்கே”

அந்த சிறுவனை அழைத்தான். மெஸ் வெளியே இருந்த மைதானத்தில் வெளிச்சமிருந்தது. ஒரு இருக்கையில் அமர்ந்தனர். சிறுவன் சொந்த ஊரை கேட்டான்.

“நான் ஒரு கதை சொல்லட்டுமா?”

“சொல்லுங்க சார்”

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சிறுவர்களுக்கான கதை

மின்மினி….கண்மணி

கோடைகாலம் வந்தாச்சு. பள்ளிக்கு விடுமுறை விட்டாச்சு.

தாமரை ஊரில் இருந்து தன் அத்தை வீட்டிற்கு வந்திருந்தாள்.வருடா வருடம் வருவாள்.

இந்த முறை அத்தை வீட்டில் இரண்டு அழகான குட்டிப் பூனைகள் இருந்தன.

தாமரைக்கு பூனை என்றால் கொள்ளை ஆசை.

“அத்தை… இதன் பெயர்கள் என்ன?”

“மின்மினி, கண்மணி”

சொல்லிவிட்டு அத்தை சமையல் செய்ய ஆரம்பித்துவிட்டாள்.

மின்மினி வெள்ளை நிறம்.

கண்மனியும் வெள்ளை நிறம்.

“மாமா இதில் எதில் கண்மனி, எது மின்மினி?”

“கண்மணியின் வால் நீளமாக இருக்கும்..”

தன் பையில் இருந்த அளவுகோளை எடுத்தாள். வாலை அளந்து பார்த்தாள்

மின்மனியிலன் வால் நீளம் 30 செ,மீட்டர்.

கண்மணியின் வால் நீளம் 30 செ,மீட்டர்.

“அண்ணா, எப்படி கண்டுபிடிக்கிறீர்கள்?”

“மின்மினிக்கு மச்சம் இருக்கும் என்று நினைக்கிறேன்”

மின்மினிக்கு முதுகில் சின்ன மச்சம்.

கண்மணிக்கும் முதுகில் சின்ன மச்சம்.

ஏதாவது வழி இருக்கும் என்று எண்ணினாள்.

“மியாவ்.. மியாவ்” என்றாள்.

மின்மினியும் “மியாவ்.. மியாவ்” என்றது.

கண்மணியும் “மியாவ்.. மியாவ்” என்றது.

தாமரை அவற்றின் கண்களை உற்றுப் பார்த்தாள்.

மின்மினியின் கண் இளம்பச்சை நிறத்தில் இருந்தது.

கண்மணியின் கண்ணும் இளம்பச்சை நிறத்தில் இருந்தது.

தன் அருகே இருந்த பூனையிடம்

“நீ யாரு?”

“நான் மின்மினி. அவன் கண்மனி.” பூனை பதில் சொல்லியது “நீ என்னிடம் அல்லவா கேட்டிருக்க வேண்டும்?”

“ஹலோ மின்மினி!!! ஹலோ கண்மணி”

மூவரும் விளையாட ஆரம்பித்தனர்.

