Skip to content

புழல் ஏரி – பயண அனுபவம்

November 15, 2010

புழல் என்றால் முதலில் நம் நினைவிற்கு வருவது புழல் சிறைச்சாலை தான். ஆனால் புழல் என்ற பெயரில் ஒரு ஏரி இந்த சிறைச்சாலைக்கு பின்புறம்  உள்ளது. கடந்த ஒரு மாதமாகவே போக வேண்டும் என இருந்தது, சரி  சனிக்கிழமை விடியற்காலை கிளம்பிவிடுவதென முடிவானது. கூகுள் மேப்ஸில் புழல் ஏரி செல்லும் பாதையினை பார்த்துக்கொண்டேன். ஆனால் உண்மையில் இருந்த முறை நிறைய உதவவில்லை.

காலை 3.30திற்கு குழலி எழுந்தாள், எழுப்பிவிட்டாள். முக்கால் மணி நேரத்தில் நானும் மனைவியும் கிளம்பிவிட்டோம். முதலில் சென்னை புறவழி சாலையினை பிடிக்க வேண்டும். வீட்டிற்கும் இந்த சாலைக்கு சுமார் 2 கி.மீ.  வழியில் துண்டலம் கிராமம். அதிகாலை கிராமம் சுறுசுறுப்பானது. மனிதர்கள்
நடமாட்டம் அந்த சமயத்திலேயே இருந்தது. சில காட்சிகளை அங்கேயே படம்  எடுக்க சொன்னாள் மனைவி, ஆனால் அன்று எங்கள் இலக்கு விடிவதற்குள் புழல் ஏரியினை அடைவது.

சென்னை புறவழிச்சாலையினை அடைந்தோம். முதலில் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம், சில புதிய அடுக்குமாடி கட்டிடங்கள், அம்பத்தூர். அம்பத்தூருக்கு முன்னதாகவே புறவழிச்சாலை முடக்கிவிடப்பட்டு இருந்தது. ஊருக்கு உள்ளே சாலை சென்றது. தேநீருக்கு நிறுத்தினோம். பயணங்களில் போது இந்த தேநீர் தவிர்க்கமுடியாத ஒன்று. தேநீரில்லாத பயணங்கள் நிறைவுபெற்றவையாக இருப்பதில்லை. அதுவும் விடியற்காலை தேநீர் உற்சாகம் கொடுப்பவை. ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு சுவை. மலைப்பகுதி தேநீர்கள் மேலும் சுவையானவை. தேநீர் பருகுதலுக்கான நிறுத்தங்கள் அப்பகுதியினை பற்றி அறிவதற்கான சந்தர்ப்பங்கள். நாங்கள் நின்ற இடத்தின் அருகே சில பி.பி.ஓக்கள் இருக்க வேண்டும். சூடான பஜ்ஜிகளும், திண்பண்டங்களும் தயாராகிக்கொண்டிருந்தன.

நாங்கள் சென்ற திசையில் வாகன நடமாட்டமே இருக்கவில்லை. இரண்டு புறமும் Elevated சாலைகள் இருந்தது. நடுவே இருந்த சாலை முடிவுபெறாத நிலையில் இருந்ததால் பக்கத்தில் இருந்த குறுகிய சந்தில் சென்றோம். தூரத்தில் ரயில் செல்லும் சத்தம் கேட்டது. பாதையில் ரயில்வே கிராசிங் இருந்தது நினைவிற்கு வந்தது. குறுகலான பாதை சந்தேகம் ஏற்படுத்தினாலும், ரயில் சத்தம் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. அரை கி.மீ தூரத்தில் சாலை முடிவிற்கு வந்தது. இரண்டு காவலர்கள் இருந்தார்கள். புழல் ஏரிக்கு செல்ல வேண்டும், எப்படி போக வேண்டும் என விசாரித்தோம். அவர்களுக்குள் ஏதோ பேசிவிட்டு சரி மேல ஏத்திடலாம் என முடிவிற்கு வந்து..”வந்த வழியே போங்க, லெட்ல ஒரு ரோடு மேல போகும், மெதுவா போங்க..நேரா ஏரி கிட்ட இறங்கலாம்..”  திரும்பி வந்து அவர்கள் சொன்ன பாதையில் சென்றோம். இரும்பு தடுப்பு நடுரோட்டில் இருந்தது. வண்டியை கொஞ்சம் சாய்த்து சின்ன சந்தின் வழியே வெளியே எடுத்தோம்.

