அப்படி இப்படி – மே 2012
வெயில்நதி வெளியிடு விழா
அத்தனை அம்சமான பயணங்கள் வெகு அரிதாகவே நிகழும். நான், நிலா, கணேசகுமரன் வேல்கண்ணன் செஞ்சியை நோக்கி பயணத்தை துவங்கினோம். கணேசகுமரனை நிலா அவரின் சிறுகதை தொகுப்பின் மூலம் அறிமுகம் செய்துவைத்திருந்தான். வேல்கண்ணனை சாருவின் நிகழ்வில் சந்தித்திருந்தேன். தேநீருடன் துவங்கியது. ஏராளமான பேச்சுக்கள், பல புதிய புதிய செய்திகள் எனக்கு. எப்படியோ பேசிக்கொண்டே நெடுஞ்சாலையில் இருந்து செஞ்சிக்கு செல்லும் சாலையை விட்டுவிட்டு, சமாளித்து சுமார் 20 கி.மீ சுற்றி வந்தோம். நிலா கேமரா பிடிக்க ஆரம்பித்திருந்ததால் கண்டதையெல்லாம் சுட்டுக்கொண்டே வந்தான். வண்டி ஓட்டிக்கொண்டே கிளிக்கவும் செய்தான். ஸப்பா முடியல.. வெகுவிரைவில் கவிக்கண்ணுடன் சிறந்த புகைப்பட கலைஞனாகவும் உலா வருவான்.
செஞ்சியை அடைந்ததும் சுரேஷ் எங்களை வரவேற்றார். அவரின் வரவேற்பிலேயே எத்தனை உற்சாகமாக இருந்தார் என்பது தெரிந்தது. தன்னையும் மீறி கை தட்டி இன்பத்தை வெளிப்படுத்தினார். இப்படி ஒருவர் என்றால் அன்பின் பிழம்பாக காட்சி தந்தார் கவிஞர் கண்டராதித்தன். சுமார் 3-4 மாதங்கள் அலைபேசியிலும் முகப்புத்தகத்திலும் பேசி வருகின்றோம், முதல் முறையாக நேரில் பார்த்ததும் கட்டியணைத்து முத்தமிட்டு அன்பினை வெளிப்படுத்தினார். இம்மாதிரியான உறவுகளை காலம் கொடுத்துக்கொண்டே / தக்கவைத்துக்கொண்டே இருந்தாலே வாழ்வு இனித்துவிடும்.

வெயிலின் தாக்கம் வெகு அதிகமாக இருந்தபடியால் அன்றைய தினம் முழுக்க கருப்பு வெள்ளையில் கிளிக்கினேன். ரசமான அனுபவமாக இருந்தது. 2 மணி நேரம் கிளிக்கி இருப்போம். விரைவில் 3 நாட்கள் குறைந்தது வர வேண்டும் என தோன்றியது. மதியம் சூடான பிரியாணி. பின்னர் வெயில்நதி சிற்றிதழ் வெளியீட்டு விழாவிற்கு சென்றோம். சுரேஷ் கொண்டு வந்திருக்கும் சிற்றிதழ். நல்ல முயற்சி. நிகழ்ச்சி நடக்கும்போதே யுவன் சந்திரசேகரின் கதையினை வாசித்து முடித்திருந்தேன். எட்வின் சிற்றிதழ் கொண்டுவரும் சிரமங்களை பற்றி பேசினார். சீக்கிரம் ஊர் திரும்பவேண்டும் என 4 மணிக்கு கிளம்பிவிட்டோம். வீட்டிற்கு நடந்து செல்லும் போது பல புதிய உறவுகளை பெற்ற திருப்தியுடன் வேகமாக நடந்தேன்.
வாழ்த்துக்கள் சுரேஷ்.
இரவும் போட்டோஷாப் பயிலரங்கம்
ஒரு இரவு திட்டமிட்டபடி நடப்பது அரிதான ஒன்று. இல்லாளும் குட்டியும் விடுமுறைக்கு ஊர் சென்றிருந்ததால் இரவு பயிலரங்கம் ஒன்று வீட்டில் ஏற்பாடாகி இருந்தது. ஜகதீஷ் தலைமையில் நான், நந்தா, ப்ரவீன், உதயன் & வில்லன் கூடி இருந்தோம். போட்டோஷாப் பயிலரங்கம். புகைப்படத்தினை எப்படி அழகாக்கலாம் என்பதின் ஆரம்ப பாடங்களை ஜகதீஷ் விளக்கினான். அதே தொழிலாக வைத்திருக்கும் நந்தாவுன் உதயனும் இடையிடையே சேர்ந்துகொண்டனர். காசியில் எடுத்த ஒரு இருட்டு புகைப்படத்தை கொண்டு மெல்ல மெல்ல மிக அழகாக மாற்றி காண்பித்தான் ஜகதீஷ். நிறைய இருக்கு குமாரு.. ஆனா பொறுமையும் நேரமும் ரொம்ப தேவை. (ஜேசன் பிச்சர்ஸ்)