கோடை விடுமுறை முழுதும்..

~~~~~~~~~~~~~~~~~~~~~~

“என்ன தம்பி கதை புரியுதா?” சத்தமேதுல் இல்லை

“என்னப்பா ஏதாச்சும் சொல்லு?” மெளனம்…

“பூனை உனக்கு பிடிக்குமா?” “ம்.ம்.ம்”

“ஏன் எதுவும் பேசமாட்டேங்குற.நல்லா தான பேசிட்டு இருந்த?”

சற்றே தலையை திருப்பி பார்த்தப் பின்னர்தான் அந்த சிறுவன் அழுது கொண்டிருப்பது தெரிந்தது.கண்களில் கண்ணீர்.

“தம்பி..”

“சார். என்னை யாரும் தம்பீன்னு கூப்பிட்டது இல்லை..”

“அதற்காகவா அழுகின்றாய்”

“இல்லை…”

“அப்போ?”

“அந்த கதையில..”

அச்சோ கதையில பயப்படும்படியாகவோ அழும்படியோ ஏதும் இல்லையே.இந்த பிஞ்சு மனது வாடும் அளவிற்கு என்ன தப்பு இருக்கு. இல்லை கதையை கிழித்துவிடலாம். என்ன தான் பாதித்து என்று தெரியவில்லையே?

“கோடைக்கால விடுமுறை போன வருடம் வரை இருந்தது சார். இனி நான் திரும்ப பள்ளிக்கு போவேனான்னு தெரியாது. அப்புறம் எங்க விடுமுறை எல்லாம்?”

அவன் மனம் படும் வேதனை இவன் மனதை கிழித்தது. அவனிடம் இந்தக் கதையை சொல்லியிருக்கவேண்டாமோ என்று மனம் நினைத்தது. ச்ச்..சே தவறு செய்துவிட்டேனோ என்று வருந்தியது. இப்படி எத்தனை சிறார்கள் இளம்வயதில் வீட்டைவிட்டு வந்து பல இடங்களில் வேலை செய்கிறார்கள் என்று நினைக்கும்பொழுது இயலாமையால் நெஞ்சம் அழுதது. என்னால் தற்போதைக்கு என்ன வேறு என்னதான் செய்யமுடியும் என் மன நிறைவிற்கான பேனாவை அவனுக்கு மனநிறைவை தருவதை விட?
போய்விட்டான். அவனுக்கு இப்பவும் மனநிறைவா இருக்கா இல்லை குறைவா இருக்கான்னு தெரியவில்லை..

கதையின் முதல்வரியும் கடைசிவரியும் எடுத்துவிட்டான்.

Note: இந்த கதை திசைகள் என்ற இணைய பத்திரி்கையில் கடந்த ஜூன் 2006ஆண்டு வந்தது.தற்போது அந்த பத்திரிகை நின்றுவிட்டது.

11 Comments leave one →
  1. சிவா permalink
    May 29, 2007 11:26 am

    உண்மைதான் விழியன்! நான் பெங்களூரில் இருந்தபோது, எனது வீட்டுக்கு மிக அருகில் ஒரு தமிழ் கடை உண்டு.. மதுரைக்குப் பக்கத்தில் இருந்து நிறைய சின்ன பசங்க அந்த கடைக்கு வேலைக்கு வருவாங்க.. நானும் அவங்களப் பார்த்து அப்பப்ப இந்த மாதிரி யோசிச்சதுண்டு..

    அவங்களை ஒவ்வொரு தடவையும் சாபபிட்டாச்சான்னு கேட்பேன்.. அவங்களுக்கும் நம்மல பத்தி விசாரிக்கிறதுக்கு ஒரு ஆளு இருக்குன்னு சந்தோசமா இருக்கும்.!!

  2. May 29, 2007 11:26 am

    எத்தனையோ பேரு சின்னச் சின்னக் குழந்தைங்க ‘உணவுக்கூடங்களில்’ வேலை பார்க்கிறார்கள். இவர்களைக்கூட மன்னித்து விட்டுவிடலாம். ஆனால் ‘சாராய அரங்கு’களில் வேலை பார்க்கவைக்கப்படும் குழந்தைகள் எனது மனதைப் பிழிய வைத்துவிடுகிறார்கள்.

    நாம் தான் தினம் தினம் பார்க்கிறோமே. இந்தச் சாராய அரங்குகளில் வேலை செய்யும் சிறுவர்கள் விரைவிலேயே கெட்டுப்போகி – போதைக்கு அடிமையாகி வாழ்விழக்கின்றனர்.

    ‘உணவுக்கூடங்களில்’ வேலை செய்யும் சிறுவர்கள் ஒருபடி மேல். அவர்களுக்கு அன்றாடம் வயிற்றுக்கு உணவு கிடைப்பதுடன் விரைவிலேயே இவர்களும் ஒரு ‘கூடம்’ வைக்கும் அளவுக்குத் தேறுவதற்கு ஒரு வாய்ப்பு உள்ளது..

    என்றும் அன்புடன் வாழ்கவளமுடன்