மீண்டும் யாருமற்ற சாலை. வாகனங்கள் ஏதும் இல்லை. இரண்டு பக்கமும் எந்த வெளிச்சமும் இல்லை. வெகு நாட்கள் கழித்து வான் முழுக்க நட்சத்திரங்களை காண முடிந்தது. நகருக்கு உள்ளே வெளிச்சத்தால் இரவு அவ்வளவு ருசிகரமாக இருப்பதில்லை. வண்டி நிறுத்தி படம் எடுத்திருக்கலாம், ஆனால் நம்ம இலக்கு புழல். (ஆஹா இதுவல்லவோ லட்சியம்). லாசாக பயம் தட்டியது, நாம வேற திசையில் வேறு ஊருக்கு வேகமா போயிட்டு இருக்கோமா வென்னு. சரியான வழியான்னு கேட்க கூட யாரும் இல்லை. சுமார் 4 கி.மீ தூரம் போயிருப்போம் பெரியவர் ஒருவர்தென்பட்டார். ரொம்ப யோசிச்சார், புழல் ஏரியா? இப்படியே நேரா போய் இந்த பக்கமா ஜெல்லி எல்லாம் கொட்டி வெச்சிருப்பாங்க, அங்க இறங்கி போயிட்டே இருங்க, ஐயப்பன் கோவில் வரும், அப்படியே நேரா போங்க என சொல்லிவிட்டு வேகமாக எங்கோ மறைந்துவிட்டார். தட்டுதடுமாறி ஐயப்பன் கோவிலை கடந்தோம். “புழல்” என்று மஞ்சள் நிற போர்டு இருந்தது. பல தொழில் நிறுவனங்கள், வேலம்மாள் கல்லூரி ஆகியவற்றை கடந்தோம்.

கடைக்காரர் ஒருவரிடம் கேட்ட போது இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டும் என கிளி உண்டாக்கினார். மீண்டும் நெடும் பயணம், ஹைவேஸ் போன்ற சாலையினை மீண்டும் அடைந்தோம். இடப்பக்கம் திரும்பிவுடன் புழல் சிறைச்சாலை எங்களை வரவேற்றது. கூகுள் மேப்ஸில் நாங்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தோம். 2 கி.மீ தூரத்தில் ஏரியை தொட்டுவிடலாம் என புரிந்தது. ஐ. ஏரியை அடைந்துவிட்டோம்.

பெரும் கடல் போன்ற தோற்றம். சல சல வென தண்ணீர். எங்கும் தண்ணீர். செம்பரம்பாக்கம் ஏரியை விட பெரிதாக தெரிந்தது. ஏரியை சுற்றி தடுப்பி. அதற்கு மேல் தார் சாலை. ஏரியை சுற்றிலும் இருக்கும் தார் சாலையில் மக்கள் நடைபழகிக்கொண்டிருந்தனர். வளைவு ஒன்றினில் வண்டியை நிறுத்தி ஏரியை ரசிக்க துவங்கினோம். இன்னும் விடியவில்லை. முக்காலி துணை கொண்டு நட்சத்திரங்களை படம் பிடிக்க முயன்றேன். ஒரே இடத்தில் நின்றுகொண்டிருந்ததால் ஏகப்பட்ட கொசுக்கள் சேர்ந்துகொண்டது. நடை பழுகுபவர்கள் நடந்துகொண்டே இருந்ததால் கொசுத்தொல்லை இருக்கவில்லை. மனைவி முக்காலியின் பையினை ஆயுதமாக கொண்டு தலை மீது வீசி கொசுக்களை விரட்டிக்கொண்டிருந்தாள்.  ஏரி ரம்மியமாக இருந்தது. கொசுவின் தொல்லை அதிகரித்ததால் அங்கிருந்து நகர்ந்தோம். படித்துறைக்கு செல்ல ஒர் இடத்தில் வழி இருந்தது. அங்கே வண்டி நிறுத்தியதும், இளைஞர் ஒருவர் வேகமாக கீழிருந்து மேலே வந்தார். (அசிங்கம் செய்துவிட்டு). சார் ரிப்போர்டரா என கேட்டபடியே ஓடினார்.