பயிலரங்கம் முடித்ததும் நானும் ப்ரவீனும் அடுத்த புத்தகத்திற்கான ஓவியங்களை பற்றி பேசினோம். வெகு இலகுவாக இரண்டு ஓவியங்களை நான் நினைத்தது மாதிரியே வரைந்தும் கொடுத்தான். மிச்ச மீதியையும் அண்ணன் கொடுத்துட்டாருன்னா அடுத்த புத்தகத்தையும் ரெடி செய்திடலாம். காத்து கெடக்கேன் ராசா.
பால்ய நண்பனிடன் பல வருடம் பேசாமல் இருந்து, அவன் குரல் கேட்காமல் இருந்து, மீண்டும் அவனை நேரில் சந்தித்தால் அது தரும் இன்பம் அலாதியானது. மனீஷ் என் பால்ய நண்பன். என் இள வயது ஹீரொ. அத்லெட். பணி காரணமாக சிங்கப்பூர் சென்று, பின்னர் அங்கிருந்து ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்தான். அவன் திருமணத்தின் போது சில வார்த்தைகள் பேசிக்கொண்டோம். சுமார் 7 வருடம் கழித்து அவன் குரலினை நேரில் கேட்டேன். உடலினை இன்னும் திடமாக வைத்திருந்தான். காதோரம் நரை தட்டியிருந்தது. அவன் அப்பாவை போலவே உருமாறியிருந்தான். தன் அப்பாவின் முதல்வருட திதிக்கு ஆஸ்திரேலியாவில் இருந்து வந்திருந்தான். ரொம்ப சந்தோஷம் ரொம்ப சந்தோஷம் என அடிக்கடி குறிப்பிட்டான். அவன் என்னுடனே இந்தியாவில் இருந்திருந்தால் இன்னும் சந்தோஷமாக இருந்திருப்பேன் என தோன்றியது. மனிதிற்கு இனியவர்கள் உடன் இருப்பது சுகம் தானே.
செம்பரம்பாக்கம் ஏரி
செம்பரம்பாக்கம் ஏரி செல்வது அது ஐந்து அல்லது ஆறாவது முறை என நினைக்கிறேன். நிலா, நான், வித்யா மற்றும் அக்கா மகன் பரத். “தமிழகம் எங்கும் போகலாம் மச்சி நம்ம காரிலே” என நிலா சொன்னவுடன் கிடைத்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கலையை பிடித்துவிட்டால் அது நம்மை பைத்தியமாக்கிவிடும். எந்த கலை வேண்டுமானாலும் இருக்கட்டும். ரம்மியமான காலை. நிறைய புகைப்படங்கள் சிக்கவில்லை என்றாலும் இனிமையாக இருந்தது. புகைப்படங்கள் பற்றியே பெரும்பாலான பேச்சுக்கள் அமைந்தது. செம்பரம்பாக்கம் சென்ற இரண்டு நாள் முன்னர் 361 டிகிரி சிற்றிதழிற்கு சுஜாதா விருதினை பெற்றிருந்தான் நிலா. வாழ்த்துக்கள் டா. அந்த நிகழ்ச்சி பற்றியும் பேசிக்கொண்டு இருந்தோம். விரைவில் அடுத்தடுத்த ஊருக்கு திட்டம்போட்டு நண்பனின் கோரிக்கையை நிறைவேற்றவேண்டும். ஜூன் 15-17 இராமேஷ்வரம் & தனுஷ்கோடி பயணிக்கிறோம். 
இந்த மாதத்தின் ஒரே வருத்தம் ஜெமோவின் ஊட்டி முகாமை தவறவிட்டமை தான்
குழலி ஸ்பெஷல்
மேடம் சுமார் இரண்டு வாரங்கள் விடுமுறைக்கு ஊர் சென்றிருந்தாள். காக்காய் போல வீதிகளில் சுற்றிக்கொண்டிருந்தாளாம். இன்னும் 3 நாட்களில் பள்ளி ஆரம்பிக்கின்றது. எதோ எனக்கு பள்ளி ஆரம்பிப்பது போல ஒரு ஆர்வம். புதிய ஆடைகள், புத்தகங்கள், ஷூ, பெல்ட், பைகள். புத்தகங்களுக்கு அட்டை. அவளும் உற்சாகமாக தான் இருக்கின்றாள். பள்ளியை அவளை என்ன பாடுபடுத்துவாள் என பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
இன்று காலை மனைவிக்கு தொண்டை கட்டிக்கொண்டு பேசமுடியவில்லை. சைகை மூலமே பேசிக்கொண்டிருந்தாள். எல்லாவற்றையும் கவனித்த குழலி
“நேத்து கூட நல்லாதானமா பேசனிங்க..” என சொன்னாளாம்
- விழியன்
புத்தக வெளியிட்டிற்கு வரவும் (நினைவூட்டல்)