    இராம. சங்கரநாராயணன்

  3. பரஞ்சோதி permalink
    May 29, 2007 11:36 am

    படித்து கண்களில் கண்ணீர் வருகிறது. என்னையும் அச்சிறுவனாக பாவித்து படித்தேன், தாங்க முடியலை.

    இக்குழந்தைகளுக்கு யார் தான் வழி காட்டுவாங்க.

    இது போன்ற சம்பவங்கள் பார்க்கும் போது இறைவனுக்கு கண் இல்லையோ என்று தோணுகிறது.

    நல்ல கதை தம்பி. பாராட்டுகள்.

  4. May 29, 2007 11:52 am

    சோகமான உண்மை.

    15 வயதுக்கு உட்பட்ட சிறார்களை வேலைக்கு சேர்க்க கூடாது மீறுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று ஒரு அரசாணை சமீபத்தில் பிறப்பித்து (6,7 மாதங்கள் முன்பு) அதை முதல்முறையாக நாகையில் செயல்படுத்தப்பட்டதாக கேள்விப்பட்டேன்.

    வேலை மறுப்பதன் மூலம் அவர்கள் தவறான பாதைக்கு திரும்பும் வாய்ப்பு இருந்த போதிலும், 15 வயது வரை எங்கும் வேலை தரமாட்டார்கள், அதுவரைக்கும் ஆச்சும் பள்ளிக்கு செல்லட்டும் என சில பெற்றோர்கள் நினைத்தால் சரி தான்.

  5. மாணிக்கம் permalink
    May 29, 2007 11:52 am

    என்ன எழுதுவதென்றே தெரியலங்னே… நானும் நெறய முறை பார்த்து பாவப்பட்டதுண்டு… பஸ் நிலையங்களில்,இரயில் நிலையங்களில், தேனீர் கடைகளில், சிக்னல் களில்… மனது கனக்கத்தான் செய்கிறது…

  6. May 29, 2007 11:53 am

    //Note: இந்த கதை திசைகள் என்ற இணைய பத்திரி்கையில் கடந்த ஜூன் 2006ஆண்டு வந்தது.தற்போது அந்த பத்திரிகை நின்றுவிட்டது.//

    என்ன கொடுமை உமா இது 😉

  7. Manivanna Prabu permalink
    May 29, 2007 2:07 pm

    This story makes me feel that how many number of childrens are suffering at their workspots carriying the desire of education….

    Expecting that none will be left uneducated

  8. May 30, 2007 1:06 am

    மிக எதார்த்தமான உண்மை இது ..

    இது மாதிரி நிகழ்வுகள் நடப்பதைத் தடுக்க அரசாங்கம் முயற்சிகள் மேற்கொண்டாலும் வேலை தருபவர்கள் முன்வந்து தடுக்காதவரை இந்த அவலம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்..

    அன்புடன்
    தனசேகர்

  9. Rajesh Chellappa permalink
    May 30, 2007 5:04 am

    bitter reality!! donno what else to say.
    FYI. I came across some organization who help poor & disabled children for studies, food etc.,
    www. courtesyfoundation.org. In chennai it is in vadapalani & in bangalore it is in malleswaram.

  10. May 31, 2007 3:41 pm

    Kadhai arumai ngha. aana kanmani kku moonu suzi “ni” varanumungha. adhu sila idathula thappaa irukkungha.

    ambuttu thaanungha.

    Sadish

  11. June 12, 2007 5:55 am

    தம்பி விழியன்

    இன்று உலக குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்.

    முன்பே படித்த கதை நினைவுக்கு வர, இங்கே மீண்டும் ஒருமுறை உங்கள் நல்ல மனதை வாழ்த்தி கருத்து தெரிவிக்கிறேன்.

    அன்புடன்
    பரஞ்சோதி

Leave a comment