புழல் ஏரி சென்னை குடிநீருக்காக பயன்படுகின்றது. இங்கே குளிப்பதற்கு, மீன் பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் எல்லா தடை மீறல்களும் இருந்தது. அவர் எங்களை பத்திரிக்கையாளர் என நினைத்து ஓடி இருக்க வேண்டும். ஏரி அசுத்தமாக இருந்தது. அந்த இடத்தில் நிற்க கூட முடியவில்லை. தூரத்தில் பெரிய தொட்டி தெரிந்தது. வழியில் வந்தோரிடம் சாலை எவ்வளவு தூரம் சொல்கின்றது என கேட்டறிந்தோம். சரி அந்த தொட்டியுடன் திரும்பிடலாம் என தொட்டிக்கு சென்றோம். இங்கிருந்து தான் நீர் எடுக்கப்பட்டு சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்படுகின்றது. ஜோன்ஸ் டேங்க் என பொறிக்கப்பட்டு இருந்தது. அந்நாளியில் கட்டப்பட்டு இருக்க வேண்டும். பறவைகளும் அதிகம் தொன்படவில்லை. தூரத்தில் இரண்டு பேர் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். இன்னும் சற்று தூரத்தில் பச்சை தீவுகள். அங்கிருந்து சாலையில் முடிவு வரையில் தொடர்ந்தோம்.  அங்கு மனிதர்கள் கூட்டம் கூட்டமாக தங்கள் காலை கடன்களை நிறைவேற்றிக்கொண்டிருந்தனர். வேறு வழியில் பிரதான சாலையினை அடைந்தோம்.

பயணங்களில் சூடான இட்லி சுவைக்காமல் பயணம் இனிக்காது மனைவிக்கு. அந்நேரத்தில் எங்கும் கடை திறக்கவில்லை. திறந்திருந்தாலும் இட்லி கிடைக்கவில்லை. வந்த வழியே புழல் அடைந்தோம். அங்கிருந்து அந்த ஐயப்பன் கோவில். இங்கு தான் நாங்கள் ஒரு விஷயத்தை கண்டுபிடித்தோம். ஐயப்பன் கோவிலுக்கு எதிரிலேயே புழல் ஏரி ஆரம்பித்துவிடுகின்றது. நான் கூகுள் மேப்ஸில் குறி வைத்த இடம் இது தான். இருட்டில் கடந்ததால் தெரியவில்லை. சூரிய ஒளி மிகுந்துவிட்டதால் படம் எடுக்கவில்லை. அப்படியே மேலேறி சென்னை புறவழி சாலையினை பிடித்தோம். வாகனங்கள் இப்போதும் காணவில்லை. எத்தனை அருமையான சாலை, பயன்படுத்தப்படாமலே இருக்கின்றது என வருத்தமாக இருந்தது. நேரே அந்த சாலை மதுரவாயிலில் இறங்கியது. மீண்டும் ஒவ்வொரு கடையாது இட்லிக்கு நின்றோம். கடைசியாக ஒரு கடையில் சூடான இட்லி, சாம்பார், காரசட்னி. ஆஹா.

இனிமையான அனுபவம். வீட்டை அடைந்ததும் அப்பா என ஓடிவந்தாள் குழலி.

– விழியன்

7 Comments leave one →
  1. November 15, 2010 1:59 pm

    ம்ம், சரி படத்தை எடுத்திங்களே
    அத கண்ணுல காட்டலயே?
    அதிகாலைனா சூரிய உதயம் சூப்பரா இருக்குமே? அதுவும் பறவை பறக்கற மாதிரி நல்லா அருமையா இருக்கும்.

  2. November 15, 2010 2:31 pm

    ரொம்ப நல்ல இருக்கு உமா. ஆனால் படம் காமிக்காம இப்படி எமாத்திடீங்களே !!! சீக்கிரமா படங்கள போடுங்க ஆவலா இருக்கேன்…

  3. November 15, 2010 4:45 pm

    அழகாக பதிந்துள்ளீர்கள்,
    பல முறை அந்த ஏரியை பகல் பொழுதில் கடந்து சென்றிருக்கிறேன் இரு சக்கரவாகணத்தில் ஆனால் ஒரு முறை கூட அதன் அழகை நின்று ரசிக்க நேரம் கிடைக்கவில்லை அவசர உலகம்.

  4. Sashidharan permalink
    November 16, 2010 5:02 am

    நல்லதொரு பகிர்வு..
    “..தேநீர் இல்லா பயணம் நிறைவுறாது…” – நச் 🙂

Trackbacks

  1. Vizhiyan Photography – Puzhal Lake « விழியன் பக்கம்

Leave a comment