புத்தக வெளியீட்டு விழா அழைப்பிதழ்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
பாரதி புத்தகாலயம் &
இலட்சுமி நகர் குடியிருப்போர் நலச்சங்கம், போரூர்
இணைந்து நடத்தும்
நூலக திறப்பு விழா & புத்தக வெளியீட்டு விழா
இடம் : இலட்சுமி நகர் குடியிருப்போர் நலச்சங்க கட்டிடம், இலட்சுமி நகர், போரூர்
நாள் : 03 – ஜூன் – 2012 , ஞாயிறு மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை
தலைமை : திரு S. சாம்பசிவம், தலைவர், இலட்சுமி நகர் குடியிருப்போர் நலச்சங்கம்
வரவேற்புரை : திரு. V. அசோக், பொருளாளர், இலட்சுமி நகர் குடியிருப்போர் நலச்சங்கம்
நூலக திறப்பு : திரு. கமலாளயன், எழுத்தாளர்
புத்தக வெளியீடு ‘பென்சில்களின் அட்டகாசம்’ – விழியன்
சிறப்புரை : இசைக்கவி இரமணன்
வாழ்த்துரை : திரு சி. இராமலிங்கம், மாநிலத்தலைவர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
: திரு. எம். ஜகதீஸ்வரன், மாவட்ட செயலாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
: திரு. N. சங்கரப்பா, செயலாளர், இலட்சுமி நகர் குடியிருப்போர் நலச்சங்கம்
: திரு. க. நாகராஜன், பாரதி புத்தகாலயம்
: திரு. கு. செந்தமிழ்செல்வன் மேலாளர், யூனியன் பேங்க் ஆப் இந்தியா, போரூர்
நன்றியுரை : திரு. விழியன்
தொடர்புக்கு : 9094009092, 9443032436
பென்சில்களின் அட்டகாசம் – குழந்தைகளுக்கான கதை . கால் முளைத்த பென்சில்கள் சுற்றுலா சென்ற சுவாரஸ்யமான கதை
மூன்றாம் புத்தகம்
நண்பர்களே,
வணக்கம். என்னுடைய மூன்றாவது புத்தகம் வரும் ஜூன் மூன்றாம் ஆம் தேதி வெளியாகின்றது. மகளின் மூன்றாம் பிறந்த தினத்தில் புத்தகம் வெளியாவதில் கூடுதல் மகிழ்ச்சி.
புத்தகத்தின் தலைப்பு : “பென்சில்களின் அட்டகாசம்”
இது குழந்தைகளுக்கான கதை. ஒரு வகுப்பின் பென்சில்கள் ஒன்று கூடி சுற்றுலா செல்லும் சுவாரஸ்யமான கதை. ஓவியங்கள் கி.சொக்கலிங்கம். வெளியீடு : பாரதி புத்தகாலயம்.
இடம் : லட்சுமி நகர் குடியிருப்போர் நலச் சங்கம், லட்சுமி நகர், போரூர், சென்னை
நேரம் : 03-06-12 , மாலை 5 மணி முதல் 7 மணி வரை
தொடர்புக்கு – விழியன் 9094009092
(அழைப்பிதழ் விரைவில்)..
அவசியம் அனைவரும் வர அழைக்கின்றேன்.
- விழியன்
Vizhiyan Photography – Gingee
அன்றைய தினம் புகைப்படம் எடுக்கும் எண்ணம் துளி கூட இல்லை. நிலா கேமராவை எடுத்துவரச்சொன்னதன் பேரில் எடுத்துச் சென்றேன். கிடைத்த 2 மணி நேரத்தில் க்ளிக் சத்தம் மயக்கத்தை தனித்தது. செஞ்சியில் 2-3 நாட்கள் நிச்சயம் தங்கி இடத்தை ரசித்து & புகைப்படம் எடுக்க வேண்டும். வெயில்நதி என்னும் சிற்றிதழ் வெளியிட்டுக்கு செல்கிறோம் என்பதே பாதி வழியில் தான் தெரியும். என்னுடன் ’பெருந்திணைக்காரன்’ கணேசகுமரனும் வேல்கண்ணனும் பயணித்தார்கள். இனிய பயணம். தேநீர், வடை, சூடான இட்லி, பிரியாணி , வெயில், புகைப்படங்கள், கவிதைகள், எழுத்து, எழுத்தாளர்கள், பேச்சுக்கள் என சுவாரஸ்யம் நிரம்பியதாகவே இருந்தது. வெயில்நதி சிற்றிதழ் வெளியான சிறிது நேரத்திலேயே கிளம்பிவிட்டோம். அன்று எடுத்த சில புகைப்படங்கள்.
1. இராஜாக் கோட்டை

2. ஒரு காலம் தாண்டிய காத்திருப்பு

3. நட்புன்னகை (கணேசகுமரன் & வேல்கண்ணன்)

4. சிதைவுகளால் வருந்தும் சிலைகள்

5. ஆயிரம் கால் மண்டபத்தில்

6. Animated Casual Talk

7. சிவன் கோவில்

8. புது எழுத்து முதல் 361 டிகிரி வரை

9. புது எழுத்து மனோன்மணி

10. அண்ணன் கண்டராதித்தன் (கவிஞர்)

11. மயக்கும் மதில்கள்

- விழியன்
அப்படி இப்படி ஏப்ரல் – 2012
அப்படி இப்படி ஏப்ரல் – 2012
2012ல் குறைவான பயணங்களே மேற்கொள்ள வேண்டும் என முடிவெடுத்திருந்தேன். காசிக்கு சென்ற வந்தபின்னர் அந்த முடிவில் மாற்றம் வந்துவிடுமென அச்சம் வருகின்றது. திருப்திகரமான காசி பயணம் ஏப்ரல் முதல் வாரத்தில் நிகழ்ந்தது. 11 பேர் கொண்ட நண்பர்கள் குழுவுடன் காசிக்கு சென்று வந்தோம். கடந்த வடநாட்டு பயணம் நிறைய அலுப்பினை தந்தது, இம்முறை அப்படி இருக்கவில்லை. ஹிந்தி பேசி கொஞ்சம் சமாளித்துவிட்டோம். நிறைய புகைப்படங்கள். சுமார் ஐந்து கேமராக்களுடன் சென்று இருந்தோம். இடையில் சிலருக்கு உடல்கோளாறு ஏற்பட்டது மட்டும் பின்னடைவு. கடுமையான் வெயில், கடைசி நாள் சூராவளி காற்றுடன் மழை. காசி பயணம், எங்கே போகலாம், என்னென்ன பார்க்கலாம், காசி ஏற்படுத்தும் அதிர்வுகள், என தனி கட்டுரை எழுத வேண்டும். எந்த ஊரின் கட்டுரை எழுதும் முன்னர் எனக்கு அந்த ஊர் அனுபவத்தின் படபடப்பு நின்றபின்னரே எழுத துவங்குவேன், காசி பயணத்தின் படபடப்பு இன்னும் நீடிக்கின்றது. நீடிக்கவேண்டும்.
சக பயணிகளின் புகைப்படங்கள்:
தம்பி ஜெகதீஷ் எடுத்த படங்கள்
ப்ரவீன் எடுத்த புகைப்படங்கள்
தம்பி உதயன் எடுத்த புகைப்படங்கள்
கந்தபழனியின் புகைப்படங்கள் இன்னும் கிடைக்கவில்லை.
அடுத்த புத்தகம்:
ஆறு வருடம் முன்னர் சித்தார்த் மற்றும் சில நண்பர்களுடன் சென்னை டு வேலூர் செல்லும் போது கடைசி இருக்கையில் அமர்ந்துகொண்டு முதல் முதலாக இந்த சிறுவர்கதையினை சொன்னேன். இன்று தான் அது முழு உருவம் பெற்று அச்சிட சென்று இருக்கின்றது. நினைத்த மாதிரியே ஓவியங்களை வரைந்து தந்த சொக்கலிங்கம் அவர்களுக்கு நன்றி. அவரை அறிமுகம் செய்துவைத்த யூமா வாசுகிக்கும் நன்றி. விரைவில் வெளிவரும் புத்தகம் பற்றி எந்த ரகசியத்தையும் வெளியிட முடியாது
இது சிறுவர்களுக்கான சின்ன நாவல் (அல்லது பெரிய கதை). நிச்சயம் குழந்தைகள் விரும்புவார்கள்
திருப்பதி:
நான்கு வருட நச்சரிப்பில் கடைசியாக இரண்டு வாரம் முன்னர் திருப்பதி சென்றோம். பள்ளி தேர்வுகள் முடிவிற்கு வராததால் கூட்டம் குறைவாகவே இருந்தது. குழலிக்கு நான்காவது மொட்டை. நல்ல தரிசனம் 2.5 மணி நேரத்தில். இரண்டாம் நாள் திருப்பதி சுற்றியுள்ள இடங்களை பார்வையிட்டோம். தற்போது கையில் இருக்கும் கேமராவின் உயிர் முடிந்துவிட்டது என நினைத்திருந்தேன், ஆனால் இன்னும் உயிர் இருக்கின்றது என சொல்லியது. திருப்பதியில் எங்கு காணினும் மக்கள், எங்கும் வரிசைகள். ஆனாலும் திருத்தளங்களில் நகரமே சுத்தமாக இருக்கும் இடம் திருப்பதியாக தான் இருக்க முடியும். எங்கு சென்றாலும் சுத்தும், எங்கும் அமரலாம், 100 அடிக்கு ஒரு கழிவறை, நிறைய டீக்கடைகள். 24 மணி நேரமும் அதே சுறுசுறுப்புடன் இருக்கின்றது. நிச்சயம் திருப்பதி தேவஸ்தானத்திர்கு சபாஷ் தான் போட வேண்டும். இரண்டு முறை கீழ் திருப்பதியில் இருந்து மேல் திருப்பதிக்கு நடந்தே ஏறி இருக்கின்றேன், இனி நல்ல நண்பர்கள் செட்கிடைத்தால் மட்டுமே ஏற முடியும். கல்லூரி நாட்களில் சென்ற திருப்பதி பயணம் நினைவுகள் வந்து வந்து போனது. அழகான நாட்கள் அவை.

குடும்ப விழா:
நேற்று வேலூரில் குடும்ப விழா ஒன்று நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் தொடர்ந்து செயல்படும்/பட்ட ஆர்வலர்களின் குடும்பங்கள் ஓர் இடத்தில் சந்தித்து பாடி/ஆடி/ விளையாடி / பேசி இன்புற வேலூர் கோட்டை மைதானத்தில் சந்தித்தோம். சிறுவர்களுக்கு விளையாட்டுக்கள், பெரியவர்களுக்கு விவாதம், இடையே குளிர்பானம், சுவையான உணவு, மழை (வேலூரில் மழை), நனைதல், போட்டி, மொக்கை, பழைய முகங்கள் என சுவையாக கழிந்தது. குழலி காலை முதல் மாலை வரை சுற்றிக்கொண்டே இருந்தாள். குழந்தைகளுக்கு மகிழ்ச்சி கொள்ள கொஞ்சம் மண் கூட போதுமானது. நிகழ்ச்சி ஆர்வலர்களுக்கு அவர்கள் குடும்பத்தினருக்கு நல்ல உற்சாகம் கொடுத்தது / கொடுத்திருக்கும். தொடர்ந்து வருடாவருட இது போன்ற நிகழ்வுகள் நடைபெற வேண்டும்.
விளையாட்டு:
நான் விளையாடி விளையாடி திளைத்த தெருவில் நின்று கொண்டு நாள் முழுக்க வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தேன். தெருவில் ஒரு சிறுவன் சிறுமி கூட காணக்கிடைக்கவில்லை. எங்கே போனார்கள் என தெரியவில்லை. இந்த கால சிறுவர்களுக்கு கோடை விடுமுறையை கழிக்க தெரியவில்லையா? அல்லது கழிக்க பெற்றோர்கள் கற்றுத்தரவில்லையா? (நமக்கு சொல்லியா தந்தாங்க?) அந்த நாட்கள் திரும்ப வராதா என ஒவ்வொரு கோடையும் ஏங்க வைக்கின்றது.
குழலி ஸ்பெஷல்:
முகல் சாராபாய் ரயில்வே நிலையத்தில் சங்கமித்ரா ரயிலுக்காக காத்திருந்தோம். இரவு 10.30. 5 நாள் சோர்வு. பலருக்கு உடல்நிலை சரியில்லை. ஒரு மணி நேரம் தாமதம். நான்காம் ப்ளாட்பாரத்தில் காத்திருந்தோம், மூன்றாம் ப்ளாட்பாரத்தில் ரயில் வந்துவிட்டது. நல்லவேளை பக்கத்திலேயே இருந்தது. பெட்டிகளை எடுத்து வேகமாக எங்கள் இருக்கைகளில் அமர்ந்தோம். அப்பாடாவென இருந்தது.
குழலியும் ப்ரவீனும் பால்கனி (Upper Berth)யில் அமர்ந்து விளையாட ஆரம்பித்தனர். மணி 1. களைப்பில் இருந்தோம். இரண்டாம் ஏ.சியில் ரயில் கட்டணம் ஏறியதால் டி.டி.ஆர் ஏறிய 10 நிமிடத்திலேயே இருக்கைக்கு வந்தார் வசூல் செய்ய. அவர் வந்து அமர்ந்ததும் யாரும் எதிர்பாராத வண்ணம் குழலி
“வந்துட்டார்யா வந்துட்டார்…” என்றாள் சத்தமாக வடிவேலு ஸ்டைலில்.
குழந்தைகள் நொடிப்பொழுதில் துடைத்துவிடுவார்கள் துன்பங்களை.
நல்லவேளையாக அவருக்கு தமிழ் தெரியவில்லை.
—————————
குழலிடம் ஒரு 3D டம்ளர் இருக்கின்றது. அதன் வெளிப்புறம் டயனோசர் படம் போட்டிருக்கு.
‘அப்பா இங்க பாருங்க டயனோசசசர்.. இது என் தண்ணிய குடிச்சிடுச்சு..’
‘அதை பார்த்திருக்கியா குழலி ‘
‘பார்த்திருக்கனே’
‘எங்க’
‘காட்லப்பா. யானைய சாப்பிடும்.. பெரிய பல்லு. உங்க பல்ல காட்டுங்க..இதோ இவ்வளவு பெருசு.. யானையவே சாப்பிடும்பா..நேத்து என் ஹார்லிக்ஸ் கூட குடிச்சிடுச்சுப்பா ‘ ம்ச்..என உதட்டை பிதுக்கினாள்.
கதைகள் மட்டும் சொல்லிக்கொண்டிருந்தவர் இப்போது கதை விடுகின்றாள்
—————————–
சின்ன காரணம் ஒன்றிற்கு அழ ஆரம்பித்தாள். ஒவ்வொருவரின் விசாரிப்பிலும் சத்தம் அதிகமானது. என்ன ஆச்சு என்ன ஆச்சு ஏன் அழுகிறாய் என கேட்க கேட்க விசும்பல் ஓவென உருமாறியது. பத்து நிமிட அழுகைக்கு பின்னர் ஏன் அழுதாய் என நிதானமாய் கேட்டதற்கு “தெரியலையே…” என்றாள் கண்துடைத்து கைவிரித்தபடி.
குழந்தைகள் காரணங்களை அழுகையில் கரைத்துவிடுகின்றனர்.
#தேவதைகள் வாழும் வீடு
- விழியன்
Vizhiyan Photography – Thirumala-Thirupathi
Vizhiyan Photography – Kasi – Leftouts
காசி புகைப்படங்களில் விடுபட்டவை.
1. ஒன்றிணைவோம்

2. காசி – மிகப்பழமையான நகரம்

3. சும்மா போடுங்க சார்

4. ஐலெசா…

5. சுறுசுறுப்பான அதிகாலை

6. வண்ணமயமான படித்துறை

7. சாரணாத் – புத்தர் முதல்முதலாய் போதித்த இடம்

8. வானம்-கங்கை-மயக்கம்

9. படகுகளும் படித்துறையும்

10. கங்கையுடன் பயணம்

- விழியன்
இனி பயணக்குறிப்புகள்..











